Wednesday 17 June 2015

திருமாலை அறிவோம் ..

திருமாலை அறிவோம் ..
திருமாலை - நாலாயிர திவ்யபிரபந்தம் என்ற வைணவ பக்தி இலக்கியத்தில் வரும் 45 பாசுரங்கள் , வழங்கியவர் தொண்டரடிபொடியாழ்வார்.
இதில் நாம் திருமாலையை அனுபவிக்க இருக்கிறோம், அடியேனின் சிறு முயற்சியாக பகிர வருகிறேன் உங்களுடன்...படித்ததை, கேட்டதைக்கொண்டு...
தொண்டரடிபொடியாழ்வார் எழுதிய திருமாலை , திருவரங்கம் வாழ் ரெங்கனாதரை (விஷ்ணு) பாடிய பாசுரங்கள் அழகு தமிழில் பக்தி பெருக்குடன் இருக்கின்றன .
பாசுரங்களின் அர்த்தத்துடன் நாம் பார்க்க ஆரம்பிக்கும் முன்...
எல்லா ஆழ்வார்களது பக்தி பாசுரங்களுக்கும் முன் , அவர்களைப்போற்றி (சேவையை) அவர்களுக்குப்பின் வந்த வைணவ அடியார்கள் எழுதிய தனிப்பாடல்கள் "தனியன்கள் " என்றழைக்கப்படும் .
திருமாலைக்கு தனியன் தந்திருப்பவர் திருவரங்க பெருமாள் அரையர்.
தனியன் படித்தே , திருமாலையை படிக்கிறோம்.
" மற்றொன்றும் வேண்டா மனமே!மதிளரங்கர்,
கற்றினம் மேய்த்த கழலிணைக்கீழ்,-- உற்ற
திருமாலை பாடும்சீர்த் தொண்டரடிப் பொடியெம்
பெருமானை, எப்பொழுதும் பேசு."
பெரிய மதில்களைக்கொண்ட திருக்கோயிலில் வாழும் அரங்கர் - ரங்கநாதராகிய
பசு, கன்றுகளை மேய்த்த கண்ணனின் திருவடிகளுக்கு கீழ் நல்ல பக்தியுடன் இருக்க திருமாலையை பாடிய பல நல்ல குணங்களை உடைய தொண்டரடிபொடியாழ்வார் எனும் எம்பெருமானை (பெயர்க்காரணம் -எப்போதும் திருமாலின் பக்தர்களின் திருவடித்துளிகளை எண்ணி, அதையே தன் பெயராக கொண்டவர் ) எப்போதும் , பிறவற்றை சிந்திக்காமல் அவரை மட்டுமே சிந்தித்திரு ...
(அர்ச்சாவதார மூர்த்தியாக இருக்கும் ரெங்கநாதர் , அவரே அவதாரக்கண்ணன் என்று குறிப்பிடுகிறார் ),
(கழலிணம் - பசு, கன்றுக்கள்)
இதில் பெரியவர்களின் விளக்கம்...நம் பெயர் , பிறப்பு ஞாபகம் வைத்துக்கொண்டால் அகங்காரம் வரலாம் , ஆனால் இறைத்தொண்டை அடிப்படையாகக்கொண்ட பெயரை வைத்துக்கொண்டால் அகங்காரம் இருக்காது என்றே தொண்டரடிபொடியாழ்வார் என்ற பெயரைக்கொண்டார் ஆழ்வார் அத்தகைய சிறப்பான குணம் கொண்டவரை தினமும் சிந்தித்து இரு மனமே! என்பதாகும் ..
இனி வரும் பதிவுகளில் திருமாலை பாசுரங்களை பார்க்கலாம்..

No comments:

Post a Comment