Monday 20 July 2015

** பாசுரம் -9.

திருமாலை அறிவோம்..
சோழ நாட்டில் விப்ர நாராயணர் என்ற திருப்பெயர் கொண்டவர் தாசியால் மாறி பின் திருவரங்கனுக்கு தொண்டு புரிந்து "தொண்டரடிப்பொடியாழ்வார் " ஆக ஆனவர்.
இவர் அழகு தமிழிலே இயற்றியவை திருமாலை (45) , திருப்பள்ளியெழுச்சி (10) .
இவை நாலாயிர திவ்யப்பிரபந்தம் எனும் வைணவ இலக்கியத்தில் இடம்பெற்றுள்ளன..அதிலுள்ள இறைத்தமிழை அனுபவித்து வருகிறோம்.இனி பாசுர விளக்கம் காண்போம்.
** பாசுரம் -9.
மற்றுமோர் தெய்வ முண்டே
மதியிலா மானி டங்காள்,
உற்றபோ தன்றி நீங்கள்
ஒருவனென் றுணர மாட்டீர்,
அற்றமே லொன்ற றீயீர்
அவனல்லால் தெய்வ மில்லை,
கற்றினம் மேய்த்த வெந்தை
கழலிணை பணிமி னீரே.
--------()----------
* கற்றினம் மேய்த்தவெந்தை - கன்றுகளோடு கூடிய மாடுகளை மேய்த்த
( எந்தை) என் தெய்வம்
கழலிணை பணிமின்நீரே -
கண்ணனை பற்றிக்கொள்ளுங்கள்
மதியிலா மானிடங்காள் - மதியற்றவர்களாகளான (எந்த அறிவு வேண்டுமோ அது அற்ற ) மானிடர்களே !
மற்றுமோர் தெய்வமுண்டே !?
மற்றுமொரு தெய்வம் உண்டோ ?! - ( இல்லை என்றும் )
உற்ற போதன்றி - உற்ற தெய்வமாக பற்றியிருப்பவர் அன்றி
நீங்கள் ஒருவனென்றுணரமாட்டீர் -
வேறெருவரை பர தெய்வமாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் அவர்களாக வந்து சரணடந்தால் ஒழிய
அற்றமேலென்றறயீர் - வேதத்திற்கும் மேலான அறுதியான தாத்பர்யமான பரம்பொருளை அறிய மாட்டீர்கள்..
அவனல்லால் தெய்வமில்லை -
முந்தைய என் பாசுரங்களில் நான் தெரிவித்து வரும் பரதெய்வம் நாராயணன் தவிர பிற தெய்வமில்லை என்பதையும்..!
*** பாசுர விளக்கம். ***
முந்தைய பாசுரத்தில் சிலையினால் வென்ற தேவனே தேவனாவான் என்று ஆழ்வார் , அம்பினால் இலங்கையை வென்ற ஒருவன் அவன் ராமனே தேவனாவான்.
அவன் ' சக்ரவர்த்தி, காண்பதும் கடினம் , அவரை பின்பற்றுவதும் கடினம் முற்பட்ட காலம் ' என்பவர்களே !
அதற்கு பின் வந்த கன்றுகளை மாடுகளுடன் மேய்த்த எங்கள் கண்ணனின் பாதம் பணிந்து உற்ற தெய்வம் இவனென்று ஏற்றுக்கொள்ளுங்கள் !
எந்த அறிவு , ஞானம் தேவையோ அது தவிர வேண்டாததெல்லாம் அறிந்து வைத்திருக்கும் மானிடர்களே !!
என்னால் கூறப்பட்ட தெய்வத்தை தவிர மற்றுமோர் தெய்வமுண்டோ..இல்லை..!
நீங்கள் எந்தெந்த தெய்வங்களை பற்றியிருக்கிறீர்களோ அவர்களே ஒரு துன்பம் எனில் பரதெய்வமாகிய நாராணனை சரண் புகுந்தால் ஒழிய அவரே உற்ற தெய்வம் என்று நீங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் .
வேதத்திற்கும் மேற்பட்ட வேதாந்தம் எனும் அறுதியான பொருள் கொண்டதை அறியாமல்..வேதங்கள் கூறியப்படி தேவதைகளுக்கு பூஜை செய்து அவர்களே நம் தெய்வம் என்று ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள் ! உணருங்கள் !
நாராயணன் ஒழிய உற்ற தெய்வம் வேறில்லை "
என்று ஆழ்வார் உரைக்கிறார்.
இதில் ஆழ்வார் தொடர்ந்து ஏன் அவர் திருவரங்கம் வாழ் அரங்கனை துதிக்கிறார் என்றும்..ஒரே தெய்வம் அவரே என்றும் தம் பக்தியை விளக்கி அனைவருக்கும்..தான் பெற்ற ஞானம் கிடைக்க செய்கிறார்..
ஆழ்வாரின் பாதம் பணிந்து ..அடுத்த பாசுரம் காண்போம்...

No comments:

Post a Comment