Wednesday 17 June 2015

திருமாலை - அறிமுகம்

திருமாலை அறிமுகம் ...
தமிழில் பக்தியுடன் பாடல்களாக தரப்பட்ட பக்தி இலக்கியங்களுள் நாலாயிர திவ்ய பிரபந்தம் முத்தானது ! பக்திக்கு மருந்தானது.
வைணவ இலக்கியங்களில் , ஆழ்வார்கள் எனப்படுவர் 10 பேர்கள். இவர்கள் தமக்கு உள்ள திருமால் பக்தியை தாயாக, தாசனாக , சேயாக , காதலியாக உருகி வெளிப்படுத்தியுள்ளனர்.
பேயாழ்வார் , பூதத்தாழ்வார் , பொய்கையாழ்வார் முதல் ஆழ்வார்கள்..
முதலில் தோன்றியவர்கள் .
பின் 4வதாக திருமழிசை ஆழ்வாரும், 5வதாக நம்மாழ்வார், 6 வதாக குலசேகர ஆழ்வார் , 7 வதாக பெரியாழ்வார் , 8 வதாக தொண்டரடிபொடியாழ்வர் ,9 வதாக திருப்பாணாழ்வார் ,10 வதாக திருமங்கையாழ்வார் நம் தமிழ் நாட்டிலே தோன்றி தெள்ளு தமிழில் பாசுரங்களை இயற்றியுள்ளனர்.
படிக்க,படிக்க பேரானந்தம் தரும் பேரின்ப வழிகாட்டி இவை.
இவர்கள் அனைவரும் எழுதிய பாசுரங்களின் தொகுப்பே...நாலாயிரம் பாசுரங்களைக்கொண்ட நாலாயிர திவ்ய பிரபந்தம்.
இதில் நான் எழுத தொடங்குவது திருமாலை- தொண்டரடிபொடியாழ்வாரின் பக்தி பாமாலையிலிருந்து !
நிச்சயம்...எழுதியவரையும் பற்றி அறிந்து தொடங்கலாமே !!
நம் நாயகர் , தொண்டரடிபொடியாழ்வார் இயற்பெயர் விப்ர நாராயணன் . இவர் பிறந்தது திருமண்டகக்குடி என்ற கிராமம்...(இன்றும் , புள்ளபூதங்குடி எனும் ஊருக்கு அருகில்) தஞ்சை மாவட்டத்தில், அன்றைய சோழ தேசத்தில்.
இளவயதிலேயே முறைப்படி கற்றுத்தேர்ந்தவருக்கு, மகாவிஷ்ணு , திருமாலின் மேல் எல்லையில்லா பக்தி, அவருக்கு தொண்டு செய்ய எண்ணியே, நைஷ்டிக பிரம்மசர்யத்தை கடைபிடித்து வந்தார், இறை தொண்டிற்கு உகந்ததான பூ பறித்து , தொடுத்து தரும் தொண்டையும் செய்து வர, ஒரு அழகிய நந்தவனம் அமைத்து பராமரித்து வந்தார்.
ஒரு சமயம் , இவர் நந்தவனத்தில் இருக்கும் வேளையில் , அருகிலுள்ள திருக்கரம்பனூர் எனும் ஊரைச்சேர்ந்த தாசி...ஒருவர், தன் சகோதரியுடன் அவ்வழி வருகிறார் ...
அந்த தேவதாசி என்ற பெயருடையப்பெண் , தான் இவ்வளவு அழகாக அலங்காரம் செய்துகொண்டும் , இந்த ஆண்மகன் தன்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லையே என தன் அக்காவிடம் கேட்க, அவரும்...இவர் விப்ர நாராயணர், நைட்டிக பிரம்மச்சாரி , பெண்களை நோக்கார் ! திருமாலுக்கென தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர் என விளக்குகிறார்.
"என்னை , பார்க்காத, மானிடரா , அவரை என் மேல் பித்தம் கொள்ள செய்கிறேன் பார்!" என சவால் விட்டு அவரை மட்டும் ஊருக்கு அனுப்பி விட்டு, தொண்டில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் விப்ர நாரயணரிடம் , தான் திருமாலின் மீது மிகுந்த பகதியுடையவள் என்றும், தற்சமயம் ஏதும் போக்கிடமற்று இருப்பதாகவும் , அங்கு இடம் கிடைத்தால் , நந்தவன பராமரிப்பில் துணை செய்வதாகவும் இரைஞ்ச , அவரும் மனமிறங்கி வெளியே தங்கியபடி இருக்க சொல்கிறார்..
இறைவனில் லீலையாய்...பெருமழை பெய்ய, முற்றிலும் நனைந்த தேவ தேவி குளிரால் நடுங்க , தனது மேலாடையை அவளுக்கு அவர் தர, துடைத்தபடி அவரின் குடிலுக்குள் அவள் நுழைய, நின்றபடியே சேவகம் செய்கின்றீரே...
பாதங்கள் நோகுமே!! நான் சற்றே பிடித்து விடட்டும்மா என அவரின் கால்களை பற்ற, பிரம்மசர்ய முடிச்சும் அவிந்து , காமனின் சிறைக்குள் ஆழ்வார் வசப்படுகிறார்.
தேவதேவியின் காமச்சிறைக்குள் சிக்கயவர் , பக்தி மறந்து , இறைத்தொண்டு விடுத்து...முக்காலமும் அவருடனே கழிக்கிறார் .
வந்த வேலை நிறைவேறிய மகிழ்ச்சியுடன் தேவதேவி...தன் ஊருக்கு விரைகிறார், அவரைப்பிரிந்து.
தாசியைப்பிரிந்த நாராயணர் அனலிட்ட புழுவாகத்துடித்து, அவள் வீடு தேடி சென்று பார்க்க முயல, அவர் வெறுங்கையுடன், செல்வமின்றி இருப்பதால் அனுமதி மறுக்கப்பட , அங்கேயே தங்கி வேதனையால் உழல்கிறார் !
இறைவன்...நாராயணரை ....மோகச்சிறையிலிருந்து மீட்டு தான் ஆட்கொண்டு ஆழ்வாராக்க, திருவுளம் கொண்டு , திருவரங்க , அரங்கனது பொன்வட்டிலுடன் விப்ர நாராயணரது பணியாளாக , உருக்கொண்டு தேவதேவியின் வீட்டுக்கதவை தட்ட, பொன்னுடன் வந்ததால் கதவு திறக்கப்பட நாராயணர் உள் ஏற்கப்படுகிறார்..
திருவரங்கத்தில் பொன்வட்டில் தொலைந்தது..சோழ மன்னனுக்கு தெரியவர விசாரணையில் அது தேவதேவி வீட்டில் கிடைக்க, விப்ர நாரயணருக்கும் , தேவ தேவிக்கும் தண்டனை வழங்கப்பட்டு சிறையிலடைக்கப்படுகின்றனர்.
அப்போது விப்ர நாராயணர் புலம்பி, விம்மி அழுகிறார் , மாதின் மேல் கொண்ட மோகம் அனைத்தையும் இழக்கவைத்ததையறிந்து இறைவனை வேண்டுகிறார்! திருமால் அரசனது கனவில் தோன்றி அனைத்தையும் விளக்கி, விடுவிக்க கட்டளையிட, அரசரும் மறுநாள் விப்ர நாராயணரை விடுவிக்க... தவற்றை உணர்ந்தவர், பிராயசித்தமாக , தொண்டர்கள் , திருமாலின் அடியார்களின்..பாத துளிகளான அவர்தம் பாதம் பட்ட மண் எடுத்து இட்டு..அவருக்கும் தொண்டு செய்து, தனது பூத்தொண்டையும் தொடர....
" தொண்டரடிப்பொடியாழ்வார் " என திரு நாமம் பெறுகிறார்.
இவர் இதன் பின்னர் எழுதியவை...
திருமாலை , திருப்பள்ளியெழுச்சி, ரெண்டுமே திருவரங்க நாதனின் மேல் மட்டுமே எழுதப்பட்டவை...
முதல் திருமாலையில் அரங்கன் இவரை(மத, மாச்சர்யங்களிலிருந்து) எழுப்புவதாகவும்
பின் திருப்பள்ளியெழுச்சி யில் இவர் அரங்கனை எழுப்பும் விதமாகவும் பாடல்களை இயற்றியுள்ளார் .
திருமாலின் கழுத்தில் உள்ள " வன மாலையின் " அம்சமாகவே அவதரித்த தொண்டரடிபொடியாழ்வாரின் திருமாலையையே நாம் அனுபவிக்க இருக்கிறோம்....
திருமாலைக்கு செல்வதற்கு முன் தனியன்கள் , அவதாரிகைகள் என ஆழ்வாரை புகழ்ந்து , இந்த பாசுரங்களை பற்றி பின் வந்தவர்கள் எழுதியதையும் தெரிந்து, அனுபவித்து திருமாலையின் மணம் அறிய உள்ளோம் ..
என்னுடன் நீங்களும் பயணிப்பது மகிழ்ச்சி !
தமிழமுதம் பருகுவோம் பக்தி ரசத்துடன்.... !!

No comments:

Post a Comment