Monday 20 July 2015

அறிவோம் திருமாலை - பிரபந்தம் .- 8


திருமண்டகக்குடியை பூர்வீகமாகக்கொண்ட சாத்வீகமான , தேவதேவி என்ற நாட்டிய அழகியால் வசீகரிக்கப்பட்டு அதன் மூலம் மரண தண்டனை வரை சென்ற விப்ர நாராயணன் எனும் வைணவ அடியார் , பின் தொண்டர்களின் பாதத்துளி மண் ஒற்றி அவர்களுக்கு சேவை செய்ய தொண்டரடி பொடியாழ்வார் ஆகி..அவர் இயற்றிய பக்தி இலக்கியங்கள் திருமாலை (45) - திருப்பள்ளியெழுச்சி ( 10) பக்தி இலக்கியங்கள் படைத்து அவை நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் நம்மை உய்விக்கின்றன.
தமிழமுதம் பருகுவோம்..! பக்தி கலந்து.

திருமாலை -8 .

வெறுப்பொடு சமணர் முண்டர் விதியில்சாக்கியர்கள் நின்பால்
பொறுப்பனகள் பேசில் போவதே
நோயதாகி குறிப்பென கடையுமாகில்
கூடுமேல் தலையை ஆங்கே
அறுப்பதே கருமங்கண்டாய் அரங்கமா நகருளானே !
பாசுர விளக்கம்.
வெறுப்பொடு - (இறைவனின் மேன்மையை கேட்கவும் பெறாத) வெறுப்போடு
சமணர் - ஜைனர்கள்
முண்டர் - தலையில் மொட்டையடித்துக்கொண்டு வாழ்ந்த சைவர்கள்
விதி இல் - பாக்கியமற்ற -விதியில்லா
சாக்கியர்கள் - பௌத்தர்கள்
நின் பால் - உன் விஷயத்தில்
பொறுப்பு அரியன கள் - பொறுக்க இயலாத சில வார்த்தைகள்
பேசில் - பேசுவார்களே ஆயின்
அதுவே நோய் ஆகி - அந்த நிந்தைகளை கேட்பதே வியாதியாகி
போவது - வாழ்வே முடிந்துப்போவது
குறிப்பென அடையுமாகில் - அந்த குறிப்பு எனக்கு கிடைத்து (சந்தர்ப்பம் வாய்த்தால் )
கூடுமேல் ஆங்கே - எனக்கு சக்தியும் கூடு மாகில் உன்னை நிந்தித்த அவ்விடத்திலேயே
தலையை அறுப்பதே கருமம் கண்டாய் - தலையை கொய்வதே செய்யக்கூடிய வேலை யாக இருக்கும்..அதையும் நீயே காண்பாய்..நீயே செய்ய வேண்டும்..
திருவரங்க நாதனின் மேல் பேரும் பக்திக்கொண்ட ஆழ்வார்..ராம நாம மகிமையையும் , இறை பக்தியின் வலிமை , மனிதர்கள் புரியாமல் வாழ்கிறார்களே என்ற தன் ஆதங்கத்தையும் சென்ற பாசுரங்களில் தெரிவித்தவர்..இப்போது இறைவனை தூற்றுபவர்கள் , நாத்திகர்கள் பற்றி குறிப்பிடுகிறார்.
திருமழிசையாழ்வார் , திரு மங்கையாழ்வார் முதலியோர் கடுஞ்சொற்கள் உபயோகித்தால் ஏற்க இயலும், ஆனால் பரம சாத்வீக குண சீலரான தொண்டரடிப்பொடியாழ்வார் இங்கனம் குறிப்பிடுவது அக்காலத்தில் இருந்த மற்ற மதங்களின் ஆளுமைகள் மனிதர்களின் செயல்கள் எழுதத்தூண்டியிருப்பன என அறிய முடிகிறது.
இறைவனை ஏற்காது அவன் பால் வெறுப்பை உமிழ்பவர்கள் , தலையில் மொட்டையடித்துக்கொண்டு இருந்த சைவர்கள் , வேதமென்பதையும் , இறைவனையும் ஏற்காத - விதியில்லா பௌத்தர்கள் உன்னைப்பற்றி பொறுக்க இயலாத சில வார்த்தைகளை கூறுவார்களே ஆயின்..முதலில் நான் அவ்விடம் விட்டு நகர வேண்டும் , நகர முடியா சூழ் நிலையில் அவ்வார்த்தைகளை கேட்பதே எனக்கு நோயாகி நான் அவ்விடமே உயிர் விடுதலும் வேண்டும்..அப்படி இல்லையெனில் எனக்கு அவர்களின் பேச்சை கேட்கும் சந்தர்ப்பம் வாய்க்குமெனில் அவர்களின் தலையை அறுப்பதே நான் செய்யத்தக்க செயலாகும்.
அதையும் நீயே செய்ய வேண்டும் என பிரார்த்திக்கிறேன் அரங்க மா நகரில் வாழும் ரெங்க நாதனே !
இது ஆழ்வாரது சூழ் நிலையையும் , ஒரு சாத்வீகர் தான் கொண்ட பக்தியில் எத்துணை உறுதியாக இருக்கவேண்டும் , இறைபக்தியின் மேன்மயையும் விளக்குகிறது.
இதற்கு பல விளக்கங்கள் நம் முன்னோர்களால் தரப்பட்டுள்ளது..அவற்றை பதிவின் நீளம் கருதி வெளியிட வில்லை என்பதை தெரிவித்துக்கொண்டு..
அரங்கனின் அருள் வேண்டி , ஆழ்வாரின் பாதம் போற்றி அடுத்தப்பாசுரம் காண்போம்.

No comments:

Post a Comment