Wednesday 18 May 2016

பெருங்கடல் காவிரியின் மீது பள்ளிக்கொண்ட அரங்கனின் வைபவம் சொல்லும் திருமாலை பாசுரம்

தமிழ் இலக்கியங்களில் தனி சிறப்பிடம்
பக்தி இலக்கியங்களுக்கு உண்டு.
பக்தியையும் வாழ்வியலையும் பிணைத்து வைத்தனர் இலக்கியங்களாக நம் முன்னோர்கள்.

தமிழ் பக்தி இலக்கியங்களில் வைணவத்தைப்போற்றி , திருமால் மஹாவிஷ்ணுவைப்பற்றி பாசுரங்களை இயற்றிவர்கள் ஆழ்வார்கள் என அழைக்கப்படுகின்றனர்.

இவர்கள் பன்னிருவர். இவர்கள் பாடிய தொகுப்பு நாலாயிரம் , நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் எனப்படுகின்றன.

இதில் அன்றைய சோழமண்டலம் , திருமண்டகக்குடியை பூர்வீகமாகக்கொண்டு , திருமால் பக்தியுடன் வாழ் நாள் தொண்டாக பூத்தொடுத்து இறைவனுக்கு சமர்ப்பிக்கும் அருந்தொண்டுப்புரிந்துவந்தவர் தொண்டரடிப்பொடியாழ்வார், இவர் இயற்பெயர் விப்ர நாராயணர்.

இவர் இயற்றியவை திருமாலை , திருப்பள்ளியெழுச்சி. திருவரங்கம் , ஸ்ரீரங்கம் கோவிலில் உறையும் பெரிய பெருமாள் அரங்கனை மட்டுமே இவர் பாடியவர் என்ற தகவலுடன், "திருமாலை" யில் அடுத்த பாசுரமாகிய 18 வது பாசுரத்தைக் காண்போமா !!




பாசுரம் :

இனிதிரைத்திவலை மோத எறியும்தண் பரவைமீதே
தனிகிடந்தரசு செய்யும் தாமரைக் கன்ணனென்ம்மான்
கனியிருந்தனைய செவ்வாய்க் கண்ணனைக் கண்ட கண்கள்
பனியரும் புதிரு மாலோ எஞ்செய்கேன் பாவியனே !

இனி அர்த்தமும்..விளக்கமும்..காண்போம் :

இனி - இனிதான
திரை  - அலை
திவலை - அலையின் துளி
மோத - இனிதாக அடித்து மோத
எறியும் - கொந்தளிக்கின்றன
தண் - குளிர்ந்த
பரவை மீதே - கடலைப்போன்று விரிந்தக் காவிரியின் மீது

தனிக்கிடந்தரசு செய்யும் - தனியாகக்கிடந்தருளி
அரசு செய்யும் - செங்கோல் செலுத்தும்..அரசாட்சி செய்யும்..அரக்கர்களை அழித்து மக்களைக்காத்து அரசு புரியும்
தாமரைக்கண்ணன் - தாமரை ப்போன்ற அழகியக் கண்களைக்கொண்ட கண்ணன்..அரங்கன்
எம்மான் - எமக்கு தலைவன்
கனி இருந்தனைய செவ்வாய் கண்ணனை - கொவ்வைக்கனிப்போன்ற சிவந்த வாயினையுடைய கண்ணன்
கண்ட கண்கள் - தரிசித்தக் கண்கள் (என் கண்களிலேயே நிற்கிறான்)
பனி அரும்பு - குளிர்ந்தக் கண்ணீர் துளிகள்
உதிருமாலே  - கண்களிலிருந்து பெருகுகின்றதே
பாவியேன் - பாவியாகிய (கண்ணாரக்கண்டுக்களிக்க முடியாத) நான்
என் செய்தேன் - என்ன பாபம் செய்தேனோ !

பாசுர விளக்கம் :

அலைகள் உண்டாக்கும் நீர்த்திவலைகள் அரங்கனது திருமேனியை  இனிதாக வந்து அடித்து மோத,
கொந்தளித்தும் குளிர்ந்தும் கடலைப்போன்ற அகன்ற காவிரியின் மேல் தனியாகக்கிடந்து கண் மூடியபடியே , பகைவர்களிடமிருந்து பக்தர்களை காத்து அருளும் , அரசாட்சி செய்யும் தாமைரையைப்போன்ற அழகியக்கண்களைக் காட்டி எம்மை அவன் பால் அன்பு பெருகவைத்த எம் தலைவன் அரங்கனை பெரிய பெருமாளைக் கண்டக் கண்களில் ,
பனித்த்துளிகள் போல கண்ணீர்  பெருகிறதே..அரங்கனை முழுவதும் தரிசித்து அனுபவம் பெறமுடியாத பாவியாகிப்போனேனே நான் என்ன செய்வேன் !

இங்கு .. பரந்த பாற்கடலைப்போல..காவிரியும் பரந்து விரிந்துள்ளதாம். அது கொந்தளித்தும் குளிர்ந்தும் இருக்கிறது.

வைகுண்டத்தில் பள்ளிக்கொண்டுள்ளதைப்போலவே நாராயணன் திருவரங்கத்திலும் பள்ளிக்கொண்டுள்ளான்..
அப்போது காவிரி அலையின் துளிகள்..இனிதாக அவரது திருமேனியின் மீது மோதுகின்றன.

திருவரங்கத்தில் அரங்கன்
தனியாக அருகில் தாயார் இல்லாமல் கிடந்தப்படியே கண் மூடி உள்ளார்.
 இவர் பகைவர்கள் , அசுரர்களை அழித்து  , பக்தர்களைக் காத்து ஆட்சிபுரிகிறார்.

தாமரையை போலுள்ளது அவர் கண்கள்..அந்தக்கண்களில் மயங்கியே  அவர் மேல் அன்பை வெள்ளமாக பெருக வைத்தார்.
அந்தக் கண்களை தரிசிக்கும்போது..பனித்துளிகள் போலே என் கண்ணீர் துளிகள் வந்து திரையிட்டு தடுக்கின்றனவே...

அவர் திருமேனியின் அழகை தரிசிக்க முடியாதப் பாவியாகிப்போகிறேனே என்ன செய்வேன் என தொண்டரடிப்பொடியாழ்வார் புலம்பும் பாசுரம் இது !


பெருமாளைக்காணும்போது மனம் பக்தியில் சுழன்று..அவனது திருமேனி தரிசனம் கண்டவுடன்..கண்கள் கண்ணீர் சொறிகின்றன. அதனால் அவரால் தரிசிக்க முடியவில்லை. ஆகையால்..

அடியேன் என்ன பாபம் செய்தேனோ என்று புலம்பி அரற்றி ஆழ்வார் பாடியுள்ள பாசுரம்..காவிரியின்  சிறப்பையும் ..

அரங்கனின் மேலுள்ள தீராக்காதலையும் உணர வைக்கும் பாசுரம் இது.

இனி அடுத்தப்பாசுரம் ஆழ்வாரின் பாதம் பணிந்துக் காண்போம்.

No comments:

Post a Comment