Thursday, 17 March 2016

திருமாலை " அறியாதார் திரு மாலை'யே அறியாதவர் !!

தமிழில் வைணவ இலக்கியத்தில் சிறப்பானது
நாலாயிரத் திவ்யப்பிரபந்தம், இதனை திருமால் மஹாவிஷ்ணுவின் மேல் பக்திக்கொண்டுப் பாசுரமாகத் தந்தவர்கள் ஆழ்வார்கள்எனப்படுகின்றனர்.

அவர்களில் எட்டாவதாக சோழ நாட்டில் திருமண்டகக்குடியில் , விப்ர நாராயணன் என்ற இயற்பெயருடன் தோன்றி,

பின்னாளில் தொண்டரடிப்பொடியாழ்வார் என அழைக்கப்பட்டவர் தந்த பாசுரங்கள், தமிழ் பாடல்கள் திருமாலை, திருப்பள்ளியெழுச்சி.

இவை திருவரங்கம், ஸ்ரீரங்கத்தில் உள்ள திருமால் , அரங்கனின் மேல் பாடப்பட்டவை.

இனி அதில்

திருமாலை - 16.

சூதனாய்க் கள்வனாகித் தூர்த்தரோ டிசைந்தக்காலம்
மாதரார் கயற்கணென்னும் வலையுள்பட்டழுந்து வேனை
போதரே யென்று சொல்லிப்புகுந்துதன் பால்
ஆதரம் பெருகவைத்த அழகனூரரங்க மன்றே !

பாசுரப் பொருள் :

சூதனாய் - சூதிலில் தேர்ந்தவனாய்( சூது - பார்த்துக்கொண்டிருக்கும் போதே ஒரு பொருளை அபகரித்து செல்வது)

கள்வனாகி - மற்றவர் பொருளை அவர்களுக்கே தெரியாமல் கவரும் கள்வனாகவும் ஆகி

தூர்த்தரோடு - தீயவர்களோடு - (போகங்களில் ஈடுபட்டவர்கள்,இறைவனை மறந்து,  கண்ணால் காண்பதே மெய் என்றும் பாப, புண்ணியங்களை இல்லையென்பவர்கள் )

இசைந்தக் காலம் - ஒன்றாக வாழ்ந்திருந்தக்காலம்.

மாதரர் - பெண்களுடைய

கயற்கணெண்ணும் - மீன் போன்ற கண்கள் என்னும்

வலையுள்பட்டழுந்துவேனை - வலையுள் சிக்கிக்கொண்டு அழுந்திப்போயிருந்தவனை

போதரேயென்று சொல்லி - போ- வா .. அடா இப்படி வா என்று அழைத்து

புந்தியில் புகுந்து - சிந்தையில் , நெஞ்சத்தில் புகுந்து

தன்பால்  - தன்மேல்

ஆதரம் - அன்பு , ஆசை , வேட்கை

பெருகவைத்த - வெள்ளமாய் பெருகிட வைத்த

அழகன் - அழகனாகிய அரங்கன் எம்பெருமானது

ஊர் அரங்கம் -  வசிக்கும் இடம் திருவரங்கமாகும்.

இனி இப்பாசுரத்தின் அர்த்தம் காண்போம் :

ஒருவர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவர் பொருளை திருடும் சூதனாகவும் , அவரதுப்பொருளை அவருக்கே தெரியாமல் திருடிடும் கள்வனாகவும் ,

கண்களால் காண்பதே மெய், சுகபோகமான வாழ்க்கையே நிரந்தரம், பாபம் , புண்ணியம் என்பது ஏதும் இல்லை என்றெண்ணி வாழும் தீயவர்களுடன் சேர்ந்தும்,

பெண்களின் மீன் போன்ற கண்கள் எனும் வலையில் வீழ்ந்து , ஆழ்ந்தும்  வாழ்ந்திருந்தேன் பல காலமாக ,

அடே, வா ! என்றென்னை அழைத்து,   என் நெஞ்சினில் வந்துப்புகுந்து, மிகுந்த அன்பினை  தன் மேல் வெள்ளமாய் பெருகிடச்செய்த  அழகனாகிய அரங்கன்(பெரிய பெருமாள்) இருப்பிடமே திருவரங்கமாகும்.

இங்கு சூதன், கள்வன் என ஆழ்வார் குறிப்பிடுவது , ஆத்மாவை உடல் என்றெண்ணி,  தன்னுடையதென்று தான் வாழ்ந்ததை !

அனைத்து ஆத்மாக்களும் இறைவனின் சொத்து , அதனையறிமால், இந்த உடலும் , ஆத்மாவும் அழிவற்றது என்றெண்ணிக்கொண்டு,  போக விஷயங்களில் காலத்தைக்கழித்ததை தான் சூதன், கள்வன் என்கிறார்.

மாதரார் விழியுட்பட்டழுந்துவேனை என்பதில் , பெண்களின் மீன்களைப்போன்ற விழியழகில் மயங்கிப்போய் அதுவே நிரந்தரம் என்று வாழ்ந்ததையும் , அந்த விழிகள் உனக்காக நானிருக்கிறேன் என்று பொய்ப்பேச உள்ளமோ , பொருளிருப்பவனுக்கே என்னிடத்தில் இடம் என உண்மை பேசுமாம்.இதனை அறியாமல் வலையில் விழுந்து அகப்பட்டுவிட்டேன் என்கிறார்.

இதனைக்காணப்பொறுக்காமல் , அரே !! இங்கே வா என்று தன்னை அழைத்து , பெரியப்பெருமாளின் மேல் அன்பு, ஆசை , வேட்கையை அதிகரிக்கச் செய்ய தன்னுடைய புத்தியில்.. நெஞ்சத்தில் வந்துப்புகுந்துக்கொண்டு , அவரது திருவடிவழகைக்காட்டி , அவரின் அன்பை ஆதுரத்தை வெள்ளமாகப்பெருகிடச்செய்தவன் அழகன் அவனே அரங்கன்.அவன் வாழும் ஊரே திருவரங்கம் என்கிறார்.

முதலில் திரு மாலின் பெயர்களை , திரு நாமங்களைச் சொல்வதால் கிடைக்கும் நன்மைகளைக்கூறிவந்தவர் , மற்றவர்களுக்கு உபதேசமாகப்பாடி வந்தவர் , 15 வது பாசுரத்திற்கு மேல் , தனக்கு எவ்விதம் அரங்கன் இறங்கினான் தான் எவ்விதம் மாறினோம் என்று தன்னைத்தாழ்த்திக்கொண்டு விளக்குகிறார்.

இது ஆழ்வாருக்கா அல்லது சம்சாரத்தில் உழன்று இதுவே வாழ்வென்று போகத்தில் திளைத்திடும் நம் போன்றோருக்கா !!?

ஆழ்வாரின் பாதம் பணிந்து அடுத்தப்பாசுரம் காண்போம் !!

No comments:

Post a Comment