Saturday 22 August 2015

வீடு தோறும் வரவேற்கும் துணி மலைகள்

துணியா..மலையா..!
பிஸினஸ் மேனேஜ்மென்ட் , ஃபைனான்ஸ் மேனேஜ்மென்ட் படிச்சவங்களும். சறுக்கி தொபுக்கட்டீர் ஆகும் இடம். நம் வீட்டு துணி மேனேஜ்மெனட்டிடம் தான்.
வீட்டில் மனைவி , அம்மா, அட , அட்லீஸ்ட் ஒரு பெண்ணின் இருப்பை வெளிக்காட்டுவதில் பாத் ரூம் க்கு அடுத்தப்படியா துணிகள் & கப் போர்ட்ஸ் தான்..
பளீச்சுன்னு பல் இளிச்சுக்காட்டறது மேற்படி விஷயங்கள் ...
வீட்டில் பெண் உடம்புக்கு முடியாமல் படுத்தாச்சுன்னா வெளிப்படும் இன்ஸ்டண்ட் துணிக்குன்றுகள்..
எப்படி முளைக்கும்..எங்கிருந்து முளைக்கும் என தெரியாது..ஆனால் விழி பிதுங்கி , சோபாலயும்..சேர்களிலும்..அட்டினக்கால் போட்டு உட்கார்ந்திருக்கும்..
இந்த துணிகள் படும் பாடு கெஸ்ட்ஸ் வந்தால் அவ்வளவுதான்.. பாவம்..அத்தனையும் இருந்த சுவடே தெரியாமல்..அலமாரியில் மூச்சுமுட்டி சுவாசம் போயிருக்கும்.
( வீட்டுக்கு வரேன்னு போன் வந்ததும் வீடே சாவிக்கொடுத்த மாதிரி இருக்கும்..அதே சொல்லாமல் வந்தால் சாமி வந்த மாதிரி இருக்கும் !! )
சரி..நாம மடிக்கலன்னா..யாருமே மடிக்க மாட்டேங்கறாங்களே விட்டு தான் பார்ப்போமேன்னா..
அந்த குன்றில் இருந்து ஒரு சாக்ஸ் , ஒரு பனியன் எடுப்பது இமாலய சாதனையாக..குப்பையைக்கிளரும் நல் கோழியாக..வெற்றிப்பெருமிதத்துடன் ஆபீஸ் , ஸ்கூல் , காலேஜஸ் டயமாச்சு என்ற ஓலத்துடன் வீடே காலியாகும்.
சிலசமயம்..சே ! பனியனே கிடைக்கல..நானே இனி என் துணியை துவைச்சுக்கறேன்..என்று இண்ஸ்டண்ட் சவால்கள் பிறக்கப்பட்டு..வாஷிங் மெஷின் ஓவர்டைம் டியூட்டி பார்க்கும்..!
சரி காய்ஞ்சதும்..அதே கதை..! துணி மலை.!
( அதை அயர்ன் செய்யக்குடுப்பதும்..திருப்பி கடன் கொடுத்த சேட் மாதிரி சேஸ் பண்ணி வாங்குவது கிளைக்கதைகள் :p)
வீக் எண்ட் ஷாப்பிங் , பெஸ்டிவல் ஆபர் , ஆடித்தள்ளுபடில அடிச்சுபிடிச்சு வாங்கினதா..டிரையல் ரூமிலும் , வீட்டில் பேஷன் பரேட் செஞ்சு பார்த்தவை ரெண்டு நனைப்பிற்கு பின் சீந்துவாரின்றி..என்னைப்பார், மடித்துப்பார் என்று துணிக்குவியலலில் முதல் ஆளாக..வரவேற்கும்.
கிடைக்காத சினிமா டிக்கெட் புக் செஞ்சு..அடிச்சு பிடிச்சு..கொஞ்சம் முன்னாடியே போய் , காத்திருக்கும்போது..பிள்ளைகளின் உடையைப்பார்க்க..மானம் ப்ளைட் ஏறி போயிருக்கும்..!
எடுக்க ஈஸியாக இருக்க வேண்டுமென, அலமாரியில் முதலில் இருக்கும் (அயர்ன் பண்ண தேவையில்லாதது முதலிடம் wink emoticon ) ட்ரெஸ்களில் முந்தி வந்து உட்கார்ந்து பல்லிளிக்க பார்க்கும் குழந்தைகள் அன்றைய பெற்றோரின் கருத்து மோதலுக்கு காரணமாக இருப்பார்கள்..!
" நான் ஒருத்தியே தினமும் துணி மடிச்சு வைக்கறேனே" " ஏன் நீங்கல்லாம் செய்யக்கூடாதா..அட்லீஸ்ட் மடிச்சு வச்சதையாவது உங்க கப் போர்ட்ஸ்ல வைக்கலாம் இல்ல.."
என்ற கூவலுக்கு முன் அனைவரும் தொடர்பு எல்லைக்கு அப்பால் போயிருப்பர்..!
அனைத்தும் அஸ்தமனமாகி , துணிகள் மடித்து அலமாரிக்குள் தஞ்சம் புகுந்த பின் திறந்த புத்தகங்கள் மூடப்பட்டு , தலைகள் மெல்ல தென்படும்..கூடுதலாக.. " அப்படியே இருந்தா தான் என்ன.!! . ஒரு பக்கம் .. அது பாட்டுக்கு இருக்கு..உன்ன என்னப்பண்ணுது" 
என பரிந்துரைகள் முன் வைக்கவும்படும்.

சோபா..சேர்களுக்கு..மோட்சம் தர லாண்டரி கூடை..எத்தனை யோ மாடர்ன் துணி அடைப்பான்கள் வாங்கினாலும் அனைத்தும் ஹவுஸ்புல்லாகி , பீ கேர்புல் என மிரட்டும் !

எதுல காசு போட்டாலும் போடு ஆனா இந்த துணில மட்டும் காசு போடத..என வீட்டில் அந்தக்கால பாட்டியோ தாத்தவோ சொன்னது அவ்வப்போது அசரீரியாகக்கேட்கும்..

அத்தனையும் ஆவியாகும்..இன்னொரு ஆடிதள்ளுபடி வரும் வரை...!!

No comments:

Post a Comment