Thursday, 29 October 2015

நலம் காக்கும் நாராயணன் , ஸ்ரீ சத்ய நாராயணன்.

வெளி நாடு வந்து , பார்த்த
வேலையின்  மாறுதலால் பல இண்டர்வியூக்களைப் பார்த்திருந்தவர் , ஒண்ணுமே க்ளிக் ஆகாமல் ,  அலுத்துப்போய் நணபர்களின் ரூமில் அமர்ந்திருக்க , உடனிருந்த ரூம் மேட் ஸ்ரீராம் , " வர்றீயாப்பா..என் ப்ரெண்ட் ஒருத்தர் , தன் வீட்ல சத்ய நாராயணப்பூஜை செய்யறார் ..போகலாம் ! "  எனவும் , பலத்த யோசனை , நாம் கேள்விப்பட்டதே இல்லையே , சரி என்ன தான் பார்ப்போமே என்ற ஆவல் உந்தித்தள்ள ,
பூஜையில் கலந்துக்கொண்டவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. பூஜையில் கலந்துக்கொள்ள வந்தவரின் மனக்குறையை பூஜையின் சங்கல்பத்தில் சேர்த்து , பூஜை செய்தவர் தனது மந்திரத்துடன் சொல்ல , சென்றவருக்கு ஆச்சர்யம் கூடியது !இவர் வேலைதேடுகிறார் என இவரது பிரார்த்தனை பலிக்கவும் அன்றை ய சங்கல்பத்தில் சேர்த்திருக்கின்றனர் கேள்விப்பட்டே ! 

அன்று அந்த வீட்டில் நடந்த பூஜையில் கலந்துக்கொண்டவர் பிரார்த்தனையில் தனக்கு சீக்கிரமே வேலை கிடைத்தால் தானும் பூஜை செய்வதாக வேண்டிக்கொள்கிறார் . அதன் ,பின் சென்ற ஒரு இண்டர்வியூ ஒகே ஆகி , வேலையும் கிடைத்து , குடும்பத்துடன் சேர்ந்தவர் , மனைவியுடன் இதை ப்பகிர , அவளும் நம்மால் இயலுமா.?!!
.அப்படி என்ன பூஜை என
முதலில் சில மாதங்கள் அலட்சியம் செய்தவள். 

பின் கணவரது தீவிரம் கண்டு நண்பர்களை அழைத்து முதன் முறை சத்ய நாராயண பூஜையை செய்தாள் !!

அன்று எதோ ஒரு தெய்வீகம் வீட்டில் பரவியதை உணர்ந்தவர்கள் அதை இன்று வரை தொடர்கின்றனர் ! அந்த தம்பதிகள் சுமிதாவும் ரமேஷுமே !!
ஒவ்வொரு மாதமும் பூஜைக்கு தானாகவே இணைத்துக்கொண்டு வந்தவர்களில் பலரது விருப்பங்கள் பிரார்த்தனைகள் நிறைவேறியதை அடுத்தஅடுத்த  முறை அவர்கள் எங்களின் பூஜைக்கு வரும்போதே சொல்லக்கேட்டு விக்கித்தேப் போனோம் !
நீண்ட காலமாக இருந்த கனடா வீசா அப்ரூவல் , யூ எஸ் ல் படிக்கும் மகனுக்கு ஸ்காலர்ஷிப் பின் வேலை , தர வேண்டிய பணம் தராமல் இழுத்தடித்தப் பிரச்சனை தீர்ந்தது , ஜெயிலில் இருந்த மகனின் விடுதலை (இது இங்கிருந்த ஸ்ரீலங்கன் பணிப்பெண் துன்பம்) , பெண் திருமணம் இப்படி பல பிரார்த்தனைகள் அவை பலித்ததையும் கேட்டு மெய் சிலிர்த்துதான் போனோம் !
வீடுகள் பல மாறினாலும் பௌர்ணமியன்று பூஜை தொடரும் எங்கள் பூஜை சில குடும்பங்களுக்கும் பரவி அவர்களும் அதே தினத்தில் செய்துவருவது கூடுதல் மகிழ்ச்சி !
சரி இத்தனை சிறப்பு வாய்ந்த ஸ்ரீசத்ய நாராயண பூஜையை எல்லாரும் செய்யலாமா ! செய்யலாம் என்றால் எப்படி !!
இதானே !!
இதோ அதை சொல்லத்தான் இந்தப்பதிவு .. !
இப்பூஜையின் சிறப்பம்சமே , முழுமையான நம்பிக்கையும் , பக்தி , சிரத்தை மட்டுமே !!
எந்தெந்த நாட்களில் செய்யலாம் ..
வெள்ளிக்கிழமைகள் ,திங்கள், ஞாயிறு .

அமாவாசை , புரட்டாசி மாத சனிக்கிழமைகள் 
தீபாவளி, சங்க்ராந்தி முதலிய 
பண்டிகை நாட்கள் , பௌர்ணமி தினங்கள்.
என்ன செய்ய வேண்டும் பூஜைக்கு :
பூஜை செய்பவர் விரதம் மேற்கொள்ள வேண்டும் ! கூடுமான வரை பால் பழம் சாப்பிட்டு கடைபிடிக்கலாம் .
முதல் நாள் இரவே , தம்பதியர் இறைவனின் திருவுருப் படத்தின் முன் நமஸ்கரித்து நாளை பூஜை செய்ய நினைந்து அவனருள் வேணி பிரார்த்தித்திக்கொள்ள வேண்டும் .
மறு நாள் காலை தலைக்கு எண்ணெய் தேய்த்துக்குளித்து , தூய ஆடைகள் அணிந்து மாலையில் பூஜையை துவக்கலாம்.
என்னவெல்லாம் தேவை பூஜைக்கு ...
ஸ்ரீ மஹா லஷ்மி திருவுருப்படத்துடன் , ஸ்ரீ சத்ய நாராயணர் திருவுருவப்படம் .
செம்பு கலசம் (அல்லது வெள்ளி அவரவர் வசதிகேற்ப)
மனை , வாழை மரம் , வாழையிலை , மாவிலை , பழங்கள் .
நைவேத்தியம் செய்ய..அரிசி , கோதுமை மாவினால் ஆன பதார்த்தங்கள் (இவை மிக கவனமாக , மிகுந்த சிரத்தையுடன் செய்ய வேண்டும் )
இவை அனைத்தையும் விளக்கிடும் ஸ்ரீ சத்ய நாராயண விரத மகிமை அல்லது பூஜை எனும் புத்தகம்.
முதன்முதலில் செய்யும் போது புரோகிதர் மூலம் செய்து பின் விருப்பப்பட்டால் நாமே இல்லத்தில் புத்தகத்தில் கூறியப்படியே செய்யலாம் .
இந்தப் பூஜையில் முதலில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து , வி நாயகரை வழிபட்டு , பின் நவகிரக மூர்த்திகளை ஆவாஹனம் செய்து , அர்ச்சித்து கலசத்தில் ஸ்ரீ சத்ய நாராயணரை வருவித்து , படத்துடன் அவரை மனதார துதித்து அர்ச்சித்து , பின் இறுதியில் நைவேத்தியம் , துதித்து பாடல்கள் (தெரிந்தால்) பாடி , கதைப் படித்து
புனர் பூஜை செய்து , நிறைவு செய்யவேண்டும்.
இவையனைத்தும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். அப்படியே தொடர்ந்தால் போதுமானது .
இப்பூஜை செய்பவரது வீட்டில் மட்டுமல்லாது ,வருபவர்களும் அசைவம் உட்கொள்ளாமல் சுத்தமாக பங்கேற்க வேண்டியது மிக முக்கியமான அம்சம்.
இறுதியில் இறைவனுக்கு நைவேத்தியம் செய்த பதார்த்தங்களை சுற்றம் சூழ அனைவருக்கும் தந்தப் பின்பே பூஜை செய்தவர் உண்ண வேண்டும் என்பதும் சிறப்பான அம்சம் .
ஆண் , பெண் யாவரும் செய்யலாம் . பெண்கள் விரதம் மேற்கொண்டு , நைவேத்தியத்துடன் கதை படித்து பூஜையை நிறைவு செய்வதாகக் கேள்விபடுகிறேன் .
இத்தகைய சிறந்த ஸ்ரீசத்ய நாராயண பூஜையை செய்து வருபவர் வாழ்வில் பல சிறப்புகள் , மேன்மையடைவதை கண் கூடாக காணலாம் .
இதனை எழுதுவதை பெரும் பேறாக எண்ணுகிறேன் .
ஸ்ரீசத்ய நாராயணர் அருள் அனைவருக்கும் கிட்டிட பிரார்த்தனைகள் !
ஓம் ஸ்ரீ சத்ய நாராயணாய நமஹ. ||

Monday, 26 October 2015

Bajrangi baijan நாயகி

கீதா  இந்தியச்சிறுமி , பாகிஸ்தானில்,  லாஹூர் ஸ்டேஷனில் சம்ஜூஹா எக்ஸ்ப்ரஸில் தனித்து விடப்பட்டவர் !

ஏழு எட்டு வயதிருக்கலாம்..

தனித்து இருந்தக் குழந்தை என்ன ஆனாள் ? எப்படி வந்தாள் ? லாஹூர் ஸ்டேஷனில் தனியே அமர்ந்தவள் , இன்று 24 வயதில் தாயகம் திரும்பியிருக்கிறாள் ..எப்படி நடந்தது ?

வாய் பேசமுடியாத காதும் கேளாத மாற்று திறனாளிக்குழந்தை எங்கனம் தன் இருப்பிடம் , தாய் தந்தைப்பற்றி கூற முடியும் !

மண்ணில் மனிதம் பரவி ..ஈரம் ஓடியுள்ளதை நிருபிக்கிறார் ..ஆம் இப்போதைய இவர் வயது 24. பதினைந்து வருடங்கள் தனித்து விடப்பட்டு பாகிஸ்தானில் , ஈதி (Edhi foundations) ஃபௌண்டேஷன் ஸ் என்ற அமைப்பின் மூலம் ஆதரிக்கப்பட்டு , கராச்சியிலேயே , தத்து எடுக்கப்பட்டு வளர்ந்திருக்கிறார்.

ஈதி ஃபௌண்டேஷன் பாகிஸ்தானின் மக்கள் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டது . கீதா என்றப்பெயரையும் தந்து சிறுமியைப்பெண்ணாக்கியுள்ளனர்.

"அவளது வீட்டைச்சேர்வது எங்களுக்கு மகிழ்ச்சியே " !! என்று கீதாவை பராமரித்து தன் குழந்தையாக பாவித்த அந்த தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் மகன் Faisal Edhi .

மனிதம் துளிவிட்டு,  அணு ஆயுதத்தால் நமக்கு சவால் விடுவதாக செய்திகள் கிடைக்கும் இந்நேரத்தில் , நம் தேச கீதா நம்மிடம் வந்து சேர்ந்திருக்கிறார் இந்தியப்பெண்ணாகவே !

இவரை பீகாரை சேர்ந்தக்குடும்பம் சொந்தம் கொண்டாட , DNA test மூலம் கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளது நம் அரசு !

வாழட்டும் கீதா , வெல்லட்டும் மனிதம் , துளிர்க்கட்டும் நேசப்பூக்கள்...

Saturday, 24 October 2015

அப்பப்பா ! அரபிக் !

அரபிக் , அரபிக் மூச்சுவிடாமல் மிடில் ஈஸ்ட் ல குழந்தைகள் படிச்சே ஆக வேண்டிய கட்டாயம் !
நாலாவது வயதில் கே ஜி 2 வில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் , 10 வது வரை கட்டாயப்பாடமாக வைக்கப்படுகிறது.

இதுல பாஸ் பண்ணு..வருஷத்தை நாங்க பாஸ் பண்ணிவிடறோம் என கறாராக சொல்லிடும் பள்ளிகள் .

அட ! அதான் முதல் ரெண்டு வகுப்புகளில்..நாமளும் உக்காந்து படிச்சுட்டா ஈஸியா சொல்லித்தந்துதடலாமே ந்னு பார்த்தா..அங்க வரும் ஆப்பு !

முதல்ல படிக்க ஈஸியா இருக்காப்போல இருக்கும் மொழிதான்...அப்பறம் போக போக ..கடுமையாகும் பாடத்திட்டங்கள்..யாராவது அரபிக் டியூட்டர் கிடைப்பாங்களா என தேட வைக்கும் !

எத்தனை வருடங்கள் படித்தாலும்..அரேபிய மொழியல்லாதவர்களுக்கு..அரபிக் வேப்பங்காய் தான்..! இந்த டியூஷனுக்கு மாஸ்டர் பிடித்து...8 கிளாஸஸ் க்கு 250-300 dhs என சொல்வதை த் தந்து , அதற்கு ரெடி செய்து அனுப்புவதற்குள் அம்மாக்கள் படும் பாடு சொல்லி மாளாது தான் !

பள்ளிகளில் முக்கால் வாசி அரபிக் டீச்சர்கள் எகிப்து , சூடான் நாட்டை சேர்ந்தவர்கள் தான் ! பேரண்ட் டீச்சர் மீட்டிங்ல்..சில க்ளாஸ்   டீச்சர்ஸ் மட்டுமே கட்டாயம் அரபிக் டீச்சரைப் பார்த்துப்போங்க என்பர்..

இல்லன்னா..தப்பிச்சோம் பிழைச்சோம்ன்னு ஓடிவிடுவதுண்டு. காரணம்..வெகு சிலரே..(என்னுடைய 12 வருட அனுபவத்தில்) நாம் சொல்வதைப் புரிந்துக்கொண்டு..பதில் தந்து , குழந்தைகளை அரவணைத்து செல்வர்.

அப்ப..மற்றவர்கள் அதானே ?! அத ஏன் கேக்கறீங்க..மாட்டினோம்..அவ்வளவுதான் !

நானும் பையனுடம் மிக ஆர்வமாக அரபிக் கற்றேன்..பெருமையாக கணவரும் எல்லாரிடமும் சொல்வார் , ஒரு பிரேக் விழுந்தது..பையன் இந்தியா பள்ளியில்  படித்துப் பின் மீண்டும் துபாயில் சேர்க்கப்பட மீண்டும் விட்டதப்பிடிக்க முடியவில்லை..!

எழுத்துக்களில் ஆரம்பித்தது..மளமளவென்று..பாராகிராபில் மிரட்டி எடுக்கும் ! கண்களில் நீர் முட்டும்.

க்ராஷ் கோர்ஸ் போல..வாரத்திற்கு 2 அல்லது 3 நாட்களில் தேவையான சிலபஸ் முடித்து .. எக்ஸாம் க்கு சொல்லித்தரும் மாஸ்டர் கிடைக்க அப்பாடா என்றிருக்கும் !

முதன்முதலில்.பிள்ளைகள்.     பேப்பர் மார்க்கை மறைக்கும் இல்லை ஆன்ஸர் ஷீட்டை கிழித்துப்போடச் செய்யும் திறமையைக் கற்றுதருவது இந்த சப்ஜெக்ட் மட்டுமே !

தெரியாத பெற்றோர்களிடம் , பசங்க நல்லப்பெயர் வாங்கறதும்..எப்படியாவது பாஸ் மார்க்காவது வாங்கிடுப்பா என்ற சலுகையுடன் கெஞ்ச வைக்கும் ஒரே சப்ஜெக்டும் நம் அரபிக் தான் !

துபாய் பள்ளிகளை விட் ஷார்ஜா பள்ளிகளில் அமைச்சகத்திலிருந்து பறக்கும் படையே வந்து..முழு ஆண்டு தேர்வு கொஸ்டின் பேப்பர் தந்து..உக்காந்திருந்து நடத்தி செல்வர்.

அதனால் கூடுதல் கடுக்காய் ஆசிரியர்களுக்கும் , மாணவர்களுக்கும்..ஆக்சுவலா பேரண்ட்ஸ்க்கும் !!

சரி , இதெல்லாம் இப்ப எதுக்குங்கறீங்களா ?

இருக்கே நாளைக்கு என் பொண்ணுக்கு அரபிக்..நாலு நாளா தொரத்தறேன் !
பையனிடன் வைத்த மன்றாடலுக்கு பதில் கிடைக்க..அவன் சொல்லித்தர அப்பாடா ! என கொஞ்சம் மூச்சு..விட்டு..யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் இல்லையா..?

அதான் பதிவும்..இதுவும் ஒரு அனுபவம் UAE யில்...!!

Thursday, 8 October 2015

கடிக்காமல் கவர்ந்திடும் குற்றம் கடிதல்

குற்றம் கடிதல் , 

பெயரிலேயே ஆர்வத்தைத்தூண்டி புதுமுகங்கள் உள்ள ப்படம்  எப்படி இருக்குமோ  என்ற ஆவலையும் சேர்த்து எழுப்பி..எதிர்ப்பார்ப்புடன் பார்க்க  வைக்கப்படுகிறது.

ஆரம்பத்திலேயே புதுமணக் காதல் தம்பதிகள் அவர்கள் அன்னியோன்யம் , காலை அவசர சென்னை , என்னப்புதுசா இருந்திடப்போகுது  என்று யோசிக்கும்போதே...கேரக்டர்கள் அறிமுகம் அவர்தம் குணங்களுடன்..ஆர்வத்தைக்கட்டி நம்மை திரைக்கதை யுடன் ஒன்றி , அட! என்று கவனிக்க வைக்கின்றனர். 

மெர்லின் கணித ஆசிரியை, மணிகண்டன் என்ற கலப்புத்திருமண தம்பதிகளுடன் செழியன் , ஆட்டோ ஓட்டும் விதவைத்தாய் , ஆதரிக்கும் போராளிக்குணமுடைய மாமா என்ற கோணத்துடன் , பள்ளி சூழலில் நம்மையும் சேர்த்து..
என்னது , நாம பள்ளியிலேயே இருக்கோமே..!! ??

இயக்குனர் என்னதான் சொல்லவருகிறார் என்றெண்ணும் போதே..
கதைக்கானக் காரணம் ..குபீர் என்று வெடிப்பது சபாஷ் டைரக்டரே எனச்சொல்ல வைக்கிறது.

செய்திகளில் யாருக்கோ என்று பார்க்கும் நிகழ்வை நம்மை அதனுள் புகுத்தி உணர வைத்துப் பார்க்க,  இல்லை..  அலச வைக்கும் யுக்தி தமிழ் சினிமாவிற்கு புதிது. 

மெர்லினாக ராதிகா ப்ரசீதா டீச்சராகவே வாழ்ந்திருக்கிறார் , மெல்லிய தேகம்..புதுத்தாலிக்கயிறுடன் , குங்குமம் வைப்பதும்..பின் அதுவே துன்பத்திற்கு காரணமோ என்றெண்ணி அழிப்பதும் , அலறுவதும்...என பல இடங்களில் நம் கவனத்தை ஈர்த்து... கண்கலங்கவும் வைக்கிறார்.

மணிகண்டனாக சாய் ராஜ்குமார்..விட்டுத்தராத காதல் கணவராக கடைசிவரை , கண்களை நிறைக்கிறார்.

பிரின்ஸிபல் , அவர் மனைவி..மெர்லினைக்காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் கொஞ்சம் திரைக்கதை யை இழுக்க முயற்சித்தாலும் , அதை உணர விடாமல்..அச்சோ என்ன விபரீதம் இவர்களுக்குக்காத்திருக்கோ என்று எண்ண வைப்பது..கதையின் ப்ளஸ் . 

குறும்புக்காரனாக அறிமுகம் ஆகும் செழியன்(மாஸ்டர் அஜய் - தியேட்டர்லயும் சக்கைப்போடு போடும் நடிகராம் )  , கொட்டும் சாப்பாடு , அதனை கவனிக்கும் சின்னப்பெண் ஒரு சஸ்பென்ஸுக்காக வைத்து , இறுதியில் வேறுக்காரணத்துடன்  முடிச்சை அவிழ்த்த விதம் அருமை.

தியேட்டர் ஆர்டிஸ்டிஸ் , புதுமுகங்கள் என்றிருப்பதாலோ என்னவோ..ரியாலிட்டிக்கொண்ட கதையில் பாத்திரங்கள் சற்றே டிரமாடிக் ஆக பேசுவது,  குறும்பட எபெக்ட் தருகிறது.

மதுபாலகிருஷ்ணனின் குரலில் முதல் பாடல் , சின்னசிறுஞ்சிறுக்கிளியே பாரதியார் பாடல் .. பின்னணியில் ஓலக்குரலில் உயிர்க்குலைக்கும் பாடல், அளவான பிஜெம் என தேவையான இசையைத்தந்து என்று  இணைக்கிறார் நம் மனதை படத்துடன் இசையமைப்பாளர் சங்கர் ரெங்கராஜன் .

மணிகண்டனது கேமரா..பஸ்ஸிலும்..ஆட்டோவிலும் , இருட்டிலும் , பள்ளி டெஸ்க்லும், (சமயத்தில் ஹீரோயினுக்கு பல்வேறு ஆங்கிளில்  க்ளோஸப் !! ?? அதைக் குறைத்திருக்கலாமோ .. ) என  வெகு சாதாரணமாக பயணிப்பது படத்தின் ப்ளஸ்..யதார்த்தத்தின் மாஸ் !

வசனங்கள் , நிறைவான கதையமைப்பு..காட்சிகளை விவரித்து, முடிக்கும் பாங்கு என பிரேமிற்கு பிரேம் அசத்துகிறார் அறிமுக இயக்குனர் பிரம்மா.
செக்ஸ் எஜூகேஷனா , மீடியாக்களின் அவசர அராஜகக்கோலமா ,பள்ளிகளின் டிசிப்ளின் என்ற முறையில் அரங்கேறும் அத்துமீறல்களா என பலக்கோணங்களிலும் சுழலும் கதை சற்றே பலவீனத்தைத்தந்தாலும் , இயல்பாக செல்வதால் வெல்கிறது நம் மனதையும்.

திருவள்ளுவரின் அதிகாரமாகிய குற்றம் கடிதலை..(குற்றமே பகையாகலாம் ! ) கதைக்கருவாகக்கொண்டு , எல்லாம் சரியாகும் என்ற பாஸிட்டிவான வசனத்தையே படம் முழுதும் கொண்டு , இயல்பான நடையில் யதார்த்தைச்சொல்லி ,
நடிப்பிற்கோ கதைக்கோ..அழகான , சதையான
ஹீரோ யின், சிக்ஸ்பேக், வழுவழு ஹேண்ட்சம் ஹீரோவும் தேவையில்லை என மரபுகளை உடைத்து..பார்க்கவைக்கும் திரைப்படம் தமிழ்சினிமாவின் ஆரோக்கிய ஓட்டம் இந்த குற்றம் கடிதல்..

தேசிய விருதுடன் நம் வாழ்த்துகளும் குழுவினருக்கு.. !!

சுமி_சினிமாஸ்..

Monday, 5 October 2015

நம்மளைப்பார்த்தா அப்படியா இருக்கு :)

டிராகன் மார்ட் விஸிட் பத்தி எழுதியிருந்தேன் .

( எப்ப , எங்கந்னு தானே  கேக்கறீங்க.  :)  ..கொஞ்சம் பின்னாடி எட்டிப்பார்த்தா படிச்சுடலாம் )
அதில் சந்தித்த இரு வேறுபட்ட சம்பவங்களும் எங்களை மட்டும் எழுதாமல் விட்டது நியாயமா என தூங்க விடாமல் துரத்தவே (கொஞ்சம் டூ மச்சா இருக்கோ !! சரி  ..சரீ..ரீ )
இதோ இங்க எழுத வந்துட்டேன்.

டிராகன் மார்ட் ஏரியாவை அடைஞ்சு , காரைப்பார்க் செய்யறதே சவால் தான் ஹாலிடேஸ் ல .கேமிராவும் கையுமாக நானிறங்கிட ...கணவர் காரை கொஞ்சம் டென்ஷனாகி இடத்தைப்பிடிச்சு , பார்க் செஞ்சுட்டு வந்தார் .

கொஞ்சம் எண்ட்ரன்ஸ் போய் அப்படியே ரெண்டு போட்டோஸ் எடுத்துக்கலாமே ந்னு கேக்கவும் அதிசயமா ஒகேன்னு கணவரும் கூடவே வந்ததும் ஆச்சர்யம் , நீ என்னம்மா வாங்கவா வந்திருக்க , விண்டோ ஷாப்பிங் தானேன்னு கூலா குண்டைத்தூக்கிப்போட்டும் , அசராதவளா ..நடைப்போட்டேன் .

ஒரு பெரிய கார் ,படகுப்போல ந்னு வழக்கமா சொல்வாங்க , ஆனா இது படகு வீடு போல பெருசா இருந்தது.. கார் வளைந்து அந்த பார்க்கிங் ஏரியாவில் நுழையும் வேகம் பார்த்து , நாங்களும் ஒதுங்கி நடக்க ஆரம்பித்தோம் . திடிர்னு அதோட டிரைவர்  சடன்னா  பிரேக் போட்டு எங்க நடைக்கும் பிரேக் போட்டார் , டிரைவர் சீட்டிலிருந்த வெள்ளை கந்தூராவில் இருந்தவர் , அரபு மொழி பேசுபவர் என்று பார்த்ததுமே பேசாமல் உணர்த்தினார் . முதலில் கண்ணில் பட்ட என் கணவரிடம் அரபிக் ல் பேச ஆரம்பிக்கவும் ..சிக்கினாருடா நம்மாளு ந்னு உள்ளுக்குள் ஒரு குபீர் பௌண்டைன் அடிச்சாலும். சே பாவம் ந்னு தோன்றியது. 

அவரை முந்திக்கொண்டு .. " எங்களுக்கு அரபிக் தெரியாது..இங்கிலீஷ் ல சொல்லுங்க " .ந்னு நான் முன் மொழிந்ததை கணவரும் வழி மொழிய , காரிலிருந்தவரும் அப்படியே பொழிய .சே ! மொழிய ஆரம்பித்தார்.

நயாகரா பால்ஸ் மாதிரி ஆங்கிலம் பாய , பேசியவர் , எங்களை பேச விடாமல் வாயடைக்க வைத்தார். விஷயம் என்னன்னா , அவர் ஒமன் நாட்டைச்சேர்ந்தவர் என்றும் , மனைவிக்கு சிறு நீரகப்பிரச்சனை என்றும் அந்த மருத்துவத்திற்காக வந்தவர் , ஹாஸ்பிடல்ல சேர்த்துருக்கேன் என்றதும் ...

ஆட்டோ மேடிக்கா.  அச்சச்சோ ந்னு சொன்னது ஒரு குத்தமாப்பா ! அவசர அவசரமாக..இல்ல. இல்ல, இப்ப அவ நல்லாருக்கா , ரெக்கவர் ஆகிட்டா , பசங்களோட வந்துருக்கேன் ந்னார்..உள்ளப்பார்த்தா..ஏகப்பட்ட மழலைகள் சத்தத்துடன் ! முன் சீட்டில் ஒரு லேடி குழந்தையுடன் அமர்ந்திருந்தார்.

ஹாஸ்பிடலில் சேர்த்தவருக்கு திரும்பிப்போகவும் மனைவியை டிஸ்சார்ஜ் செய்யவும் பணம் பத்தவில்லையாம். அதற்கு தந்து உதவ முடியுமா ந்னு ...கேட்டதும் தூக்கி வாரிப்போட்டது. கணவரை பிரதர் , என்னை சிஸ்டர் ந்னும் கொஞ்சம் கெஞ்சவே ஆரம்பித்துவிட்டார். ஷாக் மேல ஷாக் !!

மனைவிக்கு சிகிச்சை , பெருங்குடும்பஸ்தர் , பெரிய வண்டியில் பார்க்கவும் வசதியாக தோன்றியவர் , நடந்துப்போகும் எங்களை நிறுத்திக்கேட்டதும் ... தூக்கி வாரிப்போடலன்னா தானே அதிசயம்.

சுதாரிச்சுக்கவே , ஒரு நிமிடம் ஆச்சு .. இங்கே மருத்துவ செலவும் , இவர்கள் சாப்பிடவும் , திரும்பிப்போக பெட்ரோலுக்கும், பணம் ஏகப்பட்டது ஆகும் , பேங்க்ல லோன் அப்ளை செய்யறதுக்குக்கூட ஏகப்பட்ட பார்மாலிட்டீஸ் .  இப்படியா !!  பார்க்கிங் ஏரியால பணம் , என்ன டீசெண்டா கேக்கறார்ன்னுங்கற ஆச்சர்யமும் தானே புயல் போல தாக்க , முதலில் சுதாரித்த என் கணவர் , என் கிட்ட இல்ல ..சாரி என்று கூறி நகரவும் .

நான், " என்னங்க இது பொசுக்குன்னு கேட்டாரு , ஏன் இங்க உள்ள லோக்கல் அரேபியர்கள் ,  அவங்க மொழியில் கேக்கலாமே, தர மாட்டாங்களா" ன்னு சொல்லி முடிக்கவும் அவரது கார் , ஒரு உள்ளூர் அரபி இளைஞரை கடக்கவும் சரியாக இருந்தது. எதுவும் கேட்காமல் அந்தக்கார் அவரைக் கடந்து சென்றது , அத்தனை இளிச்சவாயா நாம் ந்னு தோனியதை கணவரிடம் சொல்லாமல் மறைக்க , அவரும் எதோ வழி கேட்க தான் , பக்கத்துல வந்தார் ந்னு நினைச்சேன்னு சொல்லவும் சரியாக இருந்தது..
நல்லா கேக்கறாங்கப்பான்னு வடிவேல் ஸ்டைல்ல மூச்சு வாங்கினோம்!

பேசிக்கொண்டே. உள்ளே நுழைந்த நாங்கள் பலக்கடைகள் பார்த்ததும் , முதல் தளத்தில் ஒரு பேக் கடைக்குள் நுழைந்தோம்.

சேல்ஸ்மேனாக இருந்தவர் ஆப்பிரிக்கராக இருந்தார் , அழகான ஆங்கிலத்தில் பேரம்  பேசி வாங்கியதும் ... பில்லிங் போடும் போது அனைத்தும் , சீன மொழியில் இருந்ததையும் , அதை அவர் படித்துப்போட்டதையும் பார்த்ததும். வாய் சும்மா இருக்குமா ? ஒரு மினி பேட்டி , (இல்லாமல் தூக்கம் வராதே.  ஹிஹி)

" எப்படி , இப்படி , சைனீஸ் தெரியுமா !! "

" யெஸ் , இதோ சிங் சாங். படிப்பேன் , பில் செய்வேன்..கொஞ்சம் பேசுவேன் ! " (ஒரு சந்தோஷமான சிரிப்பு..அவர்ட்டதான் )

" ஓ..கிரேட் ! நீங்க..ஆப்ரிக்கால எங்க " .(.வேற யாரு நாந்தான் )

" எத்தியோப்பியா, நா இங்க , துபாய் வந்து , சைனீஸ் கத்துட்டு , ட்ராகன் மார்ட்ல வேலை செய்யறதால கத்துக்கிட்டேன் ! "

" நீங்க இந்தியாவா ! எனக்கு சல்மான் கான் பிடிக்குமே ! "
உடனே ஒரு 1000 வாட்ஸ் பவர் என் பக்கத்துலருந்து நா எழுதி தெரியவேண்டாம் உங்களுக்கு..

" ஓ..அப்படியா , புரியுமா எங்க லாங்க்வேஜ் , ? படங்கள்ன்பார்ப்பீங்களா " கண்கள் முடிந்த அளவு விரிந்து சுருங்கியது.

நல்லவேளை அவர் ..திரும்ப ஹிந்தி தெரியுமான்னு கேக்கல..போதுமே உன் சமர்த்துன்னு உள் மனம் சமயம் பார்த்து குத்திக்காட்டியது. 

" ஆமா.. எனக்கு இண்டியன்ஸ் , இந்தியா , உங்க லாங்குவேஜ் , சல்மான் , ஷாருக் , அமீர் எல்லாருமே ரொம்பப்பிடிக்கும்..எல்லா படமும் பார்ப்பேன் !! நீங்க ரொம்ப நல்லவங்க " வானளாவ புகழ்ந்தார்..

உச்சிக்குளிர்ந்துப்போய் .நன்றின்னு முடிச்சு...செம பீல் ல்ல வெளில வந்தோம்..உள்ள நுழையும் போது..ஒரு அட்டாக்..வெளியே வரும் போது தென்றல் போல ஒரு வருடல்.

எத்தனை விதமான மனிதர்கள் அப்ப்ப்பா !!

( ரெண்டு படமும்..கூகிள் கடன் தான்..கேமரா கையிலிருந்தும் மிஸ் பண்ணிட்டேன் 😛😑 )