Sunday, 13 November 2016

அச்சம் என்பது மடமையடா -

அச்சம் என்பது மடமையடா !

சட்டென்று மாறுது வானிலை..என்ற டைட்டிலோட முதலில்  ஆரம்பிக்கப்பட்ட படம் , god father என்ற படத்தின் தழுவலோடு என்று டைட்டில் கார்டில் சொல்லப்பட , கௌதம், சிம்பு, ரஹ்மான் காம்போவுடன் பாடல்கள் ஆல்ரெடி ஹிட்டடிச்சு எதிர்பார்ப்பை ஏற்றிவிட்டப்படம்.

மஹாராஷ்டிராவில் ஆரம்பம்..நழுவும் காட்சி..டைட்டில், பின்னணியில் சிம்புக்குரலில்..விரிய தாடியுடன், நட்புக்கூட்டணியுடன் மெதுவாக , விரல் வித்தை ஏதுமின்றி நம்மையும் கூலாக பார்க்க வைக்கிறார் கௌதம்.

இளைஞர்களுக்கே உண்டான சின்ன சின்ன எக்ஸைட்மெண்ட்ஸ், லவ் பீலீங்க்ஸ் , பைக் முதல் காதலி என இளமை சரவெடியாக ஆரம்பிக்க..மஞ்சிமாமோகன்(லீலா) அறிமுகம் இளந்தென்றல்.

வீட்டிலேயே காதலிக்கும் பெண்..சின்ன சின்ன அலுக்காத மெலிதான குரலில் கௌதம் ஸ்டைல் வசனங்கள் , கவிதையாக செல்ல, பின்னாடி என் பையனிடம் சொல்ல என்ன இருக்கு , கேங்ஸ்டரோ, ரவுடியுசமோ இல்லாத பையனுக்கு எப்படியும் வாழ்க்கை மாத்திப்போடலாம் எனும் சிம்புகுரல் நமக்குள்ளும் அட எதோ புதுசா இருக்குப்பா என தோன்ற வைக்கிறது.

ராயல் என்பீல்டில் பைக் டூர்.. கவிதையாக நகரும் காட்சிகள்..ராசாளி பாடல் ஸ்வீட் !

கேமிரா காட்சிகளுக்கு ஸ்ருதி சேர்க்க.. கவிதையாகின்றது தள்ளிப்போகாதே பாடல் விரியும் காட்சியமைப்பு புதுமை. க்ளாஸ் மிஸ்டர். கௌதம்.
கேமரா டான் மைக் ஆர்தர் , இந்தியாவையே அழகாக காண்பிக்கிறார். ஜோர்டானில் படமாக்கப்பட்ட .தள்ளிப்போகாதே பாடல் அத்தனை அழகு.

சிம்பு முதல் பாதியில் அடக்கி வாசித்து..க்ளைமேக்ஸ் நெருங்க நெருங்கி..நம்மை நெருக்கிப்பார்க்கிறார்.

இடைவெளி விட்டு நடித்திருப்பதும்..மைனஸாக தெரிந்தாலும்..

தலைப்பிற்கு பொருத்தமாக, பைக்கில் மஞ்சிமாவுடன்..மீண்டும் திரும்பிப்போகிறேன்..எதற்காக இத்தனை நடந்ததுன்னு தெரிஞ்சுக்கப்போறேன் என்ற சீனிலும் , கண்களால் மஞ்சிமாவை விழுங்கும் காட்சியிலும்..சிம்பு நடிப்பில் நம்மையும் வெல்கிறார் இந்த மன்மதன், ஆயிரம் லைக்ஸை ஒன்றாக அள்ளுகிறார்.

மஞ்சிமா..நடிப்பில் பாஸாகி..அழகில் கவர்ந்து விடுத்தும் வந்துப்போகிறார்.

சதீஷ்  ப்ரெண்ட் கேரக்டரில் சிரிப்புடன் குணசித்திரமும் காமித்து இறந்துப்போகிறார்.

பாடகர் பாபா ஷேகல் நெகட்டிவ் போலீஸ் ஆக வர,

ரஹ்மானின் மியூசிக்கல் ட்ரீட் ரெண்டாம் பாதியில் பாடலின்றி பின்னணியில் மட்டுமே வருகிறது.

முதல் பாதியில் அப்பா டி ஆரை நினைவுப்படுத்தும் சிம்பு..இரண்டாம் பாதியில்..ஆக்‌ஷன் லாஜிக் ஓட்டைகளுடன் வேறு முகம் காட்டுகிறார்.

ஆக்‌ஷன் சீக்வென்ஸ் ல்..டப் டப்யென சுட்டுத்தள்ளுவதும் , நல்ல போலீஸே இல்லாததும் , பைக் திருடி, டாக்ஸி திருடி... பாதிப்பாதியில் லாஜிக் இல்லாமல்..காட்சிகள் கண்ணைக்கட்டி.. உட்கார முடியாமல்..நெளிய வைக்கின்றன. இதில் கவனம் செலுத்தியிருக்கலாம் மிஸ்டர் கௌதம். ஈர்க்காமல் விடுவிக்கப்படுகிறோம்.

ரெண்டாம் பாதியில்...க்ளைமேக்ஸ் ,முடிக்கவேண்டுமே என்ற அவசரத்துடன் சீன்ஸ் புது ட்ரெண்ட் , கௌதம் படத்திற்கான நம் எதிர்பார்ப்பை இல்லாமல் செய்கிறது.

அச்சம் என்பது மடமையடா
முதல் பாதி யூத்ஃபுல்..ரெண்டாம் பாதி.. ஏப்ரல் ஃபூல்.!

#சுமி_சினிமாஸ்

Monday, 7 November 2016

அழகிய திருவுரு காட்டும் மாயவன்..அரங்கன் - திருமாலை -20.

தமிழ் இலக்கியத்தில் வைணவர்கள்  பாடிய பாடல்கள்..நாலாயிரத் திவ்யப் பிரபந்தங்கள் எனவும்..பல திருமாலின் திருவுருக்கள் கண்டுப்பாடியவர்கள் ஆழ்வார்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். அவர்களுள் தனிச்சிறப்பு ப் பெற்றவர் தொண்டரடிப்பொடியாழ்வார். இவரைப்பற்றியும்..இவர் எழுதிய திருமாலை..திருப்பள்ளியெழுச்சி பற்றியும் முன்பே எழுதியுள்ளேன்..

அதனைப்பற்றி அறிய..இந்த லிங்கை க்ளிக் செய்யலாம்.

இப்போது சென்ற திருமாலை பாடல்களில் (பாசுரங்களில்) . திருவரங்கத்தின் அழகு.. அதன் மேன்மை, அங்கு பள்ளிக்கொண்டிருக்கும் அரங்கனின் திருப்பெயர்களை சொல்வதன் நன்மை எனக்கூறி வந்தவர் , தான்
அரங்கனைக்கண்டதும் உருகி நின்று விடுவதாகவும் நீங்கள் உருகாமல் தரிசித்துதிரும்பி வருகிறீர்களே..அது எப்படி சாத்தியம் என்று நம்மிடம் கேட்டு...அதற்கான பாசுரத்தையும் தருகிறார்.

இனி பாசுரம் காண்போமா !!

திருமாலை - 20.

பாயு நீ ரரங்கந் தன்னுள் பாம்பணைப்பள்ளி கொண்ட
மாயனார் திரு நன் மார்பும் மரகத வுருவும் தோளும்

தூய தாமரைக் கண்களும் துவரிதழ் பவள வாயும்
ஆயசீர் முடியும் தேசும் அடியரோர்க் ககலாமே !

இனி பாசுர விளக்கம்...அர்த்தத்துடன் :

பாயும் நீர் - பாயக்கூடிய காவிரி நீர்

அரங்கந்தன்னுள் - திருவரங்கம் தன்னுள்..(காவிரி நீர் பாய்ந்து வரும் திருவரங்கத்தில்)

பாம்பு அணை - ஆதி சேஷனாகிய பாம்பின் மேல்

பள்ளிக்கொண்ட மாயனார் -
படுத்துக்கொண்டிருக்கிருக்கும் (உறங்கியப்படி..யோக நித்திரையில் இருக்கும்) ஆச்சர்யப்பட தக்க செயல்களை செய்யும் எம் பெருமான்

திரு நன் மார்பும் - திரு வாகிய மஹாலஷ்மி உறையும் விசாலமான மார்பும்

மரகத உருவும் - பச்சை நிறத்தில் மரகத மணிப்போன்ற நிறத்தில் திரு மேனியும்..உருவும்...

தோளும் - பரந்த தோள்களும்

தூய தாமரைக்கண்களும் - தூய்மையான தாமரைப்போன்ற கண்களும்.

துவரிதழ் - முறுக்கம் பூ போன்ற சிவந்த நிறமுள்ள இதழ்களும்..அதரங்களும்.

பவள வாயும் - பவள போன்ற செந்நிற வாயும்

ஆய சீர் - ஆய- தங்கம் , ஆய - நெடு நாட்களாக உள்ள (ராமரே வழிபட்ட அரங்கனல்லவா !)

தங்கத்தினால் ஆன , சிறந்த திரு முடியும் (க்ரீடமும்)

தேசும் - இவற்றினால் ஆன தேஜஸூடன்..அழகும்

அடியரோர்க்கு - கண்ட அடியவர்கள்...

அகலலாமே - அகலுதல் என்பது இயலுமா - இழக்கத்தகுமோ..!

இனி விளக்கம் :

திருவரங்கம் இரு புறமும் காவிரி நதியால் சூழப்பட்டது. ஆகவே காவிரி நீர் பெருகி சூழ்ந்துக்கொள்ளும் திருவரங்கத்தில் , ஆதி சேஷன் என்கிற பாம்பின் மேல் படுத்துக்கொண்டு கண் மூடி தூங்கிறார் போல யோக நித்திரையில் இருந்தப்படியே அனைத்து இயக்கங்களுக்கும் காரணமாக உள்ள அரங்கனின் ( பல ஆச்சர்யப்படத்தகுந்த செயல்களை செய்வதால் மாயனார் என்கிறார் ஆழ்வார்) ,

மஹாலஷ்மி வசிப்பதால்..சிவந்த நல் மார்பும் (மஹாலஷ்மி அமர்ந்து கால்களை வைத்திருப்பதால் சிவந்த மார்பு , அவள் சூடிக்களைந்த மாலைகள்..மலர்களால் சிவந்த மார்பு, அவளுக்கிட்ட சந்தன குங்குமங்களால் சிவந்த மார்பு , நல் - எப்போதும் எல்லோருக்கும் நன்மையை மட்டுமே செய்ய அருள் புரிய எண்ணும், மார்பு)/

மரகத மணி போன்ற பச்சை நிறத்தினால் ஆன முழு திரு மேனியும் ,

அரங்களின் திருத்தோள்களும்

தாமரை குளிர்ச்சியைத்தரும் , அத்தகைய குளிர்ச்சியான பார்வையை தன்னை தரிசிக்க வரும் அடியவர்களிடம் செலுத்திடும்..அழகிய சிவந்த தாமரையை ஒத்த கண்களும்

முறுக்கம் பூ..சிவப்பாக இருக்கும்..அதனைப்போன்று சிவந்த இதழ்களும்..அதரங்களும்

பவளத்தினை போன்ற செந்நிற வாயும்

தங்கத்தினால் செய்யப்பட்ட , மிக பழைய  திருமுடியும்(கிரீடமும்) கொண்டு

இவற்றால்..வரும் தேஜஸூடன் அழகுடன் தன்னை உணர்ந்து , அறிந்துக்கொண்டு காண வரும் அடியவர்களுக்கு அருள்கிறார் அரங்கன்.

இவரது முழு அழகையும் , ஒவ்வொரு அங்கமாக திகழும் அழகையும் கண்ட கண்கள் எப்படி அவரை விட்டு அகலும்.

என்னால் அகல முடியவில்லையே. நீங்கள் எவ்விதம் தரிசித்தவுடன் நகர்ந்து விடுகிறீர்கள் என்று கேட்கிறார் தொண்டரடிப்பொடியாழ்வார் இப்பாசுரத்தில்.

இதில் , தனக்கு அவரை விட்டு அகலாத முறுக்குவாதம் ஏற்பட்டிருப்பதாகவும்..
ஆழ்வார்களால்  திருமாலின் திருவுருவைக்காணாமல்..பிரிந்திருந்தால் பிரிவை ஏற்க முடியாது என்கிறார்.

அழகான திருவரங்கம்.

பாயும் நீர்..என்பதை..பொன்னி நதி பாய்வதோடு அல்லாமல்..

ஆழ்வார்களும் , பின் வந்த ஆச்சார்யர்களும் புகலிடமாக வந்துப்பாய்ந்த ஊர் திருவரங்கம் என்கிறார்.

ராமர் உறங்கும் அழகே அத்தனை அற்புதம் அவர் பூஜித்த அரங்கன் கண் வளரும் அழகு அதி அற்புதம். அந்த அழகுடன் அவர் உலக சிருஷ்டி முதல் அத்தனை ஆச்சர்யமிக்க செயல்களையும் செய்கிறார்.

அதிலும்..ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளின் பார்வை.. நம்மைப்பார்பது போலவும் இருக்குமாம்..தென்னிலங்கையில் உள்ள விபீடணுக்கு அருள் செய்வதுப்போலவும் இருக்குமாம்.

கண்களை மூடியும்..திறந்துமான அருட்பார்வை.!

தன் அழகை ஆபரணங்களால் சற்றே மறைத்தப்படியே அருள் பாலித்தாலும் அதனையும் மீறி அவர் அழகால்..ஆழ்வார்கள்..அடியவர்கள் மயங்கிக்கிறங்கிப்போய் அவரை விட்டு அகல இயலாமல் ... கலங்கி நிற்கின்றனர்.

தான்..தனது என்ற எண்ணங்களுடன் சராசரி வாழ்க்கையில் வாழும் மனிதர்களே.. உங்களால் எப்படி அரங்கனின் அழகைக்கண்டு பிரிந்து வர முடிகிறது.என்னால் இயல வில்லையே என்றே இப்பாசுரத்தின் மூலம் தொண்டரடிப்பொடியாழ்வார் நமக்கெல்லாம் தெரிவிக்கிறார்.

இனி ..ஆழ்வாரின் பாதம் பணிந்து..அடுத்தப்பாசுரம் காண்போம்...!

Sunday, 30 October 2016

கார்த்தியின் காஷ்மோரா ...

காஷ்மோரா...

ரௌத்திரம், இ.ஆ.பாலகுமாரா தந்த கோகுல் இயக்கிய , கற்பனை , காமெடி..கலந்த படம் காஷ்மோரா.

தெய்வகுமாரி , தென்கிழக்கு ஆசியா..செம த்ரில்... சாபத்தில் உறையும் துர் ஆவி கழுகு, புறா என ஆரம்பமே அட என ஆர்வத்தை விளைக்க..

காஷ்மோரா என்றப்பெயருடன் கார்த்தி அறிமுகம் கலக்கல்..தூள்..!

பேயோட்டும்(நவீன) சாமியாக ஹைடெக் புத்திசாலி கார்த்தி..அப்பா சாமியாக விவேக், பாட்டி,தங்கையாக மதுமிதா என இறங்கும் கூட்டம் அதகளம் செய்கின்றனர்..ப்ரேமிற்கு ப்ரேம்..!

ப்ளாக் மேஜிக் கதையில் அண்டர் ப்ளே ஆகும் ப்ளாக் காமெடி அள்ளுகிறது.

செய்வினைகள் ..செயப்பாட்டுவினைகள்  என விளக்கும் காட்சிகள் மாஸ் !

கார்த்தி...காஷ்மோ..என வர ஆசிரமம்..எப்படி பிஸினஸ் ஆகிறது என கிழிகிழின்னு கிழிச்சுட்டீங்க..கோகுல் ஜி..சூப்பர் சூப்பர்ஜி!

சரத் லோகேஷ் மினிஸ்ட்ராகவும் ,அவருக்கு கைட் செய்யும் சாமியாராக மதுசூதன் என கொலை ப்ளானிங்.. நம்பிக்கை துரோகத்திற்கு தொங்கவிடுவோம் என ஆரம்பமாகும் காட்சிகள், இதில் கார்த்தி சிக்கி என்ன ஆவாரோ எனும் நினைக்கும் போதே...

கமிஷனரையே காலில் விழவைப்பதும்..வாய் சாதூர்யத்தால் மினிஸ்டரை அசத்துவதுமாக கார்த்தி& விவேக் டைமிங் கமெடியுடன்..வயிறு வலிக்குது பாஸ் !! :D

கார்த்தி ஒவ்வொரு ப்ரேமிலும்..அசத்துகிறார் !

கூலாக பயத்தையும் கெத்தையும் காண்பித்து..காமெடியில் பட்டையைகிளப்புகிறார்.

இண்டர்வெல் க்கு முன்பான காட்சிகள்.ரத்தனமாதேவி மஹாலில் மாட்டிய..கார்த்தியின் ஆசம் பர்பாமென்ஸ்..ஆயிரம் லைக்ஸ் !! தியேட்டரே குலுங்குதே !

அப்பாவி..பேயை பார்க்க துடிக்கும் ஆராய்ச்சி மாணவியாக ஸ்ரீதிவ்யா..அசடென நினைத்தவர்..அறிவாளியாகத்தெரிய.. நீ வந்த சரி..என்னையும் ஏன் பேய் கொண்டு வந்ததுன்னு எனும் போது தனித்து தெரிகிறார்.

செகண்ட் ஹாஃப்ல் நயன்..ரசிகர்கள் விஸிலுடன் வர , ராஜ் நாயக் ஆக கார்த்தி.. 30 நிமிடம்தான் பீரியர் கதை..ஆனாலும் உள்ளே இழுத்து நம்மையும் போடும்..நடிப்பு..காஸ்டியூம்ஸ்..ஸ்டண்ட்ஸ்..ராஜீவன் கலை அமைப்பு என அத்தனையும் அசத்துகின்றன.

நயன்தாரா.. காதலனுடன் தப்பிச்செல்ல முனைய..கண்ணுக்கெதிரே காதலன், தம்பி, அப்பா என அனைவரும் சாக..கண்களில் தீம்பிழம்பு தெறிக்க, அழகு பதுமை அறிவு பதுமையாகவும் வாள் சுழற்றுகிறார்.இன்னமும் வந்துருக்கலாமோ என்றக்குறையை..க்ளைமேக்ஸில் தீர்த்துவைக்கிறார்.

சூப்பர்சூப்பர்ஜி அரண்மனையில் புரோக்கராக..க்ளோஸா வாங்க பாஸ்..ஃபாலோ பண்ணுங்க ஜி..எனும் காமெடி ஜீராவில் கரைந்துப்போகிறோம்.

என்ன காரணம்..சாபத்திலிருந்து எப்படி விடுவிக்கப்படுகிறான்..ராஜ் நாயக் , ரத்தினமா தேவி வென்றாளா ?
ரோகிணியில் பிறந்த குடும்பம் தப்பித்ததா போன்ற கேள்வி முடிச்சுக்களை..அழகாக திரைக்கதையில் அவிழ்த்து..முழு காமெடி , ஆவி கலந்த படமாக கார்த்தியின் ராஜ்ஜியத்தில் படைத்திருக்கும் கோகுலுக்கு சுமிசினிமாஸ்ன் பாராட்டுகள் !

(ரெட்டை வசனங்கள்..டாஸ்மாக், குத்துப்பாட்டு, ஆபாசமின்றி படம் தந்தமைக்கும்!)

சந்தோஷ் நாராயணன் தீம் மியூஸிக் , பேக் கிரவுண்ட் ஸ்கோரில் செம ஸ்கோர். கலந்திருக்கிறது இசை படத்துடன்.

ஓயா..ஓயா.. திக் திக் பாடல்கள் நினைவில் நிற்கின்றன.ஜெகதம்பா...இணைந்து டுகிறது ப்ரேம்களில்..!

காஸ்டியூம் , போஸ்ட் ப்ரடக்‌ஷனில் CG effects ,  ஓம் ப்ரகாஷின் கேமரா படிகளில்..வளைவுகளில் வளைந்து அந்தந்த காலத்திற்கு நம்மைக்கொண்டு செல்கின்றன.
(3D face scan என்ற தொழிற் நுட்பமும் , 3D omni directional camera வும் முதன்முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளதாம்!)

முதல் பாதியில் சில காட்சிகள் ரிபீடட் ஆக தோன்றுவதும், தலை மட்டும் தனியாக பேசும் ராஜ் நாயக் ம் கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்துவதை தவிர்த்திருந்தால்..முழுவதும் ஆடியன்ஸ் கவனத்தை ஈர்த்திருப்பான் காஷ்மோரா !

இறுதி வரையிலும் அதே காமெடி பீலை தக்க வைத்து , முழு எண்டெர்டெயின்மெண்ட் படமாக தந்த காஷ்மோரா குழுவிற்கும் ,

கார்த்தியின் இணையில்லா நடிப்பிற்காகவும் பார்க்கலாம் குடும்பத்துடன் தியேட்டரில் !

காஷ்மோரா..காமெடி கிங் :)

Thursday, 4 August 2016

அப்பாலரங்கர்..மனம் மட்டும் என்றும் அரங்கனிடத்திலே..

சமீப வருடங்களாக "இவரை" பார்க்காமல்..செல்வது என்பது மிகப்பெரிய குறை எனக்கு.

பார்த்துவிட்டு சென்றாலோ..மனம் அன்று ஆனந்தக்கூத்தாடினாலும்..அவர் அழகிலேயே பித்தாகி லயித்துப்போகும்.

"இவர்" மயக்கத்தில் இருப்போர் பலர்.

யாரிவர் ?!

மிக நெருக்கமாக , அழகாக சலசலத்து ஓடும் காவிரியின் கரையில் , நதியை ஆசீர்வதித்து பாதம் நீட்டி, ஆதிசேஷன் படுக்கையில் ..தலையில் குடையாக பிடிக்க, உலகங்களை சுருட்டி தலையணையாகக்கொண்டு சற்றே திரு முகத்தை நிமிர்த்தி வருபவரைக் கண்டு அவர்களுக்கு காட்சி தர.. யோக நித்திரையில் இருக்கும்..அப்பாலரங்கர் தான் "இவர்".

மிகச்சிறிய ஊர் தான் கோவிலடி.(திருப்பேர்)

கல்லணை- திருவையாறு மார்க்கத்தில்..திருச்சியிலிருந்து 30 வது கிலோமீட்டரில் உள்ளது.

பஞ்ச ரங்கம் என்பவை..மிக விசேஷம்.

பிரிந்து பாயும் இரு காவிரிக்கு மத்தியில் உள்ள  தலங்களாகும்.

ஆதி ரங்கம் - ஸ்ரீரங்கப்பட்டினம்(மைசூர்),
அப்பால ரங்கம் - திருப்பேர்நகர் (கோவிலடி),
மத்திய ரங்கம் –ஸ்ரீரங்கம் (திருச்சி),
சதுர்த்த ரங்கம் – திருக்குடந்தை சாரங்கபாணி ஸ்தலம் (கும்பகோணம்),
பஞ்ச ரங்கம்(ஐந்தாவது ரங்கம்) - திருஇந்தளூர் பரிமள ரங்கம் (மயிலாடுதுறை).
ஆகிய தலங்களை தரிசித்தால் 108 திருத்தலங்களை தரிசித்த பலன் உண்டு.

அமர்ந்த..நின்ற திருக்கோலத்தில் உள்ள அர்ச்சாவதார திருமால் மூர்த்திகளை விட தனி கவரும் அழகு யோக நித்தரையாக மாயனாகி நம்மை ஆட்கொள்ளும் இந்த பள்ளிக்கொண்ட பெருமாளிடம் உள்ளது.

வடபத்ர சாயி என்ற பள்ளிக்கொண்ட பெருமாளுக்கு சூடிக்கொடுத்த ஆண்டாள் மனதைப்பறிக்கொடுத்ததும்..மணந்ததும் திருவரங்கம் அரங்கனிடம் தானே..!

அரங்கனை தரிசித்திருந்தவள் தான்..ஒரு முறை..அவ்வழியே வரும்போது.. அம்மாவுடன்..ஊருக்குள் சென்று..கோவிலடி..அப்பாலரங்கரை தரிசிக்க ஆசைப்பட்டேன். அன்று ஆட்கொண்டான் அரங்கன்.

மறுமுறை.. கணவருக்குக் காண்பித்து..அவரும்..சேர்ந்து தரிசிக்க..கோவிலுக்கு சென்ற போது அற்புதமான விஷயங்கள் நிகழ்ந்தேறின.

அன்று என் மனதில்..கண்ணீரில் கரைந்திருந்த கவலைக்கு..பிரார்த்தனைக்கு.. அசரீரி போல அர்ச்சகர் மூலம்..சரியான பதில் கிடைத்தது. ஊனும் உருகி..நெக்குருகி.. நெகிழ்ந்து.. உணர்ந்து..மெய் சிலிர்த்துத் திரும்பினோம்.

அன்று முதல்..அனைத்திற்கும் மேல் அந்த அரங்கன் என்றாகி விட்டான்.

அத்தனை அழகா..ஒருவனிடத்தில்..! வைத்தக்கண் வாங்காமல்..மனம் அவனழகில் லயித்துப்போகும்.

ரெண்டே பிரகாரங்கள், 2.5 ஏக்கரில் சற்றே உயரத்தில் அமைந்தத்திருக்கோவில்..திருப்பேர் என்று முன்னர் அழைக்கப்பட்டு இன்று கோவிலடி என அழைக்கப்படுகிறது.

பஸ் செல்லும் வழியில்..இக்கோயில் இருப்பதற்கு அடையாளமாக ஒரு போர்ட் மட்டுமே பார்க்கலாம். இறங்கி..உள்ளேப்போனால்..ஒரு வழி காவேரிக்கும்..மற்றொன்று கோவிலுக்கும் செல்லும். வெளியில் பூக்கடை..பழக்கடை என்ற எந்தவொரு திவ்ய தேசக்கோவிலுக்கும் உண்டான முகாந்திரம் இல்லாத இத்தலம்..நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், பெரியாழ்வார் இந்த நான்கு ஆழ்வார்களால்..தமிழமுதம் தந்து பாடப்பட்டு..6 வது திவ்ய தேசம் என்றழைக்கப்படுகிறது. .
முதலில்..4 பெரியப்படிகள்..பின்னர் திருக்கோயிலின் வாயில்...சிறிய மண்டபம்..த் விஜஸ்தம்பம் மீண்டும் படிகள் (30 இருக்கலாம்) கடந்ததும்...கோவிலின் நுழைவாயில்..நேராக அரங்கனின் வாசம்.

இம்முறையும்..அவரைக்காணாமலா..என்றரித்துக்கொண்டிருந்தமனம்..இவ்வூரை நெருங்க நெருங்க.. சொல்ல முடியாத ஆனந்தமும், நெகிழ்வும்..படபடப்பும் என்னுள் சூழ ஆரம்பித்தது.

எப்போதுமே மிக அழகாக சேவை சாதித்து அருள்வார் இந்த அரங்கர்.

அன்றும் அப்படியே.. வாருங்கள் உள்ளே என்றழைத்தார் அர்ச்சகர். அவன் அழகைக்கண்டவர்கள்..கண் இமைக்க மறுப்பதும்...உடல் உருகி.. கண்களில் நீர் சுரக்க நிற்பதும் நிஜம்.

கற்பூர வெளிச்சத்தில் காணக்காண..ஒரு வேளை வைகுண்டத்தில் தான் நாம் நிற்கிறோமா..என்ற தோற்ற மயக்கத்தில்..ஆதி சேஷன் குடையாகப்பிடிக்க படுக்கையில்.. கால்கள் காவிரியை நோக்கி..ஆசீர்வதித்தவாறு இருக்க..காலடியில் பூமாதேவி அமர்ந்திருக்கிறார். எங்கு ரெங்கன்..பள்ளிக்கொண்டிருந்தாலும்..பூமா தேவி மோட்சம் வேண்டி அங்கு வந்து வேண்டி இருக்கிறாளாம்.

ஒருபக்கம் மார்க்கண்டேய மகரிஷி..
ஒருகை..யோக முத்திரையுடன்..மறு கை அருகில் பெரிதாக உள்ள அப்பக்குடத்தை தொட்டவாறு உள்ளது.

அதனாலேயே அப்பக்குடத்தான் என்றப்பெயரும் இப்பெருமாளுக்கு.

சுவையான வரலாறு இல்லாமலா இப்பெயர்.

ஸ்ரீ நகர்..திருப்பேர் ஆதிக்கால ஊரின் பெயர்.

பெருமாள் இங்கு வருவதற்கு முன்பே திருமகள் வந்தமர்ந்த ஊர் இவ்வூர்.

ஒரு முறை வைகுண்டத்தில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் வீற்றிருக்கையில், யார் சிறந்தவர் ஸ்ரீதேவியா..? பூமா தேவியா என்ற பட்டிமன்றம் எழுந்த போது பூதேவியே என்று தீர்ப்பானதில்..வெகுண்ட ஸ்ரீதேவி பெருமாளைவிட்டுப்பிரிந்து வந்து தவம் இயற்றிய தலம் புரச மரங்கள் அடர்ந்த வனமாக இருந்த இந்த கோவிலடி அதனாலே திருப்பேர் நகர் என்ற பெயர் பெற்றது. அங்கு பெருமாளும் தேவியின் தவத்தால், ஆட்கொண்டார்.

உபரிசிரவசு என்ற பாண்டிய அரசன் கௌதம முனிவரது ஆசிரமத்தில் அட்டகாசம் செய்த யானையைக் கொல்லும் சமயம் , அந்த யானை மதத்தால் ஒரு யோகியை கொன்றுவிட , பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கப்பட்ட அரசன், அந்தப்பாவத்தை உணர்ந்து பிராயசித்தம் தேட..இந்த புரசக்காட்டிற்கு வந்ததும் எதோ ஒரு அருள் சக்தி தன்னை ஆட்கொள்வதை உணர ஆரம்பிக்கிறான். தன்னுடைய குரு நாதரது ஆசியுடன் அந்த புரச வனத்திலே தங்கி தினம் அங்கு வரும் ஆயிரம் அந்தணர்களுக்கு உணவு அளித்து வர தோஷம் நீங்கும் என செய்து வருகிறான்.

தினமும் அமுதுப்படைத்துவரும் வேளையில்..ஒரு ஏழை அந்தணர்க்கு (பெருமாளே சோதிக்க எண்ணி அந்தணர் வடிவில் ) உணவு படைக்கும் போது..அவர் அனைத்தையும் உண்டு இன்னமும் பசிக்கிறதே என்றுக்கேட்கிறார். அப்போது அரசன்..மீண்டும் உணவு தயாரிக்க சிறிது நேரம் ஆகும்..ஆகையால் அதுவரை..இந்த அப்பத்தை உண்டும்..இளைப்பாற வேண்டும் எனவும் கேட்டு க்கொள்கிறான். அதன்படியே அந்தணரும் படுத்தப்படி இருக்க...

எமபயத்தால்..இருந்த மார்க்கண்டேயருக்கு சிவபெருமான் தோன்றி, இந்நிகழ்ச்சி ப் பற்றிக்கூறி, அது பெருமாளே என்றும் அவரே பயத்தைப்போக்குபவர் என்றும் மார்க்கண்டேயரைப்போக பணிக்கிறார்.

வந்த மார்க்கண்டேயர் உறங்கும் கோலத்தில் உள்ள அந்தணரை 100 முறை வணங்கி எழுந்ததும் அவரை தனது நிஜ உருக்காண்பித்து ஆசீர்வதித்து..அவரது எம பயம் போக்கி ஆயூளை நீட்டித்தும், அப்பக்குடம் தந்த அரசனுக்கும் காட்சித் தந்து அவனது தோஷத்தையும் போக்கி..அப்பாலரங்கர் , அப்பக்குடத்தான் ஆகிறார்.

சுவையான அப்பம் தினமும் இரவு பகவானுக்கு நிவேதனம் செய்யப்படுகிறது.

தாயார் கமலவல்லி, இந்திரதேவி.

இந்திர விமானத்தில் உள்ள திருக்கோவிலுக்கு சமீபத்தில் கும்பாபிஷேகம் நடைப்பெற்று..புதுப்பொலிவுடன் உள்ளது.

நுழையும் போது வரவேற்ற அர்ச்சகர், 70 வருடங்களுக்குப்பிறகு ஸ்வாமிக்கு கல்யாண உத்ஸவம் நடைப்பெற உள்ளதாகவும் அதற்காக ஒருவர் பூத்தொடுத்துக்கொண்டிருக்கிறார் என்றும் கூறினார்.

பூ வாங்கிக்கொண்டு போகவில்லையே என்று தவித்த என் மனதிற்கு இது சற்று ஆறுதலாக இருந்தது.

பிரகாரம் சுற்றி வரும்போது  பூமாலைகளை தொடுப்பவரைக் காண நேரிட்டது.

திருச்சேரை என்ற ஊரின் சிவன் கோவிலில் பூத்தொடுக்கும் (பூக்கடை) பணியில் உள்ளவர் தனது பணத்தினால்..ஸ்ரீரங்கம் பூ மார்க்கெட்டில் பூ வாங்கி வந்து, பெரிய பெரிய மாலைகளைத் தொடுத்துக்கொண்டிருந்தார்.

" நா சிவன் கோவில்ல இருந்தாலும்..ஒரு தரம் வந்தேங்க..என்னவோ இந்தப்பெருமாள் மேல அப்படி ஒரு ஈர்ப்புங்க..இவருக்கு செய்யாமல் வேற யாருக்குங்க..அதான்..காலைலயே போய் வாங்கிட்டு வந்து..தொடுக்க ஆரம்பிச்சுட்டேன்..!

இந்த ரெங்கன் எனக்கு ரொம்பப்பிடிச்சுப்போச்சுங்க..ரொம்ப நிம்மதியா நல்லா வச்சிருக்கான் என்னை எந்தக்குறையுமில்லாமல்..அதான் கரெக்டா வந்துருவேன்" என்றவர் என் பெயர் பாலா..நா ப்ளட் டோனர் ங்க என்றதும்..அவரது புஷ்பக் கைங்கர்யத்தைப்பாராட்டி, மீண்டும் ஒருமுறை அரங்கன் திருமுக மண்டலம் கண்டு..தற்காலிகமாக அவனிடமிருந்து விடைப்பெற்றேன்.

திருச்சிக்கு மிக அருகில் எமபயம், கர்வம், அனைத்து பயங்கள், தோஷங்களைப்போக்கும் இந்த அப்பக்குடத்தானை இறுதியாகப் பாடிய நம்மாழ்வார் மோட்சம் சென்றதாகக்கூறப்படுவதால்..
இந்த அரங்கனை வழிபடுவோர்க்கு இனியொரு பிறவியில்லா மறுமையும் கிட்டும் என்கின்றனர் ஆன்றோர்கள்.

காவிரி தன்னைக்குறுக்கியப்படி ஓடினாலும் ஈர்க்கிறாள் கல்லணையில்..கொள்ளிடக்கரை மறுபுறம் என அமைதியான ஒரு ஆன்மீகப்பயணமாக அமைந்தது. என் பெண்ணின் பிறந்த நாளன்று அரங்கனை தரிசித்தது மிகப்பெரிய பலமாக இருந்தது...