Tuesday 23 June 2015

திருமாலை - பாசுரம் 1

திருமாலை அறிமுகம் ..
திருமாலை -1.
" காவலிற் புலனை வைத்து , களிதன்னைக்
கடக்க பாய்ந்து
நாவலிட்டு உழிதர்கின்றோம் நமன்-தமர்
தலைகள் மீதே
மூவுலகு உண்டு உமிழ்ந்த முதல்வ
நின் நாமம் கற்ற
ஆவலிப்பு உடைமை கண்டாய்
அரங்க மா நகருளானே "
திருமாலை..தொண்டரடிபொடியாழ்வரால் எழுதப்பட்ட வைணவ பக்தி இலக்கியம் நாலாயிர திவ்யபிரபந்தத்தில் வரும் 45 பாசுரங்கள்..
நாலாயிர திவ்யபிரபந்தத்தை எழுதிய வைணவ பக்திமான்கள் ஆழ்வார்கள் என போற்றப்படுகின்றன.
தொண்டரடிபொடியாழ்வார் , திருமாலை எப்படி எழுதினார், அவரின் சரிதம்..திருமாலைக்கான தனியன் ...சென்ற பதிவுகளில் பார்த்தோம்..
இப்போது முதல் பாசுரம்.... அர்த்தம் காண்போமா !
திருமாலை பாசுரங்கள் , திருவரங்கம் வாழ் பெரிய பெருமாள் ,அரங்கன் திருமாலின் மீது எழுதப்பட்டது . அவரை விளித்தே இப்பாசுரங்கள் வருகின்றன .
விளக்கம் ...
" மேல் உலகம் , பூவுலகம் , கீழுலகம் இப்படி மூன்று உலகங்களையும் , பிரளயகாலத்தின் போது தனது திரு வயிற்றில் வைத்து காத்த முதல்வனே ! அரங்கனே!
உனது திருநாமங்களை கற்ற கர்வத்தினாலே
நம்முடைய புலன்களை கட்டுக்குள் அடக்கி வைக்காமல் (காவலில் இல்லாமல் ) இருந்தாலும் ,
பல பிறவிகளிலும் தொடரும் பலவிதமான பாவங்களை முழுவதுமாக கடந்து
நாம்செய்யும் பாவங்களுக்கு தக்கபடி சரியான நீதி வழங்கும் எமன் மற்றும் அவரது அடியார்களின் தலை மீது கால் வைத்தபடி வெற்றி ..வெற்றி என்று உரைத்தபடியே இப்பிறவியை கடக்கிறோம் .... "
இதில் பல வாழ்வியல் அர்த்தங்கள் உள்ளன .
இந்த சம்சாரம் ..இல்லற வாழ்க்கை பல துயரங்கள் நிறைந்தது , இதில் இருந்து மேலும் மேலும் பாவங்கள் செய்யாமல் , பிறவிக்கடல் நீந்துவது கடினம்.
ஆனால் அதற்கு உபாயமாக இருப்பது நாம சங்கீர்த்தனம் எனும் , இறைவனின் திரு நாமங்களை தினமும் கற்பதும் , கூறுவதும் ஆகும்.
சம்சார வாழ்வு , விஷம் உண்ட வாழ்க்கை போன்றும்..விஷ முறிவு மருந்தாக இறைவனின் பெயர்கள் ..திரு நாமங்கள் இருப்பதாகவும் , அவற்றை உரைப்பதன் மூலம் விஷம் முறிந்து, மீண்டும் இவ்வுலகில் பிறக்காதிருக்கலாம் என்று ஆழ்வார் குறிப்பிடுவதாக பெரியோர்களின் விளக்கங்கள் உள்ளன .
மீண்டும் அடுத்த திருமாலை பாசுரத்தை பார்க்கும்வரை...
திருமாலின் அருள் வேண்டி , இந்த மார்கழியில் அவனை தியானித்திருப்போம்...

No comments:

Post a Comment