Friday 24 June 2016

தாசா..கண்ணதாசா ! கண்ணணனுக்கு மட்டுமல்ல ..நல்ல கண்களுக்கும் தாசா !!

கவியரசர் கண்ணதாசன்..


இவர்
அண்ணாந்துப்பார்க்கும் சூரியன் !!
இவரது
கவிதைகளை படிக்கும் போது குளிர் நிலா..!!
****
என் போன்ற கவிதை என்ற பெயரில் கிறுக்குபவர்களுக்கு வாய் பிளக்க செய்யும் ஆசான் !
தாத்தன் கண்ணதாசன்
(ஜூன் 24 ,1927) பிறந்தது தேவக்கோட்டை அருகில் ..
நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள்,ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள்,நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர்.
அரசவைக்கவிஞராக இருந்தவர்.
சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
இத்தனை எழுதியும் அர்த்தமுள்ள இந்து மதம் மூலம்..ஆத்திக -நாத்திக -ஆத்திக பயணத்தை அறியச்செய்தவர் !
யார் யாரோ வாழும் பூமியில் ...
இந்த அரசனும் வாழ்ந்திருந்தால் என்ன , கண்ணே கலைமானே கடைசி பாடலாக அமையாமல்..இன்னம் இன்னமும்..ரசிக்கும் அமுது படைக்கும் கவியன்னையாக அமைந்திருப்பாரே ..
காலனுக்கும் ஆசை அருகில் அமர்த்தி பாடல் கேட்க..!
அழைத்துக்கொண்டான் அவசரமாக !
ஆரம்பத்தில் , இசையில் ஆழ்ந்தவள் வளர்ந்த பின் .. வரிகளில் ஆழ்ந்துப்போனேன் !
எத்தனை எத்தனை பாடல்கள்..
தேன் துளிகளில் எந்த துளி இனிப்பு என்பதாகும் அவர் பாடல்கள் !
* காதல் சிறகை காற்றினில் விரித்து ..அதில் பிரிந்தவர் சேர்ந்தால் கொஞ்சம் நிம்மதி..
* பரமசிவன் கழுத்திலிருந்து
பாம்பு கேட்டது-கருடா செளக்யமா? யாரும்
இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் செளக்யமே கருடன் சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்! உன்
நிலைமை கொஞ்சம் இற‌ங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்!
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதனுக்கு- ஒளவை சொன்னது
அது- ஒளவை சொன்னது!
அதில்- அர்த்த‌ம் உள்ள‌து...
அப்பப்பா..எத்தனை எத்தனை உண்மைகள் !!
கவிஞர்களுக்கு..வானமும் வசப்படுகிறது கருத்து மெய்ப்படுவதால்..!
என்றும் இவர் பெயர் கூற கண் கலங்கிடும் மெல்லிசை மன்னர் திரு. எம்.எஸ்.விஸ்வ நாதன் அவர்களும்..
பிறந்த தினம் இன்று..
நட்பால் இணைந்தவர்கள் , இசை சகாப்தம் படைத்தவர்கள் , இருவரும் பிறந்த தினங்களும் ஒன்று..
தமிழ் உள்ள வரை , உலகில் சப்தம் உள்ள வரை இவர்கள் தம் புகழும் அழியாமல் நிலைத்து இருக்கும்..!

மம்மீ ஊட்டாத ரைஸ் ஐ மாம்பழம் ஊட்டும் !


மாஸா ..அல்போன்ஸா இப்படில்லாம் ஆசையில் தான் நானும் மோசம் போனேன் !
மேங்கோ பெஸ்டிவல் என..மாம்பழ தோப்புக்குள் போன உணர்வைத்தந்து..லபக்கென உள்ளிழுக்கும் இங்குள்ள படா மால்கள்.
அத்தனை மாம்பழப்பிரியர்கள் இங்கு..ஆஹா..இமாம்பசந்த் , ஐ.. செந்தூரம் , அட அல்போன்ஸா.., தோத்தாப்புரி..இப்படியெல்லாம் நானும் பாய்ந்துப்பாய்ந்து பொறுக்கினேன் கூடையில்..போட்டேன் எடை மேடையில்..விரித்தேன் ப்ரிட்ஜில் கடையா ?!
சாப்பிட விட்டானா..கடங்கரான்..இப்படியெல்லாம் எனக்கும் பராசக்தி வசனங்களில் பேச ஆசை..ஆனால் வரும் ஆத்திரங்களால் மக்களே (கேப்டன் வாழ்க்கையோட ஒன்றிட்டார் !!  ) அப்படியே சொல்லிடறேன் !
நானும் ஒவ்வொன்றாக அத்தனை டெஸ்ட்ம் அதாங்க தரபரிசோதனை.. மூக்குக்கு அருகில் வைத்தல் , தூரத்தில் வைத்து..தேர்ந்த பாம் ஸ்குவாட் டாக் போலவே தேர்வு செய்தல் ..இதில் அழகு என்னவெனில்..என்னைப்பார்த்து மற்ற நாட்டு காரர்களும் அதேப்போலவே வாங்கினர். சிலருக்கு டிப்ஸ்ம் தந்தேன். ஆனால்..விளைவு நறுக்கும் போது தெரிந்தது !
அத்தனையும் அந்தப்பழங்களா !! 
எந்தப்பழங்கள்..? இங்கேயுமா அப்படி ?!
எந்தக்காயும் குறிப்பாக வாழைமாம்பழம்..புகைமூட்டம் அல்லது அரிசிப்பானை(நம்ம ஸ்டைல்) , வைக்கோல் இப்படி வைக்க..குப்பென..மல்லிகை மலர்ந்தால் போல மறு நாள் பளிச்சென்று மஞ்சள் தேய்ச்சுக்குளிச்சாப்போல பழுத்திடும்.
இது இயற்கையான முறையில் பழுப்பது.
இதற்கு 48 -72 மணி நேரம் அதாவது குத்துமதிப்பா மூன்று நாட்கள் ஆகலாம்.
ஆனால்..நமக்கு தான் அத்தனைக்கும் ஆசைப்படும் அவசரமாச்சே..அதனால்..கார்பைடு கல்லுடன் சேர்த்து பழுக்கவைக்கப்படுவதில்..கை மேல் பலனாக.. 12-24 மணி நேரத்தில் பழம் ரெடியாகிறதாம்.
சரி..எப்படி வித்யாசம் கண்டுபிடிக்கலாம்.என்னைப்போல போஸ்ட் போட்டு நொந்தப்பின் இல்லை..சரீ..சரீ..
மேலே மஞ்சள்..வெளீர் நிறத்தில் இருந்தாலும்..காம்பின் அருகில்.. ஒரு புளிப்புத்தன்மை..வாடை வருமாம்.அதோடு நறுக்கினதும்.. உள்ளே காய்..வெளியே பழம் நான் என சிரித்து நமக்கு எரிச்சலை அள்ளித்தரும்.
இதை சாப்பிடும் குழந்தைகள், பெரியவர்களுக்கு..வயிற்று வலி..எக்ஸ்ட்ரா.. எக்ஸ்ட்ரா வரும்..வரலாம்..ஆனால்..இதை குழந்தைகள் நன்கு பழுந்திருந்தால் தவிர தொடுவதில்லை என்பது இடைச்செருகல்.
ஆனால்..இந்த ஓவர் நைட் கனியாக்கும் வேலை செய்யும் வியாபாரிகள் சொல்வது என்னவெனில்.. " மருத்துவரீதியாக அதெல்லாம் ஒண்ணும் வராது.. ! எல்லாமே வதந்தி " என்கிறார்களாம். அடேங்கப்பா !
எதுவானாலும்..முக்கனியின் ருசிப்போகுதே !
வாங்கியதை..நறுக்கி நறுக்கிப்பார்த்து..இப்போது பச்சடி தவிர ..எருசேரி..மாங்காய்- மாம்பழ வெறிசேரி..இப்படி எதாவது டிஷ் செஞ்சு..வீட்டில் சரிந்த நற்பெயரை திரும்ப தூக்கி நிறுத்தலாமா என்றுப்பார்க்கிறேன்..
ஆமா..இப்பதிவு எதற்கு எனில்..நீங்களும் உஷாரா இருங்கப்பு..என்னம்மாதிரி வேற ரெசிபி தேடும் நிலை வேண்டாமே !!
‪#‎அம்புட்டும்‬ காய் ..!! சோதனை.

எல்லாமே அக்கரைக்கு இக்கரைப்பச்சை ..அறிவோமா நாம்..





இன்று ஷாப்பிங்க்காக ,இங்குள்ள ஒரு பெரிய ஹைப்பர் மார்கெட் போயிருந்தேன் , நான்.
சென்றிருந்த நேரம் மதியம் என்பதால் கூட்டம் , குறைவு .
மற்ற பொருட்களை எடுத்துக்கொண்டு,
காய்கறி,பழங்கள் பக்கம் வந்தேன் .
குறிப்பா கீரை செக்‌ஷனில் சல்வாரில் ரெண்டு பெண்கள் , பேசிக்கொண்டே கீரைகளை அலச ஆரம்பித்தனர் கண்களால்,
அட! தமிழ் !! என்று ஆட்டோமேடிக்கா காதுகளைதந்தேன் அவர்களிடம்..
" என்ன அம்மு, கீரை இதெல்லாம் "
"ஆமாடி , கொஞ்சம் கூட ப்ரெஷ்ஷா இல்ல"
" நீ, என்ன ஊர் ஞாபகமா ,அங்கதான் காலைவேளைல ப்ரெஷ்ஷா , ஆசையா இருக்கும், அந்த குயில் சத்தம்,பால்,பேப்பர் சவுண்ட் , கொக்கரக்கோ , பிள்ளையார் கோவிலிருந்து வரும் பாட்டு சத்தம்"
இப்படி எத்தனையோ ..
போடி..எல்லாம் மிஸ் பண்ணிட்டோம்,
நீ கீரையை சொல்ற,
சரி வா கறிவேப்பிலை லைஎடுத்துப்போலாம் " என்றார்..
கேட்டுட்டுருந்த என்மனமும் அதையே அசைப்போட , சென்ற வகேஷனில் சென்ற உறவினர் வீடு ஞாபகம் வந்தது.


நெருங்கிய உறவினர் வீட்டுக்குள் நுழைந்ததுமே ,ப்ளீஸ் வெல்கம் என்றார் அவ்வீட்டின் இல்லத்தரசி ,
அப்போது ஆரம்பித்தது பை..பை வரையிலும்
எங்களுடன் ஆன பேச்சு ஆங்கிலத்திலேயே தொடர்ந்தது ,நாங்கள் பேசினதென்னவோ தமிழில் தான், ஆனா அவங்க பேசினது வெளி நாட்டு பெருமையும் , ஆங்கிலமும் தான்..
உங்களுக்கென்ன நிம்மதியான வாழ்க்கை இப்படியான இடைச்சொருகலுடன் , இறுதியாய்
" இது பையன் CV ,எப்படியாவது ஒரு வேலை ஏற்பாடு பண்ணிடுங்கன்னு" கையில் பேப்பரும் கொடுத்து அனுப்பினார்.
இன்று ஏனோ அது நினைவில் வர..
வேறென்ன...
( இதுவும் ஒரு சக்கரவ்யூகம் ,வந்தால் தெரியும் என எனக்கு நானே சொல்லிக்கொண்டே )


புதுக்கவிதை என்றால் என்ன...கவிஞர் வாலி :


வாலிபக்கவிஞர் வாலி அவர்கள் திருப்பராய்த்துறை பூர்வீகமாகவும் , ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீனிவாஸ ஐயங்கார்- பொன்னம்மாள் தம்பதிகளுக்கு மகனாகப்பிறந்தவர் ,
அப்போதைய ஓவியர் மாலியைப்போல புகழ்பெறவேண்டும் என்பதால் ரெங்கராஜன் என்ற இவர் பெயரை வாலி என்று மாற்றியவர் அவரது பள்ளித்தோழர்.
ஸ்ரீரங்கத்தில் நண்பர்களுடன் சேர்ந்து, நேதாஜி என்ற கையெழுத்துப்பத்திரிக்கையைத்துவங்க, அதன் முதல் பிரதியைப்பெற்றுக்கொண்டவர் கல்கி ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.
அந்த நிகழ்ச்சிக்கு தலைமைத்தாங்க வந்த திரு.பார்த்தசாரதி அவர்கள் அப்போதைய திருச்சி வானொலி நிலையத்தில் வாலி க்கு கதை , வசனங்களுடன் நாடகம் எழுதும் வாய்ப்பை வழங்கினார்.
அதில் ஒரு நாடகம் , "பேராசைப்பிடித்த பெரியார் "
இந்தத்தலைப்புடன் நிகழ்ச்சிக்கு அழைக்க பெரியாரை சந்திக்கப்போக , பெரியாரும்.."எனக்கு ஆசையே கிடையாதே , பின் எப்படி பேராசை" என்றாராம்.
அதற்கு..வாலி, "தமிழ் நாடு என்ற பெயர் வரவேண்டும் என்ற பேராசைப்பிடித்த பெரியார்" என விளக்க அதன்பின் பெரியார் ஏற்றுக்கொண்டு வர , நாடகத்துக்கு `இவர்தான் பெரியார்!
இவரை எவர்தான் அறியார்? என்ற பாடல் எழுதிட அதைப்பாடியவரும் நடித்தவரையும் கண்டு ரசித்த பெரியார் , பாட்டென்றால் இப்படி இருக்க வேண்டும் ஸ்ரீரங்கத்து ரெங்கராஜன் , இந்த நாத்திக பெரியாருக்கு பாட்டு எழுதியிருக்கிறார் எத்தனை எளிதாகப்புரியும் படி உள்ளது" என்று பாராட்டியுள்ளார்.
பெரியாராலே பாராட்டப்பெற்ற அனுபவம் கொண்ட வாலி அவர்கள் இதை தான் நினைவுக்கூர்ந்து புதுக்கவிதை என்பது எப்படி இருக்கவேண்டுமென இவ்வாறு தெரிவிக்கிறார்..
" கவிதைகளில் பல வகைகள் , மரபுக்கவிதை ,புதுக்கவிதை, ஹைக்கூ என உண்டு.
இதில் சிக்கலான வார்த்தைகளைப்போட்டு வார்த்தை ஜாலம் காண்பித்துப் பலருக்குப் புரியாமல் கவிதை எழுதுவதில் என்ன பயன் !
கவிதையெனில்..அனைவருக்கும் சென்றடையவேண்டும் கருத்துகள் ! எளிமையாக ,
இறுதியில் ஒரு பொருளுடன் முடியவேண்டும்!
புரியும்படி எழுதுங்கள் ! பலருக்கும் சென்றடையட்டும் அதுவே என் வகையில் புதுக்கவிதை" என்கிறார்!
ஸ்ரீரங்கத்தில் இவரது நெருங்கிய நண்பர்கள் குழாமில், பின்னாள் சுஜாதா முன்னாள் ரெங்கராஜனும் , அகிலன் அவர்களும் உண்டு.
கவியரசர் முதன்முதலில் கதை வசனம் எழுதவே வந்தார்..அவரைத்தான் பாட்டெழுத வைத்தனர்.
ஆரூர்தாஸ் கரந்தை தமிழ்சங்கத்தில் தமிழ் பயின்று பாடல்கள் எழுத வந்தவரை..
கதை வசனம் எழுதவைத்து பாசமலர் போன்ற ஹிட் படங்கள் வெளிவந்தன.
அதுப்போலவே நானும்...
என்பவர்
"எழுதப் படிக்கத் தெரியாத எத்தனையோ பேர்களில் எமனும் ஒருவன். ஒரு அழகிய கவிதைப் புத்தகத்தைக் கிழித்துப் போட்டுவிட்டான்"
– கண்ணதாசன் இறந்தபோது வாலி எழுதிய கண்ணீர் வரி இது!
15,000 பாடல்கள் எழுதிய வாலி , எளிமையானப்பாடல்கள் மூலம் கருத்துக்களை முன்வைத்து..நம் மன சிம்மாசனத்தில் என்றும் தனியிடத்தில் அமர்ந்திருக்கிறார்.


Saturday 18 June 2016

உடலும் உருகாமல் இருக்க என்ன செய்யவேண்டும் கேட்கிறார் ஆழ்வார்

உடலும் உருகுகிறதே என் செய்வேன் அரங்கா !!

அன்றைய சோழ நாடான திருமண்டகக்குடியில் அவதரித்தவர் விப்ர நாராயணர் என்னும் இயற் பெயர் கொண்ட தொண்டரடிப்பொடியாழ்வார். இவர் திருவரங்கம்(ஸ்ரீரங்கம்) வாழ் பெரியப்பெருமாளின் மேல் மட்டுமே காதலாகி..பாடல்களைப் பாடியவர். அவை திருமாலை..திருப்பள்ளியெழுச்சி !

இவை நாலாயிரத் திவ்யப்பிரபந்தத்திலுள்ள முத்துக்கள் !

அந்தப்பாசுரங்களைப்பற்றி இங்கு படித்து வருகிறோம்.

முந்தையப் பாசுரத்தில்...காவிரியின் அழகு , அதன் நடுவேப் பள்ளிக்கொண்டுள்ள பரமனைக்காணும் போது கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கிறதே என்ன செய்வேன் என்று புலம்பிப்பாடியிருந்தார்.

இனி அடுத்தப்பாசுரம் காண்போமா ?!

பாசுரம் -19.

குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்புக் காட்டித் தென்திசை யிலங்கை நோக்கி
கடல் நிறக் கடவுளெந்தை அரவணைத் துயிலு மாக்கண்டு
உடலெனக் குருகுமாலோ எஞ்செய்கேனு லகத்தீரே

******

குடதிசை - மேற்கு திசை

முடியை வைத்து - தனது திருமுடியை வைத்து (உலகை ஆளும் அரசன்..ஜகத்ரஷன் தனது க்ரீடம் வைத்து)

குண திசை - கிழக்குத் திசையில்

பாதம் நீட்டி - தனது திருப்பாதங்களை நீட்டிக்கொண்டு

வட திசை - வடக்கு திசையில்

பின்பு காட்டி - தனது பின்புற அழகைக்காட்டிக்கொண்டு

தென் திசை - தெற்கு திசையில் உள்ள

இலங்கை நோக்கி - இலங்கையை நோக்கியப்படியே

கடல்நிறக் கடவுள் - கடலைப்போன்ற நிறத்துடன் உடைய மேனியையுடைய கடவுளான

எந்தை - என்னுடைய (கடவுள்)

அரவணைத் துயிலு மாகண்டு - அரவமாகிய பாம்பின் மேல் கண்மூடி துயில்வதைப்போல இருக்கும் அழகைக்கண்டு

உடலெனக்கு - உடல் எனக்கு

உருகும் ஆலோ - உருகாதோ..ஐயோ !

என் செய்வேன் - நான் என்ன செய்யவேன்

உலகத்தீரே - திடமாக உருகாமல் உள்ள சம்சாரிகளே..உலகத்தில் உள்ளோரே !

------**---------

இனி பாசுர விளக்கம் :

உடலும் உள்ளமும் உருகாமல் உள்ள உலகத்தீரே ! மேற்குதிசையில் தன் திருமுடியை வைத்து, கிழக்கு திக்கில் தனதுப் பாதங்களை நீட்டிக்கொண்டும் , வடக்கு திசைக்கு தனது பின்னழகைக்காண்பித்துக்கொண்டும் , தென்திசை இலங்கையை நோக்கியவாறும் ,
கடலைப்போன்ற கரு நீல நிறத்தில் உள்ள எந்தன் கடவுள்..
பாம்பின் மேல் கண் வளர்வதைப்போல யோக நித்திரையில் ஆழ்ந்திருக்கும் அரங்கனது அழகைக்கண்டு , எனக்கு உடலும் உருகுகிறதே ! என்ன செய்வேன் !!

ஆழ்வார்.. இதில் மிகப்பிரமாதமான வார்த்தைப்பிரயோகம் செய்துள்ளார்.

கேட்பவரும் கரையும் வண்ணம்...வஞ்சப்புகழ்ச்சியணியாக நம்மைக்கேட்கிறார்.

உடலும் உள்ளமும் நன்கு திடமாக இருக்கப்பலபல மருந்துகளை உண்டப்படி..திடமாக இறைவனைக்கண்டு..நம் கோரிக்கைகளை வைத்தப்படி திரும்புகிறோம்.அதனால் நாம் சம்சாரிகள்.

ஆனால் ஆழ்வார்கள்..இறைவனின் மேல் பக்திப்பெருகி..ஞானம் வளர்ந்து..அதனால்..அவனைவிட்டு பிரிந்து இருக்க முடியாத நிலை ஏற்பட்டு..அவனைக்கண்டு உருகி அழும்போது..அதில் கரைந்துப்போகின்றனர்.
இங்கு தொண்டரடிப்பொடியாழ்வாரும்..அவ்விதமே முன்பு தானும்.. அவ்விதமே இருந்ததாகவும்.. ஆனால் தற்போது , அரங்கனைக்காண முடியாமல்..கண்களில் நீர் திரையிட்டும் உடல் உருகியும் போவதாகவும் குறிப்பிடுகிறார்.

மேற்கு திக்கில்..பல அண்டங்களுக்கும் அரசனாகிய அரங்கன் தனது திருமுடியை வைத்துக்கொண்டு (இங்கு கிரீடம் , தலையை என்றப்பொருளில் வருகிறது) , கிழக்கு திசை நோக்கி...திருவரங்கம் கோயிலின் பல சுற்றுகள் , வீதிகள்..காவிரி தாண்டி , இவர் வாழும் திருமண்டகக்குடி வரையிலும் தனது பாதங்களை நீட்டி அருள் பாலிப்பதாகவும் ,

வட திசையில் உள்ளவர்கள் அதிகம் சமஸ்கிருதத்தில் புலமைப்பெற்றவர்கள்.
தெற்கில்
ஆழ்வார்களால், எம்பெருமானின் புகழ் பரவி விட்டது. ஆனால்..வட திசையில் தானே தனது பின்னழகைக்காண்பித்து ஈர்த்தாலே ஒழிய..அவர்கள் அரங்கன் பால் திரும்பப்போவதில்லை..ஆகவே தனது பின்னழகை(தோள் அழகை)க்காண்பித்தும்..

தென்திசையில் இலங்கை நோக்கி...
இங்கு ..

தர்மவர்மா என்ற பண்டைய சோழ அரசன்.. பிராத்திக்க.. அயோத்தியில் ஸ்ரீ ராமனால் பூஜிக்கப்பட்ட ரெங்க நாதர்..அழகான காவிரி பாயும் திருவரஙக்த்தில் தங்கிட ஆசைப்படுகிறார்.

அதற்காக செல்ல மறுக்க.. தர்ம வர்மா விபீஷணன் இடம் வேண்ட , விபீஷணன் தானும்...திருவரங்கத்தில் அரங்கனுடனே தங்கிட ஆசைப்பட..அப்போது.. அவர் இலங்கை சென்று அரசை ஆள வேண்டியதைக்கூறி நம் பெருமாள் அனுப்பி வைக்கிறார்.

அனுப்பி வைத்தாலும்..அவரை தாய் தன் குழந்தையை தூங்கும் போதும் கவனித்துக்கொள்வதுப்போல..கவனித்தப்படி இருக்கிறார் என்பதை..தென்திசை இலங்கை நோக்கி என்கிறார் ஆழ்வார்.

கடல் நிறக்கடவுள் , கடவுள் இந்த வார்த்தையை அபூர்வமாக ஆழ்வார் பிரயோகிக்கிறார்.

கடலைப்போன்ற கரு நீல நிறத்தில் உள்ளவன்.. பாற்கடலுக்குள் கிடப்பவன்...அனைத்தையும் கடந்து இருப்பவன் என்றப்பொருளில்...கடவுள் என்கிறார்.

கருநீல நிறமுடைய எந்தன் கடவுள்.. அரவமாகிய
. ஆதி சேஷன் மேல்..துயில்வதுப்போல யோக நித்திரையில் ஆழ்ந்திருக்கும் அழகைக்காண முடியாமல்..என் உடலும் ( ஏற்கனவே உள்ளம் உருகியாயிற்று) உருகுகின்றதே !

இங்கு.. ஆலோ என்பது ஐயோ என்றும் , உருகுமாலோ எனும் போது...உருகாமல் இருக்க என்ன வழி சொல்லுங்கள்..!

நீங்கள் தானே அரங்கனைக்கண்டும் உருகாமல்..பார்த்து செல்கிறீர்கள் என்றுக்கேட்பதாக பாசுரம் அமைந்துள்ளது !

பொருட் செறிவுடன் கூடிய 19 வதுப்பாசுரத்தை தொடர்ந்து..அடுத்தது ஆழ்வாரின் பாதம் பணிந்துக்காண்போம் !!

#திருமாலை

Tuesday 7 June 2016

என் கதை..பாக்யாவில்..முதன் முதலில் அச்சில்..

நம்முடைய எழுத்துக்கள் அச்சில் பார்ப்பது தனி மகிழ்ச்சியைத்தருவது !

கதைகள் மிக விரும்பிப்படைப்பது..அது வெளியாகும் போது அதுவும் முதன்முதலில் எனும் போது ..தனி சந்தோஷமே !!

பாக்யா இதழில் என் கதை வெளியாகியது முதல் கதை ..இதோ அது ...

--------------------+++-----------+++-------------------

யாரோ இவள் . 

மாலை நடைப்பயிற்சி முடித்து , வீட்டிற்கு திரும்ப லிப்டில் அவசர அவசரமாக நான் ஏறவும் , உள்ளே சிலர் நிற்பதும் கண்ணில் பட்டது!

அப்பாடா , பிடிச்சிட்டோம் என்றிருந்தது .

அந்த இருபத்தைந்து மாடி அப்பார்ட்மெண்ட் பில்டிங்ல் எப்போதும் , இருக்கும் 
ரெண்டு லிப்ட்ம் நிரம்பி வழியும் . 
அதிலும் காலை , மாலை வேளைகளில் நம்மையும் ஒருவராக அதனுள் 
திணிப்பது ஒரு கலை.

அந்த பெங்களூர் க்ளைமேட்டிலும் வேகமாக வந்து நுழைந்தது வியர்த்துப்போனது.

லிப்ட் தானாகவே , மூடிடும் நேரத்துக்குள் உள் நுழைவதும், ஒரு த்ரில்லுடன்  பிடித்தது எனக்கு.

சட்டென்று மூடும் வேளையில் தான் அவள் நுழைந்தாள். 
அட ! என்ன அழகு !

தேவதைப்போல இருக்காளே !  என்று அந்த அவசரத்திலும் கண்கள் அளவெடுக்க , அவள் கையில் ஒரு வயது மதிக்கத்தக்க குழந்தையுடன் நுழைந்தாள்.

குழந்தை அவளுடையதா இருக்குமே என்ற சிந்தனையை தவிர்க்க நினைத்தேன். அவளுடையதுதான் என்று குழந்தையின் முகச்சாயல் கட்டியம் கூறியது.

இதே பில்டிங்லயா இருக்கிறாள் , பார்த்ததே இல்லையே என மனம்  தாறுமாறாக யோசித்தது.

"15 வது ப்ளோர் .." என்றாள் என்னைப்பார்த்து ! நான் தான் எந்தமாடிக்கு செல்லவேண்டுமென அழுத்தும் பட்டன் அருகில் நின்றேன் என்பதையும்

ஜில்லென்று குளிர் காற்று வீசியதுப்போல  உணர்ந்தேன் .

தலையில் இருந்த மல்லிகைப்பூ , அவளை மேலும் அழகாக்கிக்காட்டி , என் கிராமத்து நியாபகத்தையும் கிளறிப்போட்டது .

மற்றவர்களும் லிப்டில் நிற்க , ஏனோ கண்ணும் மனமும் அவளிடமே சென்றது , அவளும் அதை உணர்ந்தவள் போல கொஞ்சம் நெளிந்தாலும் , சுதாரித்து , "ஹாய் சொல்லும்மா ! " என்றாள் தன் குழந்தையிடம்  , காதில் தேன் பாய்ந்தது .

குழந்தையும் ,ஹாய் என்று மழலையில் அவள் கூறியதை மொழிப்பெயர்த்தது.

லிப்ட் ஒவ்வொரு ப்ளோராக நின்று நின்று செல்ல , பயணமாக தொடரக்கூடாதா என்றே ஏங்க ஆரம்பித்தேன் !

அட கடவுளே 15 ம் வந்துடுச்சே ..இறங்கிடுவாளே !!

மனம் தவிக்க , தானாகவே என் கால்களும் அவள் பின்னே பதினைந்தாம் மாடியிலேயே வெளிவந்தேன் ..

" என்ன நீங்க ! இந்த ப்ளோர்லயா இருக்கீங்க ! " என்றாள் என்னைப்பார்த்து .

" ஆமா ..இல்ல , இதோ 1508 தான் எங்க வீடு , வாங்களேன் !" என்றேன் தன்னிச்சையாக.

பூ மலர்வதுப்போல் சிரித்தவள் " ஓ..சாரி , இப்ப கஷ்டம், நா இங்க தான் 1502 ல இருக்கேன் . நானும் வரேன் ! நீங்களும் , வாங்க, வீட்டுக்கு கண்டிப்பா ! " .

கண் சிமிட்டி தலை சாய்த்து சிரித்தாள் , உள்ளுக்குள் ஜிலிர்த்துக்கொண்டிருந்தேன்.

மகிழ்ந்தவளாய் நெகிழ்ந்துப்போய் நான் செய்வதறியாது நிற்க , அவளே தொடர்ந்தாள் , " குட்டிம்மா , பாட்டிக்கு பை சொல்லு !! "

ஆம் , என் பையன் வீட்டுக்கு வந்தவள் , கிராமத்தில் வசித்த போது இழந்த என் பெண்ணின் சாயலில் இவள் இருப்பதை பார்த்து ,  "அவசியம் வருகிறேன்..பை " என்றப்படியே என் வீட்டின் சுவரில் உய்யாரமாக  சாய்ந்திருந்த காலிங் பெல்லை அழுத்தினேன் .

எதோ ஒரு சந்தோஷம் தனித்துள்ளலாய் ஒரு தெம்பை தந்தது.உள் நுழைந்த என் துள்ளலை அதிசயமாகப்பார்த்த மருமகளை பார்த்துப் புன்னகையுடன் கடந்தேன் . 
----------------()--------------


Monday 6 June 2016

ஈர்க்காமல் ஒரு இறைவி

இறைவி ..

கார்த்திக் சுப்புராஜின் பீட்சா, ஜிகர்தண்டா விற்குப்பின் women க்காக என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை விதைத்தவள் இறைவி..இசைக்கிறாளா ??!  மணக்கிறாளா ?

மழை.. மூன்றுப்பெண்கள்.. ஒரு மையப்புள்ளியில் இவர்கள் இணைவது என ஆரம்பிக்காட்சிகளில் , ஆர்வம், அடிதடியில் மைக்கேலாக விஜய் சேதுபதி , சிலை செய்யும் புகழ்பெற்ற சிற்பியாக அமைதியான ராதாரவி.

பப்ல்..இளையராஜா வின் இசையுடன் எஸ் ஜே சூர்யா..தன் திரைப்படம் வெளிவராமல் முடங்கிக்கிடக்கும் அருள் தாஸாக ..தண்ணியடிக்கும் காட்சிகள்..அதனைத்தொடர்ந்து.. அவர் தம்பி பாபி சிம்ஹா பைட்.. ஆள் சேர்த்தல் , பாட்டு என புதுமையைக்கையாள முயற்சித்து..மெகாத்தொடர் ஆரம்பமாவதற்கு அறிகுறியாகப்படுவதால்..இருக்கையில் சாய்கிறோம் நாமும்.

எஸ் ஜே சூர்யாவின் படம் ஈகோ பிரச்சனை வெளிவராமல் இருக்க..அவர் மதுக்கு அடிமையாவதும் , அதனால் குடும்பம் படும்பாடு , கிரேஸி சீனு மோகன் குடும்பத்தில் ஒருவராக பழக அவரது அண்ணன் மகனாக விஜய் சேதுபதியும்

சூர்யாவின் தம்பியாக , பாபி சிம்ஹாவுடன் இணைய திருமணத்திற்கு முந்திய பழக்கமாக பூஜா சாவேரியாவுடனான பழக்கமென டைரக்டர் என்னதான் சொல்லவருகிறார் என யோசிக்கும்போது..

அஞ்சலி திருமணம், சூர்யாவின் படம் மீட்கும் முயற்சி  என கமலினி முகர்ஜி முயற்சிக்க சரி..படம் இந்த லைனில் ட்ராவல் ஆக இருக்கும் என எண்ணும் போது..சிலைதிருட்டு..கடத்தல் என..
கதை கட்டைவண்டியில் பயணிக்கிறது.

நர்ஸ் வந்து எச்சரிக்கும் போதும் , சிலை திருடும் சீன்களிலும்  அதிரி புதிரி லைக்ஸ் !

இடைவேளைக்கு முன் யூ டர்ன்களை வைத்து வேற லெவலோ என நினைக்கும்போதே டிஸ்லைக் செய்து கதை திரும்ப பழைய ட்ராக்கில் பயணிக்கிறது.

வி.சேதுபதி
சிறையில் வெளியாகும் காட்சிக்கு முன் கைதியின் சட்டை விழுவதும் , அவர் சூர்யாவுடன் கிளம்பும் காட்சியில்..பொம்மை சுழன்று..கவிழ்வதும் நல்ல மேக்கிங் !

அஞ்சலி அழகு..சிம்பிள் எக்ஸ்ப்ரெஷன்களில் அள்ளுகிறார் !!

கமலினி முகர்ஜி நாள் கழித்து வந்தாலும் அழகாக தெரிய .. கவராமல் , ஆனால் பூஜா தேவரியா ரசிக்க வைக்கிறார்.

எஸ் ஜே சூர்யாவின் கலந்துக்கட்டின நடிப்பு , குறிப்பாக க்ளைமேக்ஸ் சீன் , பப் சீன் , மனைவியிடம் அழும் காட்சி ,
குழந்தைக்காக சூர்யா- கமலினி ஒன்றாக எழும் காட்சிகள் ஆசம் ..!! பாராட்டுகள் !!

விஜய் சேதுபதி வழக்கமான தாடியில்..எமோஷன்களில் தெறிக்கிறார்.ஆனால் வேற பீலோ..புதிதாகவோ இல்லையே !

பாபி சிம்ஹா, கருணாகரன் ..அவரவர் வேலைகளில் பளீச் !

பல திரைப்படங்கள் வந்த இயக்குனர் ஒரு படத்திற்காக இப்படி மதுக்கு அடிமையாவாரா ? நடுவில் DVD விளக்கம் வேறு..! அவரை முன்பே ஒரு டீ அடிக்‌ஷன் செண்டருக்கு அழைத்துப்போக மாட்டாரா மனைவி ? காதல் மனைவியால் முடியாததா ! அத்தனை ஆணாதிக்கம் கொண்டவராக காண்பிக்கப்படவில்லையே !

காளிவெங்கட் கதையில்  காணாமல் போக ,
கொலை , திருட்டை நியாயப்படுத்தும் காட்சிகள் என
ரோலர் கோஸ்டர் கதையில்..

இசை சந்தோஷ் நாராயணன்.. எதிர்பார்த்த இடங்களில்..அடக்கிவாசிக்கும்  பின்னணி இசை..செகண்ட் ஹாஃப்பில் சரியாகிறது !

பாடல்கள்..வி.சேதுபதி குரலில் வரும் பாடல் ஒகே. அந்த சூர்யா மனைவியை காதலிக்கும் பாடலில்..குரல் ஒன்றாமல்... இசைமட்டுமே ரசிக்க வைக்கிறது.

காஸ்டியூம்ஸ் , ஆர்ட் டைரக்‌ஷன் என அனைத்தும் பக்காவாக இருக்க..யதார்த்தத்தை பிரதிபலிக்கின்றன.

கேமிரா சிவக்குமார் விஜயம்..கைகள்..பப்.. குடிசை வீடு.கட்டில் , சிற்பக்கூடம் என அழகாக அலைந்து நம்மையும் கட்டிபோடுகிறது.

நல்லவனா கெட்டவனா என கேட்க வைக்கிறது தெளிவற்ற பாபி சிம்ஹாவின் கேரக்டர்.

அத்தனை கொடூரமான மறுவாழ்வு மையமா..கற்பனைக்கும்..யதார்த்தத்திற்கும் நடுவில் இழுபறி காட்சிகள் !

பெண்களை அழவைக்கக்கூடாதென்பதாக பாபியின் குரலில் கார்த்திக் சுப்புராஜ்..முடிலடா சாமீ என வைக்கிறார்.

கூடவே மழை..மழையில் நீட்டும் பெண்ணின் கைகள்..நனைவோமா.வேணாம் நனைஞ்சுடுவோம் என காட்சிகளில் மட்டுமே பெண்மையை உயர்த்திப்பிடிக்கிறார்..ஆனால்..அழுத்தமில்லை !!

நான் ஆண் ..பெண் என வசனங்களில் வெறுப்பே மிஞ்சுகிறது !
.அவ்வப்போது இறைவி..எனும் தலைப்பிற்கேற்ப  பேசி..குடி..குடியை கெடுக்கும்..சப்டைட்டிலை எடுக்காமல் படம் எடுத்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ் !

பெண்மையை சிறப்பிக்க ஆண்களின் ஈகோவைக்காட்டி..சுர்ர்ன்னு தலைக்கேறினா கோபத்தில் இப்படித்தான் என நியாயம் கற்பிக்கும் காட்சிகள் பொருந்தாமல் மகேந்திரன் ஸ்டைல் மேக்கிங் ல்..நம்பிப்போனவர்களுக்கு அவர்ப்பட டிஸர் போல ..உள்ளப்படம் இந்த இறைவி !
குழந்தைகளுடன் பார்ப்பதை தவிர்ப்பது நல்லது !

எண்டெர்டெயின்மெண்ட் படங்களுக்கு வெகு தொலைவில் நிற்கும் இறைவி...தெளிவில்லாமல் ஜவ்வென இழுத்து..மனதில் பீடத்தில் அமர மறுக்கிறாள் !

இறைவி - ஈர்க்கவில்லை.

#சுமி_சினிமாஸ்