Monday, 28 March 2016

தோழா... ஒன்றிட வைக்கிறான்

தோழா

வம்சி.பி , பிவிபி யுடன் கைக்கோர்த்து, ஆந்திர காதல் நாயகன் நாகார்ஜூனா , நம் கார்த்தியுடன் தோள் சேர்த்து, The Intouchables என்ற ப்ரெஞ்ச் படத்தின் கதையை தழுவிய தோழா .. ஆழப்பாய்ந்து ஆள்கிறான் மனதை !
வேகமான கார் டிரைவிங் ல் ஆரம்பித்த அறிமுகம் இறுதியிலும் நம்மைப்புன்னகைக்கவைக்கின்றனர் தோழர்களாக கார்த்தியும் , நாகார்ஜூனும் ஆம் சீனுவும், விக்ரம் ஆதித்யாவுமாக ! சிறையில் ஆரம்பிக்கும் கார்த்தியின் நடிப்பு அட்டகாசம் , நம்முள் தனி ஆர்வத்தைத்தூண்டி உட்காரவைக்க,
வெளிவர நம் விவேக் அட்வகேட் ஆக அவரை நன்னடத்தைப்பேரில் பல இடங்களில் வேலைக்கு அனுப்பமுயற்சிக்கும் காட்சிகள் கலகலப்பிற்கு வழிக்காட்டுகின்றன.

பிரமாண்டமான வீடு ரோல்ஸ்ராயல் கார்..என கார்த்தியின் விழிகளில் நாமும் வீழ்கிறோம்.

பெரிய பெட்ரூம், பாத்ரூம் , நீங்களா சொல்றவரை விட்டுட்டுப்போக மாட்டேன் என கார்த்திக்கூறும்போது புன்னகை சிதறலாக சிரிப்புடன் சிதறுகின்றன தியேட்டரில்.

கார்த்திக்கான இண்டர்வியூ, வீல் சேரில் நாகார்ஜூனா..அதே ஹேண்ட்சம் லுக்கில் நம்மை அசத்த ..பின்னாலே தமன்னா(கீர்த்தி) அவரின் பி ஏ வாக வர , கதையும் சூடுப்பிடிக்க , நாமும் கார்த்தியுடன் கேர் டேக்கராக அங்கேக்குடிபுகுகிறோம் !

கைகால்கள் அசைவின்றி..முகத்திலே அத்தனையும் கலந்துப்பரிமாறி கவிழ்க்கும் நாகார்ஜுனா, ஹைக்ளாஸ் லுக்கில்.. அசத்தும் தமன்னா, லோக்கல் கார்த்தி என ஆரம்பித்து, கார்த்தியின் லுக் மாறும் விதம், அதற்கான முன்னெடுப்புக்காட்சிகள் அத்தனையும் ஆசம் !

பாசக்கார..கோபக்கார தாயாக ஜெயசுதா, தங்கை..முரட்டு தம்பி என அவரவர்பாத்திரத்தில் பளீச்சிடுகின்றனர்.

கேர்டேக்கராக உள் நுழையும் கார்த்தி எப்படி நாகார்ஜூனாவின் வாழ்விலும் இடம்பிடித்து ஆள்கிறார் என்பதை மிக அழகான திரைக்கதை மூலம் சொல்கிறது தோழா !

தமன்னாவுடன் கதவைசாத்தும் இடத்திலும், ஓரக்கண்ணால் அவரைக் கரெக்ட் செய்ய முயற்சிக்கும் சீன், 20 லட்சத்துக்கு ஒரு பெயிண்டிங்கா என தாங்கமாட்டால் புலம்பி அதேப்போல (கிட்டத்தட்ட Mr.bean ஐ நினைவுப்படுக்கிறாரே!?)  வரைய முயற்சிக்க அது 2 லட்சத்திற்கு விற்கப் பட அவர் தரும் பில்டப்

.அதை அம்மா ஏற்காமல் ஏமாற்றம்..அப்பப்பா கார்த்தி..சார்..என்ன இது.. சான்ஸே இல்ல !! சிரிக்கவைத்து, அழவைத்து.. ரசிக்கவைக்கிறீர்கள் !
கெமிஸ்ட்ரி என்று இனி ஆண்,பெண் என்றில்லாமல் இரு ஆண்களாலும் நம்மை திரையில் ஆளமுடியுமென கலக்கலாக காட்டியுள்ளான் இந்த தோழா ! தமன்னா மிடுக்குடன், அழகாக கோபப்பட்டு, மனமிறங்கி, காதலாகி..ரசிக்கவைக்கிறார்
..அத்தனை அழகுடன் !
பிரகாஷ்ராஜ்..அட்வகேட் கேரக்டரில், பெயிண்டிங்கில் தான் ஏமாந்ததை அறியும்போதும் நண்பனுக்காக உருகும்போதும்.. ஆசம் ஆசம் !

கல்பனா சேச்சி.., பாதிவரை வரும் விவேக். நட்புப்பட்டாளங்கள், என அனைவரும் அவரவர் இடங்களில் பளீச் !! அனுஷ்கா, ஸ்ரேயா என மின்னல்களாய் ஜாலம் சேர்க்கின்றனர்.

இசை கோபிசந்தர்.. பலப்பாடல்கள்,
காஸ்டியூம்ஸ் அந்தந்தக்காட்சிகளை ஏற்றப்பெற செய்கிறது..
அதிகப்படியான சண்டைக்காட்சிகள் இல்லாவிட்டாலும்.. பாரீஸில் நடக்கும் ரோட் சேஸிங் ரசிக்கவைக்கின்றது.. !

ரெண்டு ஷெட்யூல் கேமிராமேன்கள்.. வினோத் கையில் கேமிரா விளையாட திரைப்படத்திற்கு ரிச்னெஸ் சேர்க்கிறது.. பியூட்டிஃபுல் ஷாட்ஸ் !
இசை கோபிசந்த்.. பிஜி எம் அசத்தல்.. இசையும் ரசிக்க வைத்து ஆடவும் வைக்கிறது.

காட்சிகள் புதிதாக, மெலிதான ஹூமருடன் அடுத்தடுத்து உறவுப்பாலம் அறுந்துவிடாமல் நம்மையும் அதனுள் இழுத்துப்போட்டு ரசிக்கவைத்து , தரமான திரைப்படம் தந்தடைரக்டர் வம்சிக்கு சுமிசினிமாஸ்ன் ஆயிரம் லைக்ஸ் !!

மொத்தத்தில் தோழா ரெண்டரை மணி நேரத்தை அழகாக்கி ரசிக்கவைக்கிறான் !

மிஸ் பண்ணிடக்கூடாத திரைப்படம்.
#சுமி_சினிமாஸ் 


ஏனோ...பயம் !!

சில பயணங்கள் சில நிமிடங்களே நீடிக்கின்றன ஆனால் 
அதன் தாக்கம் பல நாட்கள் நீடிக்கின்றன ! 

காரணம் காணும் காட்சிகளோ , பெறப்படும் அனுபவங்களோ , அதை தருபவர்களாகவோ இருக்கக்கூடும் ! 

தனியான எனது பயணங்களில் அதிகம் என்னால் சுற்றுப்புறம் கவனிக்கப்படுவதாக உணர்வதுண்டு .

சமீபத்தில் , ஒரு மெடிக்கல் செக்கப் பிற்காக , துபாயின் பெரிய மருத்துவமனைக்கு செல்ல , சாலையில் இறங்கியவளுக்கு சற்று பொறுமையை சோதித்தப்பின் ஒரு டாக்ஸி கண்ணில் புலப்பட்டது .

ஏறியதும் உடன்செல்லுமிடம் சொல்வோம் ..முடியாது எனில் முன்பே டாக்ஸி டிரைவர்கள் மறுத்துவிடுவர் .இது ஆனால் மிக அரிதாகவே நடக்கும்..ப்ரேயர் சமயங்களில் , சிலர் நீண்ட தூரம் வர விரும்பாதவர்களாலும்..! சரி விஷய்த்துக்கு வருகிறேன் !

என் டாக்ஸி டிரைவர் , வெள்ளை சீருடையில் , கார் ஓரளவு சுத்தமாக பராமரிப்பவராக , டிசெண்டாகவே தென்பட்டார் .

கொஞ்சம் ஆங்கிலம் தகராறு என்பதும் முதலில் பேச ஆரம்பித்ததுமே என்னால் உணர முடிந்தது. கொஞ்சம் தூரம் சென்றதுமே , கார்கள் தேங்க டிராபிக் ஆரம்பித்தது .

வழக்கம் போல்...மலையாளியா ?? என்றார் !

இல்லை , நான் சென்னை என்றதும் . ஓ. ஒகே என்றவர் , இத்தனை ட்ராபிக் ஜாம்..ம்ம். இங்கு அதிகம் இந்தியர்கள் தான் என்றார்.

நானும் இவர் என்ன தான் சொல்ல வருகிறார் என காதுகளை தீட்ட ஆரம்பித்தேன் , கண்கள் மட்டும் சாலையில் கடக்கும் கார்களையும் , மனிதர்களையும் விழுங்கியபடி இருந்தது.

இங்குள்ள மக்கள் தொகையில் நீங்கள் தான் அதிகம் உள்ளீர்கள் என்றார் ! அப்போது யார் இவர் ந்னு பார்த்தேன் ! இள வயது , சிவந்த நிறம் , கூர்மையான நாசி , நேர்த்தியான உடையமைப்பு , காரோட்டிய விதம் எல்லாமே சரியாகவே பட்டது. பின் ?!

நானும் , இல்லையே ..இப்போது எல்லா நாட்டினரும் உள்ளனரே ! என்றிட அடுத்த கேள்வி ...
சென்னை..கேரளா நெக்ஸ்ட் ..நெக்ஸ்ட்..??

யெஸ்..!

மும்பை...?

மும்பை ..மகாராஷ்டிராவின் கேப்பிட்டல் சிடி !

ஓ..! ஆனால் அது பெரியது ..!மக்கள் தொகை அதிகமில்லையா ??

ஆமாம்.

உத்தர்பிரதேஷ் ?? இதுதான் பெரியது இல்லையா !

எனக்குள். ஏன் இத்தனை விரிவாக கேட்கிறார் ?! கேள்விப்பட்டாம் பூச்சிகள் பறக்க ஆரம்பித்தன.

நானும். . இருக்கலாம் ..ஆனால் மத்திய பிரதேஷ் , பீகார் எல்லாமே பெரிது தான் ஏன் ,எங்க தமிழ் நாடும் ..இந்த நாட்டை விட பெரிதாச்சே...

(ஏனோ . நாம் ஏன் எல்லா டிடெயிலும் தரணும் என மனம் மக்கர் செய்தது .)

ஆங் .இப்போ அங்க தானே வெள்ளம்...!

அட , பரவால்லயே !! யெஸ்..யெஸ் என நானும் ஆமோதிக்க..

அப்படின்னா. மும்பை பெரிதா இல்லை , உத்தர் பிரதேஷ் பெரிதா ??

உத்தரபிரதேஷ் தான் பெரியது.. ! இது நான் ...

ம்ம்...அதான் நானும் கேட்கிறேன் ...பேசியவிதம் எதோ சரியில்லை எனப்பட்டது tongue emoticon

நான் வெளியில் இறங்குமிடம் பார்க்க ஆரம்பித்தேன்!

பட்..Mumbai யும் பெரிது தான்.. ம்ம். !! என்றிட...

இறங்குமிடம் வந்ததும்..பணம் தரும் போது எச்சல் விழுங்கியப்படியே கேட்டேன் ..

நீங்க ??!

பாகிஸ்தான் ...

எதிர்பார்த்த பதில் வந்து விழுந்தது..

நன்றி சொல்லி இறங்கி நடந்தேன் ! மனம் மட்டும் அவரது இறுக்கமான முகம் , தீவிரமான பேச்சு , திரும்ப திரும்ப UP பற்றியே கேட்டதை அசைப்போட்டபடி வந்தது.

எத்தனையோ சகோதரி என்றழைக்கக்கூடிய பாகிஸ்தானியர்கள் முகம் வந்துப் போனாலும் கலவரத்தையும் , ஒரு வித வெறுப்புக் கலந்துக்கேட்ட கேள்விகளும் என்னை அன்று முழுவதும் சுற்றி சுற்றி வந்தது என்னவோ நிதர்சனம்...

Wednesday, 23 March 2016

அடுத்த அலப்பறை.

அப்பார்மெண்ட் அலப்பறைகள் என சொ(நொ)ந்தக்கதையை எழுதியிருந்தேன். ஆப்பிரிக்கன்ஸ் என்றாலே இப்படியா என நினைக்கலாம்..பலர் தங்கியிருந்தால்..விட்ட அஜாக்ரதையான விஷயம்..முழுக்கட்டிடத்தையே அசைத்துப்பார்த்தது அன்று.. இன்னொரு நாள்..

இரவில்.. கணவருடன் நடந்து அருகிலுள்ள கடைக்கு சின்ன வாக்கிங் போல  பேசியப்படியே செல்வது. யாருக்குதான் பிடிக்காது.. !!

அப்படித்தான் பாருங்க..ஒரு நாள் நைட்ல  நானும் என்னவரும்..வாக் போயிட்டு , திரும்பும் போது, எங்கள் பில்டிங் வாட்ச்மேன் அவரும் தமிழ்தான்..(எங்கள் ஹவுஸ் ஓனர்..அரேபியப் பெண்மணி க்கு தமிழர்கள் மீது மட்டுமே நம்பிக்கையென்பதால்..தமிழ் வாட்ச்மென் களைப்பெறும் புண்ணியத்தைப்பெற்றுள்ளோம்! ) அவரிடம் பேச்சுக்கொடுத்தேன். "என்ன , நல்லாருக்கீங்களான்னு !! "
" எங்கம்மா !! "

" ஏன்..இப்படி அலுத்துக்கறீங்க !! என்னாச்சு !"  இது என் கணவர்.

" மத்தியானம் மேடம் வீட்ல இல்லயா..ஆம்புலன்ஸ் , போலீஸ் வந்துச்சே ! உங்க ப்ளோருக்கு ,தெரியாதா !! "

"போலீஸா
.வந்துச்சா.. எனக்கு தெரிலயே !! நா லஞ்ச் ல பிஸியா இருந்துருப்பேன் .ஏன் என்ன ஆச்சு !! " (இங்கே அத்தனை ஈஸியா போலீஸ் வராது..வந்தால் விவகாரம் தான் !! )

" ஆமா..நீங்க வெளில வந்து எட்டியேப் பாக்கலையே ! உங்க வீட்டுக்கு எதிர்ல அந்த மலையாள பேமிலி வீட்டுக்கு தான் வந்தாங்க..அந்தப்பையன் .. வந்துக்கூப்பிட்டான்..என்னை..அவசரமா வாங்க தாத்தா .. கீழக்கிடக்கார்ன்னு !!
நானும் மேல ஓடினேன் !! "

சஸ்பென்ஸ் தந்து நிறுத்தி ..நொந்தப்படியே மூச்சுவிட்டுக்கொண்டார் !!

"ஐயோ..என்னாச்சு.. !! "

" அந்தப்பையன் வந்துக்கூப்பிட்டுப்போனேன். வாசக்கதவு தாப்பாள் போடல.. தொறந்து உள்ள ப்போனா , அவன் தாத்தா உடம்பெல்லாம் ரத்தம்.ரத்த வெள்ளத்துலகிடந்தாரு ! .மேலக்கத்திக்குத்து நல்லவேள மயக்கந்தான் !". நிறுத்திவிட்டு என் கண்களின் பீதியைப் படித்தார் !

"அப்பறம் ?! "

"அப்புறமென்ன..போலீஸ்க்கும் அவன் அப்பா அம்மாக்கும் சொல்லி.. அவங்க வந்து.. ஆம்புலன்ஸ்ல அனுப்பிவச்சோம்.
நீங்க வெளில வந்து எட்டியேப்பாக்கலயே ! " என்றார்..

"ஓ..இத்தன நடந்துருக்கா ! எப்படி ஆச்சாம் !! " வாயும் கண்ணும் விரிஞ்சது மூடலையே எனக்குதான் ..

"அவருக்கு ஊர்ல யே இருந்துருக்கு தண்ணிப்பழக்கம் ! இங்கத்தனியாக்கூட்டிட்டு வந்துட்டாங்க.. வந்தவரு..கிடைக்கலன்னாதும்... இப்படி தானே உடம்புல கத்தியாலக்கிழிச்சுக்கிட்டாரு ! வயசு இருக்கும் 70 .. பொழச்சுடுவார்ன்னு நினக்கறோம் ! "

" இதெல்லாம் ?! "

"அவரு மகனும் மருமகளும் வந்து சொல்லித்தான் தெரியும் !! "

"அப்பறம்.. "

" அப்பறமென்ன..இவ்வளவு நேரம்.ப்போலீஸ் கூடத்தான் இருந்தேன் ! இப்பதான் இது சூஸைட் அட்டெண்ம்ட் ந்னு என்னை விட்டாங்க ! அந்தப்பேரப்புள்ள அத்தனை அழகா இங்கீலீஷ்லப்பேசுது.. அதுல தான் என்னை நம்புனாங்க ! இல்லன்னா நாந்தான் உள்ள இருக்கணும் !"

"ஓ..இத்தனை நடந்துருக்கா ..நா உள்ளயே இருந்துருக்கேன் ..ஒண்ணுமே தெரிலயே ! "

"நீங்க மட்டுமில்லங்க..அவங்கப்பக்கத்து ப்ளாட்லயே யாரும் கதவைக்கூட திறக்கல.. ! அரபில யாரு சொல்லிப்புரியவைக்க முடியும் அவங்களுக்கு ! " இது வாட்ச்மேன் .

" நல்லதாப்போச்சு.. வழக்கம் போல , போலீஸ் வந்துபோது நீ 

தலை நீட்டிருந்தான்னா, உன்னக்கூட்டிட்டுப்போய் உக்காத்தி வச்சிருப்பாங்க !!  நாந்தான் உன்னை போலீஸ்  ஸ்டேஷனுக்கு வந்துக் கூட்டிட்டு வரணும் ! !"

இது என்ற கணவரு.. !

நான்.. வழக்கம்போல ஙே தான் !!

( பி.கு: காவல்துறை.. சம்பந்தப்பட்டவர்கள் தற்கொலைதான் என சரியானக்காரணம் தரும் வரை , சாட்சியாகப்போனவரை அனுப்புவதில்லை என்றறிந்துக்கொண்டோம் !  )

Saturday, 19 March 2016

ஆ...ஆ...அப்பார்ட்மெண்ட் அலப்பறைகள் !!

அப்பார்ட்மெண்ட் அலப்பறைகள்

அன்றும் வழக்கம்போல மகளை அழைத்துவர லிப்டில் ஏறினேன்.

வயிற்றில் இருப்பதாக எண்ணிவந்தக்குடல் வாயருகே எட்டிப்பாக்கும் பீல் !

கை அனிச்சை செயலைப்பற்றி சயின்ஸில் படித்ததை நினைவூட்டிப்பார்த்தது ! பட்டென நாசியை இழுத்துப்பிடித்தது !

நிற்கமுடியாமல் கால்கள் நடுங்க லிப்ட் மட்டும் அழுத்துபவர்களின் ஆணைக்கிணங்க நின்று நின்று பொறுமையை ஓட ஓட விரட்டிக்கொண்டிருந்தது.

கெட்ட மணத்தின் முன் பே உயிர்காக்கும் மருந்துப்போல நல்ல மணத்தை நாடும் மனித மனம் என்பது மூளை உணர ஆரம்பித்தது. லிப்டில் ஏறிய நட்புக்களும் அதே நிலையில் இருந்ததைக்கண்டு ,

அப்பாடா ! நமக்கு மட்டுமில்ல இந்தக்கஷ்டம் என ஏனோ அந்த நிலையிலும் ஒரு நொண்டிசமாதானம் மனம் சொல்லிட  ,

ம்க்கும் ரொம்ப முக்கியம் என்னக்காரணம் என மூளை ஆராயத்தொடங்க அதன் விளைவாக, வாய் பேச ஆரம்பித்தது !

வாயைத்திறக்கவும்..லிப்ஃட் தரையை முத்தமிடவும் ஒன்றாக நிகழ, வெளியே ஆப்பிரிக்க நாட்டைச்சேர்ந்த சில இளைஞர்கள் , ஒரு முது இளைஞி யும் (பின்ன வயசு நாற்பது இருக்கலாம்.. அவரது தோற்றம்  அவர் கண்டத்தையே சொல்லாமல் சொல்லியது !! ) பலப்பொருட்களை கட்டிடத்தின் வாசலுக்கு இழுத்துச்செல்ல மல்லுக்கட்டிக்கொண்டிருந்தனர்.

அப்படி என்னதான் நடந்தது..மினி பேட்டிக்காக வாட்ச்மென் அறையை நோக்கி நடந்தேன் !

மூக்கைப்பொத்திய கைகளையும், அங்கு வீசிய துர் நாற்றத்தையும் தாண்டி நொந்தக்குமரனாக வாட்ச்மேன் "அதையேன் கேக்கறீங்க .. வழியில 6 வது ப்ளோர்ல ஸ்மெல் அதிகமாயிருந்துருக்குமே !! "

ஆமா !! என தன்னுச்சையாக தலையசைத்தோம்.
அதற்குள் என் ப்ரெண்ட் , "யாராவது இறந்துட்டாங்களா ?? அப்பார்ட்மெண்ட் பூட்டியே கிடந்துச்சா ? இப்படி நாறுதே!" என போட்டுடைத்தார் !!

"ஆமாங்க..ஒரே போன் மேல போனு.. !! இவனுங்க தான் கட்டடத்தையே நாற அடிச்சுட்டானுங்க ! "

"யாரு..இந்த ஆப்ரிக்கன்ஸ் ஆ !! "??

கேட்பதற்காக திறந்தவாயை இன்னொரு கையால் அழுத்தி மூடிக்கொண்டோம்..அங்கு 3 ஆண்கள் அலட்டிக்கொள்ளாமல் சாமான்கள் அடங்கிய பைகள் , சேர்கள் என லிப்ஃடிலிருந்து இழுத்துக்கொண்டுப்போய் வாசலில் ட்ரக்ல் ஏற்றுக்கொள்ள அடுக்கிக்கொண்டிருந்தனர்.

லிஃடிலிருந்து ஏதோ திரவம் சிந்தி வடிவேலு படத்தில் போடப்பட்ட மிளகாய்ப்பொடிப்போல வாசல் வரை லஷ்மண் ரேகாப்போல நீண்டுப்போயிருந்தது. உற்றுக்கவனித்ததில் அதுவே அந்த துர் நாற்றத்திற்கும் காரணமென உணர்ந்தோம்.

வாட்ச்மேனே தொடர்ந்தார் !! " இந்த , கும்பல் நிறைய பேரு , அந்த ப்ளாட்ல இருந்தானுங்க , அதுலப்பாருங்க ..ரெண்ட் ஒழுங்காக்கட்டல , அதனால முனுசிபாலிட்டில நோட்டீஸ் தந்து போலீஸ் இழுத்து மூடிச்சு , அப்ப இந்த கண்றாவிப்பிடிச்சவங்க ...ப்ரிட்ஜைக்காலிப்பண்ணாமல் அப்படியே மெயின்ப்புடுங்கிட்டு கதவை சீல் வச்சிட்டாங்க ! எனக்கென்னன்னுப்போயிட்டானுங்க. இன்னிக்கு காலிப்பண்ணசொல்லி ஆர்டர் வந்துருச்சி..அதுல போலீஸ் ...ப்ரிட்ஜோட டஸ்ட் பின் கிட்டதான் வச்சு வெளில ஓப்பன் செய்யணும்ன்னு சொல்லிருக்காங்க..இவனுங்க... அப்படியே வீட்டுக்குள்ளயே ஓப்பன் செஞ்சுட்டானுங்க ! அங்க உள்ள வச்சதெல்லாம் அழுகி ஓட அதோடயே சாமான்கள இழுத்துவந்துட்டானுங்க..அதான் பில்டிங்கையே நாறடிச்சுட்டானுங்க !! "

" அட என்னங்க ..காய்கறி வீணப்போய் அழுகிருந்தா இந்த நாத்தமா நாறும் ?? " இது நான் .

" ஐய்யோ ஐயோ ..நீங்க என்னம்மா இத்தன அப்பாவி யாக்கேக்குறீங்க ! அவங்க வச்சது மாட்டுக்கறியும் , பன்னிக்கறியும் அப்படியே ஓப்பன் பண்ணி முழுசா வச்சிருந்தாங்க.. அது அழுகி அவங்க கிச்சன் முழுக்க குளமாதிரி கட்டிருந்திருச்சு. "  என நானும் என் ப்ரெண்ட்ம்..ஆங்..உங்கள மாதிரியே தான் வாய் வழியே வர இருந்ததை அடக்கிக்கொண்டோம்..அட வாந்திய சொன்னேங்க !!

"அவனுங்கக் கூலாகேக்கறானுங்க..நல்ல சுமெல்லு... தெரில உங்களுக்கு ந்னு..??

அவனுங்கள என்ன செய்ய ! போவட்டும்ன்னு தான் நா உக்காந்துருக்கேன்... அப்பறந்தான் சுத்தஞ்செய்யணும் "  எனக்கூடுதலாக அவரதுக்கஷ்டத்தையும் சேர்த்துப்பேசினார்...

வாயில் வந்ததை அடக்கியப்படியே மகளுடன் எங்கள் ப்ளோருக்கு ஓடிவந்து... ஒருமுறை பாத் ரூம்க்கு போய் உவ்வேக்...!!

அன்று மாலையே கீழே பயந்து பயந்து வந்தேன்..சாமான்கள் காணாமல் போயிருக்க..மிகவும் டயர்டாக இருந்தார் வாட்ச்மேன் .. ஆனாலும் லிஃப்ட் அந்த துர் நாற்றத்தை டைவர்ஸ் செய்ய மறுத்து..அடம்பிடித்தப்படி இருந்தது..

அவரோ..இப்ப க்ளீனாயிடுச்சாங்க... ஒரு முழு டெட்டால் கேன் க்ளீனிங்..3 ரூம் ரெப்ஷனர்ம் காலி...என்றிட ..பாவம் அவருக்காக ஆமா..பெட்டரா இருக்கு என்றுக்கூறி..ஓடிப்போனேன் !! நினைக்க நினைக்க உவேக்கை தந்தப்படி இருந்தது அந்த துர் நாற்றம்.. !! மாசக்கணக்கில்... இருந்ததாச்சே !!

எதோ , யாரோ இறந்து அதானோ என்று பயந்துப்போயிருந்தோம் ...நல்ல வேளை ! நல்லா வந்து சேர்றாங்கப்பா என்றுப்பேசி மாய்ந்துப்போனோம் !!

இந்த அலப்பறையை ஒன்றுமில்லையென ஆக்கிப்பார்த்தது..அடுத்த திகில் அனுபவம்..அது !! ???

அடுத்ததுதான் !!

Friday, 18 March 2016

க.க.போ- காதலும் கடந்துப்போகும் கலக்குகிறார் சேதுபதி

காப்பியடிச்சாலும் சொந்தக்கதைப்போல காட்டிக்கொள்ளும் கோடம்பாக்கத்தில் My dear desperado என்ற கொரியப்படத்தின் தழுவல் என சொல்லிவிட்டு ஆரம்பிக்கும் நலன் குமாரசாமி, விஜய் சேதுபதி கூட்டணி சூது கவ்வும் படத்தினால் தந்த அதிரி புதிரியான எதிர்பார்ப்பு ஏமாற்றப்படவில்லை.

பிரேமம் தந்த செலின் ஹீரோயின் மடோன்னா செபாஸ்டியன் இதில் யாழினி, விழுப்புரம் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரின் பெண் சொந்தக்காலில் நிற்க ஆசைப்படும் சுமாரான இன்ஜினியரியங் பிடெக் படித்து சென்னையில் வேலைப்பார்க்கும் இளம்பெண், எதிர்பாராத விதமாக அவர் வேலை செய்யும் பி.பி.ஓ இழுத்து மூடப்பட வேலைத்தேடி, குறைவான வாடகைக்கு வீடுப்பார்க்கிறார் பெற்றோர் க்கு தெரியாமல்.

ரௌடி என்றப்பெயரில் சொத்தையாக , அடிவாங்கிக்கொண்டு,
அடியாளாக ஆனால் பார் ஓனர் ஆகும் ஆசையுடன் படிக்காத ஹீரோ கதிராக வி.சேதுபதி.

இவர் இருக்கும் வீட்டிற்கு எதிர்வீட்டில் யாழினி குடிவர முதலில் மோதலாக ஆரம்பித்து பின் அன்புப் படரும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

இந்தக்காட்சிகள் மெதுவாக நகர்வதும் , நெருக்கம் ஏற்பட பலகாட்சிகள் நகர்வதும் ஸ்லோ மூவி எப்ஃக்ட் தருகின்றன.
மணிரத்னம் டயலாக்ஸ் போல நலன் குமாரசாமி யும் தனிட்ராக்ல் ரசிகர்களை கவர்கிறார்.

விஜய் சேதுபதி படம் முழுதும் ஆட்சி செய்கிறார், பார் பைஃட்டில் அடிவாங்கி வரும் போதும் , அலட்சியப்பார்வையால் பக்கத்துவீட்டுப்பொண்ணு எனும் போதும், யாழினி வீட்டில் ,அவரின் காதலராக நடிக்கும் போதும் , யாழினிக்காக இண்டர்வியூ வை ரெண்டு மணி நேரம் தள்ளிப்போட்டு ரகளை செய்யும் காட்சிகளிலும் விசில் பறக்க செய்கிறார்.

செலின் மடோனா காதல் சந்தியாவை நினைவுப்படுத்தியும்,   நடிப்பிலும், சின்னச் சின்ன எக்ஸ்ப்ரெஷனகளிலும் செம ஸ்கோர் செய்கிறார்.

அழகான தேவையான உடையமைப்பு, சில இடங்களில் ஓவர் மேக்கப் என்றாலும் , தமிழ் இளைஞர்களின் ஏகோபித்த மனதை  அள்ளுகிறார்.

இவர்களின் அன்பு காதலாக மாறியதா கை கூடியதா ? எனக் காட்சிகள் , இன்னொரு புறம் சஸ்பெண்ட் ஆன இன்ஸ்பெக்டர் சமுத்திரக் கனி வில்லனாக மால் வெட்ட, இறுதியில் அவரைக்கொல்லப்போகும் காட்சிவரையிலும் மிக அலட்சியமாக வந்துப்போகிறார் தன் வேலையை சரியாக செய்தப்படி என ஆக்‌ஷ்ன் சீக்வென்ஸஸ் கலந்தாலும் காதலே முன் நிற்கிறது.

ஜிகே வெங்கடேஷ் மடோன்னாவின் சாது அப்பாவாக , ரசனையான சிவாஜி கணேசனின் திருவிளையாடல் நடையை பயிலும் ரௌடிகேங்க் லீடர் , இண்டர்வியூ செய்யும் கோதண்டராமன் , சந்துரு என அனைவருமே சூப்பர் சீன்ஸ் ஆக்கி நமக்கு தீனிப்போடுகின்றனர்.

சந்தோஷ் நாராயணின் இசையில் க.க.போ பாடல் ஆட வைக்கிறது , வேற லெவல் இசைக்கு தனிக்கோணம் காட்டுகிறார். பின்னணி இசை அளவு.

கதைக்கேற்ப தேவையான கலர் கலந்த கேமிராவுடன் தினேஷ் கிருஷ்ணன் ஈர்க்க மடோனாவை தனி அழகில் காட்டி ஈர்க்கிறார்.
சென்னையின் வாழ்க்கையை தத் ரூபமாகப் பிரதிபலிக்கிறது லென்ஸ் .

ஆரம்பம் முதலே வித்யாசப்படுத்தி கவரும் நலனுக்கு அடுத்தடுத்து எதிர்பார்ப்புகள் ஏராளமாகிடும். டிசெண்ட் மூவி தொடர்ந்து தரும் கூட்டணிக்குப்பாராட்டுகள் !

க.க.போ ..கடந்துப்போனது காதல் மட்டுமா நம் நேரமும் மனமும் தான் என திரைப்படம் திரையில் ஒன்றி ரசிக்கவைக்கிறது.

பாராட்டுகள் குழுவினருக்கு ! க.க.போ .. கவர்கிறது ! பார்க்கலாம் ! ரசிக்கலாம் !!

#சுமிசினிமாஸ்


Thursday, 17 March 2016

திருமாலை " அறியாதார் திரு மாலை'யே அறியாதவர் !!

தமிழில் வைணவ இலக்கியத்தில் சிறப்பானது
நாலாயிரத் திவ்யப்பிரபந்தம், இதனை திருமால் மஹாவிஷ்ணுவின் மேல் பக்திக்கொண்டுப் பாசுரமாகத் தந்தவர்கள் ஆழ்வார்கள்எனப்படுகின்றனர்.

அவர்களில் எட்டாவதாக சோழ நாட்டில் திருமண்டகக்குடியில் , விப்ர நாராயணன் என்ற இயற்பெயருடன் தோன்றி,

பின்னாளில் தொண்டரடிப்பொடியாழ்வார் என அழைக்கப்பட்டவர் தந்த பாசுரங்கள், தமிழ் பாடல்கள் திருமாலை, திருப்பள்ளியெழுச்சி.

இவை திருவரங்கம், ஸ்ரீரங்கத்தில் உள்ள திருமால் , அரங்கனின் மேல் பாடப்பட்டவை.

இனி அதில்

திருமாலை - 16.

சூதனாய்க் கள்வனாகித் தூர்த்தரோ டிசைந்தக்காலம்
மாதரார் கயற்கணென்னும் வலையுள்பட்டழுந்து வேனை
போதரே யென்று சொல்லிப்புகுந்துதன் பால்
ஆதரம் பெருகவைத்த அழகனூரரங்க மன்றே !

பாசுரப் பொருள் :

சூதனாய் - சூதிலில் தேர்ந்தவனாய்( சூது - பார்த்துக்கொண்டிருக்கும் போதே ஒரு பொருளை அபகரித்து செல்வது)

கள்வனாகி - மற்றவர் பொருளை அவர்களுக்கே தெரியாமல் கவரும் கள்வனாகவும் ஆகி

தூர்த்தரோடு - தீயவர்களோடு - (போகங்களில் ஈடுபட்டவர்கள்,இறைவனை மறந்து,  கண்ணால் காண்பதே மெய் என்றும் பாப, புண்ணியங்களை இல்லையென்பவர்கள் )

இசைந்தக் காலம் - ஒன்றாக வாழ்ந்திருந்தக்காலம்.

மாதரர் - பெண்களுடைய

கயற்கணெண்ணும் - மீன் போன்ற கண்கள் என்னும்

வலையுள்பட்டழுந்துவேனை - வலையுள் சிக்கிக்கொண்டு அழுந்திப்போயிருந்தவனை

போதரேயென்று சொல்லி - போ- வா .. அடா இப்படி வா என்று அழைத்து

புந்தியில் புகுந்து - சிந்தையில் , நெஞ்சத்தில் புகுந்து

தன்பால்  - தன்மேல்

ஆதரம் - அன்பு , ஆசை , வேட்கை

பெருகவைத்த - வெள்ளமாய் பெருகிட வைத்த

அழகன் - அழகனாகிய அரங்கன் எம்பெருமானது

ஊர் அரங்கம் -  வசிக்கும் இடம் திருவரங்கமாகும்.

இனி இப்பாசுரத்தின் அர்த்தம் காண்போம் :

ஒருவர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவர் பொருளை திருடும் சூதனாகவும் , அவரதுப்பொருளை அவருக்கே தெரியாமல் திருடிடும் கள்வனாகவும் ,

கண்களால் காண்பதே மெய், சுகபோகமான வாழ்க்கையே நிரந்தரம், பாபம் , புண்ணியம் என்பது ஏதும் இல்லை என்றெண்ணி வாழும் தீயவர்களுடன் சேர்ந்தும்,

பெண்களின் மீன் போன்ற கண்கள் எனும் வலையில் வீழ்ந்து , ஆழ்ந்தும்  வாழ்ந்திருந்தேன் பல காலமாக ,

அடே, வா ! என்றென்னை அழைத்து,   என் நெஞ்சினில் வந்துப்புகுந்து, மிகுந்த அன்பினை  தன் மேல் வெள்ளமாய் பெருகிடச்செய்த  அழகனாகிய அரங்கன்(பெரிய பெருமாள்) இருப்பிடமே திருவரங்கமாகும்.

இங்கு சூதன், கள்வன் என ஆழ்வார் குறிப்பிடுவது , ஆத்மாவை உடல் என்றெண்ணி,  தன்னுடையதென்று தான் வாழ்ந்ததை !

அனைத்து ஆத்மாக்களும் இறைவனின் சொத்து , அதனையறிமால், இந்த உடலும் , ஆத்மாவும் அழிவற்றது என்றெண்ணிக்கொண்டு,  போக விஷயங்களில் காலத்தைக்கழித்ததை தான் சூதன், கள்வன் என்கிறார்.

மாதரார் விழியுட்பட்டழுந்துவேனை என்பதில் , பெண்களின் மீன்களைப்போன்ற விழியழகில் மயங்கிப்போய் அதுவே நிரந்தரம் என்று வாழ்ந்ததையும் , அந்த விழிகள் உனக்காக நானிருக்கிறேன் என்று பொய்ப்பேச உள்ளமோ , பொருளிருப்பவனுக்கே என்னிடத்தில் இடம் என உண்மை பேசுமாம்.இதனை அறியாமல் வலையில் விழுந்து அகப்பட்டுவிட்டேன் என்கிறார்.

இதனைக்காணப்பொறுக்காமல் , அரே !! இங்கே வா என்று தன்னை அழைத்து , பெரியப்பெருமாளின் மேல் அன்பு, ஆசை , வேட்கையை அதிகரிக்கச் செய்ய தன்னுடைய புத்தியில்.. நெஞ்சத்தில் வந்துப்புகுந்துக்கொண்டு , அவரது திருவடிவழகைக்காட்டி , அவரின் அன்பை ஆதுரத்தை வெள்ளமாகப்பெருகிடச்செய்தவன் அழகன் அவனே அரங்கன்.அவன் வாழும் ஊரே திருவரங்கம் என்கிறார்.

முதலில் திரு மாலின் பெயர்களை , திரு நாமங்களைச் சொல்வதால் கிடைக்கும் நன்மைகளைக்கூறிவந்தவர் , மற்றவர்களுக்கு உபதேசமாகப்பாடி வந்தவர் , 15 வது பாசுரத்திற்கு மேல் , தனக்கு எவ்விதம் அரங்கன் இறங்கினான் தான் எவ்விதம் மாறினோம் என்று தன்னைத்தாழ்த்திக்கொண்டு விளக்குகிறார்.

இது ஆழ்வாருக்கா அல்லது சம்சாரத்தில் உழன்று இதுவே வாழ்வென்று போகத்தில் திளைத்திடும் நம் போன்றோருக்கா !!?

ஆழ்வாரின் பாதம் பணிந்து அடுத்தப்பாசுரம் காண்போம் !!

Sunday, 13 March 2016

மாப்ள சிங்கம் - சாதா மாப்ள !

தேனீப்பக்கத்தில் கிராமம், திருவிழா, தேர் இழுப்பதில் யார் ஆண்ட பரம்பரை, யார் கோவில் கட்ட இடம் தந்த பரம்பரை என்ற இழுபறிபோட்டியிலேயே நிற்க கலெக்ட்ராக படத்தின் ஓப்பனிங்லேயே பாண்டியராஜ் வந்திறங்க , வழக்கமான கதை தானே என்றெண்ணும் போதே ,

வித்யாசம் காட்ட முயற்சித்து திருவிழா நிற்க , ராதாரவி, முனீஸ்கான் எதிரெதிர் பார்ட்டியாக அணிவகுக்கின்றனர்.ஸ்ஸ். .அதே பாணி கதைதான் ஆசுவாசப்படுத்திக்கொள்கிறோம்.

மிகசிரமமில்லாத ஹீரோ பாத்திரம், கட்டப்பஞ்சாயத்து, படிக்காமல், ஓடிப்போகும் காதலர்களைப் பிரிப்பது, வேட்டியை மடித்துக்கட்டி.தேவர் மகன் மீசையுடன் விமல் வழக்கம் போல களமிறங்குகிறார். நம் சமுதாயக்குறைபாடுகளை கேள்விக்கேட்க ஏன் சமயத்தில் நம் மனக்கேள்விகளையும் சேர்த்து வெளிப்படுத்தும் அந்த பிரிட்டிஷ்கார இளைஞரை போட்டோகிராபராக அறிமுகப்படுத்தியிருக்கும் இயக்குநர் முயற்சி புதுசு.

விமலின் (பெரியப்பாப்(ராதாரவி) பெண்ணின்)  தங்கையின் காதலின் மூலம் கோபக்கார ஹீரோயின்..அட்வகேட் அஞ்சலியை சந்திக்கிறார் ஹீரோ..கண்டதும் காதலில் விழ, அஞ்சலிக்காக தன்னை மற்றிக்கொள்ள்ளும், காதலிக்க எடுக்கும் முயற்சிகள் விமலில் நடிப்பில் ரசிக்க வைத்தாலும்..இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் ஈர்க்கவில்லை.

அஞ்சலி, அழகாக ஸ்லிம்மாக இருக்கிறார், கூடவே முறைத்தும், முறுக்கியும் , கோபப்பட்டும் , காதலை வெளிப்படுத்தும் காட்சியிலும் நடிப்பை ரசிக்க வைக்கிறார்.

ஆபீஸ் சீரியல் புகழ் மதுமிதா, விஷ்ணு காட்சிகளுக்கு ஏற்ப நடிக்க, காளி வெங்கட், சூரி(மாமா வாம் !) காமெடிக்கு முயற்சிக்க, சூரி அலட்டிக்கொள்ளாமல் வ.வா.சங்கம் படப்பாணியில்..நடிக்க..சில அவரது வசனங்களில் ஈர்த்து சிரிக்க வைக்கிறார்.தேர்தல் சீசனில் படத்தை வெளியிட்டு , அரசியலையும் காட்டுகிறார்கள்.

தங்கையின் காதலை சேர்த்து வைத்தாரா , காதலில் விழுந்த அஞ்சலியைக்கைப்பிடித்தாரா என்ற கதையை திரைக்கதை மேஜிக் புதுக்காட்சிகளின்றி எடுத்து முடித்திருக்கிறார் டைரக்டர் ராஜசேகர்.

விமல் காஸ்டியூம்களில் கவனம் செலுத்தவேண்டும், அஞ்சலி ரசிக்க வைக்க, ஈஸி கோயிங் மூவிக்கு , பொருத்தமான ஒளி அமைப்பை செய்திருக்கிறார் தருண் பாலாஜி.ஸ்டண்ட் காட்சிகளைக் கவனிக்க மறுந்துவிட்டனரோ ! கவனிங்க டீம் !

பல ஹிட் பாடல்களை தந்த ரகு நந்தன் இதில் ரெண்டில் மட்டும் நினைவில் நிறுத்துகிறார்.

மாப்ள  சாதாவாக  கர்ஜிக்கிறார். பொழுது போகாவிட்டால் ஒரு முறை பார்க்கலாம்.

#சுமி_சினிமாஸ் !

Thursday, 10 March 2016

சில நிமிட வீடியோ க்கள் பல நிமிட வலிகள்

பல பக்க செய்திகள் தரும் தாக்கத்தை விடவும் சில நிமிட வீடியோக்கள் அதிகம் அழுத்தத்தை ஏற்படுத்திவிடுகின்றன.

சமீபத்திய செய்திகளில் அதிகம் காணப்படுவது, சிறுமிகளுக்கு திருமணம் குறிப்பாக, மத்தியக்கிழக்கு நாடுகளிலேயே மிகவும் வறுமையான நாடென குறிப்பிடப்படும் ஏமன் மற்றும் லெபனான் நாடுகளில் நடப்பதாகவும் அதனால் , திருமணம் முடிந்த அந்த இரவு , அந்த சிறுமிகள் ..இல்லையெல்லை பிஞ்சுக்குழந்தைகள் , உள்புறம் ஏற்படும் ரத்தக்கசிவினால் இறப்பதாகவும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

இதனைப்பற்றிய அலசலாக , உலகைக்கலக்கிய ஒருக்குட்டிப்பெண் Nada Al Ahadel ஏமனைச்சேர்ந்தவள் , கட்டாயத்திருமணம் 10 வயதில் , தேவதைப்போல அவள் கேட்கும் கேள்விகள் பார்க்கும் நம் மனதைப்பிசைய , திருமணத்திற்கு உடன்படாமல் வீட்டைவிட்டு ஓடி வந்து படிக்க விரும்புகிறாள்.
இதோ அவளின் பேட்டி ...

பின்னர் அவள் ஒரு ஏமனைச்சேர்ந்த அரசாங்கத்தின் காப்பகத்தில் விடப்பட்டு ப் படிக்கவைக்கப்படுவதாக அவளைப்பற்றிய செய்திகள் இணையத்தில் கிடைக்கின்றன.

வெளியேத் தெரியாத எத்தனையோ பெண் குழந்தைகள் தன்னை விட மூன்று மடங்கு வயதில் மூத்த ஆணை திருமணம் செய்துக்கொண்டு சிலர் வாழ , சிலர் இறக்க தொடர்கதையாகும் அவலமும் யூ டியூப் வீடியோக்களின் மூலம் அறிந்துக்கொள்ள முடிந்தது.

இதைப்பற்றிய அலசலுடன் கூடிய வீடியோக்களை ப் பார்த்ததோட இருந்திருக்கலாம்.இந்த recommended for you என்று ஒன்று வைத்து நம் நேரத்தை திருடும் பழக்கம் கூகிளுக்கு, யூ டியூபிற்கு கை வந்தக்கலை.

Heda  என்ற ஈரானியர் , ஈரானின் உட்புற ஒரு கிராமத்தில் வாழ்கிறார். வாழட்டுமே அதனால் என்ன ! இதானே , ப்ளீஸ் வெயிட் !
பாலிகாமி முறைப்படி வாழ்கிறார் , அதாவது 5 மனைவிகளுடன் எண்ணற்றக்குழந்தைகளுடன் வாழ்கிறார்.

இதென்னப்புதுசா நாங்கப்பாக்கததா என்றால்..ஆம். இவர் எப்படி அடுத்தடுத்த மனைவிகளை கரம்பிடிக்கிறார். எப்படி அவர்கள் ஒன்றாக வாழ்கிறார்கள், 
குழந்தைகள் ..4 மனைவிகளைக் காண்பித்துவிட்டு ஐந்தாவது மனைவியின் வரவைக்காட்டி திரையில் கருப்பைப்பூசி முடிக்கிறது அந்த வீடியோ.

ஈரான் மண் என்றாலே அந்த இயல்பும், சொல்லாமல் சொல்லிடும் படமாக்கலும் செய்திதொகுப்பிலும் ஒட்டிக்கொள்ளுமோ என்று எண்ண வைத்தது.

இதோ அந்த வீடியோ ...


நம் கண் முன் அவர்கள் வாழ்கிறார் , கூடவே கேமரா உறங்கி, உண்டு , எழுந்து , ஆசுவாசப்படுகிறது.

ஹீதா குடும்பத்தலைவன் ,தொழில் , ஆடுகள் , மேய்த்தல், விவசாயம் .
தன் தாயுடன் வசிக்கிறார். முதல் மனைவி யை திருமணம் செய்தவுடன் அவருக்கு உடல் நலம் சரியில்லை என்றக்காரணம் காட்டி , தனது கஸினையே மணக்க விரும்புவதாகக்கூற மனைவி மறுக்க (கஸின்னா ந்னு என்னக்கேக்கக்கூடாது..அரபிக் தெரியாது சப் டைட்டிலை நம்பறேன்! ) 

பின்னாளில் அடி உதைக்குக்கட்டுப்பட்டு அவரே முன்னின்று நடத்திவைக்கிறார் திருமணத்தை, கணவர் இந்தத்திருமணத்தில் புதுப்பெண்ணுடன் உறங்கச்செல்லும்போது நான் குழந்தைகளுடன் தனித்து உறங்க ஆரம்பித்தேன் என்ற சோகத்தைப்பதிவு செய்கிறார்.

நடு நடுவே ஆண்பிள்ளை என் பிள்ளை தங்கம் என்ற ரேஞ்சில் வயதான தாய் அவ்வப்போது ஸ்டேட்மெண்ட் விடுகிறார்.

மூன்றாவது மனைவி வந்தவிதம் அவர் குழந்தைகள், நான்காவது Ziba இவர் டைவர்ஸி..ரெண்டாவதாக இந்த ஹீதாவை மணம் முடித்து, இந்தவீட்டில் வந்து அத்தனை வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்கிறார்.

அவருக்கு பொறாமை என மற்ற மனைவிகள் பதிவு செய்கின்றனர்.
எல்லார் வீட்டுக்கதவும் திறந்து வைக்க சொல்வேன் விரும்பிய மனைவி வீட்டிற்கு செல்வேன் என்று பேரரசரின் அந்தப்புரக்கதைகளை நினைவுப்படுத்துகிறார் இந்த ஹீதா..!

ஈரானியர்களின் வாழ்க்கை முறை, சுத்தமாக உள்ள வீடுகள், கார்ப்பெட் பின்னும் லாவகம் அவர்கள் பராமரிக்கும் முறைகள், இடையே இழையோடும் லாவகமான நகைச்சுவை, வேதனை என அனைத்தும் படமாக்கப்பட்டுள்ளது.

ஐந்தாவது மனைவி ஐம்பது வயதில் தேவை என்பதையும் அதற்கானக் காரணத்தை அந்தக்குடும்பத்தலைவன் பதிவு செய்வதும் மனதை வேதனைப்படுத்துகிறது.

என்னது மகளிர் தினமா, பெண்ணியமா ! அடப்போங்கப்பா ! என ஆயாசப்பெருமூச்சே வெளிப்பட்டது...என்னிடம் !

இவை சில ஆண்டுகளுக்கு முந்தைய செய்திதான் , ஆனாலும் மனம் என்னவோ புரண்டு எழு மறுக்கிறது , கூடவே ஐ எஸ் ஐ எஸ் கேம்பில் பலபெண்கள் கருவுற்று , அடுத்த தீவிரவாத தலைமுறை உருவாக்கத்திற்காக அடைக்கப்பட்டிருப்பதாக வரும் செய்திகளும் ஆயாசத்தை அதிகப்படுத்துகின்றன .