Thursday, 24 September 2015

Dragon mart - Dubai ..

சுட்டெரிக்கும் சூரியன் , கொஞ்சம் ரிலாக்ஸ் மோட் க்கு போகும் வேளை..!!

இங்கு மாலை வேளை.. 40, 50 டிகிரிக்கு மேல் இந்த டெப்ரேச்சர் மெல்ல மெல்ல..கீழ நிழல் போல விழுந்து.. 35 க்கும் கீழ குறைந்துக்கொண்டிருப்பது , ஐக்கிய அரபி எமிரேட்ஸ் ல் விண்டர் - பனிக்காலம் வருவதற்கான கால நிலையை பரார் பரார் என வரவேற்க ..

ஈத் பெரு நாளுக்காக 5 நாட்கள் தொடர்ச்சியான விடுமுறை.. 

கழுதைக்கெட்டால் குட்டிச்சுவர் என்பதாக பல இடங்களிலும் மோதி விழுந்து எழுந்து வந்ததால்.. 

ரொம்ப நாள் ஆகிப்போன ஓரிடத்துக்கு போனால் என்ன என்று ப்ரெயினில்..ஒரு பல்பெரிய ..செலக்ட் ஆன இடம்.. டிராகன் மார்ட் !

Dragon mart ,ஓரளவு பெயரிலேயே புரிந்துக்கொள்ளலாம்..
ஆம் அதே தான். ( சைனீஸ் மார்க்கெட்டா !! :o . நம்பி வாங்கலாமா என்ற உங்க கேள்வி கேட்குதே ! )

இங்கேயே உள்ள பல ப்ராண்டட் கடைகளில் நம் நாட்டிலிருந்து வரும் க்வாலிட்டியான  இம்போர்டட் சாமான்கள் போல , உசத்தியான விலையில் அவர்கள் சாமான் கள் தான் வரவேற்கும், சோ
ஓரளவிற்கு நம்பி வாங்கலாம்.

இந்த நாட்டின் மயன்களில் ஒருவர்.. Nakheel group . இவர்கள் கால்பட்டால் பாலைவனமும் ..அழகிய நகரமாக மாறுகிறது.

என் அரேபிய வாழ்வில்..ஏர்ப்போர்ட் லிருந்து நேரடியாகப்போனதும் இவர்களது கட்டமைப்பில் உருவான குடியிருப்புகளில் என்பதும் பெருமைக்குரிய விஷயம்.

சரி.சரி .நான் ஸ்ட்ரைட்டா விஷயத்துக்கு வரேன் .

இந்த நக்கீல் க்ருப்பின் பெருமைமிகு..கட்டமைப்பில் டிராகன் வடிவில் கட்டப்பட்ட டிராகன் மார்ட்ம் ஒன்று !

வீடு மாறுகிறோம்..கொஞ்சம் மொத்தமா சாமான்கள் வேணும் , இல்ல..சில எலக்ட்ரிக் , சாமான்கள் மட்டுமே  வேணும்..அப்படின்னா முதல் சாய்ஸ் டிராகன் மார்ட் தான்..என்ன கொஞ்சம் ஊரைவிட்டு ஒதுங்கிப்போக ரெடியாக இருக்கணும்.

அல் அவீர் ரோட் ல் , Dubai International city க்கு எதிர்புறத்தில் இந்த டிராகன் மார்ட் , 2004 ல் கட்டப்பட்டது .

உள்ள அப்படி என்ன ஸ்பெஷல் ந்னு உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது .

இது முதன்முதலில் அறிமுகமானது , Hatta என்ற பாலைவனப்பகுதிக்கு ஒரு விடுமுறை நாளில்..ப்ரெண்ட்ஸ் ஒன்று சேர .. குறிப்பிட்ட இடம் இது..

அதற்கு பின்..கார் மாறிக்கொண்டு பயணத்தை தொடர்ந்த போது.. நான் மைண்ட்ல் குறித்துக்கொண்டேன்..பெருசா இருக்கே , கூடிய சீக்கிரமே வரணுமே என்று :p

அதே போல..சைக்கிள் இன்ன பிற சாமான்கள் வாங்கும் சாக்கில் ஒரு வலம் வந்து ஜென்ம சாபல்யம் அடைந்தோம்.. ! இப்போது ஒன்றும் வாங்க இல்லையென்றாலும்..பார்க்கலாமே !

விண்டோ ஷாப்பிங்க்கு இன்னமும் யாரும் வரி போடுவதில்லையே என்ற தைரியத்துடன் கேமராவும் கையுமா..ஸ்பாட்டில் ஆஜரானேன்.. !

பலப்பல பிரிவுகளுக்கும் தனித்தனியாக நுழைவு வாயில்.. எது வாங்கணுமோ அதுக்கு மட்டும் உள்ள நுழைஞ்சு வாங்கிட்டு அப்பீட் ஆகலாம்.

1.2 கி.மீ நீளத்தில் கட்டப்பட்ட இதில் , பலப்பல சீனாவின் சில்லரை , மொத்த வணிகத்தின் மத்திய கிழக்கு , வடக்கு ஆப்பிரிக்கப் பகுதிகளுக்கான  தலைமையகம் ந்னு சொல்லலாம்.

150,000 சதுர அடிகள் கொண்ட மாலில்.. 3,950 கடைகள் சின்னதும் பெருசுமாக.
யம்மாடியோவ் ! 

அப்ப ஏன் கால் வலிக்காது..அதானே !
அதான் இல்லையே.... !

.நமக்கு எது தேவையோ அத மட்டும் பாத்துட்டு வெளில வந்துடலாமே !
அப்படித்தான் fashion & accessories க்கு ஒரு விஸிட் !  நம்ம டிபார்ட்மெண்ட் ஆச்சே..
அதிலேயே , பேஷனில் சேரக்கூடிய பல எலக்ட்ரானிக்ஸ் பொருட்களும் குவிந்துள்ளது.
அங்கே அதிகம் பார்த்தது அரேபிய மக்கள் தான். கொஞ்சம் இந்தியர்கள்.கொஞ்சமாய் மற்ற நாட்டினர். அப்ப பாத்துக்கோங்க !!

துபாய் விஸிட் ப்ளான் செஞ்சீங்கன்னா
சுத்தி சுத்தி பாக்க வேண்டிய இடத்தில் ட்ராகன் மார்ட்ம் ஒன்று..அப்பறம் மிஸ் பண்ணிட்டு அரேபிய - சைனீஸ் பாவத்திற்கு ஆளாகாதீங்க :)

கேமராவும் கையுமாக களமிறங்கியதால்..அப்பாடா என கணவரின் பர்ஸ் மூச்சுவாங்கியதைக்கவனித்து ..(அப்படில்லாம் ரெஸ்ட் தரப்படாதே !! ) 

அதுக்கும் கொஞ்சம் வேலைத் தந்து..சற்றே கால்களுக்கும் 
ஓய்வு தந்து இரவில் மடியில் உறங்க வீடு சேர்ந்தோம்..

திருமாலை காண்போமா

திருமாலை  பாசுரம் - 12.

வைணவ சம்பிரதாயங்களையும் , திருமால் பக்தியையும் பரப்ப வந்தவர்கள் ஆழ்வார்கள் . இவர்கள் பல்வேறு திருக்கோவில்களில் அர்ச்சாவதார மூர்த்தியாக எழுந்தருளியிருக்கும் திருமாலை ,  ஸ்ரீ மஹா விஷ்ணு வைப் பாடியுள்ள பாடல்களின் தொகுப்பே நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் எனப்படுகிறது.

தாயும் தந்தையுமாக மற்றவர்களுக்காக கவலைப்பட்டு இவர்கள் பாடிய பக்தி இலக்கியத்தில் , திருமாலை.. ( 45 பாசுரங்களும் )தொண்டரடிப்பொடியாழ்வார் இயற்றியதும் ஒன்று.

இதற்கு முன்பு நாம் கண்ட பாசுரங்களில் இறைவனின் திரு நாமங்களை சொல்வதன் மகிமையை , அதனால் உண்டாகும் பலன்களை , சொல்லாமல் விடுவதால் ஏற்படும் விளைவுகள் என தெளிவாகக்கூறி வந்த ஆழ்வார் , இதிலும் , திருப்பெயர்களை சொல்வதால் ஏற்படும் நல்லதையும் , நமக்காக இறங்கியும் பாடியுள்ளார்..இனி பாசுரம் காண்போமா !!

திருமாலை - 12 .

பாசுரம் :

நமனும்முற்கலனும் பேச நரகில் நின்றார்கள் கேட்க
நரகமேசுவர்க்கமாகும் நாமங்களுடைய நம்பி
அவனதூரரங்கமென்னாது அயர்த்து வீழ்ந்தளியமாந்தர்
கவலையுட்படுகின்றாரென்று அதனுக்கேகவல்கின்றேனே

நமனும் முற்கலனும் - எமனும், முத்கலன் என்பவனும்
பேச - க்ருஷ்ணாய என்ற திரு நாமத்தை முத்கலன் கூறியப்பற்றி பேச, பேசியப்படி இருக்க
நரகில் நின்றார்கள் கேட்க - நரகத்தில் , எம பட்டணத்தில் நின்றப்படி தண்டனை அனுபவித்துக்கொண்டிருந்தவர்கள் கேட்க
நரகமேசுவர்க்கமாகும் - அந்த நரகமே சொர்க்கமானது
நாமங்களுடைய நம்பி - நரகத்தையே சுவர்க்கமாக்கக்கூடிய நாமங்களை , பெயர்களை க்கொண்ட நம்பி - பெருமாள்
அவனதூரரங்கமென்னாது - அவனது ஊர் , உள்ள இடமே அரங்கம் என்று எண்ணாமல் (சிந்தனையில் கொள்ளாமல்)
அயர்த்து - மறந்துப்போய் (அயர்ந்துப்போய்)
வீழ்ந்தருளியமாந்தர் - சம்சாரம் எனும் மாயையில் வீழ்ந்து , வாழ்ந்து வரும் மனிதர்கள்
கவலையுட்படுகின்றாரென்று - சம்சார வாழ்க்கைப்பற்றிய கவலையிலேயே மூழ்கிக்கிடக்கின்றாரே என்று
அதனுக்கேகவல்கின்றேனே - அதற்காகவே , அவர்களுக்காகவே கவலைப்படுகின்றேன் .

பாசுர விளக்கம்

ஸ்ரீ விஷ்ணு தர்மம் என்ற புராணத்தில் தொண்ணூற்று ஆறாவது பகுதியில்    முத்கலோபாக்யானத்தில் முத்கலன் என்பவன் ,
தான் பெரும்பாவங்கள் செய்ததற்கு பரிகாரமாக , எள்ளினால் செய்த பசுவை ஸ்ரீ கிருஷ்ணாய நமஹ என்றுக்கூறி , தானமாக வழங்கிட , அவன் இறந்தப்போது , யம தூதர்களால் பிடிக்கப்பட்டு யம லோக வாயிலில் நிறுத்தப்படுகிறான் .

யமனிடம் இந்த கிருஷ்ணாய என்ற திரு நாமத்தை அவன்  கூறியதைக்கேட்டு  மற்ற தண்டனை ப்பெற்றுக்கொண்டிருந்த நரக வாசிகளின் தண்டனை மறைந்து , அந்த நரகமே ஸ்வர்க்கமாக மாறியதாக வருகிறது .

அதை இங்கு தொண்டரடிப்பொடியாழ்வார் குறிப்பிட்டு அத்தகைய சிறப்பான பல நாமங்களுடைய திருமால் , இருக்கும் ஊர் , திருவரங்கம் என்று எண்ணாமல் ,
( இறைவனின் திருப்பெயர்களை சொல்ல முடியா விட்டாலும் , கேட்கலாம் அதுவும் இல்லாமல் ) , சம்சாரம் எனும் மாயையில் வீழ்ந்து , அதனால் வரும் துன்பங்களுக்காக வருந்தி கவலையுற்று ,

இறை சிந்தனை இல்லாமல் வாழ்ந்து மடிகின்ற மனிதர்களை நினைத்து , நான் அவர்களுக்காகவே கவலைப்படுகின்றேன் என்கிறார் ஆழ்வார்.
தாயாக பரிவுக்கொண்டு , நம் பாபங்கள் தீர , கவலைக்கொண்டு சோழ நாட்டில் திரு மண்டகக்குடியில் அவதரித்த , தொண்டரடிப்பொடியாழ்வார் பாடிய பாசுரம் இது.

ஆழ்வார்களின் பாதம் பணிந்து அடுத்தடுத்தப்பாசுரங்கள் காண்போம் !
இன்று மஹா ஸ்ரவணமும் , ஏகாதசியும் சேர்ந்த நாளில் திருமாலை நினைவிற் கொள்வோம் .


Saturday, 19 September 2015

ராமானுஜன் ..சுமி சினிமாஸ்

ராமானுஜன் ..

அறியாமையும், அதீத பாசமும் உலகிற்சிறந்த கணித மேதையை நாம் இளவயதிலேயே இழந்திருக்கிறோம் என்பதன் பதிவாக திரைப்படம் தந்த ,இயக்குனர் ராஜசேகரன் அவர்களுக்கு வணக்கத்துடன் பாராட்டுக்களும் !!

ஸ்கூலில் ஜீரோவிற்கு தரும் விளக்கத்தில் இள ராமானுஜனின் மேதாவித்தனம், பாட்டுச்சொல்லிதரும் தாய் கோமளவல்லியாக சுஹாசினி ,சாதாரண குமாஸ்தாவாக தந்தை நிழல்கள் ரவி என தேர்ந்த கதாபாத்திரங்களும், இளமையிலேயே வறுமையில் ராமானுஜனின் கணித அறிவை விளக்கும் காட்சிகள் அட! போட வைத்து சுவாரஸ்யமாக்குகிறது! அடடே , எப்படிப்பட்ட ஜீனியஸ் என வாய் விட்டு புலம்ப வைக்கிறது ...

எதற்கும் பொசுக்கென்று அழுது ,தன்னம்பிக்கையற்று வளரும் கணித மேதை அம்மா பிள்ளையாகவே போராடுகிறார் வாழ்க்கையுடன் !

அவரது தனிப்பட்ட கணித ஜீனியஸ் அறிவை புரிந்துக்கொள்ளாத கல்லூரிகள் அவர் அனைத்துப்பாடத்திலும் தேர்ச்சிப்பெறவில்லையென உதாசீனம் செய்வதும், சராசரி தகப்பனாராக அவரின் தந்தையும் ஒரு டிகிரி வாங்கி குடும்ப சுமையை மகன் ஏற்கவில்லை என அவரை சாடுவதும் நமக்கு சாட்டையடியாக இருக்கிறது !!

பொறுப்பு வருவதற்காய் மகனுக்கு திருமணம் முடிக்கும் தாயின் முடிவால் மனைவியின் மேலுள்ள ஈடுபாட்டைவிட புதுப்புது தியரங்களைக் கண்டுபிடிப்பதிலும் , இரு வேளை உணவிற்காக ராமானுஜன் வேலைக்கு அலையும்போது அவருடன் நம் கண்களிலும் கண்ணீர் திரையிடுவதை தவிர்க்க முடியவில்லை !

தன் கணித ப்ரொபஸரின் உதவியுடன் "Madras Mathematical society "மெம்பர்ஸ் சந்தித்து, வேலை தேடி, இறுதியில் நெல்லூர் கலெக்டர் (சரத்பாபு) மூலம் சென்னையில் ஒரு பிரிட்டிஷ் கம்பெனியில் வேலைக்கு அமர,அவருடன் நாமும் சற்றே இளைப்பாற அவரின் ஆராய்ச்சியும், அதற்கான பேப்பர்களுக்க்காக அவர் கஷ்டப்படுவதும் அவசியம் நம் குழந்தைகள் காண வேண்டிய காட்சிகள் !

நாமக்கல் ,நாமகிரி தாயார் கனவில் தோன்றியே அனுகிரஹத்தே அவர் சூத்திரங்களையும் , உடனுக்குடன் கடுமையான கணக்குகளையும் தீர்வு காண்கிறார், அவை உலகளாவிய அளவில் மற்றவர்கள் ஆராய்ச்சி செய்யமுடியாமல் திணறும்போது , எப்படிப்பட்ட ஒரு மேதை நம் மண்ணில் என பெருமிதம் எட்டிப்பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை ..

பல நல்ல மனிதர்களின் பகீரத முயற்சியால் லண்டன் சென்று FRS பெற்று ,உலக அளவில் அங்கீகாரம் பெறுகிறார், அருமையான காட்சிகள் அழகாக செதுக்குகிறார் இயக்குனர் பாராட்டுக்கள் பலப்பல !!

ஆங்கிலேயர் புரிந்த அவரின் அறிவுத்திறமை ,நம் நாட்டில் உதாசீனப்படுத்தப்படுவதை நாம் உணரும்போது " நீ இங்க பொறந்துருக்க வேண்டியவனே இல்லை " பல கதாபாத்திரங்களும்கூறும்போது வலிக்கிறது...

ஸ்ரீனிவாஸ ராமானுஜன் வாழ்க்கையில் போராடி கேம்பிரிட்ஜ் ப்ரொபஸ்ர் மூலம் உலக அங்கீகாரம் பெற்றும் சந்ததியற்று, தனது தியரங்களையே வாரிசுகளாகத்தந்து விட்டு ,தாயால் மனைவியைப்பிரிந்து மன உளைச்சலுடன் நோய்வாய்ப்பட்டு 32 வயதில் உயிரழக்கும்போது ஒரு மாபெரும் கணித மேதையின் வாழ்வை அருகிலிருந்து பார்த்த உணர்வு ஏற்படுகிறது ..

தேர்ந்த நடிகர்,நடிகைகள், திருமழிசை ஆழ்வார் பாசுரங்களுடன் ரமேஷ் வி நாயகம் அவர்களின் இசை இணைந்து பயணிக்க, தேவையான கலை அம்சங்கள் , உறுத்தாத கேமிரா பதிவுகளுடன் முழுமையான திரைப்படம் ...

இன்னமும் நாம் எப்படி? ! மாறியிருக்கிறோமா, எத்தனை ,எத்தனை அறிவு ஜீவிகளை நம் தேசம் இழந்துக்கொண்டிருக்கிறோம் என்ற பயத்துடன் வெளி வர, 'சே ! என்ன மாதிரியான மனுஷன், எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார் ! வெட்கமாயிருக்கே !! " என உடன் படம் பார்த்தவர்கள் கூற வெளிவந்தும் பிரமிப்பும் ,பாதிப்பும் குறையாமல் இந்த பதிவு ..உங்களுடன்...

அவசியம் அனைவரும் நம் குழந்தைகளுடன் பாக்க வேண்டிய படம் ...Bajrangi Baijan - சுமி சினிமாஸ்

Bajrangi Baijan
என்னடா . இது தமிழ்ப்படம் போல் இல்லையே என்று நினைத்தால் ஆம்..சுமி_சினிமாஸ் ல் ..வேற்று மொழித்திரைப்படங்களும் வர இருக்கிறது என்பதன் முன்னோட்டம் . (நாம லேட்டாப்பாத்துட்டு எப்படில்லாம் சமாளிக்க வேண்டிருக்கு :p)
சென்ற ஜூலை , ஈத் பண்டிகைக்கு வெளியாகி , வசூல் சாதனைப் படைத்தத்திரைப்படம்.
சல்மான் கான் தனது தயாரிப்பில் , ராக்லைன் வெங்கடேஷ் உடன் இணைந்து தயாரித்தத்திரைப்படம் .
ராக்லைன் வெங்கடேஷ் அவ்வளவு சீக்கிரம் லிங்கா விலிருந்து மறந்திருக்க மாட்டோம் tongue emoticon .
கிரிக்கெட் இந்தியா - பாகிஸ்தானை ஆட்டிப்படைப்பதில் துவங்கும் படம் , சுல்தான் பூர் என்ற பாகிஸ்தான் காஷ்மீரில் ஷாஹிதா என்றப்பெண் பிறக்கிறாள்.
அவள் வாய் பேச முடியாமல் இருப்பதால் , விஸா பெற்றுக்கொண்டு தாயுடன் , டெல்லியில் உள்ள தர்ஹாவிற்கு வந்து வழிபட்டு திரும்பும்போது ட்ரெயினிலிருந்து இறங்கிட தாயை பிரிவது..அச்சச்சோ.. அடப்பாவமே , இனி இவள் எப்படி சேர்வாள் என்ற ஆர்வத்தை விதைத்து நம்மை படம் பார்க்கும் சுவாரஸ்யத்தைக்கூட்டுகிறார் இயக்குனர் கபீர் கான் .
குருஷேத்ரத்தில்
செல்பீ..லே லே ,பாட்டுடன் அனுமன் பக்தராக அறிமுகமாகிறார் சல்மான், பவன் சதுர்வேதி , அத்தனை பவ்யம் , டெடிகேஷன் .
தீவிர பஜ்ரங் பலி..ஆஞ்சனேய பக்தரான பவனிடம் சேர்கிறாள் சிறுமி (ஹர்ஷாலி மல்ஹோத்ரா) இவர்தான் ஹீரோவுடன் ஒட்டி இழையும் அழகை தாரைவார்க்கும் , நம் ஹீரோயின் .
ப்ராமின் கூட்டுக்குடும்பம் , மல்யுத்தம் அவர்களது பொழுதுபோக்கு எனவும்..டெல்லி சாந்தினி சவுக் காட்சிகள்
யதார்த்தம் சேர்க்கின்றன.
தந்தையின் நண்பராக தயானந்த் (sharat saxena - மும்பை எக்ஸ்பிரஸ் ல் சக்சேனா வாக வருவாரே அவரே இவர் :)) அவர் பெண் ரசிகாவாக கரீனா கபூர் கான்..கண்களில் தீட்டிய மையுடன் , வெகு டீஸண்டாக வளைய வருகிறார் , ஹீரோக்கும் ஹெல்போ ஹெல்ப் செய்கிறார்.
மிகுந்த சிரமப்பட்டு வாய்ப்பேச இயலாத சிறுமியிடம் அவள் பாகிஸ்தானி என்பதை தெரிந்துக்கொள்ளும் காட்சிகள் சுவையோ சுவை.
அந்தக்குட்டிப்பெண் பேசாமல் பேசி..அள்ளுகிறார் மனதை.
அந்தப்பெண்ணை..தீவிர ஹிந்து, அனுமன் பக்தர்.. வாயில் எப்போதும் ஜெய் ஸ்ரீராம் .. எப்படி விஸா இல்லாமல் பாகிஸ்தானில் பெற்றோர் களின் சிறுமியை சேர்க்கிறார் என்று மீதிக்கதை செல்கிறது. அமைதியான நதிப்போல.
எல்லையிலும் , பாகிஸ்தானில் உள்ள மசூதியில் ஓம் புரியை சந்திக்கும் போதும் , எப்படியும் செய்தி சேகரித்திட முயலும் chand nawab (Nawazuddin siddhiqui) பாத்திரப்படைப்பிலும்..மனிதம் மட்டுமே வாழ்கிறது இரு நாடுகளுக்கு இடையிலும் என்பதை உணர்த்துகின்றன.
நேர்மையாக , தான் அனுமன் பக்தன் என்றும் உண்மையைக்கூறும் சல்மான்.. கண்களில் அதே நேர்மையுடன் கதாபாத்திரமாகவே வாழ்கிறார்.
இறுதிக்காட்சிகள், கண்களை குளமாக்குகின்றன.
Shahid afridi ஜெயிச்சதும் உதைக்கும் குழந்தை , கை விலங்கை திருடினால் அரெஸ்ட் செய்ய மாட்டார்கள் என்று திருடி வைத்துக்கொள்வது , குட்டி (முன்னி) க்கு பிடித்த வளையலுக்காக அவளைத்தேடி ஓடுவது , வீடியோ வரைல் என அணு அணுவாக செதுக்கி இருப்பது ரசனை.
ப்ரீத்தம் அவர்களது இசையில் 11 பாடல்கள் அலுப்புத்தட்டாமல் வந்து செல்கின்றன.
ராஜஸ்தான் , பனி சொட்டும் காஷ்மீர் , பரபரப்பான டெல்லி என மாத்தி மாத்தி பயணிக்கும் கேமராவைக் கையாண்டிருக்கும் அஸீம் மிஸ்ரா அசத்துகிறார் அனைத்தும் ப்ரேம்களிலும்.
குடும்பத்துடன் ஒரு திரைப்படம் , அட்வைஸிங் மெசேஜாக இல்லாமல்..உணர வைக்கும் பஞ்ரங்கி பைஜான்..மிஸ் பண்ணக்கூடாத திரைப்படம்.

Tuesday, 15 September 2015

முதல் விமானப் பயணம்

முதல் விமானப்பயணம்...

அரேபிய மண்ணைப்பற்றி எழுத ஆரம்பிக்கும்போதே முதலில்..உணர்வது இதை..!

திருச்சி லிருந்து...ஷார்ஜா பயணம்..!!

14வருடங்களுக்கு முன் , சின்ன வயது , க்யூல நிக்கக்கூட  விடாதப்பிள்ளை.சகிதம்..விஸா..டிக்கெட் வாங்கி.பயணித்த என்னுடைய முதல் விமானப்பயணம்..மறக்கமுடியாதது.

தனியாக சென்றே ஆக வேண்டிய கட்டாயம் , (ஒரு கண் இல்லை ,ரெண்டையும் எப்போதும் அவன் மேல் வைக்கவேண்டும் )
ரொம்ப துறுதுறு பிள்ளை..,
வயிற்றில் புளி கரைத்தது ..
பயணத்தை எண்ணி , ..

விஸா..டிக்கெட் என்றால் என்னவென்று தெரியாது, மெயிலில் வந்தது ரெசிடென்ஸ்  விஸா, ட்ராவல் ஏஜண்ட் ஆபீஸ் ல் ..அமர்ந்து
பலமுறை திருப்பிப்பார்த்த டிக்கெட்ஸ்..

பேங்க் செக் புக் போல இருக்கும்..அப்போது ..(இப்ப எல்லாமே ஈ..டிக்கெட்ஸ் ..)

அந்த நாளும் வந்தது....

முதல் நாள் நல்ல மழை ...மழையில் இரும ஆரம்பித்த மகன், நல்ல விஸீங் அவனுக்கு ...டாக்டரிடம்..சென்று மணிக்கணக்கில் அமர்ந்து ,

."ஏர்போர்ட் , விமானத்தில் ஏஸியாக ..இருக்கும் 4 மணி நேரத்துக்கு ஒரு முறை மருந்து தாங்க"..என்ற டாக்டர் அட்வைஸ் டன் பயணத்திற்கான ஆயத்தம் .

கணவர் போன்ல formulas மாதிரி சொல்லியிருந்தார் ஏர்போர்ட் ல என்னென்ன ப்ரசீஜர் என்று ..உள்ளுக்குள் ஆயிரம் கிலி...சமாளித்தவாறே..மதியம் ப்ளைட் ஏற வேண்டும்  . முதல் நாள் காலை முதலே .சாப்பாடே உள் இறங்கவில்லை . அம்மா கவலையுடன் புலம்பினார் பலமுறை !.

முதல் முறை..நம் குடும்பத்தில் அனைவரையும் பிரிகிறோம்...வருடத்திற்கு ஒரு முறை தான்..திரும்ப பார்க்க முடியும் !! இப்படி ,

எத்தனை எத்தனை எண்ண  அலைகள் மனதில் மோத..!!

தூக்கமின்றி கழித்த முன் இரவு சற்றே சோர்வையும் , அழுத்தமும் தர..புன்னகையை தவழவிட்டவாறே..தயாரானேன்..!

3மணி நேரத்திற்கு முன் செல்ல வேண்டும் அப்போது Internatinal flights க்கு !(.இப்போது 2மணி நேரத்துக்கு முன் செல்கிறோம்..)

ஷார்ஜா ப்ளைட்...
பழைய Air India ..

பையன் கைப்பிடித்தவாறே...அழும் பெற்றோர்களின் கண்ணீர் ,கால்களை பின்னிழுக்க..

கணவருடன் வாழ வேண்டிய வாழ்க்கை முன் தள்ள..நானும் லக்கெஜஸ் ட்ராலி தள்ளி..

ஏர்ப்போர்டில் நுழைந்தேன் ..

முன் நின்ற..துப்பாக்கி ஏந்திய போலீஸ் ..முதலில்..பாஸ்போர்ட் செக் செய்ய .பதட்டம் தொற்றியது !

காமிப்போமா..வெளியில்! புன்னகையுடன்..கெத்தாக ...அடுத்த லக்கேஜ் செக்கிங் ...நல்ல வெயிட்...ஹெல்ப்க்கு ஆள் வந்தனர்.. இதயம்...இடம் மாறியப்போல..ஒரு டென்ஷன்...குடும்பத்திற்கு தேவையான சாமான்களும் கொஞ்சம் பேக்கிங் கூடுதலாக
 பண்ணியிருந்ததால்..எதாவது தப்பாகிடுமோ என்று ! ( உள்ள நுழையும் போதே நடுக்கம், மறைக்க தான் பல சீன்கள்  :P )

.எடைப்பார்க்க..அடுத்தது  ஏர் இந்தியா கவுண்டரில் ..

முன்னாடியே , பல விதங்களில் , (பக்கத்திலிருக்கும் அரிசிக்கடையில் , சந்தேகத்திற்கு பேப்பர் வெயிட் போடும் கடையில் ,கடைக்காரர் பார்த்த பார்வைகளை அலட்சியப்படுத்தி , சந்தேகம் தீர்க்க வேண்டாமா !) எடை பார்த்திருந்தாலும் , ஒரு பரபரப்பு ...

குறிப்பிட்ட அளவிற்குள் வர வேண்டுமே...வரிசையாக...வணங்கும் தெய்வங்களை ..அழைத்து இண்ஸ்டண்ட் ஆக ஒரு  மானசீக பூசை...

பயந்ததை விட.. கம்மி வெயிட் தான்..அப்பாடா என்றிருந்தது...பழைய திருச்சி விமான நிலையம்...சிறியதாக இருந்தது அப்போது ! ( 2000 ல் , சின்ன கட்டிடம் , செண்ட்ரல் கவர்ன்மெண்ட் ஆபீஸ் போல தான் இருந்தது )

குடியுரிமை / Immigration checking ..பெரிய்ய க்யூ....தந்திருந்த form பூர்த்தி செய்து...க்யூவில் ஐக்கியமானேன்..கையில் பிள்ளையுடன் ..

நிறைய... ஆண்கள்..அனைவரும்..இங்கு தொழிலாளர்களாக வரும் அதிகம் படிக்காதவர்கள்.

அவர்களை கேள்வி கேட்ட அதிகாரிகள் அதட்டல் கள் காதில் விழ..

பின்  வரிசையில்.  ஒருவர்..இது சரியா..பாருங்க என. அவர் பார்ம் கொடுத்துக்கேட்க...திரும்பி சரிபார்த்து..என் இடம் திரும்ப நகர. ...

கைப்பிடித்து நின்றிருந்த மகனைக்காணோம்..

பக்கென்று இருந்தது..எங்கப்போயிருப்பான்.

கண்ணுக்கெட்டிய தொலைவு வரைக்காண வில்லை..படித்து படித்து சொல்லி அழைத்து வந்தும்..பதட்டம் அதிகரிக்க.. ஒரே ஓட்டம் தான்...

விமானம் ஏறச்செல்லும் செக்யூரிட்டி செக்கிங் பிரிவில் அங்கிருந்த போலீஸ் காரருடன் பேசிக்கொண்டிருந்தவனைப்பார்த்ததும்..சென்ற உயிர் உடல் புகுந்தது..!

மீண்டும் வரிசையில் என் பதட்டம் பார்த்து நல்லவேளை மீண்டும் அதே இடம் கிடைத்தது !!

கிடச்சுட்டானா என்ற சுற்றி பலர் பார்வையால் விசாரிக்க...இமிக்கேரஷன் ஆபிஸர் என்னிடமும் கேள்விகளை வீசினார்..

என்ன செய்யறார் கணவர்.. எங்கிருக்கிறது ஆபீஸ்..etc..etc ...புன்னகையுடனே பதில் தந்தேன்...

எதையும் காட்டத ..சுமி ந்னு உள்ளுக்குள் இருந்த டென்ஷன் எனக்கு இருந்தது அவருக்குக்கடத்தப்படவில்லை..!

அடுத்தது செக்யூரிட்டி செக்கிங்...

பெண் போலீஸ் ..தனியாக அழைத்தார் , விழித்தேன்...ஆனாலும் ஒரு ஸ்மைலியை தள்ளிவிட்டு பையனை..வெளி  நிறுத்தி உள் செல்ல... மெட்டல் டிடெக்டர் பல இடம் பாய ஏகப்பட்ட சவுண்ட்ஸ் ... முகத்தில் எனக்கு வியர்வை வெளியே ஹாய் சொல்லி  தெரிய ஆரம்பிக்க...என்னை அவர் பார்த்ததும்...முந்திக்கொண்டு இதெல்லாம் தான் இருக்கு..பாருங்க..என்றேன் ...

தாலிச்செயினில் கோர்த்திருந்த சேப்டி பின்களை ...தலையடித்துக்கொள்ளத குறையாகப்பார்த்த போலீஸுடமிருந்து , எஸ்கேப் ...அதிலேயே பர்ஸ்ட் டைமா..என்ற கிண்டல் பார்வையை யார் லட்சியம் செய்தது.. :P

கிடைத்த கேப் பில் விஷமம் செய்யும் மகனை பிடித்தவாறே...

போர்டிங் க்கு முன் கேட் அருகில் , (அங்க அப்போது ஒரே வழி -- கேட் தாங்க !)
ஹெண்ட் லக்கேஜ் டன்...சீட் பிடித்து அமர..தயாராக இருந்தது அருகில் அமர்ந்திருந்தப்பெண்ணின் பேட்டி...எங்கப்போறீங்க..எந்த ஊர்.. அங்க எங்க...இப்படி ..! பதில் தராமலே (வேறென்ன பயம் தான்!! ) பொத்தாம் பொதுவாக பேசியப்படி வேறு இடத்தில் பார்வையை செலுத்தினேன் .
மைக்கில் ப்ளைட்டினுள் ஏற  அழைத்ததும்...

ஏர் ஹோஸ்டஸ் எல்லாரும் புடவையில் .

.ப்ளைட்டுக்குள்...சீட்டைக்காட்டினார்..!! பையனைக்கையில் பிடித்து இழுத்தவாறே ...அப்பாடா..என்ற பெருமூச்சும் !

முதலில்...சாக்லேட் ..தண்ணீருடன் ட்ராயில் ஏந்திய ஏர் ஹோஸ்டஸ் ...புன்னகையை அள்ளித்தெளித்துப்போக..கண்களால் புன்னகைத்தே.. எடுத்துக்கொண்டு ..

காதில் பஞ்சை திணித்து..நானும் வைத்துக்கொண்டேன் ..!

(கணவர் சொன்ன instruction ) அந்த சாக்லெட் அதற்கு தான்..எனப்புரிந்தது அடுத்த பயணத்தில் தான்..!!

விமானம் மேலெழும்பி ..காற்றழுத்தம் உருவாக...காதுகளில் காற்று உட்புகுந்து அழைத்துக்கொள்ளும்..பின் வலிக்கும்..அதற்கு தாடையெலும்புகளை அசைத்துத்தர...காற்று உட்புகுதல் சரி செய்யப்படும்..இதற்கு தான் ஏறியதும் ..சாக்லெட்..

விமானம் மேல் கிளம்ப ...பதட்டத்துடன் ..நம் மண் வாசனையும், கண்ணீருடனும்..கவலை தோய்ந்த முகத்துடன் பார்த்த பெற்றோர்கள் முகம் வர .மனதை பாரம் வெகுவாக அழுத்த...உடல் லேசானது...! கால்கள் புவியீர்ப்பு விசைக்கு எதிராக மேலெம்புவதை உண்ர்ந்து கொண்டது...சிறு..பந்து வயிற்றில் சுழல ஆரம்பித்தது... மேலே நன்கு ஏறி.. மேகக்கூட்டங்களை தாண்டி...செலுத்தினார் விமானி..ஜன்னல் வழி பார்த்தால் ஏதும் இல்லை..பரந்த அண்டம் மட்டுமே !

 இது எப்போதும் பிடித்த ஒன்று.எதோ ஒரு நிர்மலம் ...இது தான் நாம்..என்னும் கணம்..!!

சீட் பெல்ட் அவிழ்க்கவேயில்லை.!
பணிப்பெண் புரிந்த வராக தெரிந்தார் ...

முதல் தடவையா..என பதில் தந்து என் பெல்ட்டை அவிழ்த்து...மகனிடம் பேசினார்..அப்போது அவனால் அதிகம் ஆங்கிலத்தில் பதில் தர முடியாது..! ஆனாலும் அவர்கள் பேசினார்கள் .

நான் பார்த்துக்கறேன்..நீங்க டாய்லெட் போறதாக இருந்தா போங்க என்றார் ..

எழுந்து நடந்தால் தேவலாம் என்ற எண்ண உந்துதலில்... நடந்து கழிவறைக்கண்டேன்.

சின்ன இடம்..கண்ணாடி யுடன் கனக்கச்சிதம் !
வியப்பை அள்ளித்தர ...அங்கிருந்த ப்ளைஷ் ஐ அழுத்த...அது தந்த சப்தம்...தூக்கிவாரிப்போட்டது...!!
vacuum செய்த சத்தம்..ஏதேதோ கற்பனை அதற்குள் . எதாவது உடைந்திருக்குமோ ..என்ற பயம்..!!

  எல்லாம் சரிதானே என்ற பயத்துடன் வெளி வந்தால் போதும் என்று வெளிறிய முகத்தை மறைத்தபடி சீட்டுக்கு மீண்டும் அமர்ந்தேன் ..பையன் தூங்க ஆரம்பிக்க. மனம்...கடந்த நாட்களை,  நிமிடங்களை , நொடிகளை   அசைப்போட ஆரம்பித்தது...

எதோ மணம் மூக்கை துளைக்க ...சாப்பாடு நீட்டினார் பணிப்பெண் ..வேண்டாம் என மறுத்தேன் ..ஏன் என , பசியில்லை என்றதும் அவர் நகர்ந்தார்...இவனை அவன் அப்பா கையில் ஒப்படைத்ததும் சாப்பிடுவேன் என்றதும் நகர்ந்தார் புன்னகைத்தப்படியே ஒரு வினோத
 பார்வையுடன்...

மீண்டும் எண்ண அலைகள் தாலாட்ட கண் மூடி தூங்க முயற்சி க்க..பையனுக்காவது கொடுங்க...என்று பணிப்பெண் தந்ததை
வாங்கி க்கொண்டேன்.. ஏர்போர்ட் , விமானத்தில் மற்ற சீட்களில் இருந்தவர்களுடன் கொண்ட அரட்டை அசதியில் அவன் உறங்க , தந்த பணிப்பெண் மீண்டும் வந்து கொஞ்சம் சாப்பிடுங்கள் என்றார் ...

நான் இல்லை.என் கணவரைப்பார்த்து அவர் கையில் இவனை சேர்த்தால் தான் சாப்பிட முடியும் என்றேன் ...
புரிந்துகொண்டார் என் உணர்வுகளை ...

அத்துணை எளிதாக இல்லை...ஒரு சிறு  வயதுப்பெண் , கட்டுக்கோப்பான குடும்ப பிண்ணனி யில் தனியாக  விஸா..டிக்கெட் பெற்று ...துடிப்பான பிள்ளை யுடன் பிரிந்த கணவரை சேர்வது...உணர்ந்தவர் மட்டுமே உணர முடியும்..
அத்தனை உணர்வுகளும் காம்பேக்ட் ஆக அழுத்திக்கொள்ள பல்வேறு உறவுகளின் கேள்விகள், சமாளிப்புகள் , எதிர்பார்ப்புகள் , அனைத்தையும் விழுங்கி விட்டு வருடங்கள் பிரித்திருந்த கணவரைக்காண ஆவல் ,, அடுத்தடுத்து வந்த மணித்துளிகளை நொடிப்பொழுதாக்கின.
விமானம் தரையிறங்கிய தும்...
விஸா சப்மிட்க்கென தனி கவுண்டர் ..ப்ரஸிஜர் ..

அனைத்தையும் முடித்து...லக்கெஜ் சேகரித்து ட்ராலி தள்ளியப்படி வெளி வர...விஸிட்டர்ஸ் வழியில் கலக்கதை மறைத்தப்புன்னகையுடன் கண்ணாலே விசாரித்தார் கணவர் ...

அவர் கை நீட்டியதும் ..மகனின் கையை ஒப்படைத்ததும் இதயம் சீராகத்துடித்தது..

வெளியே காத்திருந்த நண்பரின் காரில் எங்களை புதைத்துக்கொண்டோம் .

என்னவர் போன் எடுத்து அவளும் குழந்தையும் நல்லபடியா வந்தாச்சு என்பதை காதில் வாங்கியபடியே கண்களை சற்று மூடினேன் ...
Saturday, 12 September 2015

இப்படியும் ஒரு சோதனை ..

பேச வேண்டிய இடத்தில் பேசணும் ..இது என்னவர் அடிக்கடி சொல்வது . முன்பே ஒரு பதிவு ஷாப்பிங் அனுபவம் எழுதியிருந்தேன் . 

அதில் இன்னொன்றையும் குறிப்பிடுவதாக எழுதியிருந்தேன் ..அதோட வால் பதிவு இது . ஆனா சின்ன வால் தான் , தைரியமா படிக்கலாம் .

சென்ற வருடம் , திருச்சியில் அந்த பெரிய ஹாஸ்பிடலில் , (பல கிளைகள் உண்டு அதற்கு தமிழகத்திலும் , இந்தியாவிலும் , புரிஞ்சுருக்குமே எதுன்னு ..அட நம்ம ரெட்டி காரு ஹாஸ்பிட்டல்ங்க ) அம்மாவிற்கு , செக்கப்ன் போது , கைனகாலஜி டாக்டர் , ஒரு டெஸ்ட் எழுதித்தந்து அதே ஹாஸ்பிட்டலில் செய்துக்கலாம் என்றார் . 

முதல் நாளே , ரெடி ஆக சொல்லி , காலையில் 6 - 6.30 மணிக்குள் , எமர்ஜென்ஸியில் ரிப்போர்ர்ட் செய்யச்சொல்லவே , சொன்னப்படி கரெக்டா ஆஜரானோம் . (அது ஹிஸ்ட்ரோஸ்கோபி ) . 

எமர்ஜென்ஸியில் , ஆஜராக , பொழுது போகாமல் , தூக்கத்தை தியாகம் செஞ்சிருந்த ஊழியர்கள் , ப்ரெஷ்ஷா நிக்கும் எங்களைப்பார்த்து கடலை..சே ..பேசத்தொடங்கினார் , " என்ன செய்யறீங்க மேடம் , வொர்க்கிங் ஆ " ...எதிர்பார்த்த கேள்வி வந்து விழகொடுத்த பார்மை பூர்த்தி செய்தப்படியே  , புன்னகையையே பதிலாக்கி , ஆர்.ஜே என்றிட வழக்கப்படியே , விசாரணைகள் தொடங்கிட பதிலளித்தப்படியே , சர்க்கரை நோயாளியான , அம்மாவை அருகிலிருந்த வெயிட்டிங் ஏரியாவில் வெயிட் செய்யச்சொல்லி , பார்மலிட்டிஸ் பார்த்திருந்தேன் . சற்று நேரம் பிடித்தது கார்ட் பேமண்ட் என்பதால் . 

முடித்து , ஜெனரல் வார்டில் படுக்கைத்தரப்பட , டாக்டர் 9 மணிக்கு வருவார் , என்றும் ,  தியேட்டரில் செய்ய இருப்பதால் அதற்கான ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தனர் . 

அம்மாவிற்கு வெறும் வயிறு , காலை 9 மணிக்கு வந்த டாக்டர் , சிரித்தப்படியே எல்லாம் ஓகேயா ம்மா என்று கேட்டப்படி வந்து 10 மணிக்கு மேல தியேட்டருக்கு ஷிப்ட் செஞ்சுருங்க என்று , அருகில் ஒற்றைக்கால் தவப்போஸில் நின்றிந்த நர்ஸுகளுக்கு ஆர்டர் தந்து சென்றார் , வழக்கம் போல , நான் மடக்கி , "எவ்வளவு நேரம் ப்ரஸீஜர் ?" , 

அவர் "ஜஸ்ட் 30  மினிட்ஸ்!" தான் என்று சிட்டாய் விரைந்தார் . 

சரியாக 10 மணிக்கு கரெக்டா ஷிப்டிங் க்கு வந்தார்கள் .. எனக்கு வயிற்றில் பட்டாம்பூச்சியும் , பயத்தில் கரப்பான் பூச்சியும் சுரண்ட ஆரம்பித்தது .

என்னதான் ,  துணிச்சலாக இருந்தாலும் , அம்மாவை தியேட்டருக்கு அதிலும் 67 வயதானவரை அனுப்ப மனது , கஷ்டத்தில் மூழ்க ஆரம்பித்தது . கண்ணீரும் வரலாமா என்று கேட்டப்படிக்காத்திருக்க ஆரம்பித்தது .

தியேட்டருக்கு வெளியே வெயிட் பண்ணுங்கக் கூப்பிடறோம் என்ற நர்ஸின் வழிக்கட்டாலின் படியே தேவுடு காக்க ஆரம்பித்தேன் , ஆப்ரேஷன் தியேட்டர் இருந்தது 2 வது தளத்தில் , வெளியில் உட்கார எந்த வசதியும் கிடையாது ..ஒரே ஒரு சேர் - டேபிள் அது , அங்கு ஒரு செக்யூரிட்டிக்கு, அவர் முன் படமெடுக்கும் பாம்பு போல ஒரு மைக் ..அதில் தான் கூப்பிட்டார் , பேஷண்ட்ஸ் உறவினர்களை..

வெளியில் நின்றப்படியே , வாய் பல ஸ்லோகங்களை முணுமுணுக்க ஆரம்பிக்க , (அம்மாக்கு , அந்த டெஸ்ட் கேன்ஸர் செக்கப்பிற்காக , அதற்கு முந்தைய பல டெஸ்ட்கள் ஆகிருந்தது !) 

இப்போது என் டென்ஷனுக்கான காரணம் புரிந்திருக்குமே ..

அம்மாவுடன் மூவர் தியேட்டருக்கு கொண்டுப்போகப்பட்டனர் , அவர்களின் உறவினர்களும் வெளியில் காத்திருக்க , சிலர் அழுதப்படியும் , அவர்களுக்குள் பேசியப்படியும் இருந்தனர். 

ஒருவருக்கு ஒரு மேஜர் சர்ஜரி , இதய சர்ஜரிப் போலிருந்தது . உறவினர்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர் . ஆனா எல்லாருமே ஸ்டாண்டிங் பொஸிஷன் தான் . அவர்களுக்குள் பேசி முடித்தப்பின் என்னையும் பார்த்து , கேட்க வாயெடுத்து அமைதியானது , எனக்கு அப்பாடா ! என்றிருந்தது . பெர்சனல் கேள்விகளையும் , அதற்கு தேவையற்று பதில் தருவதும் பொது இடங்களில் தவிர்ப்பதும் , விரும்பதாதும் அதுவும் அன்றிருந்த மனச்சுமையில் , இடம் மாறி மாறி நின்றேன் . மணித்துளிகள் நாட்கள் போல கடக்க , இருந்த மனிதர்களும் , அவர்தம் அழுத இருண்ட முகங்களும் , மருத்துவமனையில் மக்களின் மன நிலையை பிரதிபலிக்க , கவிதையும் தோன்ற எழுதி வைத்தேன் . 

சர்ஜரி முடிந்ததும் , பேஷண்ட்ன் பெயர் சொல்லி அட்டெண்டர்களை அழைத்து , அவர்களும் உள் சென்று , பார்த்துவர , மணி 2 தாண்டியது . 

 அடுத்த மாடிக்கு செல்லும் படியில் அமர்ந்திருந்தவர்கள் சாப்பிடப்போக , ரெண்டு தரம் என் கேள்வியை சந்தித்த அந்த செக்யூரிட்டியும் , சாப்பிடப்போனார் . 

அங்கு நான் மட்டுமே ! , பதட்டம் மட்டுமே அதிகரித்தப்படி இருந்தது , யாரும் வந்து எந்த தகவலோ , என்னாச்சு அம்மாக்கு என்றோ சொல்ல வில்லை . 

3 மணிக்கு மேல் மெதுவாக அந்த செக்யூரிட்டி என் முகம் , கண்டு ,  என் அம்மாவின் பெயர் கூற பாய்ந்து ஓடினேன் .. (சாப்பிடவும் இல்லை..கேண்டீன் மூடப்பட்டிருந்தது ) ! , 

முதலில் அம்மாக்கு என்னாச்சு ந்னு ஆர்வம் மேலிட , மன அழுத்ததில் கண்ணீரும் போட்டிப்போட்டது என்னுடன் . போஸ்ட் ஆப்ரேட்டிவ் பிரிவில் உள் நுழைய டாக்டர் ,  "அதோ உங்க அம்மா பாருங்க ,  நான் பார்த்தவரைக்கும் கேன்சர் மாதிரி தெரியலை , பயாப்ஸிக்கும் அனுப்பறேன் . நீங்க பயப்படவேண்டாம் " .. 

" டாக்டர் , அப்ப , கம்ப்ளீட்டா கேன்ஸர் பயமில்லையே ?"  என்று ரெண்டாவது முறையும் கேட்டு வாங்கிக்கொண்டேன் பதிலை .

அம்மாவிடம் நெருங்க , அம்மாவை அனஸ்தீஷியா எபெக்டிலிருந்து மீட்க நர்ஸ் முயற்சி செய்துக்கொண்டிருந்தார் , அம்மா முடியாமல் என் குரல் புரிந்தும் , ஏதேதோ உளறினார் . 

"பயப்பட வேண்டாம் , இன்னும் கொஞ்ச நேரத்தில் , வார்டுக்கு ஷிப்ட் செய்வாங்க , நீங்க கவலைப்படாமல் போங்க " ! என்று மனதைப்படித்த நர்ஸ் அனுப்பிவைக்க , ஒரு புறம் அப்பாடா! என்றிருக்க , என்னாச்சு ..ந்னு 2 தரம் போன் பண்ணிருந்த  கணவருக்கு மெசேஜ் தட்டிவிட்டு , அப்பாக்கும் போன் செய்து வைத்தேன் .

" 30 நிமிஷம் ப்ரொஸிஜர்ன்னு சொன்னயே , ஏன் பின்ன 5 மணி நேரத்துக்கு மேல ஆச்சு ? " என்றார் .

" ஆமாங்க !, ரொம்ப பயந்துப்போயிட்டேன் , எதாவது சீரியஸ் ப்ராப்ளமோ என்னவோ ந்னு (ஏற்கனவே நிறைய அனுபவம் , பெரிய ஹாஸ்பிடல்ல , தன் தவறோ எதாவதோ நிகழ்ந்திருந்தால் , நமக்கு செய்தி லேட்டாகவே வரும் ..என் குழந்தை பிறப்பின் போது நன்கறிந்தவள் ) பயந்துப்போயிட்டேன் , எதாவதுன்னா ..இப்ப என்ன செய்யறதுன்னு நடுங்கிட்டேன் "  என்றேன் . 


மிகவும் டென்ஷனா , பதட்டமான சூழலில் என்னால் சண்டைப்போடவோ போராடவோ முடியாது என்றறிந்த நாள் அன்று .

கொஞ்ச நேரம் சென்றதும் ஒரு காபி சாப்பிட்டு வர , பதட்டம் தணிந்து , கோபம் பீறிட்டது , அந்த செக்யூரிட்டியிடன் முதல் கோபத்தைக்காண்பித்தேன் . 

 "ஏன் இவ்வளவு நேரமாச்சு ?, ஏன் இங்க உக்கார கூட வசதியில்ல , எத்தனை மணி நேரம் வெயிட் செஞ்சேன் தெரியுமா ,  ...இங்க யார் உங்க ஹெட் ? கம்ப்ளைண்ட் தரணும் " . என்றேன் , கொஞ்சம் கோபத்தில் கைகளும் நடுங்கியது .

பாவம் அவரும் , என் நிலை உணர்ந்தவராக , உடனே கீழ எங்க பி.ஆர்.ஓ பாருங்கம்மா ...அவங்க கிட்டதான் தரணும் என்றார் . 

விசாரித்து ..இங்க பெரிய பெரிய ஹாஸ்பிடல் , மதித்துப்பேசும் பல நாட்டு டாக்டர்ஸ் பார்த்தாச்சு ..இதென்ன பிரமாதம் என்று மனசு கொக்கரித்து , விடாதப்போ !! என்று கூவியது !!

நாலு கால் பாய்ச்சலில் ஓடினேன் ... ஜெயஸ்ரீ என்ற பெயர் பலகை , தாங்கியிருந்த, அந்த பீ.ஆர்.ஓ பெண்ணின் அறை கண்ணில் பட .

வந்த ஆத்திரத்தை வார்த்தைகளாகக்கோர்க்க ,

 " என்ன நடந்ததுன்னு தெரியணும் , எத்தனை மணி நேரம் என் அம்மா , அதுவும் டயபடிக் பேஷண்ட்,  உள்ள இருப்பார் ? , நா நின்னப்படியே 5 மணி நேரம் வெயிட் செஞ்சுருக்கேன் , என்ன நடக்குது உங்க ஆஸ்பிட்டல்ல.. பணத்தை மொத்தமா பே பண்ணி உங்க சர்வீஸ் நல்லாருக்கும்ன்னு நம்பித்தானே  வர்றோம் ..ஏன் இப்படிப்பண்றீங்கன்னு " கொட்டி தீர்த்தேன் .

 " சாரி மேடம் , கொஞ்சம் அமைதியா இருங்க , இதோ விசாரிக்கிறேன் " என்றவர் , முதலில் நர்ஸிங் ஸ்டேடஷ்ன் போன் செய்ய , பின் , தியேட்டர் , என விசாரணையை துவக்கினார் . 

அப்போது தான் தெரிந்தது , எனது , கிரெடிட் கார்ட் பேமண்ட் இவர்களுக்கு வந்து சேர , மணி 2 க்கு மேல் ஆனதாம் , அதுவரை பேஷண்டை ட்ரிப் போட்டு தியேட்டரில் படுக்க வைத்திருக்கின்றனர் . 

நான் பணத்தைக்கட்டும்போது காலை மணி 6.30 , உடனே சிறிது நேரத்திற்குள் , பணம் எடுக்கப்பட்டதும் , அது ஹாட்பிட்டல் அக்கவுண்ட்டுக்கு ட்ரான்ஸ்பர் ஆனதற்கும் ஆன ரெசிப்ட் , ஈமெயிலாக வந்திருந்தது எங்கள் அக்கவுண்ட்டுக்கு . அந்த ஈமெயிலை எடுத்துக்காட்ட அந்த பெண்மனிக்கு முகத்தில் ஈயாடவில்லை ..

" எனக்கு பதில் கிடைக்கணும் , இது யாரோட மிஸ்டேக் , ஏன் நாங்க கஷ்டப்படணும் ? "என்று சீறிவிட்டு வெளியே வந்தேன் ..

நீயா சுமி என்று எனக்கே ஆச்சர்யம் தாங்கவில்லை .. பொதுவாக நடந்தது நடந்துப்போச்சுப்போ ..ந்னு தூக்கிப்போட்டு போகும் நான் இன்று சண்டைப்போடும் அளவிற்கு வந்துட்டேனா ந்னு கொஞ்சம் கிள்ளிப்பார்த்துக்கொண்டேன் . 

கணவரிடன் அப்டேட் செய்தப்படியே ,மருத்துவமனை நிர்வாகிகளின்  மேலதிகாரிகளுக்கும் , மெயில் அனுப்பினேன் . 

மாலை , டிஸ்சார்ஜ் , அதற்குள் அந்தப்பெண்மணி சமரசத்திற்கு வந்தார் . 

 " இது எங்க staff mistake  தான் , தயவு செய்து மன்னிச்சுக்கோங்க , இனி உங்களுக்கு எது தேவைன்னாலும் , எந்தப்பிரச்சனை , அப்பாயிண்மெண்ட் வேனும்னாலும் வாங்க , தயவு செய்து இந்தப்பிரச்சனைய இதோட விட்டுடுங்க..ப்ளீஸ் ! " என்று கெஞ்சவும் , அம்மா , நிதானத்திற்கு வரவும் சரியாக இருந்தது .

முன்பே யாராவது சொல்லிருந்தா , சரி செய்திருக்கலாம் , சொல்லலையே . 

சர்வீஸ் , நோபல் ப்ரொபஷன் எல்லாம் அடுத்தபட்சம் தான் என வெறுப்பே மிஞ்சியது .

இனி என்ன ஆகப்போகுது,

எப்படியோ போகுட்டும் போ ! என்று மனதில்  நினைத்தப்படி , டாக்சி புக் செய்து , ஆதவனும்  ரெஸ்ட்க்கு போக , நானும் அம்மாவுடன் வீடு வந்து சேர்ந்தேன் ...

அன்று தவித்த தவிப்பு .. அப்பப்பா !! ..ஹாரிபிள் ..

Friday, 4 September 2015

கண்ணனை பணி மனமே

ஸ்ரீ மஹா விஷ்ணுவின் அவதாரங்களில் அனைவருக்கும் ,
நெருக்கமும் , சிறப்பானதுமான பாண்டவ தூதனாக , கீதையின் நாயகனாக வந்த ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் !
பக்தியில் பலவகை. அதில் ஒரு வகை , தாயாய் அன்புக்கொண்டு பக்திக்கொள்வது !
அப்படி தாயன்பால் ஆதியும் அந்தமுமற்ற இறைவனைப்பாடியவர் பெரியாழ்வார் .
ஸ்ரீவல்லிப்புத்தூரில் அழகான நந்தவனம் அமைத்து , வடப்பெருங்கோயிலுடையானுக்கு (வடபத்ரசாயி) பூக்கள் பறித்து , தொடுத்து மாலையாக்கித்தந்த இறைத்தொண்டு செய்துவந்தவரின் தாய் தந்தையர் இட்டப்பெயர் விஷ்ணுசித்தர் .
அப்போது மதுரையை ஆண்ட ஸ்ரீவல்லபன் என்ற பாண்டிய மன்னனுக்கு ஒரு ஏழை அந்தணனது இனி பிறவியல்லா வாழ்வும் , பர லோகமும் செல்ல , இப்பிறவியிலேயே அதற்கான முயற்சிகள் செய்ய வேண்டும் என்ற வாக்கியம் மிகுந்த யோசனையில் ஆட்படுத்த , அதற்கான விளக்கமறிய , தன் புரோகிதர் செல்வ நம்பியை கேட்க , செல்வ நம்பி , ஒரு சபையைக்கூட்டினார் .
அதில் வேதங்கள் கூறும் பரம்பொருளான தெய்வம் யாரென்றிய விவாதங்களை நடத்தினார் .
பூத்தொடுத்து , தொண்டில் ஈடுபட்டு வந்த விஷ்ணு சித்தரின் கனவில் தோன்றிய பெருமாள் ,
" நாளை மன்னனின் சபையினில் சென்று பர தெய்வம் யாமென்று நிலை நாட்டி வருக ! " , அதிர்ந்த பெரியாழ்வார் ,
" எனக்கு பூ தொடுப்பதை தவிர வேறென்றும் தெரியாதே , எங்கனம் நிரூபிப்பேன் " என்கிறார் .
" இதுவும் நீங்கள் செய்வதாக நினைப்போ! யாம் அல்லவோ நிறைவேற்றுகிறோம் ! " என்று தனது லீலையை ஆரம்பிக்க ,
இறைவனது ஆணைப்படி பாண்டியனின் சபைதனில் , துருபன் , வால்மீகி போன்று இறைவனாலே வேண்டிய அருள் ஆற்றலைப்பெற்று , வேதங்கள் , ஸ்மிருதிகள் , இதிகாசங்கள் , புராணங்களில் இருந்து மேற்கொள்கள் காட்டி , ஆதியும் அந்தமும் அற்ற தெய்வம் ஸ்ரீமன் நாராயணன் ஒருவனே என்று நிலை நாட்டிட ,
அங்கே மேலே தொங்க விடப்பட்டிருந்த பொற் கிழி ( பொற்காசுகள் கட்டிய பை) இவர் உரைத்ததே சத்தியம் என்று விஷ்ணு சித்தரின் மீது பொற்காசுகளை பொழிந்தது .
மகிழ்ந்த அரசன் , யானையின் மீது ஊர்வலமாக , பல பரிசுப்பொருட்களுடன் அவரை ஸ்ரீவில்லிபுத்தூர் அனுப்பி வைக்கிறார்.
வென்று பரிசிலுடன் வரும் ஆழ்வாரைக்காண கருடனின் மீது , இறைவன் தோன்றிட வீதியில் கூடியிருந்த மக்கள் ஆரவாரம் செய்ய , இறைவனை வானில் கண்டு ..
வணங்கி ட , உடனே, எங்கே இறைவனுக்கே கண்படுமோ ! என்றெண்ணி , யானையின் கழுத்திலிருந்த மணியைக்கொண்டு , பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று இசைத்தப்படியே பாடுகிறார் .
அப்போது பெரியாழ்வர் என இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டவர் பெரிய திருமொழி இயற்றுகிறார். 473 பாடல்கள் !
கண்ணனை குழந்தையாக , அவர் பாடிய ..
சீதக்கடல் உள்ளமுதன்னதேவகி
கோதைக்குழலாள் அசோதைக்குப்போத்தந்த
பேதைக்குழவி பிடித்து சுவைத்துண்ணும்
பாதக்கமலங்கள் காணீரோ பவளவாயீர் ! வந்துக்காணீரோ !
பாசுர விளக்கம் :
பவளம் போன்ற சிவந்த வாயினைக்கொண்ட
பெண்களே ! வாருங்கள் !
தன் திருவடியில் தேன் இருப்பதைப்போன்று தன் கால் விரல்களையேவ்வாயிலிட்டு சப்பும் , இந்த தேவகி பெற்ற இக்கண்ணனின் அழகைப்பாருங்கள் !
என்று யசோதையே , கண்ணனின் அழகைப்பார்த்து , விரல் சப்பிடும் குழந்தையைப்பாடுவதுப்போல ஆழ்வார் பாடுகிறார்.
இன்னொன்றில் ..
மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி
ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுத்தொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக் குறளனே தாலேலோ! வைய மளந்தானே தாலேலோ!
பாசுர விளக்கம் :
நவரத்தினங்களில் ஒன்றும் சிவப்பானதுமான மாணிக்கத்தைக்கட்டியும் , நடுவில் வைரத்தை வைத்தும் சுத்தமான பொன்னால் ஆன அழகிய சிறிய தொட்டிலை பிரம்மன் விரும்பி உனக்காக அனுப்பினான் . பிரம்மச்சாரி வடிவில் வாமனனாக அவதரித்து , உலகை அளந்தவனே தாலேலோ !
என்று தானே கோபியர் பெண்களில் ஒருத்தியாக  எண்ணிக்கொண்டுப் பாடுகிறார் !
கண்ணனை தொட்டிலிட்டு தாலாட்டி , சந்திரனை அழைத்து , குழந்தைக்குக்காட்டி , குழந்தையின் தொட்டிலை அசைத்தாட்டவும் பாடியிருக்கிறார் பெரியாழ்வார் .
குழந்தையாக கண்ணனை கைக்கொட்டி அழைத்தல் , அணைத்துக்கொள்ள ஆசைப்படுதல் , கண்ணனை முதுகிற் கட்டிக்கொள்ளும்படி அழைத்தல் என அத்தனை உணர்வுகளையும் பாடல்களாக்கியிருக்கிறார்.
கண்ணனை குழந்தையாக பாவித்து , பாடிய தாயாக மாறிய பெரியாழ்வரின் பக்தி மெய் சிலிர்க்கிறது !
பல பேரண்டங்களை படைத்தவன் அவதரித்த தினத்தில் பெரியாழ்வார் பாதம் பற்றி , கண்ணனைப்போற்றுவோம்