Saturday, 20 June 2015

வெயிட்டான பதிவு

பெண்களுக்கு மல்டி விட்டமின் எத்தனை அவசியமோ..அத்தனை அவசியம் அடுப்படில குக்கர்.

மாவு பொங்கலன்னா.. காபி டிக்காஷன் இறங்கலன்னா வர்ற டென்ஷன் பெண் இனத்திற்கு மட்டுமே சொந்தம்..அதில்
இன்னொன்றும் சேரலாம்..அது சமயத்தில் தேடவைக்கும்

குக்கர் வெயிட்..!
விசிலடிச்சு..நம்ம வேலையைக்குறைக்கும் ஒரே குக்கர்ல அத்தனையும் அடுக்கி.. நாம பண்ணும் பலே சமையல் (சமயத்தில் நாமே சொல்லிக்கணும் !! ) ஒரு நாள் தள்ளாடினா அதுக்கு காரணம் அதோட வெயிட்டா இருந்தா..அந்த இல்லத்தரசியின் சோகம்..காவியத்தலைவி சௌகார் ஜானகிக்கு சற்றும் குறைந்தது அல்ல!

யாரந்த இல்லத்தரசி..சாட்சாத் நானே !
ரொம்ப கெத்தாக..அடுக்களைக்குள் நுழைந்த நான்..வேலைக்கு வந்து சென்ற பங்களாதேஷி பெண்ணின்.. கைங்கர்யம் அறியாமல்

தேடினேன் தேடினேன் .. கிச்சனின் எல்லாகார்னரிலும் தேடினேன் !
இண்டு இருக்குகளிலும் தேடினேன்!

கிடச்சுதா என்றால்
.ஆமாம்..ஒரு கவிதை..

என் தேவையறிந்தே நீ ஓவென அலற
உன் தேவை நானுமறிய இது விளையாட்டா..!!

நீயில்லா பொழுதுகள் விரய நிமிடங்கள்
உன்னுடன் கலந்திட கிட்டிடும்
(ச)மையல் கணங்கள் !!

யாருமில்லா வேளையிலும்  நீயழைப்பாய்..
உனை நெருங்கிட அச்சமும் அவசரத்துடனும் நானிருப்பேன்

ஆபாத்பாந்தவன் நீ அணுக்கமாய் குழைத்திட
அனைத்தும் உன் முன் ஆவியில் கலந்திடும் !

எங்கே நீயென தேடியே களைத்தேன்
இருக்கும் இடத்தில் இருந்தால் தானே

நீ வர மகிழ்வேன் மறைந்திட மருள்வேன்
நீ ஒருவன் மட்டுமே என்னிடம் விஸிலடிக்க

உன் தலையில் நானடிக்க வேண்டும் அந்த நொடிகள்
எங்கே சென்றாயோ என் ஆசை குக்கர் வெயிட்டே. .. !!

இப்படி எழுதிவிட்டு.. வேறு ஒரு சின்ன குக்கரின் (ப்ராண்ட் வேற) விஸிலைக்கடனாகப்பெற்று..இந்த பெரிய குக்கரில் போட்டு..சற்றுத்தள்ளியே ஆயிரம் வாலா வெடிப்பற்றவைக்கும் திக்திக் கணங்களுடன் சாதம் , பருப்பு கூடவே காயுடன் வைத்து சமையல் முடித்தேன்.!

மதியம் படுத்தாலும் அதே நினைவு..எங்க தான் போயிருக்கும்..! " அது "

இங்கு வெயிட் இல்லையென்றால் ..வேறுக்குக்கர் தான் வாங்கவேண்டும்..
அது கிடைக்கும்
.தாராளமாக தடுக்கிவிழும் சூப்பர் மார்க்கெட்டில்.

ரிப்பேர் & வெயிட்டுக்கு அலையும் நேரத்தில் ஒரு குக்கரே வாங்கிடலாமே எனும் ஆத்துக்காரரின் பேச்சுக்கு வலம்..சே , இடம் கொடாமல்..(அத்தனை குழப்பம் இந்த வெயிட் தேடித்தேடி !! )
எப்படியும் கண்டுப்பிடித்தே தீர்வது என்ற முடிவுடன்..எத்தனை நாள் தான் வேற குக்கர் வெயிட் போட்டு பக்கத்தில் தௌசண்ட் வாலாவுடன் தேவுடு காப்பது..!!

இந்த வீர தீர செயலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தே தீரணும்..என்ற கங்கணம் கட்டிக்கொண்டவளாய் (உடனே கங்கணம் யார் கட்டினா..என்ன மந்திரம்ன்னு கேக்கப்ப்டாது ! )

ஒரு இனிய காலைப்பொழுதில் கை வைக்க..இரவு 8.30 மணி ஆனதில்...கிச்சன் தலைகீழாக மாறிப்போனது..! கைவண்ணம் தெரிய அதில் கால் (வலி) வண்ணம் தெரிந்தது
.!
ஐய்..என் கிச்சன் எத்தனை நீட்..! சூப்ப்ர்ல என்ற பெருமைப்பீத்திக்கொண்டதும்.
என்னைப்பார்த்து கண் ஆனவர் கேட்ட முதல் கேள்வி..அப்ப கிடச்சுதா குக்கர் வெயிட் !!

எங்க அதான் இல்லையே..ஆனா பாருங்க, கிச்சன் எப்படி ஜொலிக்குது..என்றே பூசி சமாளித்தாலும்

இன்னமும் கடைசிப்பகுதியை கைப்பற்றாத மன்னனின் மன நிலை..! அப்படி எங்க தான் போயிருக்கும் !

மறு நாள் வந்த பங்களா தேஷ் வேலை செய்யும் பெண்ணிடம்..அவளுக்கு புரிந்த ஆங்கிலத்தில் நான் கேட்க அவளுக்கு மட்டும் தெரிந்த ஹிந்தியில் ,
இல்லை.இல்லை..நான் பார்க்கவேயில்லை..என்று  என் மனக்குதிரையின் மீது மண் அள்ளிக்கொட்டினாள்

குறுக்கு விசாரணை அனைத்தும் நடத்தியும் தோல்வியிலே முடிவடைந்தது. !

சரி , இப்போது சமையல் இல்லையா அல்லது அந்த குக்கர் இல்லையா என்றால்..புலி அருகில் நின்று போஸ் கொடுக்கும் போர் வீரன் போல டெக்னிக்கலாக வேறு குக்கர் வெயிட் சமைக்கும் கிராதகி ஆகிப்போனேன் நான்..!

அடுத்த பட்ஜெட்டை எண்ணி.. புதுக்குக்கரின் ஒலியை எண்ணிக்காத்திருக்கிறேன் ...

4 comments:

 1. இவ்வளவு ‘வெயிட்’டான ஒரு சப்ஜெக்டை எழுதுவீங்கன்னு நெனச்சே பாக்கல சுமிம்மா... அதிலயும் வெயிட்டுக்கான அந்தக் கவிதை... சூப்பர்ப்! மிக ரசித்தேன். குறிப்பா..

  நீ வர மகிழ்வேன் மறைந்திட மருள்வேன்
  நீ ஒருவன் மட்டுமே என்னிடம் விஸிலடிக்க
  உன் தலையில் நானடிக்க வேண்டும் அந்த நொடிகள்

  என்கிற வரிகள்... எளிமையா, அதே சமயம் சுவாரஸ்யமான நடையில் எழுதிருக்கீங்க. கலக்குங்க.

  ReplyDelete
  Replies
  1. ஹஹ்ஹ்ஹா.. நன்றி .. சார் ..

   Delete
 2. வலைஉலக ஜோதியில் கலந்தமைக்கு இனிய பாராட்டுகள்!

  நல்வரவு சுமி.

  ReplyDelete
  Replies
  1. தேங்க்யூ ..துளஸி மேம் .. ஹேப்பி..ஹேப்பி ..

   Delete