Tuesday, 2 January 2018

திருவிடைமருதூர்..

சமீபத்திய வகேஷனில், திருவிடைமருதூர்-ராமேஸ்வரம் சென்று வரும் வாய்ப்பு கிட்டியது.

9ம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்ட மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் திருவிடைமருதூரில் மெகா சைஸ் வெள்ளை  நந்தி முன் அமர்ந்து பிரமிப்பைக்கூட்ட திருவாடுதுறை ஆதீனத்திற்கு கட்டுப்பட்ட கோவில்..மாணிக்க வாசகர் மற்றும் சில நாயன்மார்களால்..பாடல் பெற்ற ஸ்தலம்.!

இங்கு சில விஷயங்கள் என்னை ஈர்த்தன...அவை...இதோ ..வந்துட்டேன்..அதற்குதான் !!

மெகா சைஸ் ஜோதிமய லிங்கமான மகாலிங்கேஸ்வரர் முன்பு..அத்தனை அழகுடன்.. ஆபரணங்களுடன் ஒரு பாவை விளக்கு..அப்பப்பா..வைத்த கண்களை..என்னாலேயே அடுத்த இடத்தில் நகர்த்த முடியவில்லை.

இதை வடித்த சிற்பியின் பெயர் கண்ணாரபத்திரபுத்திர பத்தர்.. ! எத்தனைப்பெரிய....பெயர்..அதே பஞ்சதந்திரம் தேவயானி ஸ்டைல்ல படித்தேன். செதுக்கி..அந்தக்கோவிலில் வைத்த நாள் 4-7-1853.

அப்படி என்னங்க ஸ்பெஷல் அந்த விளக்கில்...என உங்களைப்போல எனக்கும் தோன்றியது !
 இருங்க..அந்த ஸ்டோரியும் ...

தஞ்சை சோழர்கள்,பின் பாண்டியர்கள்,நாயக்கர்கள் ,மராட்டிய மன்னர்கள் வசம் இருந்திருப்பதெல்லாம்..ஹிஸ்டரி.!

அப்படி ஒரு மராட்டிய மன்னர் தான் அமர்சிங்,அவருக்கு ஒரு மகன்..பிரதாப் சிங். அவர் வசிச்சது அதே திருவிடைமருதூர் வடக்குவீதியில் இருந்த அரண்மனையில் !

(யம்மா..அப்ப..அந்த ஊர் எப்படி இருந்திருக்கும் என்ற என் கற்பனையை கொஞ்சம் கட்டிவைத்தேன்..!)

அவருக்கு திருமணமாகி யமுனா பாய் சாயேப் & சஹவர்பாய் சாயேப் என்ற இருமனைவிகள் (பல்லிருந்தவர் பக்கோடா சாப்டுருக்கார்..! நாம் ஸ்டோரியைப்படிப்போம் :p)

இவர்களுக்கு குழந்தைகள் இல்லை..நம் இளவரசருக்கு மூன்றாவதாக தன் மாமா பெண்.. அம்மூணு பாய் சாயேப் ந் மேல்...காதல் பொங்கிட கல்யாணம் செய்துக்கொள்ள அண்ணலும்  விரும்ப,அவளும் விரும்ப.. நம் அம்மூணுபாயும் காதலோ காதலாக..எதிர்ப்பும் எக்கசக்கமாக எழுந்திருக்கிறது.
அம்மணி..ச்சே..அம்முணு பாயி.. லட்ச தீபம் ஏற்றுகிறேன்..மகாலிங்கேஸ்வரே என்னை மனதால் வரித்த பிரதாபசிங் மஹாராஜா வுடன் சேர்த்து வையுங்கள் என்று வேண்டிக்கொள்ள..அப்படியே நடந்தேறியிருக்கிறது..திருமணமும்.
செம குஷியான அம்மணி..தன்னையே பாவை விளக்காக வடிக்க விரும்பி..அதனை அப்படியே கல்வெட்டாக்கி ஆவணப்படுத்தியிருக்கிறார்.

அத்தனை அழகுடன்..இன்றும்..சன்னதியில் அவரே கையில் விளக்கேந்தி நிற்பது தத் ரூபமான சிலை..பளிச்சென்று கண்களைக்கட்டிப்போடுகிறது..!

எத்தனை எத்தனை டிசைன்ஸ்ல நகைப்போட்டுருக்காங்கப்பா..அப்ப..அப்படின்னு..சொல்லிட்டு கணவரை தேடினேன்..அவர் எஸ்கேப்..! எப்படித்தான் நம் மைண்ட் வாய்ஸ் கண்டுபிடிக்கறாங்களோ.. !! :p


Tuesday, 31 January 2017

கங்கைக்குமா ரகசியங்கள் !!

#avalvikatanchallege  #Book1

#கங்கைக்கரை_ரகசியங்கள்

இலக்கியம் என்பதை தேர்வு செய்ததும் ஏனோ முதலில் கையிலிருந்த  இந்தப்புத்தகம் தான் எழுத, படிக்க ஈர்த்தது !

கதை, சிறுகதை, நாவல், கவிதைத்தொகுப்புகள் என்றிருக்க..சமூகம் சார்ந்த , எதோ ஒரு ஈர்ப்பை..இன்னமும், இனி வரும் காலங்களிலும் புனிதத்தை தன்பெயரில் கொண்டுள்ள கங்கையைப்பற்றிய புத்தகம் என்றதும் கைகள் தானாக தழுவியது இதனை !

யார் எழுதியது..என்ன மாதிரியான புத்தகம் இது ?

பயணக்கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல்  !   பயணக்கட்டுரைகளில் சில ,
நேராக உள்ளதை உள்ளபடி சொல்லும் கட்டுரைகள், சில  பயணத்தின் போதே பார்த்தது , எண்ணக்கிடங்கில் விளைந்தது என நம் மனதிலும் விதைக்கும் கட்டுரைகள் ! இரண்டாவது ரகம் இந்தப்புத்தகம்.மொத்தமே 112 பக்கங்கள்.
ஆனால் ஒவ்வொரு வரிகளும் பலமுறை படிக்க வைப்பவை. அப்படியென்ன ஸ்பெஷல்..?

மேலே படிங்களேன் !

இந்த கங்கைக்கரை ரகசியங்கள் அப்படித்தான் நம்முள்ளும் பல ரகசியங்கள், ஆசைகள்..வேட்கைகளை விதைக்கின்றன, எழும் எண்ணக்கேள்விகளுக்கு விடைகளையும் அளிக்கின்றன.

காலைப்பொழுது , கடலாக விரிந்திருக்கும் அறுபது அடி ஆழம் கொண்ட நதி, படித்துறைகளில் நாக்குகளாய் நாவாய்கள்
இப்படித்தான் இழுத்துப்போடுகிறது இழைந்தோடும் வர்ணனை. மெல்ல எழுத்தாளரின் கைப்பிடித்து சிறுப்பிள்ளையாய்
அவர் கால்களுடனே..பயணிக்க நாமும் ஆரம்பிக்க , பிரமிப்பை தன் தோள்களில் ஏற்றிக்காட்ட , கைப்பிடித்து தோழமையுடன் எண்ண அலைகளோடு அழைத்துச்செல்கிறார்.

கங்கைக்கரை என்றதுமே நினைவில் வருவது காசி நகரம் தான் !

கிரேக்க், எகிப்திய, பாரசீக நாகரீகங்கள் அழிந்து உருமாறியப்போதும் மாறாத இந்திய நாகரீகத்தின் அந்த தொன்மையினைப் பாதுகாப்பது சக்தியை, ஆற்றலை பிரதிஷ்டை எனும் கருவியாகக்கொண்டு எழுப்பப்பட்ட ஆலயங்கள், அதனால் உருவான நகரங்கள் தான் என்கிறார் ஆசிரியர்.

காசி..சிவனே வாழ்ந்த ஊர், அவரது சூலாயுதத்தின் நேர்க்கோட்டில் அமைந்த ஊர்.. 25,000 கோயில்களைக்கொண்ட ஊர் தற்போது 648 கோயில்களாகவும் மையப்புள்ளிகளாக மூன்று கோயில் கள், வடக்கே ஆம்கார் ஈஸ்வர், மையத்தில் விஸ்வ நாதர் , தெற்கில் கேதார் ஈஸ்வர் என அனைத்துக்கோயில்களுமே ஐந்தடுக்குப்பாதையில் அமைந்திருப்பதாக விளக்குகிறார் ஆசிரியர் அதற்கான மேற்கோள்களுடன் !

ஈஷா யோகமையம் ஏற்பாடு செய்யும் யாத்திரை யில் பங்கேற்பவர், அதன் சிறப்பான செயல்பாடுகளையும், நடு நடுவே தனக்கான சந்தேகங்களை நம் மன மொழியைப்போலவே எதிரொலிக்கும் விதமாக சத்குரு ஜக்கி குரு வாசுதேவ் அவர்களிடன் கேட்டு நமக்குமான பதில்களைப்பெற்றுத்தருகிறார்.

காசி நகரம் கங்கையின் கரையில் உள்ளதையும் , கங்கையின் அழகையும் வாய்ப்புக்கிடைக்கும் போதெல்லாம் ஆசிரியரதுப்பார்வையில் அவர்  மயங்கியதை நமக்கும் கடத்தி மயங்கச்செய்கிற்து அவர் நடை!

எல்லாக்கோவில்களுக்கும் செல்லும் குறுகலான பாதை, அதிகாலையில் செல்லும்போது ஏற்படும் அசௌகர்யங்கள், அங்கே நகரத்தார் கட்டிவைத்த நாட்டார் கோட் சத்தர் , அவர்கள் செய்யும் பால் வழங்கும் திருப்பணி, கட்டிவைத்த கோயில்கள் என முதல் நாள் பார்த்ததில் பகிர்கிறார்.

3 நாட்கள்..இதில் விஸ்வ நாதர் ஆலயம் பற்றிய பகிர்வில் அவரது சிலிர்ப்பையும், அங்கு ஏற்படும் அதிர்வையும் நாமும் உணரமுடிகிறது ! சைக்கிள் ரிக்‌ஷா , படகுக்காரர்களின் தன்மை, அணுகும் விதம் என அணைத்து செல்லும் நடையில் பல காட்கள் எனப்படும் படித்துறைகளிலும் அவருடன் ஏறி நாம் இறங்குகிறோம் !

குளித்து எழுகிறோம் !

காசி , வாரணாசி என்ற அழைக்கப்படுவதில்..பனாரஸ் என்பது தனி நகரம் என்றும் அங்கு பட்டுத்தறி நெய்யும் நெசவாளர்களின் வாழ்வில் வண்ணங்கள் இல்லை எனவும் பதிகிறார்!

அச்சச்சோ என நாமும் இரக்கம் கொள்ள உடனே படகுப்பயணம் , அங்கிருந்து..மணிகர்ணிகா காட் என தாவும் எழுத்துக்களால்..மாறினாலும் கனத்துப்போகிறோம் !

ஒரு நாளைக்கு குறைந்தது 50 இறந்த உடல்கள் (இப்படித்தான் குறிப்பிடுகிறார்..பிணங்கள் என்றில்லை) வர..பாதி எரிந்த உடல்கள் அடியே தள்ளப்பட, இதனை 6 உதவியாளர்களுடன் நிர்வகிக்கும் சத்திய நாராயண சௌத்ரி என்பவரது நிலையையும் குறிப்பிட.. ஆவென திறந்த வாய் மூட மறுக்கின்றன.

பனாரஸ் மன்னர்களுக்கான குளியல் கட்டம் அதில் கங்கை உள் நுழைவதென அனைத்துப்படித்துறைகள் , அதன் கரையில் அமைந்துள்ளக்கோயில்கள் என விவரிக்கப்பட்டு அங்கு ஆங்கிலேயர், முகலாயர் , புத்த மத ஈடுபாட்டினையும் சொல்லி..புத்தருக்கும் காசிக்குமான தொடர்பு, அவர் ஞானம் பெற எப்படி வந்தார் என்ற தகவல்களுடன்

மெதுவாக அவருடன் நாமும் சார நாத் பயணிக்கிறோம்.
அங்குள்ள காட்சியகம் அதிலுள்ள உண்மைகள் , அதைச்சார்ந்த தகவல்கள், புகைப்படங்கள் என ஆசம் ஆசம் என்ச்சொல்லி நம்மை நகர வைக்கின்றன பக்கங்கள் .

சார நாத் அடுத்து புத்த கயா..!

சார நாத்ல் புத்தர் சமணர்களுடன் இணைந்து தவமிருந்து, வெறும் உடல் மட்டும் மெலிந்து ஞானத்திற்காக போதி மரம் தேடி கயா க்கு செல்கிறார். அதை விளக்கும் காரணங்கள்,
செல்லும் வழியில் தம்மை பாதித்த விஷயங்கள் என அனைத்தையும் ரசிக்கும் விதத்தில்  அள்ளித் தருகிறார்.

புத்தகயா அமைந்துள்ளது காசியிலிருந்து 250கிமீ தள்ளியுள்ளது எனவும் அங்கு அமைந்துள்ள புத்த விஹார்கள், புத்த சபாக்கள், அங்கு ஒவ்வொரு விஹார்கள் , வழிபடும் முறை..ஏன் புனிதத்தன்மைப்பெறுகிறது அங்கெல்லாம் புத்தர் என்ன போதித்தார் என தகவல்களைப்படிக்க முடிகிறது!

நாளந்தா.. கிமுவில் ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக்கழகம் வானியல், மருத்துவம், மொழி, ஆன்மீகம் சார்ந்த படிப்புகள்..மாணக்கர்களைக்கொண்டிருந்ததை வரிகளால் விளக்கி , படங்களுடன் நம் மனதில் பதியமாகிறது! 

கில்ஜி படையினரால் அழிக்கப்பட்ட பல்கலைக்கழகம் படிக்கும் போதே கண்ணீர்துளிக்க, நாகரீகமே தெரியாத உலகில்..சிகரமாக வாழ்ந்திருக்கிறோமே என்ற உணர்வை எழுப்புகிறது!

கில்ஜி யின் அழிப்பினால்..தொடர்ந்து பாதிக்கப்பட்ட காசி நகரம், நம் மன்னர்கள் கோட்டைகள், கயா, நாளந்தா என மனம் புரண்டு அழுகிறது படிக்கும் போது !

மீண்டும் பாட்னா வருகை, அங்குள்ள தானியம் சேமிக்கும் கோடவுன், படகு சவாரி, கங்கைக்குளியல் என நாமும் களிக்கிறோம்!

கடைசியாக எதோ மிஸ்ஸிங் போலவே என நாம் நினைக்கும் போதே..கங்கையின் ஆர்த்தியும் கண்களில் காமிக்கப்பட்டு..புத்தகம் நிறைவுறுகிறது !

வழுவழுப்பான கவிதா பப்ளிகேஷனில் வெளிவந்துள்ள இந்தப்புத்தகம் கல்கியில் தொடராக வெளிவந்ததன் தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளது.

மிக அழகான படங்களுக்கும், வர்ணனைகளுக்கும், வரிகளுக்கும், சிந்தனைகளுக்கும் சொந்தக்காரரன அந்த ஆசிரியர், எழுத்தாளர் திரு. ரமணன் அவர்கள்.
Ramanan Vsv அவர்கள்.

இவர் வங்கியில் உயர்பதவி வகித்தவர், சமூகம்,அரசியல், வரலாறு என பல ஜான்ர்களில் விரிவாக  தன் படைப்புக்களை புத்தகங்களாக வெளியிட்டிருக்கிறார்.

அவரது முன்னுரை, பதிப்பாளரது பதிப்புரை..நம் ஆவலைத்தூண்டி உள் தள்ளிட..நிறைவான நெகிழ்வான பயண அனுபவத்தைப்பெறுகிறோம் !

ஆனாலும்..நாமும் பார்க்கவேண்டுமே இந்த இடங்களை என்ற ஆர்வமும் அதிகமாகி, இவரைப்போலவே இணைந்தப்பல விஷயங்களைக்கூச்சமின்றி கேட்டு தெளிவுறவேண்டும் என நினைக்கிறது மனம் !

கங்கைக்கரை ரகசியங்கள் , கங்கை காசியை உணர்ந்துக்கொள்ளவேண்டிய பார்க்கவேண்டிய சக்தி அதிர்வுகளின் ஆணி வேராக அறிய வைக்கும் பயணப்படத்தூண்டும் புத்தகம் .

அகோரிகள், கங்கையில் மிதக்கும் பிணங்கள் பற்றி நாம் டாகுமெண்ட் ரி க்களில் பார்த்தவை இதில் இல்லாமல் போனாலும் கங்கையின் வாசத்தை புராதனத்தை , அறிவை நிறைவைத்தருகிறது !

கங்கைக்கரை ரகசியங்கள் பற்றிய ரகசியத்தை உங்களுடன் பகிர்ந்த நான் நாளை ..வேறொரு புத்தகத்துடன் சந்திக்கிறேன் !

கவிதா பதிப்பகம், ஏப்ரல் 2016 ல் வெளியிட்டுள்ள இப்புத்தகத்தின் விலை 140 ரூ.

Sunday, 13 November 2016

அச்சம் என்பது மடமையடா -

அச்சம் என்பது மடமையடா !

சட்டென்று மாறுது வானிலை..என்ற டைட்டிலோட முதலில்  ஆரம்பிக்கப்பட்ட படம் , god father என்ற படத்தின் தழுவலோடு என்று டைட்டில் கார்டில் சொல்லப்பட , கௌதம், சிம்பு, ரஹ்மான் காம்போவுடன் பாடல்கள் ஆல்ரெடி ஹிட்டடிச்சு எதிர்பார்ப்பை ஏற்றிவிட்டப்படம்.

மஹாராஷ்டிராவில் ஆரம்பம்..நழுவும் காட்சி..டைட்டில், பின்னணியில் சிம்புக்குரலில்..விரிய தாடியுடன், நட்புக்கூட்டணியுடன் மெதுவாக , விரல் வித்தை ஏதுமின்றி நம்மையும் கூலாக பார்க்க வைக்கிறார் கௌதம்.

இளைஞர்களுக்கே உண்டான சின்ன சின்ன எக்ஸைட்மெண்ட்ஸ், லவ் பீலீங்க்ஸ் , பைக் முதல் காதலி என இளமை சரவெடியாக ஆரம்பிக்க..மஞ்சிமாமோகன்(லீலா) அறிமுகம் இளந்தென்றல்.

வீட்டிலேயே காதலிக்கும் பெண்..சின்ன சின்ன அலுக்காத மெலிதான குரலில் கௌதம் ஸ்டைல் வசனங்கள் , கவிதையாக செல்ல, பின்னாடி என் பையனிடம் சொல்ல என்ன இருக்கு , கேங்ஸ்டரோ, ரவுடியுசமோ இல்லாத பையனுக்கு எப்படியும் வாழ்க்கை மாத்திப்போடலாம் எனும் சிம்புகுரல் நமக்குள்ளும் அட எதோ புதுசா இருக்குப்பா என தோன்ற வைக்கிறது.

ராயல் என்பீல்டில் பைக் டூர்.. கவிதையாக நகரும் காட்சிகள்..ராசாளி பாடல் ஸ்வீட் !

கேமிரா காட்சிகளுக்கு ஸ்ருதி சேர்க்க.. கவிதையாகின்றது தள்ளிப்போகாதே பாடல் விரியும் காட்சியமைப்பு புதுமை. க்ளாஸ் மிஸ்டர். கௌதம்.
கேமரா டான் மைக் ஆர்தர் , இந்தியாவையே அழகாக காண்பிக்கிறார். ஜோர்டானில் படமாக்கப்பட்ட .தள்ளிப்போகாதே பாடல் அத்தனை அழகு.

சிம்பு முதல் பாதியில் அடக்கி வாசித்து..க்ளைமேக்ஸ் நெருங்க நெருங்கி..நம்மை நெருக்கிப்பார்க்கிறார்.

இடைவெளி விட்டு நடித்திருப்பதும்..மைனஸாக தெரிந்தாலும்..

தலைப்பிற்கு பொருத்தமாக, பைக்கில் மஞ்சிமாவுடன்..மீண்டும் திரும்பிப்போகிறேன்..எதற்காக இத்தனை நடந்ததுன்னு தெரிஞ்சுக்கப்போறேன் என்ற சீனிலும் , கண்களால் மஞ்சிமாவை விழுங்கும் காட்சியிலும்..சிம்பு நடிப்பில் நம்மையும் வெல்கிறார் இந்த மன்மதன், ஆயிரம் லைக்ஸை ஒன்றாக அள்ளுகிறார்.

மஞ்சிமா..நடிப்பில் பாஸாகி..அழகில் கவர்ந்து விடுத்தும் வந்துப்போகிறார்.

சதீஷ்  ப்ரெண்ட் கேரக்டரில் சிரிப்புடன் குணசித்திரமும் காமித்து இறந்துப்போகிறார்.

பாடகர் பாபா ஷேகல் நெகட்டிவ் போலீஸ் ஆக வர,

ரஹ்மானின் மியூசிக்கல் ட்ரீட் ரெண்டாம் பாதியில் பாடலின்றி பின்னணியில் மட்டுமே வருகிறது.

முதல் பாதியில் அப்பா டி ஆரை நினைவுப்படுத்தும் சிம்பு..இரண்டாம் பாதியில்..ஆக்‌ஷன் லாஜிக் ஓட்டைகளுடன் வேறு முகம் காட்டுகிறார்.

ஆக்‌ஷன் சீக்வென்ஸ் ல்..டப் டப்யென சுட்டுத்தள்ளுவதும் , நல்ல போலீஸே இல்லாததும் , பைக் திருடி, டாக்ஸி திருடி... பாதிப்பாதியில் லாஜிக் இல்லாமல்..காட்சிகள் கண்ணைக்கட்டி.. உட்கார முடியாமல்..நெளிய வைக்கின்றன. இதில் கவனம் செலுத்தியிருக்கலாம் மிஸ்டர் கௌதம். ஈர்க்காமல் விடுவிக்கப்படுகிறோம்.

ரெண்டாம் பாதியில்...க்ளைமேக்ஸ் ,முடிக்கவேண்டுமே என்ற அவசரத்துடன் சீன்ஸ் புது ட்ரெண்ட் , கௌதம் படத்திற்கான நம் எதிர்பார்ப்பை இல்லாமல் செய்கிறது.

அச்சம் என்பது மடமையடா
முதல் பாதி யூத்ஃபுல்..ரெண்டாம் பாதி.. ஏப்ரல் ஃபூல்.!

#சுமி_சினிமாஸ்

Monday, 7 November 2016

அழகிய திருவுரு காட்டும் மாயவன்..அரங்கன் - திருமாலை -20.

தமிழ் இலக்கியத்தில் வைணவர்கள்  பாடிய பாடல்கள்..நாலாயிரத் திவ்யப் பிரபந்தங்கள் எனவும்..பல திருமாலின் திருவுருக்கள் கண்டுப்பாடியவர்கள் ஆழ்வார்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். அவர்களுள் தனிச்சிறப்பு ப் பெற்றவர் தொண்டரடிப்பொடியாழ்வார். இவரைப்பற்றியும்..இவர் எழுதிய திருமாலை..திருப்பள்ளியெழுச்சி பற்றியும் முன்பே எழுதியுள்ளேன்..

அதனைப்பற்றி அறிய..இந்த லிங்கை க்ளிக் செய்யலாம்.

இப்போது சென்ற திருமாலை பாடல்களில் (பாசுரங்களில்) . திருவரங்கத்தின் அழகு.. அதன் மேன்மை, அங்கு பள்ளிக்கொண்டிருக்கும் அரங்கனின் திருப்பெயர்களை சொல்வதன் நன்மை எனக்கூறி வந்தவர் , தான்
அரங்கனைக்கண்டதும் உருகி நின்று விடுவதாகவும் நீங்கள் உருகாமல் தரிசித்துதிரும்பி வருகிறீர்களே..அது எப்படி சாத்தியம் என்று நம்மிடம் கேட்டு...அதற்கான பாசுரத்தையும் தருகிறார்.

இனி பாசுரம் காண்போமா !!

திருமாலை - 20.

பாயு நீ ரரங்கந் தன்னுள் பாம்பணைப்பள்ளி கொண்ட
மாயனார் திரு நன் மார்பும் மரகத வுருவும் தோளும்

தூய தாமரைக் கண்களும் துவரிதழ் பவள வாயும்
ஆயசீர் முடியும் தேசும் அடியரோர்க் ககலாமே !

இனி பாசுர விளக்கம்...அர்த்தத்துடன் :

பாயும் நீர் - பாயக்கூடிய காவிரி நீர்

அரங்கந்தன்னுள் - திருவரங்கம் தன்னுள்..(காவிரி நீர் பாய்ந்து வரும் திருவரங்கத்தில்)

பாம்பு அணை - ஆதி சேஷனாகிய பாம்பின் மேல்

பள்ளிக்கொண்ட மாயனார் -
படுத்துக்கொண்டிருக்கிருக்கும் (உறங்கியப்படி..யோக நித்திரையில் இருக்கும்) ஆச்சர்யப்பட தக்க செயல்களை செய்யும் எம் பெருமான்

திரு நன் மார்பும் - திரு வாகிய மஹாலஷ்மி உறையும் விசாலமான மார்பும்

மரகத உருவும் - பச்சை நிறத்தில் மரகத மணிப்போன்ற நிறத்தில் திரு மேனியும்..உருவும்...

தோளும் - பரந்த தோள்களும்

தூய தாமரைக்கண்களும் - தூய்மையான தாமரைப்போன்ற கண்களும்.

துவரிதழ் - முறுக்கம் பூ போன்ற சிவந்த நிறமுள்ள இதழ்களும்..அதரங்களும்.

பவள வாயும் - பவள போன்ற செந்நிற வாயும்

ஆய சீர் - ஆய- தங்கம் , ஆய - நெடு நாட்களாக உள்ள (ராமரே வழிபட்ட அரங்கனல்லவா !)

தங்கத்தினால் ஆன , சிறந்த திரு முடியும் (க்ரீடமும்)

தேசும் - இவற்றினால் ஆன தேஜஸூடன்..அழகும்

அடியரோர்க்கு - கண்ட அடியவர்கள்...

அகலலாமே - அகலுதல் என்பது இயலுமா - இழக்கத்தகுமோ..!

இனி விளக்கம் :

திருவரங்கம் இரு புறமும் காவிரி நதியால் சூழப்பட்டது. ஆகவே காவிரி நீர் பெருகி சூழ்ந்துக்கொள்ளும் திருவரங்கத்தில் , ஆதி சேஷன் என்கிற பாம்பின் மேல் படுத்துக்கொண்டு கண் மூடி தூங்கிறார் போல யோக நித்திரையில் இருந்தப்படியே அனைத்து இயக்கங்களுக்கும் காரணமாக உள்ள அரங்கனின் ( பல ஆச்சர்யப்படத்தகுந்த செயல்களை செய்வதால் மாயனார் என்கிறார் ஆழ்வார்) ,

மஹாலஷ்மி வசிப்பதால்..சிவந்த நல் மார்பும் (மஹாலஷ்மி அமர்ந்து கால்களை வைத்திருப்பதால் சிவந்த மார்பு , அவள் சூடிக்களைந்த மாலைகள்..மலர்களால் சிவந்த மார்பு, அவளுக்கிட்ட சந்தன குங்குமங்களால் சிவந்த மார்பு , நல் - எப்போதும் எல்லோருக்கும் நன்மையை மட்டுமே செய்ய அருள் புரிய எண்ணும், மார்பு)/

மரகத மணி போன்ற பச்சை நிறத்தினால் ஆன முழு திரு மேனியும் ,

அரங்களின் திருத்தோள்களும்

தாமரை குளிர்ச்சியைத்தரும் , அத்தகைய குளிர்ச்சியான பார்வையை தன்னை தரிசிக்க வரும் அடியவர்களிடம் செலுத்திடும்..அழகிய சிவந்த தாமரையை ஒத்த கண்களும்

முறுக்கம் பூ..சிவப்பாக இருக்கும்..அதனைப்போன்று சிவந்த இதழ்களும்..அதரங்களும்

பவளத்தினை போன்ற செந்நிற வாயும்

தங்கத்தினால் செய்யப்பட்ட , மிக பழைய  திருமுடியும்(கிரீடமும்) கொண்டு

இவற்றால்..வரும் தேஜஸூடன் அழகுடன் தன்னை உணர்ந்து , அறிந்துக்கொண்டு காண வரும் அடியவர்களுக்கு அருள்கிறார் அரங்கன்.

இவரது முழு அழகையும் , ஒவ்வொரு அங்கமாக திகழும் அழகையும் கண்ட கண்கள் எப்படி அவரை விட்டு அகலும்.

என்னால் அகல முடியவில்லையே. நீங்கள் எவ்விதம் தரிசித்தவுடன் நகர்ந்து விடுகிறீர்கள் என்று கேட்கிறார் தொண்டரடிப்பொடியாழ்வார் இப்பாசுரத்தில்.

இதில் , தனக்கு அவரை விட்டு அகலாத முறுக்குவாதம் ஏற்பட்டிருப்பதாகவும்..
ஆழ்வார்களால்  திருமாலின் திருவுருவைக்காணாமல்..பிரிந்திருந்தால் பிரிவை ஏற்க முடியாது என்கிறார்.

அழகான திருவரங்கம்.

பாயும் நீர்..என்பதை..பொன்னி நதி பாய்வதோடு அல்லாமல்..

ஆழ்வார்களும் , பின் வந்த ஆச்சார்யர்களும் புகலிடமாக வந்துப்பாய்ந்த ஊர் திருவரங்கம் என்கிறார்.

ராமர் உறங்கும் அழகே அத்தனை அற்புதம் அவர் பூஜித்த அரங்கன் கண் வளரும் அழகு அதி அற்புதம். அந்த அழகுடன் அவர் உலக சிருஷ்டி முதல் அத்தனை ஆச்சர்யமிக்க செயல்களையும் செய்கிறார்.

அதிலும்..ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளின் பார்வை.. நம்மைப்பார்பது போலவும் இருக்குமாம்..தென்னிலங்கையில் உள்ள விபீடணுக்கு அருள் செய்வதுப்போலவும் இருக்குமாம்.

கண்களை மூடியும்..திறந்துமான அருட்பார்வை.!

தன் அழகை ஆபரணங்களால் சற்றே மறைத்தப்படியே அருள் பாலித்தாலும் அதனையும் மீறி அவர் அழகால்..ஆழ்வார்கள்..அடியவர்கள் மயங்கிக்கிறங்கிப்போய் அவரை விட்டு அகல இயலாமல் ... கலங்கி நிற்கின்றனர்.

தான்..தனது என்ற எண்ணங்களுடன் சராசரி வாழ்க்கையில் வாழும் மனிதர்களே.. உங்களால் எப்படி அரங்கனின் அழகைக்கண்டு பிரிந்து வர முடிகிறது.என்னால் இயல வில்லையே என்றே இப்பாசுரத்தின் மூலம் தொண்டரடிப்பொடியாழ்வார் நமக்கெல்லாம் தெரிவிக்கிறார்.

இனி ..ஆழ்வாரின் பாதம் பணிந்து..அடுத்தப்பாசுரம் காண்போம்...!

Sunday, 30 October 2016

கார்த்தியின் காஷ்மோரா ...

காஷ்மோரா...

ரௌத்திரம், இ.ஆ.பாலகுமாரா தந்த கோகுல் இயக்கிய , கற்பனை , காமெடி..கலந்த படம் காஷ்மோரா.

தெய்வகுமாரி , தென்கிழக்கு ஆசியா..செம த்ரில்... சாபத்தில் உறையும் துர் ஆவி கழுகு, புறா என ஆரம்பமே அட என ஆர்வத்தை விளைக்க..

காஷ்மோரா என்றப்பெயருடன் கார்த்தி அறிமுகம் கலக்கல்..தூள்..!

பேயோட்டும்(நவீன) சாமியாக ஹைடெக் புத்திசாலி கார்த்தி..அப்பா சாமியாக விவேக், பாட்டி,தங்கையாக மதுமிதா என இறங்கும் கூட்டம் அதகளம் செய்கின்றனர்..ப்ரேமிற்கு ப்ரேம்..!

ப்ளாக் மேஜிக் கதையில் அண்டர் ப்ளே ஆகும் ப்ளாக் காமெடி அள்ளுகிறது.

செய்வினைகள் ..செயப்பாட்டுவினைகள்  என விளக்கும் காட்சிகள் மாஸ் !

கார்த்தி...காஷ்மோ..என வர ஆசிரமம்..எப்படி பிஸினஸ் ஆகிறது என கிழிகிழின்னு கிழிச்சுட்டீங்க..கோகுல் ஜி..சூப்பர் சூப்பர்ஜி!

சரத் லோகேஷ் மினிஸ்ட்ராகவும் ,அவருக்கு கைட் செய்யும் சாமியாராக மதுசூதன் என கொலை ப்ளானிங்.. நம்பிக்கை துரோகத்திற்கு தொங்கவிடுவோம் என ஆரம்பமாகும் காட்சிகள், இதில் கார்த்தி சிக்கி என்ன ஆவாரோ எனும் நினைக்கும் போதே...

கமிஷனரையே காலில் விழவைப்பதும்..வாய் சாதூர்யத்தால் மினிஸ்டரை அசத்துவதுமாக கார்த்தி& விவேக் டைமிங் கமெடியுடன்..வயிறு வலிக்குது பாஸ் !! :D

கார்த்தி ஒவ்வொரு ப்ரேமிலும்..அசத்துகிறார் !

கூலாக பயத்தையும் கெத்தையும் காண்பித்து..காமெடியில் பட்டையைகிளப்புகிறார்.

இண்டர்வெல் க்கு முன்பான காட்சிகள்.ரத்தனமாதேவி மஹாலில் மாட்டிய..கார்த்தியின் ஆசம் பர்பாமென்ஸ்..ஆயிரம் லைக்ஸ் !! தியேட்டரே குலுங்குதே !

அப்பாவி..பேயை பார்க்க துடிக்கும் ஆராய்ச்சி மாணவியாக ஸ்ரீதிவ்யா..அசடென நினைத்தவர்..அறிவாளியாகத்தெரிய.. நீ வந்த சரி..என்னையும் ஏன் பேய் கொண்டு வந்ததுன்னு எனும் போது தனித்து தெரிகிறார்.

செகண்ட் ஹாஃப்ல் நயன்..ரசிகர்கள் விஸிலுடன் வர , ராஜ் நாயக் ஆக கார்த்தி.. 30 நிமிடம்தான் பீரியர் கதை..ஆனாலும் உள்ளே இழுத்து நம்மையும் போடும்..நடிப்பு..காஸ்டியூம்ஸ்..ஸ்டண்ட்ஸ்..ராஜீவன் கலை அமைப்பு என அத்தனையும் அசத்துகின்றன.

நயன்தாரா.. காதலனுடன் தப்பிச்செல்ல முனைய..கண்ணுக்கெதிரே காதலன், தம்பி, அப்பா என அனைவரும் சாக..கண்களில் தீம்பிழம்பு தெறிக்க, அழகு பதுமை அறிவு பதுமையாகவும் வாள் சுழற்றுகிறார்.இன்னமும் வந்துருக்கலாமோ என்றக்குறையை..க்ளைமேக்ஸில் தீர்த்துவைக்கிறார்.

சூப்பர்சூப்பர்ஜி அரண்மனையில் புரோக்கராக..க்ளோஸா வாங்க பாஸ்..ஃபாலோ பண்ணுங்க ஜி..எனும் காமெடி ஜீராவில் கரைந்துப்போகிறோம்.

என்ன காரணம்..சாபத்திலிருந்து எப்படி விடுவிக்கப்படுகிறான்..ராஜ் நாயக் , ரத்தினமா தேவி வென்றாளா ?
ரோகிணியில் பிறந்த குடும்பம் தப்பித்ததா போன்ற கேள்வி முடிச்சுக்களை..அழகாக திரைக்கதையில் அவிழ்த்து..முழு காமெடி , ஆவி கலந்த படமாக கார்த்தியின் ராஜ்ஜியத்தில் படைத்திருக்கும் கோகுலுக்கு சுமிசினிமாஸ்ன் பாராட்டுகள் !

(ரெட்டை வசனங்கள்..டாஸ்மாக், குத்துப்பாட்டு, ஆபாசமின்றி படம் தந்தமைக்கும்!)

சந்தோஷ் நாராயணன் தீம் மியூஸிக் , பேக் கிரவுண்ட் ஸ்கோரில் செம ஸ்கோர். கலந்திருக்கிறது இசை படத்துடன்.

ஓயா..ஓயா.. திக் திக் பாடல்கள் நினைவில் நிற்கின்றன.ஜெகதம்பா...இணைந்து டுகிறது ப்ரேம்களில்..!

காஸ்டியூம் , போஸ்ட் ப்ரடக்‌ஷனில் CG effects ,  ஓம் ப்ரகாஷின் கேமரா படிகளில்..வளைவுகளில் வளைந்து அந்தந்த காலத்திற்கு நம்மைக்கொண்டு செல்கின்றன.
(3D face scan என்ற தொழிற் நுட்பமும் , 3D omni directional camera வும் முதன்முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளதாம்!)

முதல் பாதியில் சில காட்சிகள் ரிபீடட் ஆக தோன்றுவதும், தலை மட்டும் தனியாக பேசும் ராஜ் நாயக் ம் கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்துவதை தவிர்த்திருந்தால்..முழுவதும் ஆடியன்ஸ் கவனத்தை ஈர்த்திருப்பான் காஷ்மோரா !

இறுதி வரையிலும் அதே காமெடி பீலை தக்க வைத்து , முழு எண்டெர்டெயின்மெண்ட் படமாக தந்த காஷ்மோரா குழுவிற்கும் ,

கார்த்தியின் இணையில்லா நடிப்பிற்காகவும் பார்க்கலாம் குடும்பத்துடன் தியேட்டரில் !

காஷ்மோரா..காமெடி கிங் :)