Sunday, 6 March 2016

மகளிர் தினம் , மாதவம் செய்திட்டோமா !??

"மாதர் தம்மை இழிவு செய்யும் மடமை தன்னைக்கொளுத்துவோம். 
சட்டங்கள் ஆள்வதும் பட்டங்கள் பெறுவதும் பாரினில் பெண்கள் செய்ய வந்தோம்" இதெல்லாம் முண்டாசுக்கவிக்காலத்திலிருந்தே தினந்தோறும் எழுதியும் பேசிப்பார்த்தும் ஓய்ந்துப்போயிருக்க, மறு புறம் ஐந்து வயது சிறுமி பாலியல் வன்முறை, வயதான பெண்களையும் துரத்தும் பாலியல் சீண்டல்கள் மட்டும் சேஸ் செய்தப்படியே இருக்கின்றன.
சரி.என்னதான் எதிர்ப்பார்க்கிறோம் மகளிர் தினத்தில் , அல்லது எப்படித்தான் எதிர்நோக்கு கிறோம் இந்தத்தினத்தை !?

பெண் என்பவள் இயற்கையின் அங்கமான தனிசக்தி என்பதை அவள் உணரத்தொடங்கும்போது சாதிக்கத்தொடங்குகிறாள்.
சாதனை என்பது ஆணுக்குப் பெண் நிகரானவள் என்று தலை நிமிர்ந்து சொல்வதா ! இல்லை..ஆணுக்கு நிகராக நாங்களும் மது அருந்துவோம் , புகைப்பிடிப்போம்..வேண்டிய வாழ்க்கைத்துணையை மாற்றியப்படி இருப்போம் என்பதா.. 

எனில் என் பார்வையில் இல்லை.

பெண் பெண்ணாகவே சமூகத்தில் தன்னை நிலைனிறுத்திக்கொண்டு , தன் வேலைகளை திறம்படச் செய்து வாழ்வின் அடுத்தடுத்த இலக்குகளை நகர்த்தியப்படியே மற்றப்பெண்களுக்கும் உதவியப்படியே தானும் உயர்தல்.

ஆண்களை வெறுப்பதும், பெண்ணடிமைத்தனத்தை எதிர்ப்பதும் மட்டுமே பெண்ணீயம் என வெற்றுச்சொல் வீசி வீழ்ந்துப்போகிறோம். 

ஆணும் பெண்ணும் இரட்டை நூல்கள் ஆன சமுதாயக் கயிறு இதுவே பலமான உறவுகளைக் கட்டிவைத்து , ஆரோக்கியமான சமுதாயத்திற்கும் காரணமாகிறது.

இதில் ஒரு நூல் அறுந்தாலும் பல உறவுகள் சிதறித்தான் போகின்றன. 
கடந்த பதினான்கு ஆண்டுகளாக பல நாட்டுப்பெண்களை , அவர்களின் நிலை, வாழ்வு நிலைகளைப் பார்த்து வருகிறேன் அந்நிய மண் வாசத்தில் ! 

விவாகரத்தாகி தனித்திருக்கும் பெண்கள் , குடும்பச்சுமையால், சிறுவயதில் திருமணமாகி கணவன் விட்டுப்பிரிந்துப்போய் பிள்ளைகளைக் காப்பாற்ற ஏஜன்ஸிக்காரர்களால் ஏமாற்றப்பட்டு எதோ ஒரு அடிமைவாழ்க்கையில்

 சிக்கி 2 மணி நேரம் மட்டுமே தூங்கும் பெண்கள் அதிலிருந்து தப்பித்து அன்றாடம் வேலைப்பார்த்து அதில் வளரும் குழந்தைகளின் 

படங்களைப்பார்த்தப்படியே கண்ணீரில் காலத்தைத்தள்ளும் பெண்கள் , மேக்கப்பிற்காக மால் தரிசனம் செய்தும் , வாங்கும் சில சாமான்களுக்காக பின்னால் பணிப்பெண் ஏந்திவரும் பையுடன் பெருமையாகக்கடக்கும் பெண்கள் , 

ஆடைகளுக்கும் அழகு சாதனப்பொருட்களுக்கும் இலக்காகி தன் மூன்றிலக்க சம்பளம். நான்கு இலக்கத்தைத்தொட தினம் பயிற்சி எடுத்து கம்பெனிகளுக்குப்படையெடுக்கும் பெண்கள் இப்படி பலப்பலப்பெண்மணிகள்.
எல்லாருக்கும் தேவை என்ன..பொதுவானப்பிரச்சனைகள் என்னென்ன ! யோசிக்கவைக்கும் எப்போதும் என்னை ! 

ஒரு புறம் கல்கத்தாவில் பிறந்து, பெப்ஸி கோவின் தொடர்ந்து தலை செயல் அதிகாரியாக உள்ள இந்திரா நூயியைப்பற்றிப்பெருமைக்கொள்வதா 
அல்லது 
சுனிதா கிருஷ்ணன் பெங்களூரு வில் பிறந்து 16 வயதில் ஒரு கும்பலால் பாலியல் வன்முறை யால் பாதிக்கப்பட்டு அதனால் நாலு சுவர்களுக்குள் முடங்கிக்கிடக்காமல் , தன்னைப்போலவே பாதிக்கப்பட்டபெண்களின் கண்ணீர் துடைக்கும் கரமாக மாறிப்போய், பல பெண் குழந்தைகள் பாலியல் தொழிலுக்காக விற்கப்படும் அவலத்தைத்தடுத்தி நிறுத்தி அதனால் தன் காதுகள் பல முறை பாதிக்கப்பட்டும் அயராது செய்து வரும் சேவையை எண்ணி வியந்து வருந்துவதா..புரியவில்லை.

ஆசியாவில் மட்டுமே பெண் என்றால் தனிச்சலுகைகள் தரப்பட்டும் ஏற்கப்படவும் செய்கின்றன. 

ஐரோப்பிய, அமெரிக்க சமூகங்களில் பெண்கள் சமமாகவே உள்ளனர். ஆனாலும் இங்கிலாந்தில் மட்டுமே பாலியல் துன்புறுத்தல் அதிகமென்று அங்குள்ள சர்வே சொல்கிறது.

எந்த நாட்டிற்கு சென்றாலும் பெண்களின் மீதான வன்முறையும் தவறான பார்வைகள் மட்டும் இரவு 12 தாண்டும் போது தவறாகவேப் பதிக்கப்படுகின்றன.எங்குப்பெற்றுள்ளோம் சுதந்திரத்தை ! 

எல்லா மதம் சமயத்தின் பெயரால் மறுக்கப்படும் பல விஷயங்களும், பெண்களாகவே அதை முன் வந்து ஏற்கவைத்த முறைகளுன் எப்போதும் அதிகம் யோசிக்க வைப்பவை.

இன்று பாக்ஸிங், பளுதூக்குதல், ஆட்டோ டிரைவிங், டாக்ஸி ஓட்டுனர் இப்படி கடினமான வேலைகளில் பங்கேற்றாலும் அழகு சாதனப்பொருட்கள் பெண்களைக்குறிவைத்தே தன் சந்தையை விரிவுப்படுத்தவும் சிகப்பழகே தன்னம்பிக்கை எனவும் பிரச்சாரம் செய்கின்றன.

பெண்கள் , மருத்துவராகவோ, மீடியா பெர்சனாகவோ இருந்தாலும் அவருக்கென ஒரு எல்லைக்குட்பட்டே இயங்கவேண்டியக்கட்டாயத்தில் தள்ளப்படுவது மறுக்க இயலாததாக உள்ளது.

கல்வி, பொருளாதாரம், தொழில் இப்படி ப்போட்டிப்போட்டு எவ்விதத் தடங்கல், இடையூறுகளுக்கும் பலியாகாமல், வெற்றிப்பெற்றாலும் அவள் அட்ஜஸ்ட் செய்துத்தான் வந்திருப்பாள் என்றப்பார்வையும் , பெருசா ஒண்ணும் திறமையில்லன்னாலும் ஆள் பளீச்சுன்னு இருக்கா இல்ல அதான் என்ற வசனங்களைக்கேட்டப்படியே புறந்தள்ளியப்படியே பெண்ணுலகம் முன்னேற வேண்டியுள்ளது.

நிலவுக்கும், மலருக்கும் ஒப்பிட்டு ஒப்பிட்டே வெறும் அழகு சாதனப்பதுமைகளாகவே பெண்களைப்பார்க்கும் மனோபாவம் குறையுமா ! நாம் என்ன செய்யலாம் ?! 

சிந்தித்து செயலாற்ற வேண்டிய க் காலத்தில் உள்ளோம்.
இப்போது,
அழகைத்தாண்டி அறிவுடன் பல் நோக்கு சிந்தனையுடன் பெண் என்பவள் தனக்கென தனிப்பாதையுடன் புறப்பட்டுவிட்டாள் என்பதை ஆசிய நாடுகள் உணர ஆரம்பித்துவிட்டன. 

இன்று திருமணத்திற்கு முன்பே ஆண் துணையின்றி பெண்களும் ஆணுக்கு நிகராக வெளி நாடுகளில் தங்கி வேலைப்பார்க்கவும், தனக்கென வாழ்க்கைத்துணையை தேர்தெடுத்துக்கொள்வதிலும் எந்த முன்னுரிமை யையும் இன்றி தனக்கானக் கல்வியைப்பெறவும் வைத்திருக்கின்றன.

ஆயினும்..பொருளாதார சிக்கலில் துண்டாடப்பட்ட ரஷ்ய நாடுகளின் பெண்கள் பிழைப்பிற்காக, தாய் நாட்டில் குடும்பத்தின் உணவிற்காக, தன் உடலை ஏடி எம் மெஷினாக்கிப் பார்க்கும் அவலமும் , ஐரோப்பாவிற்கு தொடர்ந்துக் கடத்தப்படுவதும் தொடர்ந்தப்படியே உள்ளன.

இன்று ஆண் குழந்தைகளையும் பெற்றிடும் இந்த வயிற்றில் நெருப்பை அள்ளிக்கொட்டும் வீணாப்போனப் புள்ளிவிவரங்கள் உலகமெங்கும் இன்னமும் பாலியல் சீண்டல் , வன்புணர்வு பதிந்த பதியாத வழக்குகள் சொல்லாமல் சொல்கின்றன எங்கே சாதித்தோம்..என்ன சாதித்தோம் ! என்று !
நம் கையில் என்ன உள்ளது ! 

 இதே பாலியல் சீண்டல்களில் ஈடுபடும் ஆண்களையும் பெற்றெடுப்பதும் பெண்கள் தான். விதைப்பது நல் விதையாக இருந்தால்... அறுப்பதும் நன்மணிகளாகவே இருக்கும்.

பெண் என்பவள் யார்..அவள் வலி என்ன, வாழ்க்கை என்ன அவளைப்பார்க்க வேண்டிய வழி என்ன..சொல்லித்தந்து வளர்க்கலாமே தத்தம் மகன்களை.!

சொல்ல வேண்டியதை சொல்லித்தரவேண்டிய வயதில் தந்துவிட்டால் , பின் வரும் தலைமுறை ஆரோக்கியமாக தழைக்கச்செய்வோமே !

பெண்களுக்கு பெண்களே எதிரிகளாக இல்லாமல் நல்ல கைத்தூக்கிவிடும் சிநேகிதியாகக் கற்றுத்தரும் ஆசானாக , வழிக்காட்டிடும் விளக்காக இருப்பது உண்மையானபெண்ணியம்.

வெற்றி என்பது இலக்கே அல்ல. வெற்றியடைபவர்கள் மேலேயே கற்களும் வீசப்படுகிறது.. வீசுபவர்கள் கைவலிக்க, அடுத்தடுத்த இலக்குகளை நோக்கி நகர்வதே பெண்ணியம்.

இதையே மகளிர்தின வாழ்த்தாக அனைத்து சகோதரிகளுக்கும் தோழிகளுக்கும் சொல்ல விரும்புகிறேன்.

தினமலர் என் பார்வைப் பகுதியில் வெளியான என் கட்டுரை.

No comments:

Post a Comment