Thursday, 27 August 2015

அறிவோம் திருமாலை !

திருமாலை -11.
ஸ்ரீமஹாவிஷ்ணுவின் வனமாலையின் அம்சமாக மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் , அன்றைய சோழ நாட்டில் திருமண்டகக்குடியில் விப்ர நாராயணன் என்ற இயர்பெயருடன் அவதரித்தவர் திருமாலை , திருப்பள்ளியெழுச்சி என்ற இரு வைணவ  தமிழ் அமுதங்களை தந்தருளியவர்  தொண்டரடிப்பொடியாழ்வார் .
இவர் பாடியது அரங்கனை , நேசித்தது திருவரங்கத்தை !
பரமபதத்தில் பள்ளிக்கொண்டுள்ள வாசுதேவன் , மனிதராக அவதரித்த ராமர் , கண்ணனை சரணடையுங்கள் , இல்லறத்துன்பம் தீரும் என்றார் முந்தையப்பாசுரங்களில்.
பாற்கடல் நாதனை தரிசிப்பதோ , காலம் கடந்த ராமனையோ , த்வாபர யுகத்தில் வாழ்ந்த கண்ணனையோ தரிசித்து வழிபடுவது இயலாதக்காரியம் என்பதால்..பெரிய கோவில் என்றழைக்கப்பட்ட திருவரங்கம் வாழ் அரங்கனை வழிபடுங்கள் என்கிறார்.
அதே இப்பாசுரம்.
பாசுரம் -11.
ஒருவில்லோங்குமுன்னீடைத்து உலகங்களுய்ய
செருவிலேயரக்கர்கோனைச்செற்ற நம் சேவகனார்
மருவியபெரியகோயில் மதிள் திருவரங்கமென்னா
கருவிலே திருவிலாதீர் ! காலத்தைக்கழிக்கின்றீரே !
ஒருவில்லோங்கு - எதோ ஒரு வில்லால் ஓங்கி . 
முன்னீரடைத்து - சமுத்திரத்திற்கும் முன் கோபப்பட்டு , மூன்று நீர் கலக்கும் சமுத்திரத்தை வில்லால் ஓங்கி அடைத்து
உலகங்களுய்ய - ஈரேழு உலகங்களும் நிம்மதியாக உய்ய
செருவிலே அரக்கர்கோனை - நேர்மையான முறையில் வெற்றிக்கொண்ட அரக்கர்களின் தலைவனை (இராவணனை)
செற்ற - தோற்கடித்து  நமக்கு உபகாரம் செய்ய வந்த நம் இராமன்
மருவியபெரியகோயில் - (மறுதலித்து) செல்லாமல் தங்கிய அரங்கனாக எழுந்தருளியிருக்கும் பெரியகோயில்
மதிள்திருவரங்கமென்னா - மதிள் சூழ்ந்த பெரியகோவிலைக்கொண்ட திருவரங்கம் என்று எண்ணாமல் 
கருவிலே திருவிலாதீர் - கருவில் இருக்கையிலே பகவானை தரிசிக்காதவர்களே !
காலத்தைக்கழிக்கின்றீரே - வீணாக உண்டும் , உறங்கியும் காலத்தைக்கழிக்கின்றீரே !!
பாசுர விளக்கம் -
இராமாயணத்தில் , சமுத்திரம் தாண்டிச்செல்ல வானர சேனையுடன் ராம லஷ்மணர்கள் காத்திருக்க , விபீஷணன் சுக்ரீவன் மூலம் சமுத்திர ராஜனைப் பணிந்து வேண்டச்சொல்கிறார் இராமனை.
ராமனும் , மூன்று நாட்கள் பட்டினிக் கிடந்து , சமுத்திரக்கரையில் கடக்க வழி வேண்டி , சமுத்திர ராஜனை அழைத்துக்காத்துக்கிடக்க சமுத்திர ராஜன் வரவில்லை.
கோபத்தால் குணக்கடலான ஸ்ரீராமன் , வில்லேந்துகிறார் அதையே ஆழ்வார் இங்கு ஒரு வில்லால் ஓங்கி என்கிறார்.
ஒரு வில்லை  ஓங்கியதால் , மூன்று நீர்களைக்கொண்ட சமுத்திரம் பணிந்திட , அதனால் சமுத்திரத்தை  அடைத்த , கற்பாலம் கொண்டு அதன் மூலம் இலங்கை சென்று இராமன் ,  இராவணன் செய்த கொடுமைகளால் ஈரேழு உலகங்களும் வருந்தி இருக்க , இந்த உலகங்கள் உய்வதற்காக , நேர்மையான, போர்  முறையில் , அரக்கர்களின் தலைவனாக விளங்கிய இராவணனை வெற்றிக்கொண்டவன் , நம் பொருட்டு , நமக்காக உதவ அர்ச்சாவதார மூர்த்தியாக
மறுப்பெதும் தெரிவிக்காமல் தானாகவே தங்கிய , கோயில்  பெரியகோயில்.
அளவாலும் , கேட்டதை உடனே அளிப்பதாலும் பெரிய கோயில் என்றழைக்கப்பட்ட திருவரங்கத்தை எண்ணாதவர்களே !!
நீங்கள் கருவில் இருக்கும்போதே இறைவனை தரிசித்து இருக்க மாட்டீர்களோ !  (இருந்திருந்தால் திருவரங்கம் பற்றி எண்ணத்தோன்றும்)
வீணாக உண்டும் , உறங்கியும் திருவரங்கம் , அரங்கனை நினைக்கவேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் காலத்தை கழிக்கின்றீர்களே !!
இல்லறத்தில் சிக்குண்டு வாழ வழி தெரியாமல் பல அல்லல்கள் படும் நம் பொருட்டு ஆழ்வார் பல வழிகளை சொல்கிறார் திருமாலை எனும் 45 பாசுரங்களின் வழியே !
திருவரங்கம் என்ற சொல்லே , அரங்கன் என்ற நினைவே ,  பிறப்பறுக்கும் ! இதில் நேரடியாக இராமன் என்றோ , அரங்கன் என்றோ கூறாமல் , இப்பேர்ப்பட்ட சேவகனாக நமக்காக இரங்கிய ராமனே , அரங்கனாக அர்ச்சனைக்குரிய மூர்த்தியாக இங்கு வந்து எழுந்தருளியிருக்கும் போது ! அவரையும் , பெரியகோயிலையும் நினைக்காமல் வீணாக கழிக்க வேண்டாம் என்கிறார் தொண்டரடிப்பொடியாழ்வார்.
ஆழ்வாரின் பாதம் பணிந்து அடுத்த பாசுரம் காண்போம் ...(விரைவில் )

No comments:

Post a Comment