Tuesday, 2 February 2016

மயக்குகிறாள் மன்னன் மகள்

சரித்திரக் கதைகளின் சிறப்பம்சமே நாம் அந்தக்காலக் கட்ட வாழ்க்கைமுறையை தெரிந்துக்கொள்ளவும் , அந்தப்பாத்திரங்களில் நம்மைப்பொருத்திப்பார்க்கவும் , அன்றைய க் காலக்கட்டத்தில் எப்படி இருந்திருக்கும் என்ற நம் கற்பனைக்கும் வடிகாலாக  இருக்கும்.

சிறிய வயதில் , தஞ்சைப்பெரியக்கோயிலும் , சுற்றியுள்ள கோயில்களும் சோழ தேசத்தின் மிச்சமாக அறிமுகமானாலும் வரலாற்றில் படிக்கும் போது , வருடங்களை நினைவில் கொள்வது சவாலாக தான் இருந்திருக்கிறது. எப்படி இருந்திருக்கும் இதே சாலை அப்போது..ராஜபாட்டை என்கிறார்களே இப்படித்தான் போயிருப்பார்களா , மாட மாளிகைகள் எப்படி இருந்திருக்கும் என உறையூர், கும்பகோணம், தஞ்சை வீதிகள் அதிகம் யோசிக்க வைக்கிறது இப்போதும்.

கங்கைக்கொண்டான் , கடாங்கரங்கொண்டான் (மயிலாடுதுறை அருகில் அதன்பின்பே ஊருக்குப் பெயர் வந்திருக்க வேண்டும்) எனப்பெயர்களுடன் படித்த இராஜேந்திர சோழனின் வரலாற்றில் ..முக்கிய மைல்கல் கங்கையில் புலிக்கொடி நாட்டியதும்.கடாரத்தில் சோழர்களின் ஆட்சி விரிவடைந்ததும்.

இதனை அடிப்படையாகக்கொண்ட ஒரு நாவல் , மன்னன் மகள் !

நாகையின் கடற்கரையோரம் ஆரம்பிக்கும் கதை , அதே கடற்கரையில் முடிவடைகிறது. நடுவில் கதாநாயகனாக கரிகாலனும் , அவனைச்சுற்றி பின்னப்பட்ட மர்மமுடிச்சுகளும் ,

ஆட்சியைப்பிடிக்க அப்பாவையேக் கொன்ன அரசியல் வரலாறுகளுக்கிடையில் ,
நம் தமிழன் சே எப்படி வாழ்ந்திருக்கிறான் என இறுமாப்புடன் மார்தட்டிக்கொள்ளலாம். மூன்று தலைமுறை யாக சிம்மாசனத்தை விட்டுக்கொடுத்து , வெளிக்காட்டாத வாழ்வு என்பதை ஆசிரியர் கதை நகர்த்துதலில்
..நம்மையும் கற்பனையில் நீந்தவைத்து , சோகத்தில் மூழ்க வைத்து , காதலில் திளைக்க வைக்கிறார்.

புத்தத்துறவிகளிடையே வளர்க்கப்படும் கரிகாலன் , தன் பிறவி ரகசியத்தை தெரிந்துக்கொள்ள வாலிபப்பருவத்தில் மடாலயத்தை விட்டு , தஞ்சை த்துறவியை சந்திக்க முக்கிய சாட்சியாகியாகிறது பச்சைக்கல் மோதிரம் , சைவத்துறவியாக சேர ஒற்றனின் சேர்க்கையால் தவறுதலாக வேங்கி நாட்டில் மாட்டிக்கொள்கிறான்.

வேங்கி நாடு , இராஜ இராஜ சோழனின் மகள்  குந்தவி விமலாதித்தனை மணந்துக்கொண்ட நாடு.(இராஜ ராஜ சோழன் படத்தில் , நம் லஷ்மி பின்னி பெடலெடுத்த கதாப்பாத்திரம் ஆச்சே ..மறக்க முடியுமா! )
அந்த வேங்கி நாட்டில்குந்தவி- விமலாதித்தனின் வாரிசாக இராசேந்திர நரேந்திரன் , நிரஞ்சனா தேவி (ஹீரோயின்) , நம் கரிகாலனுக்கு அறிமுகம் .அவர் நாட்டை சாளுக்கிய மன்னன் ஜெயவர்மனிருடமிருந்துக் கைப்பற்ற சதி செய்கிறார் சோழ நாட்டின் தளபதியுடன்.

ஏன்..என சில சுவாரசியமான முடிச்சுகள்

அங்கு தடாகத்தில் , பௌர்ணமி நிலவில் தேவதையாக நிரஞ்சனா தேவியை சந்திக்கும் கரிகாலன் மனதைப் பறிக்கொடுக்க , அவள் ஈடுப்பட்டுள்ள சதியை உணர்ந்து...என் வாள் உனக்கு அடிமை எனப் புறப்படுகிறான்.

அப்பப்பா..எத்தனை எத்தனை வர்ணனைகள் , தேவியின்  எழில் பிரதேசங்களையும் அதில் ஏறி இறங்கும் கரிகாலனின் மனதையும் காதல் ரசம் சொட்ட சொட்ட வடித்திருக்கிறார் ஆசிரியர்.

ராஜதந்திரங்கள் , தர்க்க சாஸ்திரம் , கண்களால் உணர்வுகளை படிக்கும் சாமர்த்தியம் , விவேகத்துடன் கூடிய வேகமான வீரம் , போர்த்திறன் இப்படி கலந்துக்கட்டி தருகிறார்.

வேங்கி நாட்டு மன்னனின் நம்பிக்கைக்குப்  பாத்திரமாவது , பின் அவன் ஒற்றனையும் சோழ நாட்டு படைகளின் பாசறைக்கு சேர்ப்பது , படைத் தளபதியாக உயர்வது என செல்லும் கதை ஏறி இறங்கிப்போகிறது.

இராஜேந்திர சோழனின் படைத்தலைவன் அரையன் ராஜராஜன் சோழியவரையன் வீரம் விவேகம் , பொன்னியின் செல்வனின் துடிப்பான வந்தியதேவன் இங்கு தேவர் ஆக பொறுப்புடம் கண்ணியமாக(வயது ஆகுதுல்லயா! :)) , அந்தணராக இருந்து படைகளை வழி நடத்திய பிரும்மராயர் ..விழி விரிய வைக்கும் கதாபாத்திரங்கள் , படைப்பில் அத்தனை நேர்த்தி !

சோழ பாசறைக்கு வந்து சேரும் வரை மெதுவாக நகரும் கதை..பின் கங்கையின் படையெடுப்பு எனும்போது ஜெட் வேகத்தில் கிளம்புகிறது படிக்கும்  நமக்கும் உற்சாக பானத்தைத் தந்தப்படி !

கங்கைபடையெடுப்பில் , படையின் உப தளபதியாக போர் சூத்திரங்கள் சொல்லும் விதமும் , நாகர்களின் மாசுணி தேசத்தில் போரிடும் முறையை ஆசிரியர் நம்மை கோட்டைக்கு வெளியே நிறுத்தி வேடிக்கைப் பார்க்க வைக்கிறார்.

யாரோ புத்தத்துறவிகளுடன் வளர்ந்த அனாதை பையனின் பிறப்பின் ரகசியத்தை வெளிப்படுத்தும் விதம் மிக அருமை.

நடுவில் அரையன் ராஜராஜன் மகள் செங்கமல செல்வியுடன் ஆன ரொமான்ஸ் என கலந்துக்கட்டிப் பயணிக்கிறோம் கரிகாலனுடன்.

இறுதியில் கங்கையை வெல்ல கரிகாலன் செய்த உதவி பயனடைந்ததா , மன்னன் மகளின்.மேல் தீராக்காதல் கொண்டு அவள் தம்பிக்கு வேங்கி நாட்டைத் திருப்பித் தந்தானா ?

தான் ஒரு யார் என்ற உண்மையை அறிந்தானா கரிகாலன் என முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்க்கிறார் ஆசிரியர்..

யாரிவர் ,

குமுதம் இதழில் 1958, 1959 ல் தொடர்கதையாக வெளிவந்துப் பின் நாவலாக்கியவர் , சரித்திர நாவலாசியர்களுக்கு பிதாமகர் திரு. சாண்டியல்யன் அவர்கள்.

நல்ல சரித்திர அனுபவத்தை சோழனின் தீரத்தை சகலமும் கலந்து சுவைப்பட சொல்லிப்போகிறாள் இந்த மன்னன் மகள்.
முடித்து வைக்கும் போது..அடடா ! முடிஞ்சுப்போச்சா என எண்ண வைத்து வெற்றிப்பெறுகிறார் நாவலாசிரியர்.

கவிதை நடையுடன் உவமைகளையும் , தத்துவங்களையும் வாரியிறைத்து புதினம் படைத்திருக்கிறார்ஆசான் திரு
சாண்டில்யன். ம.செ அவர்களின் ஓவியம் கண்முன் நிறுத்தி காவியமாக்குகிறது கதையை.

படித்திருந்தால்...திரும்பப்படிங்களேன். இல்லையா..அப்பறமென்ன..உடனே படிக்க ஆரம்பீங்க..

மீண்டும் இன்னொரு புத்தகத்துடன் சந்திக்கிறேன்.

No comments:

Post a Comment