Saturday, 18 June 2016

உடலும் உருகாமல் இருக்க என்ன செய்யவேண்டும் கேட்கிறார் ஆழ்வார்

உடலும் உருகுகிறதே என் செய்வேன் அரங்கா !!

அன்றைய சோழ நாடான திருமண்டகக்குடியில் அவதரித்தவர் விப்ர நாராயணர் என்னும் இயற் பெயர் கொண்ட தொண்டரடிப்பொடியாழ்வார். இவர் திருவரங்கம்(ஸ்ரீரங்கம்) வாழ் பெரியப்பெருமாளின் மேல் மட்டுமே காதலாகி..பாடல்களைப் பாடியவர். அவை திருமாலை..திருப்பள்ளியெழுச்சி !

இவை நாலாயிரத் திவ்யப்பிரபந்தத்திலுள்ள முத்துக்கள் !

அந்தப்பாசுரங்களைப்பற்றி இங்கு படித்து வருகிறோம்.

முந்தையப் பாசுரத்தில்...காவிரியின் அழகு , அதன் நடுவேப் பள்ளிக்கொண்டுள்ள பரமனைக்காணும் போது கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கிறதே என்ன செய்வேன் என்று புலம்பிப்பாடியிருந்தார்.

இனி அடுத்தப்பாசுரம் காண்போமா ?!

பாசுரம் -19.

குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்புக் காட்டித் தென்திசை யிலங்கை நோக்கி
கடல் நிறக் கடவுளெந்தை அரவணைத் துயிலு மாக்கண்டு
உடலெனக் குருகுமாலோ எஞ்செய்கேனு லகத்தீரே

******

குடதிசை - மேற்கு திசை

முடியை வைத்து - தனது திருமுடியை வைத்து (உலகை ஆளும் அரசன்..ஜகத்ரஷன் தனது க்ரீடம் வைத்து)

குண திசை - கிழக்குத் திசையில்

பாதம் நீட்டி - தனது திருப்பாதங்களை நீட்டிக்கொண்டு

வட திசை - வடக்கு திசையில்

பின்பு காட்டி - தனது பின்புற அழகைக்காட்டிக்கொண்டு

தென் திசை - தெற்கு திசையில் உள்ள

இலங்கை நோக்கி - இலங்கையை நோக்கியப்படியே

கடல்நிறக் கடவுள் - கடலைப்போன்ற நிறத்துடன் உடைய மேனியையுடைய கடவுளான

எந்தை - என்னுடைய (கடவுள்)

அரவணைத் துயிலு மாகண்டு - அரவமாகிய பாம்பின் மேல் கண்மூடி துயில்வதைப்போல இருக்கும் அழகைக்கண்டு

உடலெனக்கு - உடல் எனக்கு

உருகும் ஆலோ - உருகாதோ..ஐயோ !

என் செய்வேன் - நான் என்ன செய்யவேன்

உலகத்தீரே - திடமாக உருகாமல் உள்ள சம்சாரிகளே..உலகத்தில் உள்ளோரே !

------**---------

இனி பாசுர விளக்கம் :

உடலும் உள்ளமும் உருகாமல் உள்ள உலகத்தீரே ! மேற்குதிசையில் தன் திருமுடியை வைத்து, கிழக்கு திக்கில் தனதுப் பாதங்களை நீட்டிக்கொண்டும் , வடக்கு திசைக்கு தனது பின்னழகைக்காண்பித்துக்கொண்டும் , தென்திசை இலங்கையை நோக்கியவாறும் ,
கடலைப்போன்ற கரு நீல நிறத்தில் உள்ள எந்தன் கடவுள்..
பாம்பின் மேல் கண் வளர்வதைப்போல யோக நித்திரையில் ஆழ்ந்திருக்கும் அரங்கனது அழகைக்கண்டு , எனக்கு உடலும் உருகுகிறதே ! என்ன செய்வேன் !!

ஆழ்வார்.. இதில் மிகப்பிரமாதமான வார்த்தைப்பிரயோகம் செய்துள்ளார்.

கேட்பவரும் கரையும் வண்ணம்...வஞ்சப்புகழ்ச்சியணியாக நம்மைக்கேட்கிறார்.

உடலும் உள்ளமும் நன்கு திடமாக இருக்கப்பலபல மருந்துகளை உண்டப்படி..திடமாக இறைவனைக்கண்டு..நம் கோரிக்கைகளை வைத்தப்படி திரும்புகிறோம்.அதனால் நாம் சம்சாரிகள்.

ஆனால் ஆழ்வார்கள்..இறைவனின் மேல் பக்திப்பெருகி..ஞானம் வளர்ந்து..அதனால்..அவனைவிட்டு பிரிந்து இருக்க முடியாத நிலை ஏற்பட்டு..அவனைக்கண்டு உருகி அழும்போது..அதில் கரைந்துப்போகின்றனர்.
இங்கு தொண்டரடிப்பொடியாழ்வாரும்..அவ்விதமே முன்பு தானும்.. அவ்விதமே இருந்ததாகவும்.. ஆனால் தற்போது , அரங்கனைக்காண முடியாமல்..கண்களில் நீர் திரையிட்டும் உடல் உருகியும் போவதாகவும் குறிப்பிடுகிறார்.

மேற்கு திக்கில்..பல அண்டங்களுக்கும் அரசனாகிய அரங்கன் தனது திருமுடியை வைத்துக்கொண்டு (இங்கு கிரீடம் , தலையை என்றப்பொருளில் வருகிறது) , கிழக்கு திசை நோக்கி...திருவரங்கம் கோயிலின் பல சுற்றுகள் , வீதிகள்..காவிரி தாண்டி , இவர் வாழும் திருமண்டகக்குடி வரையிலும் தனது பாதங்களை நீட்டி அருள் பாலிப்பதாகவும் ,

வட திசையில் உள்ளவர்கள் அதிகம் சமஸ்கிருதத்தில் புலமைப்பெற்றவர்கள்.
தெற்கில்
ஆழ்வார்களால், எம்பெருமானின் புகழ் பரவி விட்டது. ஆனால்..வட திசையில் தானே தனது பின்னழகைக்காண்பித்து ஈர்த்தாலே ஒழிய..அவர்கள் அரங்கன் பால் திரும்பப்போவதில்லை..ஆகவே தனது பின்னழகை(தோள் அழகை)க்காண்பித்தும்..

தென்திசையில் இலங்கை நோக்கி...
இங்கு ..

தர்மவர்மா என்ற பண்டைய சோழ அரசன்.. பிராத்திக்க.. அயோத்தியில் ஸ்ரீ ராமனால் பூஜிக்கப்பட்ட ரெங்க நாதர்..அழகான காவிரி பாயும் திருவரஙக்த்தில் தங்கிட ஆசைப்படுகிறார்.

அதற்காக செல்ல மறுக்க.. தர்ம வர்மா விபீஷணன் இடம் வேண்ட , விபீஷணன் தானும்...திருவரங்கத்தில் அரங்கனுடனே தங்கிட ஆசைப்பட..அப்போது.. அவர் இலங்கை சென்று அரசை ஆள வேண்டியதைக்கூறி நம் பெருமாள் அனுப்பி வைக்கிறார்.

அனுப்பி வைத்தாலும்..அவரை தாய் தன் குழந்தையை தூங்கும் போதும் கவனித்துக்கொள்வதுப்போல..கவனித்தப்படி இருக்கிறார் என்பதை..தென்திசை இலங்கை நோக்கி என்கிறார் ஆழ்வார்.

கடல் நிறக்கடவுள் , கடவுள் இந்த வார்த்தையை அபூர்வமாக ஆழ்வார் பிரயோகிக்கிறார்.

கடலைப்போன்ற கரு நீல நிறத்தில் உள்ளவன்.. பாற்கடலுக்குள் கிடப்பவன்...அனைத்தையும் கடந்து இருப்பவன் என்றப்பொருளில்...கடவுள் என்கிறார்.

கருநீல நிறமுடைய எந்தன் கடவுள்.. அரவமாகிய
. ஆதி சேஷன் மேல்..துயில்வதுப்போல யோக நித்திரையில் ஆழ்ந்திருக்கும் அழகைக்காண முடியாமல்..என் உடலும் ( ஏற்கனவே உள்ளம் உருகியாயிற்று) உருகுகின்றதே !

இங்கு.. ஆலோ என்பது ஐயோ என்றும் , உருகுமாலோ எனும் போது...உருகாமல் இருக்க என்ன வழி சொல்லுங்கள்..!

நீங்கள் தானே அரங்கனைக்கண்டும் உருகாமல்..பார்த்து செல்கிறீர்கள் என்றுக்கேட்பதாக பாசுரம் அமைந்துள்ளது !

பொருட் செறிவுடன் கூடிய 19 வதுப்பாசுரத்தை தொடர்ந்து..அடுத்தது ஆழ்வாரின் பாதம் பணிந்துக்காண்போம் !!

#திருமாலை

No comments:

Post a Comment