Monday 20 July 2015

திருமாலை அறிமுகம் .. பாசுரம் - 2

திருமாலை அறிமுகம் ..
பாசுரம் - 2
" பச்சைமா மலைபோல் மேனி
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகர் உளானே "
இந்த பாசுரம் பலரும் பரவலாக, பிரபலமாக அறிந்தது . தொண்டரடிப்பொடியாழ்வாரின் திருமாலையில் 2 ம் பாசுரம்.
முன்னரே அறிந்தோம் , விப்ர நாராயணன் எனும் இயற்பெயர் கொண்டவர் காமவசப்பட்டு , இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு , தொண்டரடிபொடியாழ்வார் என அழைக்கப்பட்டவர் . அவரது அவதார தினம் இன்று , அவரை சேவித்து, அவரின் அருளை வேண்டி அற்புதமான இந்த பாசுரத்தை அறிவோம்.
திருமாலை.., அரங்கம்...ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொண்டிருக்கும், திருமால் அரங்கனின் மேல் இயற்றப்பட்டவை, அவர் ஆழ்வாரை பிறவியினால் கிட்டிய கர்மங்களிலிருந்து எழுப்புவதாக பாசுரங்கள் அமைந்ததாகவும் அறிந்தோம்..
இனி..பாசுர விளக்கம்.....
"திருவரங்கம் எனும் நகரில் வாழும் அரங்கனே !
பச்சைப்பசேல் என பெருத்திருக்கும் , மரகத மலைப்போன்ற திருமேனியையும் , அதன் நடுவே பவளம் போன்ற சிவந்த அதரங்களையும் (உதடு-வாய்) ,
தாமரைப்பூ போன்ற சிவந்த கண்களையும் கொண்டவரே ,
அச்சுதனே ! (நழுவுதல் இல்லாதவன்) (அவரது திருமேனி எப்போதும் ஒரே மாதிரி இருப்பது , மலை மாறலாம் , பவளமும், தாமரையும் அழியலாம் ..ஆனால் இவையெல்லாம் அங்கமாகக்கொண்ட திருமால் அழிவில்லாதவர் என்ற பொருள் )
தேவர்களுக்கெல்லாம் தலைவரே !
அனைத்திற்கும் முதல்வனாக இருந்தும் , சாதாரண மனிதனாக ஆயர்குலத்தில் வந்து பிறந்த , குலக்கொழுந்தே! ,
உன் திரு நாமம் பாடிக்கொண்டிருக்கும் இந்த சுவை(வாழ்வை) தவிர , எனக்கு , வைகுண்டத்தில் நின் அடியார்களுடன் கூடியிருந்து , நின்னுடனே களித்திருக்கும் அந்த சுவை(அனுபவம் ) நான் வேண்ட மாட்டேன்! "
இதில் நாம் கண்ட முதல் பாசுர த்தில்
( காவலிற் புலனை வைத்து ")
திரு நாமம் சொல்வதன் பெருமை யைக்கூறியவர் , அது எத்துணை இனிமையானது என்றும்
பல்வேறு பிறவிகளில் நாம் ஈட்டியுள்ள பாப கர்மங்களை அழிக்க வல்லது என்றும் , அதன் பலன்களை யும் சொல்கிறார் .
வைகுண்ட பதவியைவிட உசத்தியானது என்பதையும், அத்தனை இனிமையானது என்று இப்பாசுரத்தில் பாடுகிறார்..
( ஆண்டாளும் செங்கண் சிறிசிறிதே எம்மேல் விழியாயோ எனக்குறிப்பிடுகிறார்...அத்தகைய திரு விழிகள்...பக்தர்களுக்கு அருட்கொடையாகவும் , அசுரர்களுக்கு- தீயவர்களுக்கு எரித்திடும் கனல் கொண்ட சிவந்த பார்வையையும் கொண்ட செங்கண் எனக்குறிப்பிடுகின்றனர் ).
இன்றைய தினம்
பக்தியிலும் , பக்தர்களின் பாதத்துளியை தனது தலையில் ஏந்திய நிலையில் தொண்டர்க்கும் அடியாராக அவதரித்த ஆழ்வாரை எண்ணி, தொழுது ...அரங்கனிடம் அவர் முறையிட்ட , வேண்டியருளிய மற்ற பாசுரங்களையும் இனி வரும் பதிவுகளில் காண்போம்...

No comments:

Post a Comment