Monday, 29 June 2015

நடிகவேள் நினைவு துளிகள் ..அப்போது நாங்கள் குடியிருந்தது
நடிகவேள் திரு.MR ராதா அவர்களின் காலனியில்.
ஆம் அந்த ஏரியா முழுவதும் அவர் சொத்தாக இருந்தது.
அங்கு சுமார் 60 வீடுகளை தொகுப்பாக அபார்ட்மெண்ட் சிஸ்டத்தில் கட்டி வாடகைக்கு விட்டிருந்தார்.
அவரது மைத்துனர் குடும்பத்துடன் வசித்துக்கொண்டு பராமரித்துக்கொண்டிருந்தார்.

ராதாவின் முதல் மனைவி பெத்தம்மா என அன்பாக அழைக்கப்பட்ட சரஸ்வதி அம்மாள்,அவர்களுக்கு என் அம்மாவை மிகவும் பிடிக்கும்..அம்மா,கையில் காபி சாப்பிடவே வருவார்.சென்னையிலும்,இங்கும் மாறி,மாறி வசிப்பார் .கைப்பிடித்து அழைத்துச்செல்ல என்னை எப்போதும் அழைத்தபடி இருப்பார்.
காலனியின் நடு நாயகமாய் அமைந்திருந்த அவர்களின் வீட்டின் அருகில் எங்கள் வீடு, சிறுவயதில் ராதா, ஆட்களை ஏவியபடி புகைத்தபடி நிற்பதை பார்த்திருக்கிறேன் ,அருகில் சென்று பேச பயம்..அவரின் தோரணை அவ்விதமாக இருக்கும்.
அவரின் இரண்டாவது மனைவி தனலஷ்மி அம்மாள்(திரு.ராதாரவி அவர்களின் தாயார்)கொஞ்சம் ஸ்ரிக்ரிட்..அதிகம் பேசமாட்டார்,அவர் சரஸ்வதி அம்மாளின் உடன்பிறந்த தங்கை.
ராதா அவர்களின் மறைவின் போது, கோலகலமாய் இருந்தது அந்த ஏரியாவே ,பந்தலும் ,கூச்சலும் ,சமையலும் ..செல்லுலாய்ட் நினைவுகளாய் !

மாமாவின் மகளையே மணந்த திரு.ராதாரவி அவர்கள் திருச்சி ஒட்டி எந்த ஷூட்டிங் இருந்தாலும் அவர்களின் வீட்டில் வந்து,சக நடிகர்களுடன் ஓய்வெடுத்து செல்வது வழக்கம்..அப்படி சந்திரசேகர் , S.S. சந்திரன் ,பாண்டியன் , காந்திமதி முதலியோர் அடிக்கடி வருவதுண்டு.
ஒரு முறை சில்க் ஸ்மிதா வந்திருந்தார்.
என் தங்கை சின்ன குழந்தை..கொஞ்சம் துடுக்காகவும் பேசுவாள் , நைனா என்று எங்களால் அழைக்கப்பட்ட ராதாரவி அவர்களின் மாமனார், வழக்கம்போல எங்களிடம் சில்க் வந்திருக்காங்க,வாங்க அறிமுகபடுத்தறோம், ந்னு அம்மாவ கூப்பிட ,அம்மா..இல்லை அப்பறமா வர்ரேன் என சொல்லிட ,என் தங்கையோ(2வயது இருக்கும்) .." எங்க சில்க் ,நா வரேன்" ..ந்னு அவர் கையை பிடித்துக்கொண்டே நேர சில்க் மடியில் போய் உட்கார்ந்து கொண்டு , குசலம் விசாரிச்சுக்கொண்டு,வெளியில் வரவே இல்லை.
அம்மாக்கு ஒரே கவலை,குட்டிப்பெண் உள்ள போய்,என்ன பண்றாளோ ந்னு, எல்லாரிடமும் பெரிய மனுஷிமாதிரி பேசிவிட்டு,சாக்லேட் டுகளுடன் வெளியே வந்து,எங்களிடம் ஒரே கதை ...மறக்காத நினைவுகள்..
எம்.ஆர்.ராதா அவர்களின் மணிமண்டபம் திறந்து போது எங்கள் குடியிருப்பே 1வாரம் அல்லோகலப்பட்டது, திறந்து வைத்தது,கலைஞர் ,வீரமணி அவர்கள் ..அனைத்து திரைப்பட கலைஞர்கள் புடைசூழ ..
எங்களுக்கும் பேட்ச் தரப்பட்டது காலனிக்குள் நுழைந்து,வெளிவரவே !!
பெத்தம்மா..என எங்களால் அழைக்கப்பட்ட சரஸ்வதி அம்மாள்(வாசு வின் தாயார்,வாசு விக்ரமின் பாட்டி) மிகவும் அன்பாக பழகுவார் ..எந்த நல்ல காரியம் ,நாள் பார்க்கவேண்டியிருந்தாலும் அப்பா,அம்மாவிடம் பகிர்ந்துபின்பே செய்வார்கள் .

அவர்களின் நாடகக்குழுவில் இணைந்திருந்தார் கணேசன் என்பார் அடிக்கடி ..
அவர் நம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களே! அவரைப்பற்றி நிறைய சொல்லியிருக்கிறார் ..ஆக்ட் கொடுப்பது..அப்படின்னுதான் குறிப்பிடுவார்..
என் திருமணத்திற்கு முன்பே அடிக்கடி தேனாம்பேட்டை அவர்களின் இல்லத்திற்கு அழைத்திருந்தார் , முடியவில்லை. . திரு. Chola Nagarajan அவர்களின் கலைஞர் டிவியின் சந்தித்தவேளையில் நிகழ்ச்சியில் குறிப்பிட்டிருந்தார் நடிகவேள் பற்றி...
அதுவே நினைவலைகளை கிளர்ந்து இப்பதிவினை எழுததூண்டியது... smile emoticon
இப்போது நாங்கள் வசித்த வீடுகள்
மாற்றப்பட்டு விட்டன.


காலங்கள் உருண்டோட நினைவுகள் மட்டுமே பசுமையாய் !!

photo courtesy : Google images 

தாத்தாவுக்கேத்த பேத்தி

அன்று விஷூ.. ஸ்கூல் early dispersal ..மறந்துட்டீங்களா, பரவாயில்லை ,நானே உங்க பொண்ணை கூட்டிட்டு வந்து விட்டுடறேன்னு , எனக்கு முன்னாடி,ஸ்கூல் பஸ் பிக்கப் பாயிண்ட் க்கு போன ப்ரெண்ட் போன்...நானும் சரின்னு சொல்லி வச்சிட்டேன்.
கேட்டுருந்த அம்மா, பஸ் சீக்கிரம் வருதா,சரி..அப்பாவும் போட்டும்..ந்னு சொல்ல, அப்பாவும் கிளம்பிப்போனார் பேத்தியை அழைச்சுட்டுவர.
கொஞ்ச நேரத்தில் சொன்னபடியே ப்ரெண்ட் பொண்ணை கூட்டிட்டு வந்து,விட்டுட்டு பேசிட்டு போய் விட, கூப்பிடபோன தாத்தாவை காணோம் !
"எங்கடி ,தாத்தா வந்தாரே ,உன்னக்கூப்பிடன்னேன், அவ,எனக்கு தெரியாதே", என பதற்றம் தொற்றிக்கொண்டது..எங்களுக்கு ..
ஒரு லிப்ட்ல் அப்பா கீழே செல்ல,இன்னொரு லிப்டில் பொண்ணு வந்துருக்கா,ப்ரெண்டோட!
அம்மா,பதட்டாமாய் ,என்ன ஆச்சுன்னு தெரிலயே ,அவர் வரலையே சொல்ல,பாட்டி வாங்க,நாம போய் பாக்கலாம்ன்னு கிளம்பினா என் பொண்ணு, போன வேகத்தில் ரெண்டு பேரும் திரும்பி வந்தாங்க ,அப்பா இல்லாமல் .
"என்னாச்சு,கீழ நல்லாப் பாத்தீங்களா , எங்கேயும் போயிடமாட்டார்ன்னு,சமாதான ப்படுத்திவிட்டு நா கேக்க,என் பொண்ணுதான்
ம்ம்..நல்லா தேடியாச்சுமா, எங்கயும் தாத்தாவக்காணோம் சொன்னதும் அம்மா கலவரமானார்.
இப்படிதான் காசியில் ஒரு தடவை கூட்டத்தில அப்பாவை மிஸ் பண்ணிட்டேன் ,அந்த மாதிரி எதாவது ஆகிருக்கும் கவலையோட அம்மா,பேச ஆரம்பிக்க ,அப்டியெல்லாம் இங்க ஆகாதும்மா,எங்கயும் போயிருக்கமாட்டார்ன்னு நா சமாதானம் சொல்ல, ஸ்ரீ வாங்க,பாட்டி திரும்ப போய் பாக்கலாம்ன்னு கூட்டிண்டு போனா!
இந்த முறை திரும்பி வரும் வந்தார்கள் அப்பாவுடன் ..பேசியபடியே,
அப்பா, வெயிலுக்காக பக்கத்துல இருந்த ரெஸ்டாரண்ட் வாசல் பக்கத்தில் நின்றிருந்தது ,கவனிக்கல முதல் தடவப்போனப்ப.
ரெண்டாம் தடவப் போயிட்டு, சுத்தி தேடிப்பாத்து கூட்டிட்டு வந்திருக்கா,பொண்ணு!
அப்பா," உன் பொண்ணு என்ன கேட்டா தெரியுமா "ந்னார் ,
நானும் என்னப்பா ங்க ,
" தாத்தா ,உங்கள யாராவது கிட்னாப் பண்ணிட்டுப் போயிட்டா , என்ன பண்ணுவீங்க,இப்படில்லாம் தனியா நிக்கலாமா"
" என்ன,ஏன் பண்ணப்போறாங்க,உன்னதான் ,சின்னப்பொண்ணு,பணத்துக்காக பண்ணலாம்"
" அச்சோ! இல்ல தாத்தா,இது எங்க ஊரு, என்னல்லாம் கிட் நாப் பண்ண மாட்டாங்க, ஆன உங்கள அப்டியில்லை , கூட்டிட்டுப்போயி
தலைய மொட்டையடிச்சு, பணத்துக்காக பிச்சையெடுக்கவச்சிடுவாங்க, அதனால் இனிமே கேர்புல்லா இருங்க" ந்னு சொன்னான்னு ,
சொல்லிட்டு வேற வேலை யெல்லாம் தர மாட்டாங்களாம்..பிச்சை எடுக்கவப்பாங்களாம்..சொல்லிட்டு
இந்த வயசு வரைக்கும் யாரும் என்ன இப்படி சொன்னதில்லன்னு
சொல்லிட்டு,அவர் மட்டுமில்ல,நாங்களும் நினைச்சு,நினைச்சு சிரிச்சுட்டேயிருந்தோம்...அன்னிக்கு முழுக்க...

கூடான வீடு

ஒரு நாள் காலை வழமைப்போல பால்கனி செடிகளுக்கு நீர் விட சென்றவள்..ஒரு காய்ந்த தொட்டி செடியில் தண்ணீர் ஊற்ற ரெண்டு வெள்ளை முட்டை மிதந்தது..

ப்யூர் வெஜிடேரியன் , மேலும் நகர வாழ்க்கையில் வாழ்ந்து பழக்கப்பட்ட எனக்கு எந்த பறவை, இந்த பாலைவனத்தில் அதுவும் கொளுத்தும் வெயில் சுள்ளுன்னு உறைக்கும் தொட்டியில் இட்டுச்சென்றது என்ற ஆச்சர்ய ரேகைகள் முகத்தில் பரவ..பால்கனி கதவை மூடிவிட தாய் பறவை வந்தது..ஆம் அது புறாவின் குடும்பம்.இங்கு புறாக்கள், சிட்டுக்குருவிகள் நிறைய பார்க்கலாம்..கீழே பார்க்கிங் ஏரியாவில்.

அன்றிலிருந்து ஆரம்பித்தது..எங்கள் விருந்தாளியிடம் எங்களின் பார்வையும்
தினமும் அதிசயமாக நாங்கள் பார்ப்பதும்..
நானும் நிழலுக்காக பேப்பர் , குடை இப்படி பலதும் ட்ரை பண்ண தாய்ப்பறவை பயந்துதான் போனதும்..நீர் , தானியங்கள் தூவினோம்.அது சாப்பிட்டதா தெரியவில்லை.

எங்கள் மனம் கொஞ்சம் நிறைந்தது.
இரவுப்பகலாக தாய்ப்பறவை எங்கும் நகராமல் அடைக்காக்க , தந்தையான என் கணவர் தாயாகிய விந்தையையும் காண நேர்ந்தது.
எத்தனை நாளில் அடைக்காக்கும்..உணவு அதன் இருப்பிடம் இப்படி அத்தனை விஷயங்களையும் அவர் சேகரிக்க , மேன்மேலும் ஆச்சர்யம் , குழந்தைகள் தினம் பள்ளி விட்டு வந்தததும் ஒரு விஸி ட் , பக்கத்தில் டைனிங் டேபிள் இருந்ததால்..டின்னர் டைம் டிஸ்கஷன் என்று எங்கள் உலகில் அந்தப்பறவையும் அந்த முட்டையும்.

ஒரு நாள் முட்டை உடைந்து சின்ன குஞ்சுப்பறவைக்கண்டேன்...
அதற்குப்பின்..சிறிது சிறிது பறந்த தாய் பறவை என்ன நம்பிக்கையோ..என்னை நம்பி விட்டுச்சென்றது.

10 நாட்கள் கண்முன் அந்த குஞ்சுப்பறவை வளர்ந்தது..இறகுகள், அலகு விரிந்தன.. மெல்லிய சப்தம் எழுப்பியது..! அதுவும் ஆனந்தம்..!
நடுவே என் பில்டிங்ல் உள்ள ஒரு ப்ரெண்ட் இதே மாதிரி என் பக்கத்துவீட்டுக்காரர் பால்கனியில் ஆனதாகவும் அங்கு ரெண்டு குஞ்சு பொறிந்து, அது தத்தி தத்தி பறக்க முயன்று இறந்து அவர் அதை புதைக்கக்கொண்டு சென்றதாகவும் கூற கிலிப்பற்றியது..! இதென்ன கடவுளே என்று..!!
சற்றே தொட்டிலியிருந்தப்படி எனைப்பார்த்து பழகியது குட்டி..நானும்..அவ்வப்போது தாய் பறவை வந்து..வந்துப்போக..ஒரு நாள்..இறக்கை விரிக்க கற்றுத்தந்தது , குட்டியும் அன்று முழுவதும் விரித்து ,, விரித்து மூட , நான் என் பெண் நடக்க ஆரம்பித்த கணத்தை நினைத்துக்கொண்டேன்..!!

எட்டிநின்று அனைத்தையும் பார்க்க பழகிய எனக்கு தினம் தினம் புது ஆச்சர்யம் தந்தது தாய்ப்பறவை.

ஒரு நாள் தொட்டியை விட்டு பால்கனி சுவற்றுக்கு பழக்கக்கற்றுத்தந்தது..அன்று அங்கே பார்த்தேன்..வேலையாக உள் சென்று வெளிவந்துப்பார்க்க ரெண்டும் பறந்துபோயிருக்கக்கண்டேன்..
எதோ ஒரு வெறுமை..அது குடியிருந்த தொட்டி..கொண்டு வந்துப்போட்ட சில குச்சிகள் என சில தடயங்களை விட்டுப்போனது..ரெண்டு நாளைக்கு பிள்ளைகளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தேன்.என் ப்ரெண்ட் குழந்தைகளும் பார்த்துசென்றனர்.

அந்த இன்னொரு பொறிக்காத முட்டையையும்..எடுத்துசென்று விட்ட தாய்ப்பறவை இனி எட்டிப்பார்க்குமா தெரியவில்லை..
பறவைகளுக்குள் உள்ள தாய்மையை உணர வைத்து , குடியிருந்து பறந்துப்போனது..பலவற்றை நினைவுப்படுத்தியது.
எத்தனையோ தாய்மார்கள் தம் பிள்ளைகளை ஆண்துணையின்றி வளர்த்துப்பார்த்திருக்கிறேன்.
சில தாய்கள்(என்னையும் சேர்த்து) விழுவதைக்கண்டு பதறினாலும் , தானாக எழுவே பழக்கியுள்ளோம். எதற்கும் பின் செல்லாம்ல்..பின் நின்று முன் விட்டு ரசிப்பதும் ஆனந்தம்.

அனைத்திலும் முன் நின்று அவர்கள் வாழ்வை நாம் ஏன் வாழ வேண்டும்...:)
இது..

 பால்கனியில் ஒரு பாசப்பறவை என்ற பெயரில்..புதிய தலைமுறை இதழில் வெளிவந்தது..

Friday, 26 June 2015

கதை கதையாம் காரணமாம்..

அன்று , அசாதாரணமாக காலிங் பெல் அடிக்க யோசனையுடன் நான் கதவைதிறக்க ,
தெரிந்தவர்கள் தான்!!  , வரவேற்று சோபாவில் அமர்த்தி , விசாரிக்க , என் முகத்தில் குழப்ப ரேகைகள் படர்ந்தது..பின் வராத சொந்தங்கள் வந்திருந்தால் வராதா !! ??

யார் இவர்கள்..எதற்கு.. , இங்க
விடையாக தந்தனர் பதிலை..

வீட்டில் உடைகள் சட்டென தீப்பற்றி எரிகின்றனவாம் , சாப்பிடும்போது சரியாக வீட்டின் மீது கல்லெறிவதுமாக பலதும் நடக்கிறதாம்.." என்று
கேட்க கேட்க ஏஸியையும் மீறி வியர்த்தது..அப்படியா..என்பதற்குள் ..

(போறததுக்கு..!!)
என் வீடு தள்ளி நாலு தெரு இருக்கும் வீட்டில் இதற்கான பரிஹாரமும் செய்கிறார்களாம்..அதற்கு தான் வந்திருக்கிறார்கள்..! புருவம் உசர ..அப்படியா என கேட்டு முடிப்பதற்குள்..வா நீயும். என கைப்பிடித்து அழைத்துப்போக பித்துப்பிடித்தவள் போல பின் செல்கிறேன்..

அங்கு நாலைந்து பேர் , கறுப்பு உடை அணிந்து , எதோ மந்திரங்கள் உச்சாடனம் செய்ய ..என்னுடன் வந்தவர்களை குளிக்க செய்து..காரணங்கள் விளக்கி , வேறு உடைகள் மாற்றச்செய்து ..ஹோமங்கள் நடக்க .. கண் கொட்டாமல் பார்த்த நான்..தன் பிரச்சனைகள் விலகியதாக அவர்கள் ஓட நான் எப்போது வீடு வந்து சேர்ந்தேன் ..! தெரியவில்லை..

மறு நாள் , அதே காலிங் பெல் , வந்தது என் தோழி , அதே சோபா.. அதே விஷயம் பற்றி பேசினாள்..! என்ன இது ஏன் இப்படி கிளிம்பிட்டீங்க எல்லாரும் என்ற என் மன ஓட்டம் அறிந்தவளாக , எங்க அந்த flower pot கொண்டு வா..என,

ஆட்டோ மேடிக்காக அவள் முன் நீட்டினேன்..உள்ளிருந்த பிளாஸ்டிக் தொட்டியை வெளியெடுத்து ..இங்க பாரு..இந்த வெள்ளைப்பொட்டு..அதான் விபூதி.. உனக்கும் வந்திருக்கு இப்படித்தான் செய்வார்கள் என்றாள் !!

கண்கள் அகல அவளை அனுப்பி விட்டு உட்கார..அடுத்து மீண்டும் காலிங் பெல்..
இம்முறை.. கதவை திறந்த நான்..
தள்ளப்பட்டேன் ..

நுழைந்தது பலர் , அதில் சிலர் நேராக கிச்சனுக்குள் சென்று.. சமைத்ததைக்கொண்டு வரவும் , சிலர் எங்கிருந்தோ வாழையிலைகளை பரப்பவும்..என் கண் முன் பந்தி விரிக்கப்பட ..நான் சமைத்து வைத்த் உணவுகள் பரிமாறப்பட ..

பார்த்துக்கொண்டிருந்த நான் பொங்கினேன் ..ஏன் இப்படி, சொல்லாமல் , கொள்ளாமல்..இப்படி வீட்டுக்குள்ள நுழைஞ்சு எதோ மாதிரி சாப்பிடறீங்களே ..வெக்கமாயில்ல எனவும் ..

சாம்பார் ஊற்றி குழைத்திருந்த கைகள் உதறப்பட்டு..சட்டென அந்த இடம் சுத்தமாக பரபரவென சாமான்கள் மீண்டும் கிச்சனுக்குள் மறு பிரவேசம் செய்ய ..அப்பாடா என்று திரும்புவதற்குள் .. அதிலிருந்த ஒரு பெண்.

பிரிட்ஜை திறந்து பாலை எடுத்துக்காய்ச்சி எல்லோர்க்கும் டபரா , டம்ளரில் ஊற்றிக்கொண்டிருந்தாள்..!

அதிசயமும்..ஆவேசமுமாக அதிர்ந்தவள்..அய்யோ குழந்தைகளுக்காக வச்ச ஹார்லீக்ஸ் , கெஸ்ட்க்காக வச்ச ..பாதாம் மில்க் மிக்ஸ் , எனக்காக வச்ச காபி டிக்காஷன் இப்படி கொட்டி நாசம் பண்றீங்களே
.ஏன் இப்படி..!! எனக்கூச்சலிட்டேன் ....

சட்டென விழிப்பு வந்தது..ஆம் கனவு ..அதில் கூச்சலிட்டபோது நான் பார்த்த முகங்கள் , முதல் நாள் அந்த அமானுஷ்ய வேலைகளுக்கு பரிஹாரம் செய்த குடும்பத்தினர்..!!

ஏன்..எனக்கு இப்படி ஒரு கனா..சிரிப்பும் , யோசனையுமாக ..அதே சிந்தனை..சற்று நேரம்..ஆழ்ந்த உறக்கத்தில் செல்லும் நிலையிலேயே கனவுகள் வருகின்றன எனப்படித்த நான்..அந்த நிலையிலிருந்து மீளவும்..சற்று நேரம் எடுத்துக்கொண்டேன்..

ஆழ் மன சிந்தனைகள் ..கனவுகளுக்கு வித்தாகுமாம்.
.ஆம்..காரணம்..காலசக்கரம்..

நரசிம்மா அவர்களது காலசக்கரம் நாவல் முதல் நாள் படித்து முடித்திருந்தேன்.. அதன் பாதிப்பு என்றுணர்ந்தேன்.

இரவு உறங்கும் வரை படிப்பதும் ஒரு பழக்கமாகிப்போன எனக்கு..இப்படி திரைக்கதை யுடன் கனவாகும் என்பது கனவிலும் தெரியாதது.

சே..திரும்ப.. கனவா !!

அப்படி என்ன அந்த புத்தகத்தில் 3 நாட்களில் விட்டு விட்டு படித்து முடித்த புத்தகம் இழுத்துக்கொண்டது என்னையும்.

நரசிம்மா அவர்களது முன்னுரையுடன் ஆரம்பிக்கும் புத்தகம்..

4 காலகட்டங்களில் பிரயாணிக்கிறது..

காஷ்மீர் குஜ்லா தேவி பீடத்தில் புதைக்கப்பட்டு பின் ஆதி சங்கரரால், தெற்கு நோக்கி எடுத்துச்செல்லப்பட்ட 
ஸ்ரீ சக்ரத்தை(யந்திரம்)  தேடி ஒரு பண்டிதரின் பெண் செல்லும் பயணம்..

அந்த ஸ்ரீ சக்ரம் ஆதி சங்கரரால் புதைக்கப்பட்ட கும்பை எனும் ஊரில் உள்ள கும்பேசுவரர் கோயில்..

அவ்வூரில் உள்ள வேதம் பயின்ற குருக்கள்..அவர் பெண்கள் , பாட்டி , தம்பி பையன் என்ற அவர் குடும்பம்..

அதே பயணத்தில்..டெல்லியில் நடைபெறும்..ராஜ குடும்பத்தில் வழி வந்த அரசியல் தலைவர் - தலைவியின் வீட்டில் நடக்கும் சம்பவங்கள் உயிரிழப்புகள்..

அத்தனையும்..அந்த ஸ்ரீ சகரத்துடன் முடிச்சிட்டு, இறுதியில் யார் கைப்பற்றுகிறார்.. பின்னணியில் என்ன என படு சுவாரஸ்மாகக்கொண்டு செல்கிறார் ஆசிரியர் !

வெவ்வேறு வருடங்கள் உள்ளுக்குள் ஒரு காதல் கதை.. புத்தகங்கள் , விளக்கங்கள் என கதாசிரியர் திரட்டிய விபரங்கள் மலைப்பு எனக்கு.. !

அபிப்ரயோகம் எனும்.. மந்திரங்களின் மூலம் தேவதைகளைக்கட்டுப்படுத்தியும் , அவற்றின் மூலம் வேண்டிய காரியங்களை சாதிக்கும் செயல்களையும் விரிவாக சொல்கிறது கதையில்..
உண்மைப்போல நம்பவைப்பது தானே கதாசிரியரின் திறமை..
அதனை செவ்வனே செய்திருக்கிறார்.

திரு. நரசிம்மா அவர்கள்..!

படித்து முடித்ததும்..வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல்..என் கணவருடன் பல டிஸ்கஷ்ன்கள்..இப்படி நடக்குமா..நீங்க கேள்விப்படிருக்கீங்களா..

இப்படி எந்தெந்த தேவதைகளைக்கட்டுப்படுத்தலாம் என்றும்..

அவரும்..வெகு சுவாரஸ்மாக விளக்கிக்கொண்டு வந்தார்
.அன்றிரவு.. படுத்ததும்..உறக்க வர மறுக்க..ராமஜெபம் சொன்னப்படி தூங்கியவளை..

மறுநாள் இந்தக்கனவு வந்து..உலுக்கி எழுப்பியது..காலசக்கரத்தின் சுவையை புரியவைத்தது..

அதுவே இங்கு பதியவும் வைத்தது..

மீண்டும் வேறு புத்தகத்துடன்.. வருகிறேன்.. (ரெங்க ராட்டினம்  2 வருடங்களுக்கு முன் படித்தவள் , இப்போது தான், காலச்சக்கரம் ரசித்தேன்..டூ லேட் ..புரிகிறது )
( ஆனால்..கொஞ்ச நாளைக்கு குடும்ப நாவல்தான்..!! )

Tuesday, 23 June 2015

திருமாலை - பாசுரம் 1

திருமாலை அறிமுகம் ..
திருமாலை -1.
" காவலிற் புலனை வைத்து , களிதன்னைக்
கடக்க பாய்ந்து
நாவலிட்டு உழிதர்கின்றோம் நமன்-தமர்
தலைகள் மீதே
மூவுலகு உண்டு உமிழ்ந்த முதல்வ
நின் நாமம் கற்ற
ஆவலிப்பு உடைமை கண்டாய்
அரங்க மா நகருளானே "
திருமாலை..தொண்டரடிபொடியாழ்வரால் எழுதப்பட்ட வைணவ பக்தி இலக்கியம் நாலாயிர திவ்யபிரபந்தத்தில் வரும் 45 பாசுரங்கள்..
நாலாயிர திவ்யபிரபந்தத்தை எழுதிய வைணவ பக்திமான்கள் ஆழ்வார்கள் என போற்றப்படுகின்றன.
தொண்டரடிபொடியாழ்வார் , திருமாலை எப்படி எழுதினார், அவரின் சரிதம்..திருமாலைக்கான தனியன் ...சென்ற பதிவுகளில் பார்த்தோம்..
இப்போது முதல் பாசுரம்.... அர்த்தம் காண்போமா !
திருமாலை பாசுரங்கள் , திருவரங்கம் வாழ் பெரிய பெருமாள் ,அரங்கன் திருமாலின் மீது எழுதப்பட்டது . அவரை விளித்தே இப்பாசுரங்கள் வருகின்றன .
விளக்கம் ...
" மேல் உலகம் , பூவுலகம் , கீழுலகம் இப்படி மூன்று உலகங்களையும் , பிரளயகாலத்தின் போது தனது திரு வயிற்றில் வைத்து காத்த முதல்வனே ! அரங்கனே!
உனது திருநாமங்களை கற்ற கர்வத்தினாலே
நம்முடைய புலன்களை கட்டுக்குள் அடக்கி வைக்காமல் (காவலில் இல்லாமல் ) இருந்தாலும் ,
பல பிறவிகளிலும் தொடரும் பலவிதமான பாவங்களை முழுவதுமாக கடந்து
நாம்செய்யும் பாவங்களுக்கு தக்கபடி சரியான நீதி வழங்கும் எமன் மற்றும் அவரது அடியார்களின் தலை மீது கால் வைத்தபடி வெற்றி ..வெற்றி என்று உரைத்தபடியே இப்பிறவியை கடக்கிறோம் .... "
இதில் பல வாழ்வியல் அர்த்தங்கள் உள்ளன .
இந்த சம்சாரம் ..இல்லற வாழ்க்கை பல துயரங்கள் நிறைந்தது , இதில் இருந்து மேலும் மேலும் பாவங்கள் செய்யாமல் , பிறவிக்கடல் நீந்துவது கடினம்.
ஆனால் அதற்கு உபாயமாக இருப்பது நாம சங்கீர்த்தனம் எனும் , இறைவனின் திரு நாமங்களை தினமும் கற்பதும் , கூறுவதும் ஆகும்.
சம்சார வாழ்வு , விஷம் உண்ட வாழ்க்கை போன்றும்..விஷ முறிவு மருந்தாக இறைவனின் பெயர்கள் ..திரு நாமங்கள் இருப்பதாகவும் , அவற்றை உரைப்பதன் மூலம் விஷம் முறிந்து, மீண்டும் இவ்வுலகில் பிறக்காதிருக்கலாம் என்று ஆழ்வார் குறிப்பிடுவதாக பெரியோர்களின் விளக்கங்கள் உள்ளன .
மீண்டும் அடுத்த திருமாலை பாசுரத்தை பார்க்கும்வரை...
திருமாலின் அருள் வேண்டி , இந்த மார்கழியில் அவனை தியானித்திருப்போம்...

Sunday, 21 June 2015

போவோமா ..ஊர்கோலம்..துபாய்க்கு..

The walk - Dubai Marina ..
இந்த இடம் சமீபத்தில் உருவானது..
போன வீக் எண்ட்ல் கணவர் போகலாம் என கிளம்பினோம்! என்ன ஸ்பெஷல் ந்னு தானே,
நான் 12 வருடங்களுக்கு முன் இங்கு வந்த போது, காரில் ஏர்ப்போர்ட்டிலிருந்து வரும்போது இருபக்கமும் பார்த்தவை வெறும் மணல், பாலைவனம் மட்டுமே , அந்த இடம் இன்று மயன் கைப்பட்ட அழகிய கான்க்ரீட் ஜங்கிளாக மாறியிருக்கிறது !
இந்த The walk ல் துபாய் மரினாவில் ஒரு பகுதி.. ஐரோப்பிய மக்களை கவரவே கவர்ச்சிகரமாக உருவாக்கப்பட்டுள்ளது.
தரை.. ரோடு எல்லாமே கருங்கல்லால் ..
கடைகள் , ரெஸ்டாரண்ட்ஸ் சுற்றிப்பார்க்க , ஒளி வெள்ளத்தில் ஒளிர்ந்தன, எங்கெங்கு நோக்கினும் மக்கள் வெள்ளம் ,தனியாகவோ , குழந்தைகளுடன் கை சேர்த்து நடந்தவர்களையோ விரல் விட்டு எண்ணிடலாம் என்ற எண்ணியது என் மனம்.
அரேபிய ,இந்திய மக்களை சற்று தேடியே , கூர்ந்தே பார்க்க வேண்டியிருந்தது,
ஹோட்டல்கள் , ஷாப்பிங் மால், கடைகள் ஐரோப்பிய மக்களை அதிகமாகவே வசீகரித்து, அவர்களை உள்ளிழுத்துக்கொண்டிருந்தன..
சில,சில இந்திய ரெஸ்டாண்ட்டும் இருந்தன
(இல்லன்னா நாங்கள் எப்படி அங்க)
ஒரு சுவர் முழுவதும் டிஜிட்டல் திரை..எதிரில் ஒரு ரெஸ்டாரண்ட், வெகு சிலர் மட்டும் அதுவும் இளைஞர்கள் திறந்தவெளியில் எதிரிலிருந்த திரையில் திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்தனர், அவர்கள் மட்டுமல்ல , அந்த ஏரியாவே பார்க்கலாம் அவ்வளவு பெரிய திரை..அவர்களது ஏவலுக்கு காத்திருக்கும் வெயிட்டர்கள், கேட்டதும் சமைத்துத்தர தயாராக சமையல் கலைஞர்கள்! செக்யூரிட்டி டுடன்..
அப்பப்பா..என்ன ஒரு சமுதாயமென மனம் ஒரு ஆச்சர்யக்குறியை தட்டி விட்டது பட்டென !
சில ஹோட்டல்கள் ப்ரைவேட் பீச்சுடன் ..
(சென்றது மாலைவேளை, இரவானதால் எதும்' பார்க்க 'முடியவில்லை)
கடலை எங்கோ பார்த்தது நினைவிருந்தது..
ப்ளாஷ் பேக்கில் .. ஆனால் இப்போது ஊருக்கும் கடற்கரைக்கும் வித்தியாசமின்றி ..
மெலிதாக கரையைத்தொட்டு செல்லும் அலையில் கால் நனைத்தப்படி இருந்தேன் !
எத்தனை ,எத்தனை மனித ஆற்றல்கள் ,கட்டிடங்களாய் ..
எங்கோ இருந்த கடல் , கட்டிடங்களுக்கு நடுவே வந்து செல்கிறது அதில் படகுகளும்! அதன் கரையில் கட்டிடங்கள் ,மக்கள் குடியேறி வாழ்க்கை ..
Harley -Davidson பைக்கில் சீன் போட்டபடி உருமியப்படி சில ஜிம் ஆண்கள் , ஒன்றுமே பேச இல்லாமல் பேசியப்படி ஜோடிகள் சுதந்திரமான உடைகளுடன் இப்படி ஏகப்பட்ட காட்சிகள் கண்களின் கேமராவில் சிக்கின ..
பார்ஷ் ஏரியா..ஷாப்பிங், பொழுதுபோக்கு ..etc..etc .
பாலையாக பார்த்த பூமி, சொர்க்கபூமியாக ஜொலித்ததைப்பார்த்ததும்..நம் ஊர் கண் முன் வந்து செல்வதை தவிர்க்க முடியாமல், ரசித்தப்படியே..
அலைகளில் சற்று விளையாடியபடி திரும்ப மகன் அழைத்தான், "சீக்கிரம் வாங்கம்மா, இங்க ஒரு பர்ஸ் எடுத்தோம் ..யாரோடதோ! வாங்க" ..என...
உடன் விரைந்தோம்,அருகிலுள்ள செக்யூரிட்டியைப் பார்த்து!
ஆப்பிரிக்கன் செக்யூரிட்டிடம் கணவர் உங்க சூப்பர்வைசரிடம் இதை ஒப்படைக்கிறேன் , அழையுங்கள் என , அவருடன் ஒரு நடை அவர்களது ஆபீஸ் க்கு.. அங்கு தந்து..பேசிக்கொண்டிருக்கும்போதே, இருவர் வந்து சேர்ந்தனர், தங்களை அறிமுகப்படுத்திகொண்டு, பர்ஸுக்கு சொந்தக்காரர், அதற்குள் செக்யூரிட்டி யை தொடர்பு கொண்டு, அங்கு வந்திருந்தனர் ! அப்பாடா!
உரியவரிடம் ஒப்படைத்த நிம்மதியும் உடன் கிடைத்தது...
முதன்முதலில் அங்கு வந்தது.. அந்தப்பகுதி உருவாகிக்கொண்டிருக்கும்போது பார்த்தது, இப்போது பிரமித்தது என அனைத்தையும் அசைப்போட்டபடி இனிமையான இசையும் கேட்டபடியே இருந்தது வீடு திரும்பிய பயணம் ...
இதை விட்டுட்டேனே!! .. இது துபாய் வந்தா அவசியம் பார்க்கவேண்டிய , ஷாப்பிங் பண்ண வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று , இப்போது !

Saturday, 20 June 2015

வெயிட்டான பதிவு

பெண்களுக்கு மல்டி விட்டமின் எத்தனை அவசியமோ..அத்தனை அவசியம் அடுப்படில குக்கர்.

மாவு பொங்கலன்னா.. காபி டிக்காஷன் இறங்கலன்னா வர்ற டென்ஷன் பெண் இனத்திற்கு மட்டுமே சொந்தம்..அதில்
இன்னொன்றும் சேரலாம்..அது சமயத்தில் தேடவைக்கும்

குக்கர் வெயிட்..!
விசிலடிச்சு..நம்ம வேலையைக்குறைக்கும் ஒரே குக்கர்ல அத்தனையும் அடுக்கி.. நாம பண்ணும் பலே சமையல் (சமயத்தில் நாமே சொல்லிக்கணும் !! ) ஒரு நாள் தள்ளாடினா அதுக்கு காரணம் அதோட வெயிட்டா இருந்தா..அந்த இல்லத்தரசியின் சோகம்..காவியத்தலைவி சௌகார் ஜானகிக்கு சற்றும் குறைந்தது அல்ல!

யாரந்த இல்லத்தரசி..சாட்சாத் நானே !
ரொம்ப கெத்தாக..அடுக்களைக்குள் நுழைந்த நான்..வேலைக்கு வந்து சென்ற பங்களாதேஷி பெண்ணின்.. கைங்கர்யம் அறியாமல்

தேடினேன் தேடினேன் .. கிச்சனின் எல்லாகார்னரிலும் தேடினேன் !
இண்டு இருக்குகளிலும் தேடினேன்!

கிடச்சுதா என்றால்
.ஆமாம்..ஒரு கவிதை..

என் தேவையறிந்தே நீ ஓவென அலற
உன் தேவை நானுமறிய இது விளையாட்டா..!!

நீயில்லா பொழுதுகள் விரய நிமிடங்கள்
உன்னுடன் கலந்திட கிட்டிடும்
(ச)மையல் கணங்கள் !!

யாருமில்லா வேளையிலும்  நீயழைப்பாய்..
உனை நெருங்கிட அச்சமும் அவசரத்துடனும் நானிருப்பேன்

ஆபாத்பாந்தவன் நீ அணுக்கமாய் குழைத்திட
அனைத்தும் உன் முன் ஆவியில் கலந்திடும் !

எங்கே நீயென தேடியே களைத்தேன்
இருக்கும் இடத்தில் இருந்தால் தானே

நீ வர மகிழ்வேன் மறைந்திட மருள்வேன்
நீ ஒருவன் மட்டுமே என்னிடம் விஸிலடிக்க

உன் தலையில் நானடிக்க வேண்டும் அந்த நொடிகள்
எங்கே சென்றாயோ என் ஆசை குக்கர் வெயிட்டே. .. !!

இப்படி எழுதிவிட்டு.. வேறு ஒரு சின்ன குக்கரின் (ப்ராண்ட் வேற) விஸிலைக்கடனாகப்பெற்று..இந்த பெரிய குக்கரில் போட்டு..சற்றுத்தள்ளியே ஆயிரம் வாலா வெடிப்பற்றவைக்கும் திக்திக் கணங்களுடன் சாதம் , பருப்பு கூடவே காயுடன் வைத்து சமையல் முடித்தேன்.!

மதியம் படுத்தாலும் அதே நினைவு..எங்க தான் போயிருக்கும்..! " அது "

இங்கு வெயிட் இல்லையென்றால் ..வேறுக்குக்கர் தான் வாங்கவேண்டும்..
அது கிடைக்கும்
.தாராளமாக தடுக்கிவிழும் சூப்பர் மார்க்கெட்டில்.

ரிப்பேர் & வெயிட்டுக்கு அலையும் நேரத்தில் ஒரு குக்கரே வாங்கிடலாமே எனும் ஆத்துக்காரரின் பேச்சுக்கு வலம்..சே , இடம் கொடாமல்..(அத்தனை குழப்பம் இந்த வெயிட் தேடித்தேடி !! )
எப்படியும் கண்டுப்பிடித்தே தீர்வது என்ற முடிவுடன்..எத்தனை நாள் தான் வேற குக்கர் வெயிட் போட்டு பக்கத்தில் தௌசண்ட் வாலாவுடன் தேவுடு காப்பது..!!

இந்த வீர தீர செயலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தே தீரணும்..என்ற கங்கணம் கட்டிக்கொண்டவளாய் (உடனே கங்கணம் யார் கட்டினா..என்ன மந்திரம்ன்னு கேக்கப்ப்டாது ! )

ஒரு இனிய காலைப்பொழுதில் கை வைக்க..இரவு 8.30 மணி ஆனதில்...கிச்சன் தலைகீழாக மாறிப்போனது..! கைவண்ணம் தெரிய அதில் கால் (வலி) வண்ணம் தெரிந்தது
.!
ஐய்..என் கிச்சன் எத்தனை நீட்..! சூப்ப்ர்ல என்ற பெருமைப்பீத்திக்கொண்டதும்.
என்னைப்பார்த்து கண் ஆனவர் கேட்ட முதல் கேள்வி..அப்ப கிடச்சுதா குக்கர் வெயிட் !!

எங்க அதான் இல்லையே..ஆனா பாருங்க, கிச்சன் எப்படி ஜொலிக்குது..என்றே பூசி சமாளித்தாலும்

இன்னமும் கடைசிப்பகுதியை கைப்பற்றாத மன்னனின் மன நிலை..! அப்படி எங்க தான் போயிருக்கும் !

மறு நாள் வந்த பங்களா தேஷ் வேலை செய்யும் பெண்ணிடம்..அவளுக்கு புரிந்த ஆங்கிலத்தில் நான் கேட்க அவளுக்கு மட்டும் தெரிந்த ஹிந்தியில் ,
இல்லை.இல்லை..நான் பார்க்கவேயில்லை..என்று  என் மனக்குதிரையின் மீது மண் அள்ளிக்கொட்டினாள்

குறுக்கு விசாரணை அனைத்தும் நடத்தியும் தோல்வியிலே முடிவடைந்தது. !

சரி , இப்போது சமையல் இல்லையா அல்லது அந்த குக்கர் இல்லையா என்றால்..புலி அருகில் நின்று போஸ் கொடுக்கும் போர் வீரன் போல டெக்னிக்கலாக வேறு குக்கர் வெயிட் சமைக்கும் கிராதகி ஆகிப்போனேன் நான்..!

அடுத்த பட்ஜெட்டை எண்ணி.. புதுக்குக்கரின் ஒலியை எண்ணிக்காத்திருக்கிறேன் ...

Wednesday, 17 June 2015

திருமாலை அறிவோம் ..

திருமாலை அறிவோம் ..
திருமாலை - நாலாயிர திவ்யபிரபந்தம் என்ற வைணவ பக்தி இலக்கியத்தில் வரும் 45 பாசுரங்கள் , வழங்கியவர் தொண்டரடிபொடியாழ்வார்.
இதில் நாம் திருமாலையை அனுபவிக்க இருக்கிறோம், அடியேனின் சிறு முயற்சியாக பகிர வருகிறேன் உங்களுடன்...படித்ததை, கேட்டதைக்கொண்டு...
தொண்டரடிபொடியாழ்வார் எழுதிய திருமாலை , திருவரங்கம் வாழ் ரெங்கனாதரை (விஷ்ணு) பாடிய பாசுரங்கள் அழகு தமிழில் பக்தி பெருக்குடன் இருக்கின்றன .
பாசுரங்களின் அர்த்தத்துடன் நாம் பார்க்க ஆரம்பிக்கும் முன்...
எல்லா ஆழ்வார்களது பக்தி பாசுரங்களுக்கும் முன் , அவர்களைப்போற்றி (சேவையை) அவர்களுக்குப்பின் வந்த வைணவ அடியார்கள் எழுதிய தனிப்பாடல்கள் "தனியன்கள் " என்றழைக்கப்படும் .
திருமாலைக்கு தனியன் தந்திருப்பவர் திருவரங்க பெருமாள் அரையர்.
தனியன் படித்தே , திருமாலையை படிக்கிறோம்.
" மற்றொன்றும் வேண்டா மனமே!மதிளரங்கர்,
கற்றினம் மேய்த்த கழலிணைக்கீழ்,-- உற்ற
திருமாலை பாடும்சீர்த் தொண்டரடிப் பொடியெம்
பெருமானை, எப்பொழுதும் பேசு."
பெரிய மதில்களைக்கொண்ட திருக்கோயிலில் வாழும் அரங்கர் - ரங்கநாதராகிய
பசு, கன்றுகளை மேய்த்த கண்ணனின் திருவடிகளுக்கு கீழ் நல்ல பக்தியுடன் இருக்க திருமாலையை பாடிய பல நல்ல குணங்களை உடைய தொண்டரடிபொடியாழ்வார் எனும் எம்பெருமானை (பெயர்க்காரணம் -எப்போதும் திருமாலின் பக்தர்களின் திருவடித்துளிகளை எண்ணி, அதையே தன் பெயராக கொண்டவர் ) எப்போதும் , பிறவற்றை சிந்திக்காமல் அவரை மட்டுமே சிந்தித்திரு ...
(அர்ச்சாவதார மூர்த்தியாக இருக்கும் ரெங்கநாதர் , அவரே அவதாரக்கண்ணன் என்று குறிப்பிடுகிறார் ),
(கழலிணம் - பசு, கன்றுக்கள்)
இதில் பெரியவர்களின் விளக்கம்...நம் பெயர் , பிறப்பு ஞாபகம் வைத்துக்கொண்டால் அகங்காரம் வரலாம் , ஆனால் இறைத்தொண்டை அடிப்படையாகக்கொண்ட பெயரை வைத்துக்கொண்டால் அகங்காரம் இருக்காது என்றே தொண்டரடிபொடியாழ்வார் என்ற பெயரைக்கொண்டார் ஆழ்வார் அத்தகைய சிறப்பான குணம் கொண்டவரை தினமும் சிந்தித்து இரு மனமே! என்பதாகும் ..
இனி வரும் பதிவுகளில் திருமாலை பாசுரங்களை பார்க்கலாம்..

திருமாலை - அறிமுகம்

திருமாலை அறிமுகம் ...
தமிழில் பக்தியுடன் பாடல்களாக தரப்பட்ட பக்தி இலக்கியங்களுள் நாலாயிர திவ்ய பிரபந்தம் முத்தானது ! பக்திக்கு மருந்தானது.
வைணவ இலக்கியங்களில் , ஆழ்வார்கள் எனப்படுவர் 10 பேர்கள். இவர்கள் தமக்கு உள்ள திருமால் பக்தியை தாயாக, தாசனாக , சேயாக , காதலியாக உருகி வெளிப்படுத்தியுள்ளனர்.
பேயாழ்வார் , பூதத்தாழ்வார் , பொய்கையாழ்வார் முதல் ஆழ்வார்கள்..
முதலில் தோன்றியவர்கள் .
பின் 4வதாக திருமழிசை ஆழ்வாரும், 5வதாக நம்மாழ்வார், 6 வதாக குலசேகர ஆழ்வார் , 7 வதாக பெரியாழ்வார் , 8 வதாக தொண்டரடிபொடியாழ்வர் ,9 வதாக திருப்பாணாழ்வார் ,10 வதாக திருமங்கையாழ்வார் நம் தமிழ் நாட்டிலே தோன்றி தெள்ளு தமிழில் பாசுரங்களை இயற்றியுள்ளனர்.
படிக்க,படிக்க பேரானந்தம் தரும் பேரின்ப வழிகாட்டி இவை.
இவர்கள் அனைவரும் எழுதிய பாசுரங்களின் தொகுப்பே...நாலாயிரம் பாசுரங்களைக்கொண்ட நாலாயிர திவ்ய பிரபந்தம்.
இதில் நான் எழுத தொடங்குவது திருமாலை- தொண்டரடிபொடியாழ்வாரின் பக்தி பாமாலையிலிருந்து !
நிச்சயம்...எழுதியவரையும் பற்றி அறிந்து தொடங்கலாமே !!
நம் நாயகர் , தொண்டரடிபொடியாழ்வார் இயற்பெயர் விப்ர நாராயணன் . இவர் பிறந்தது திருமண்டகக்குடி என்ற கிராமம்...(இன்றும் , புள்ளபூதங்குடி எனும் ஊருக்கு அருகில்) தஞ்சை மாவட்டத்தில், அன்றைய சோழ தேசத்தில்.
இளவயதிலேயே முறைப்படி கற்றுத்தேர்ந்தவருக்கு, மகாவிஷ்ணு , திருமாலின் மேல் எல்லையில்லா பக்தி, அவருக்கு தொண்டு செய்ய எண்ணியே, நைஷ்டிக பிரம்மசர்யத்தை கடைபிடித்து வந்தார், இறை தொண்டிற்கு உகந்ததான பூ பறித்து , தொடுத்து தரும் தொண்டையும் செய்து வர, ஒரு அழகிய நந்தவனம் அமைத்து பராமரித்து வந்தார்.
ஒரு சமயம் , இவர் நந்தவனத்தில் இருக்கும் வேளையில் , அருகிலுள்ள திருக்கரம்பனூர் எனும் ஊரைச்சேர்ந்த தாசி...ஒருவர், தன் சகோதரியுடன் அவ்வழி வருகிறார் ...
அந்த தேவதாசி என்ற பெயருடையப்பெண் , தான் இவ்வளவு அழகாக அலங்காரம் செய்துகொண்டும் , இந்த ஆண்மகன் தன்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லையே என தன் அக்காவிடம் கேட்க, அவரும்...இவர் விப்ர நாராயணர், நைட்டிக பிரம்மச்சாரி , பெண்களை நோக்கார் ! திருமாலுக்கென தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர் என விளக்குகிறார்.
"என்னை , பார்க்காத, மானிடரா , அவரை என் மேல் பித்தம் கொள்ள செய்கிறேன் பார்!" என சவால் விட்டு அவரை மட்டும் ஊருக்கு அனுப்பி விட்டு, தொண்டில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் விப்ர நாரயணரிடம் , தான் திருமாலின் மீது மிகுந்த பகதியுடையவள் என்றும், தற்சமயம் ஏதும் போக்கிடமற்று இருப்பதாகவும் , அங்கு இடம் கிடைத்தால் , நந்தவன பராமரிப்பில் துணை செய்வதாகவும் இரைஞ்ச , அவரும் மனமிறங்கி வெளியே தங்கியபடி இருக்க சொல்கிறார்..
இறைவனில் லீலையாய்...பெருமழை பெய்ய, முற்றிலும் நனைந்த தேவ தேவி குளிரால் நடுங்க , தனது மேலாடையை அவளுக்கு அவர் தர, துடைத்தபடி அவரின் குடிலுக்குள் அவள் நுழைய, நின்றபடியே சேவகம் செய்கின்றீரே...
பாதங்கள் நோகுமே!! நான் சற்றே பிடித்து விடட்டும்மா என அவரின் கால்களை பற்ற, பிரம்மசர்ய முடிச்சும் அவிந்து , காமனின் சிறைக்குள் ஆழ்வார் வசப்படுகிறார்.
தேவதேவியின் காமச்சிறைக்குள் சிக்கயவர் , பக்தி மறந்து , இறைத்தொண்டு விடுத்து...முக்காலமும் அவருடனே கழிக்கிறார் .
வந்த வேலை நிறைவேறிய மகிழ்ச்சியுடன் தேவதேவி...தன் ஊருக்கு விரைகிறார், அவரைப்பிரிந்து.
தாசியைப்பிரிந்த நாராயணர் அனலிட்ட புழுவாகத்துடித்து, அவள் வீடு தேடி சென்று பார்க்க முயல, அவர் வெறுங்கையுடன், செல்வமின்றி இருப்பதால் அனுமதி மறுக்கப்பட , அங்கேயே தங்கி வேதனையால் உழல்கிறார் !
இறைவன்...நாராயணரை ....மோகச்சிறையிலிருந்து மீட்டு தான் ஆட்கொண்டு ஆழ்வாராக்க, திருவுளம் கொண்டு , திருவரங்க , அரங்கனது பொன்வட்டிலுடன் விப்ர நாராயணரது பணியாளாக , உருக்கொண்டு தேவதேவியின் வீட்டுக்கதவை தட்ட, பொன்னுடன் வந்ததால் கதவு திறக்கப்பட நாராயணர் உள் ஏற்கப்படுகிறார்..
திருவரங்கத்தில் பொன்வட்டில் தொலைந்தது..சோழ மன்னனுக்கு தெரியவர விசாரணையில் அது தேவதேவி வீட்டில் கிடைக்க, விப்ர நாரயணருக்கும் , தேவ தேவிக்கும் தண்டனை வழங்கப்பட்டு சிறையிலடைக்கப்படுகின்றனர்.
அப்போது விப்ர நாராயணர் புலம்பி, விம்மி அழுகிறார் , மாதின் மேல் கொண்ட மோகம் அனைத்தையும் இழக்கவைத்ததையறிந்து இறைவனை வேண்டுகிறார்! திருமால் அரசனது கனவில் தோன்றி அனைத்தையும் விளக்கி, விடுவிக்க கட்டளையிட, அரசரும் மறுநாள் விப்ர நாராயணரை விடுவிக்க... தவற்றை உணர்ந்தவர், பிராயசித்தமாக , தொண்டர்கள் , திருமாலின் அடியார்களின்..பாத துளிகளான அவர்தம் பாதம் பட்ட மண் எடுத்து இட்டு..அவருக்கும் தொண்டு செய்து, தனது பூத்தொண்டையும் தொடர....
" தொண்டரடிப்பொடியாழ்வார் " என திரு நாமம் பெறுகிறார்.
இவர் இதன் பின்னர் எழுதியவை...
திருமாலை , திருப்பள்ளியெழுச்சி, ரெண்டுமே திருவரங்க நாதனின் மேல் மட்டுமே எழுதப்பட்டவை...
முதல் திருமாலையில் அரங்கன் இவரை(மத, மாச்சர்யங்களிலிருந்து) எழுப்புவதாகவும்
பின் திருப்பள்ளியெழுச்சி யில் இவர் அரங்கனை எழுப்பும் விதமாகவும் பாடல்களை இயற்றியுள்ளார் .
திருமாலின் கழுத்தில் உள்ள " வன மாலையின் " அம்சமாகவே அவதரித்த தொண்டரடிபொடியாழ்வாரின் திருமாலையையே நாம் அனுபவிக்க இருக்கிறோம்....
திருமாலைக்கு செல்வதற்கு முன் தனியன்கள் , அவதாரிகைகள் என ஆழ்வாரை புகழ்ந்து , இந்த பாசுரங்களை பற்றி பின் வந்தவர்கள் எழுதியதையும் தெரிந்து, அனுபவித்து திருமாலையின் மணம் அறிய உள்ளோம் ..
என்னுடன் நீங்களும் பயணிப்பது மகிழ்ச்சி !
தமிழமுதம் பருகுவோம் பக்தி ரசத்துடன்.... !!

திருமாலை - எண்ணமும் எழுத்தும்

இணையதளம் ஒரு வலிமையான  வலைத்தளம் , 

, இதன் முக்கியத்துவத்துவத்தை நமக்கு  புரிய வைக்க , ஆட்சி மாற்றங்களும், தடை செய்யப்பட்ட நாடுகளும் உள்ளன.

தமிழ் பக்தி இலக்கியங்களில் தமிழின் பெருமை, சொல்லும் விஷயங்கள். நிறைய உள்ளன, அதில் நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் , திருவாசகம், திருவெம்பாவை முதலியவைகளும் வருகின்றன. ..

என்னைக்கவர்ந்தவை நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் .

அனைத்தையும் கற்றுத்தேற ஆயூள் போறாது என்பதால், கவர்ந்த ஒன்றை தெரிந்துகொள்ளலாம் என்பதில், நான் அறிந்தவற்றை (எனது எளிய தமிழ் அறிவு, ஆர்வத்தின் அடிப்படையில் ) இந்த தளத்தில் பகிர உள்ளேன் .

ஜனரஞ்சக பதிவுகளுக்கான ஆதரவு இருக்காது எனினும் ஆன்மார்த்த பதிவுகளாக , இயன்ற வரையில் முன்னோர் சமர்ப்பித்த வழியில்..இதனை எழுத இருக்கிறேன் .

அதில் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ..முதலாவதாக "திருமாலை" . பாடல்களால் திருமாலுக்கு , மாலையாக இந்த திருமாலை யை சமர்ப்பித்த ஆழ்வார் தொண்டரடிப்பொடியாழ்வார் பொடியாழ்வார்.

இவர் திருமண்டகக்குடி-சோழ நாட்டைச்சேர்ந்த எனும் சிற்றுரூரில் பிறந்து , விப்ர நாராயணன் என்ற இயற்பெயருடன் , திருமாலின் தொண்டர்களுக்கு பணிவிடை செய்து, அவர்தம் காலடி மண் ஒற்றி, பூ தொடுத்து, திருவரங்கம் வாழ் ரெங்கனுக்கு பாடல்கள் சம்ர்பித்து தொண்டு செய்தவர்..

இனி உங்களின் ஆதரவுடன் தொடர இருக்கிறேன் ...திருமாலையை ...

ரங்கா ..ரங்கா ...


அண்டசராசரங்களை
யும்
அடிகளால் அளந்து 
அயர்ந்து அறிதுயிலும் 
அரங்கா ! 

நின் பாதகமலங்களில்
சரண்புகுந்த சண்டியர்களுக்கும்
மோட்சமளிக்கும் பெருமானே !

விபீடணன் வேண்டியும் செல்லாமல் எம் வருத்தம் தீர கிடந்தருளும்
திருவருளே ! அரங்கமா நகருளானே!

நின் திரு உருத்தேடி விழிகள் விழிக்க
நாமம் பாடும் நாவும் தழுதழுக்க
நடக்க மறுக்கும் கால்கள் பின்ன

உயிரையே திரியாக்கி நின்
அருளோளி பெற அந்திமக்காலத்திலும் அந்தகன்
அச்சமின்றி திருவடி சேர்ந்திட அருள்போழி!!

அரங்கா! நின் திருக்கமல
சரணமன்றி யாதொன்றும் வேண்டேன் ! அருள்வாயா
அருட்கடலே!!அரங்கனே !!

அபுதாபி க்ராண்ட் மாஸ்க்ம் - அம்மாவும்

அபுதாபி கிராண்ட் மாஸ்க் ல் ஒரு மாலை...
UAE - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ந் தலை நகரான அபுதாபியில் அமைந்துள்ளது..
இனிமையான மாலைப்பொழுதில் யுஏஇ யின் பெரிய மசூதி ,நீண்ட நாட்களாக பார்க்க ஆசைப்பட்டு ,போக முடியாமல், அப்பா,அம்மாவிற்கு காட்டும் சாக்கில் நாங்களும் பார்க்க வந்தடைந்தோம்.
அழகான பசுமையான செடிகளுடன் ,பிரமாண்டமான நுழைவாயிலுடன் காரை பார்க் செய்து மயக்கும் மாலை , சூரியன் தன் கிரணங்களை குறைத்துக்கொண்டு ஆரஞ்சு, இளமஞ்சள் நிறத்தில் சிரிக்க,
உள் நுழைய முயன்ற எங்களை தடுத்து நிறுத்திய செக்யூரிட்டி தலையைசுற்றி , ஸ்கார்பால் மூடாததை குறிப்பிட்டு,எப்படி நுழையனும் என பிரேக் போட்டார்..
கருப்பு நிற அபயா எனும் முழுவதும் அணியக்கூடிய உடை அணிந்தே செல்ல வேண்டும் எனக்கூறி கணவரது எமிரேட்ஸ் ஐடி மட்டும் காட்டி உடை பெறலாம் என வழிக்காட்டி அனுப்பிட வாங்கும் இடம் தேடி சென்ற கணவர் ,போன் செய்து ,வர சொன்னார்,
நானும் அம்மாவும் போட்டுக்கணுமாம் உள் செல்ல.. நம் திருக்கோயில்களில் லுங்கி அணிந்தவர்கள் ,சில கோயில்களில் ஆண்களுக்கு மேல் சட்டை அனுமதியில்லை என்பது சட்டென நினைவில் ப்ளாஷ் ஆக,
நியாயமானதே ,என மதித்து, அதற்கான வழியில் செல்ல ஆரம்பித்தால்..
ஏகப்பட்ட கெடுபிடிகள் ,ஆங்காங்கே செக்யூரிட்டிகள் இருந்தனர் .. அண்டர் கிரவுண்டில் அம்மாவையும் அழைத்துக்கொண்டு இறங்கி போனால்,நம் திருப்பதி க்யூ போல , தனியாக செல்ல நடைபாதை .
இறுதியில் முகம் மறைத்த இருபெண்களிடம் முடிந்தது. எமிரேட்ஸ் ஐடி கேட்டு,பெற்று , கைகாட்டிய திசையில் மீண்டும் ஒரு வழிபயணம் .அனுமார் வால் நினைவுக்கு வந்தது,இஸ்லாமிய இடத்திலும் நம் கடவுளின் நினைவில்
கைகாட்டப்பட்ட இடத்தில் வெவ்வேறு சைஸ்களில் "அபயாக்கள்" கிடந்தன.சுத்தமாய் , கீளீனாய் நல்ல நறுமணத்துடன் .அப்பாடா,எவ்வளவு பயம் போட்டு கழட்டி தர்றதாச்சே,எப்படி இருக்குமோன்னு எண்ண ஓட்டம்.
சுத்தம் செய்யப்பட்டவை உடனுக்குடன் , என்னம்மா மெயிண்டன் பண்றாங்கன்னு அங்கேயே அட! போட வச்சது, அணிந்து வந்ததும், கணவர் கிளிக்கிக்கொள்ள,
பிரமாண்டத்தைக்காணும் ஆவலில் உள் நுழைந்தோம்.. நான்கு புறமும் சூழ் முற்றங்களுடன் , விளக்கொளியில் மார்பிள் கட்டமைப்பில் மின்னியது .
இந்த மசூதி 1997-2007 வருடங்களில் கட்டப்பட்டதாம் ,கட்டித்தந்தது ஒரு இத்தாலி கம்பெனி , பயன்படுத்திய மூலப்பொருட்கள் உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் வரவழைக்கப்பட்டு கட்டப்பட்டிருக்கிறது.
இதனை கட்ட விழைந்த Sheik Zayed Bin Sultan Al Nahyan (first present of UAE) கட்டப்பட்டதை காணாமலே இறந்து விட,அவர் இறுதியாய் அருகிலேயே உறங்கிறார் .
பிரம்மாண்டமான தூண்கள் தங்கம், semi precious stones , crystals பதிக்கப்பட்டு,கண்களை எங்கே பார்ப்பதென தெரியாத படி,மயக்கின .அம்மா,அப்பாவிற்கு பிரமிப்பு.
அறிந்து கொள்ளும் ஆர்வம் மேலிட, காலணிகளை வெளியே விட்டு (திருட்டு பயம் இல்லை tongue emoticon ) உள்ளே சென்றோம் ,
பெரிய்ய் ஹால் பகுதி, மேலே பிரமாண்டமான சாண்டிலியர்கள்(swaroski crystals ) வரவேற்க, அமைதியாய் தொழும் இடம்,திருக்குரான் வாசகங்கள் பொறிக்கப்பட்ட தங்க பிடிகளுடன் கூடிய மையப்பகுதி..
இப்படி பிரமிப்புக்கு மேல் பிரமிப்பு.
அங்கு விரிக்கப்பட்டிருக்கும் கார்பெட் உலகிலேயே நீளமானதாம் ,60,570
சதுர அடிகளில் விரிந்துகிடக்க,சுத்தம் பளீரென..
தானியங்கி,கண்ணாடிகதவுகள், தாண்டி வெளிவந்தும் பிரமிப்பு அடங்காது பார்த்துக்கொண்டிருந்த அம்மாவிடம் பிடிச்சுருக்காமா,என அம்மா,
"இதுவும் வழிபாட்டுத்தலம் ,இறைவன் குறை கேட்கும் இடம், சந்தோஷமே" , 50 க்கும் குறையாத மொகலாய அமைப்பில் கட்டப்பட்டிருந்த கோபுரங்கள் .. டூம்களை பார்த்து,
"எல்லா மதத்திலும் ஒரே வழியில் கோபுரம் அமைச்சு, பகவானோட அனுகிரஹம் வேண்டறோம் , இதில் என்ன பாகுபாடு இருக்கு" என்றார் .
ஆச்சாரமாய் ஹிந்து சம்பிரதாய அம்மா, இப்படி கூறினதும் மகிழ்ச்சியாய்,அவர்களை பேட்டரி ஆப்ரேட்டட் காரில்(இலவசம்) கார் பார்க்கிங்கில் இறக்கிவிட..
அபயா..பர்தா என்னாச்சுன்னு தானே,
நானே அம்மாவுடதையும் , திரும்ப அதே இடம் போய் ,ஐ.டி பெற்று கொண்டு, திருப்பி தந்து காரில் அடைக்கலமானேன்..
அருமையான பயணமாய் அன்று முழுவதும் சிந்தனையில்..அந்த Mosque மட்டுமே!!

Sunday, 14 June 2015

ராதை மணாளனின் திருவடிகளே சரணம் ..

நாவல்பழக்காரி என்றுமட்டுமே அறிந்திருந்த எமக்கு
நின் சங்கோடு ,சக்கரம் இயைந்த
திருக்கைகளைக் காட்டி
மோட்சம் எனும் வீட்டையருளினாயே கண்ணா!
அவள் நின்னையுணர்ந்ததன் புண்ணியம் அறிந்தால் யாமும் 
நாவற்பழக் கொட்டையாகவேணும் கீழ் விழத் துடிக்கிறோம் கண்ணா !
ஐந்தறிவு ஆவினங்கள் நின்
குழலிசை கேட்டுமயங்க அவை
செய்த புண்ணியம் யாம் அறியோம்
புல்லாங்குழலின் காற்றாக இல்லாவிடினும் கண்ணா !
நின் காலடிப்பட்ட பிருந்தாவனத்தின்
காய்ந்த மண்ணாய் ,மக்கிய சருகாய்
மாறிடத்தான் தவிக்கிறோம் கண்ணா!

நின் திரு வாய் அமிர்தம் பட்டு
சிவந்த வெண்ணெய் கொண்ட
மண் பாண்டம் செய்த புண்ணியம் தான் என்னே !
யாம் அறியோமே!
மாய இருள் நீக்கி, நின் பாதகமலமே நித்தமும் எண்ணி
ஏங்கிடவே செய்திட வேண்டுமாய்
ஆயிரதாமரையிதழ் தாங்கிடும்
நின் பாதக்கமலங்களே சரணம் !!

முதலில் தைரியமாக என் வெளியிட்ட கவிதை ..


மாதங்களில் சிறந்த மார்கழி 

சிலுசிலுவென அதிகாலைப்பனி
சாணம் தெளித்த ஈர மண்
மலரத்துடிக்கும் மலர்களின் மணம்
எங்கோ கேட்கும் திருப்பாவை இசை!
வாசலில் காபியுடன் அம்மா
போடுவதை பெருமையுடன் பார்த்து போகும் அப்பா
கொசுக்கடியுடன் கோலத்தில் திளைத்து
பளீரென வெண் கோலம்
வரைந்த கைகளுடன் நான்
மார்கழி ஒரு வசந்தம்
வருடம் முழுவதும் மார்கழியாய்
அப்படியே வாழ்ந்திட ஆசைதான் ...