Sunday 14 June 2015

ராதை மணாளனின் திருவடிகளே சரணம் ..

நாவல்பழக்காரி என்றுமட்டுமே அறிந்திருந்த எமக்கு
நின் சங்கோடு ,சக்கரம் இயைந்த
திருக்கைகளைக் காட்டி
மோட்சம் எனும் வீட்டையருளினாயே கண்ணா!
அவள் நின்னையுணர்ந்ததன் புண்ணியம் அறிந்தால் யாமும் 
நாவற்பழக் கொட்டையாகவேணும் கீழ் விழத் துடிக்கிறோம் கண்ணா !
ஐந்தறிவு ஆவினங்கள் நின்
குழலிசை கேட்டுமயங்க அவை
செய்த புண்ணியம் யாம் அறியோம்
புல்லாங்குழலின் காற்றாக இல்லாவிடினும் கண்ணா !
நின் காலடிப்பட்ட பிருந்தாவனத்தின்
காய்ந்த மண்ணாய் ,மக்கிய சருகாய்
மாறிடத்தான் தவிக்கிறோம் கண்ணா!

நின் திரு வாய் அமிர்தம் பட்டு
சிவந்த வெண்ணெய் கொண்ட
மண் பாண்டம் செய்த புண்ணியம் தான் என்னே !
யாம் அறியோமே!
மாய இருள் நீக்கி, நின் பாதகமலமே நித்தமும் எண்ணி
ஏங்கிடவே செய்திட வேண்டுமாய்
ஆயிரதாமரையிதழ் தாங்கிடும்
நின் பாதக்கமலங்களே சரணம் !!

No comments:

Post a Comment