Saturday, 12 September 2015

இப்படியும் ஒரு சோதனை ..

பேச வேண்டிய இடத்தில் பேசணும் ..இது என்னவர் அடிக்கடி சொல்வது . முன்பே ஒரு பதிவு ஷாப்பிங் அனுபவம் எழுதியிருந்தேன் . 

அதில் இன்னொன்றையும் குறிப்பிடுவதாக எழுதியிருந்தேன் ..அதோட வால் பதிவு இது . ஆனா சின்ன வால் தான் , தைரியமா படிக்கலாம் .

சென்ற வருடம் , திருச்சியில் அந்த பெரிய ஹாஸ்பிடலில் , (பல கிளைகள் உண்டு அதற்கு தமிழகத்திலும் , இந்தியாவிலும் , புரிஞ்சுருக்குமே எதுன்னு ..அட நம்ம ரெட்டி காரு ஹாஸ்பிட்டல்ங்க ) அம்மாவிற்கு , செக்கப்ன் போது , கைனகாலஜி டாக்டர் , ஒரு டெஸ்ட் எழுதித்தந்து அதே ஹாஸ்பிட்டலில் செய்துக்கலாம் என்றார் . 

முதல் நாளே , ரெடி ஆக சொல்லி , காலையில் 6 - 6.30 மணிக்குள் , எமர்ஜென்ஸியில் ரிப்போர்ர்ட் செய்யச்சொல்லவே , சொன்னப்படி கரெக்டா ஆஜரானோம் . (அது ஹிஸ்ட்ரோஸ்கோபி ) . 

எமர்ஜென்ஸியில் , ஆஜராக , பொழுது போகாமல் , தூக்கத்தை தியாகம் செஞ்சிருந்த ஊழியர்கள் , ப்ரெஷ்ஷா நிக்கும் எங்களைப்பார்த்து கடலை..சே ..பேசத்தொடங்கினார் , " என்ன செய்யறீங்க மேடம் , வொர்க்கிங் ஆ " ...எதிர்பார்த்த கேள்வி வந்து விழகொடுத்த பார்மை பூர்த்தி செய்தப்படியே  , புன்னகையையே பதிலாக்கி , ஆர்.ஜே என்றிட வழக்கப்படியே , விசாரணைகள் தொடங்கிட பதிலளித்தப்படியே , சர்க்கரை நோயாளியான , அம்மாவை அருகிலிருந்த வெயிட்டிங் ஏரியாவில் வெயிட் செய்யச்சொல்லி , பார்மலிட்டிஸ் பார்த்திருந்தேன் . சற்று நேரம் பிடித்தது கார்ட் பேமண்ட் என்பதால் . 

முடித்து , ஜெனரல் வார்டில் படுக்கைத்தரப்பட , டாக்டர் 9 மணிக்கு வருவார் , என்றும் ,  தியேட்டரில் செய்ய இருப்பதால் அதற்கான ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தனர் . 

அம்மாவிற்கு வெறும் வயிறு , காலை 9 மணிக்கு வந்த டாக்டர் , சிரித்தப்படியே எல்லாம் ஓகேயா ம்மா என்று கேட்டப்படி வந்து 10 மணிக்கு மேல தியேட்டருக்கு ஷிப்ட் செஞ்சுருங்க என்று , அருகில் ஒற்றைக்கால் தவப்போஸில் நின்றிந்த நர்ஸுகளுக்கு ஆர்டர் தந்து சென்றார் , வழக்கம் போல , நான் மடக்கி , "எவ்வளவு நேரம் ப்ரஸீஜர் ?" , 

அவர் "ஜஸ்ட் 30  மினிட்ஸ்!" தான் என்று சிட்டாய் விரைந்தார் . 

சரியாக 10 மணிக்கு கரெக்டா ஷிப்டிங் க்கு வந்தார்கள் .. எனக்கு வயிற்றில் பட்டாம்பூச்சியும் , பயத்தில் கரப்பான் பூச்சியும் சுரண்ட ஆரம்பித்தது .

என்னதான் ,  துணிச்சலாக இருந்தாலும் , அம்மாவை தியேட்டருக்கு அதிலும் 67 வயதானவரை அனுப்ப மனது , கஷ்டத்தில் மூழ்க ஆரம்பித்தது . கண்ணீரும் வரலாமா என்று கேட்டப்படிக்காத்திருக்க ஆரம்பித்தது .

தியேட்டருக்கு வெளியே வெயிட் பண்ணுங்கக் கூப்பிடறோம் என்ற நர்ஸின் வழிக்கட்டாலின் படியே தேவுடு காக்க ஆரம்பித்தேன் , ஆப்ரேஷன் தியேட்டர் இருந்தது 2 வது தளத்தில் , வெளியில் உட்கார எந்த வசதியும் கிடையாது ..ஒரே ஒரு சேர் - டேபிள் அது , அங்கு ஒரு செக்யூரிட்டிக்கு, அவர் முன் படமெடுக்கும் பாம்பு போல ஒரு மைக் ..அதில் தான் கூப்பிட்டார் , பேஷண்ட்ஸ் உறவினர்களை..

வெளியில் நின்றப்படியே , வாய் பல ஸ்லோகங்களை முணுமுணுக்க ஆரம்பிக்க , (அம்மாக்கு , அந்த டெஸ்ட் கேன்ஸர் செக்கப்பிற்காக , அதற்கு முந்தைய பல டெஸ்ட்கள் ஆகிருந்தது !) 

இப்போது என் டென்ஷனுக்கான காரணம் புரிந்திருக்குமே ..

அம்மாவுடன் மூவர் தியேட்டருக்கு கொண்டுப்போகப்பட்டனர் , அவர்களின் உறவினர்களும் வெளியில் காத்திருக்க , சிலர் அழுதப்படியும் , அவர்களுக்குள் பேசியப்படியும் இருந்தனர். 

ஒருவருக்கு ஒரு மேஜர் சர்ஜரி , இதய சர்ஜரிப் போலிருந்தது . உறவினர்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர் . ஆனா எல்லாருமே ஸ்டாண்டிங் பொஸிஷன் தான் . அவர்களுக்குள் பேசி முடித்தப்பின் என்னையும் பார்த்து , கேட்க வாயெடுத்து அமைதியானது , எனக்கு அப்பாடா ! என்றிருந்தது . பெர்சனல் கேள்விகளையும் , அதற்கு தேவையற்று பதில் தருவதும் பொது இடங்களில் தவிர்ப்பதும் , விரும்பதாதும் அதுவும் அன்றிருந்த மனச்சுமையில் , இடம் மாறி மாறி நின்றேன் . மணித்துளிகள் நாட்கள் போல கடக்க , இருந்த மனிதர்களும் , அவர்தம் அழுத இருண்ட முகங்களும் , மருத்துவமனையில் மக்களின் மன நிலையை பிரதிபலிக்க , கவிதையும் தோன்ற எழுதி வைத்தேன் . 

சர்ஜரி முடிந்ததும் , பேஷண்ட்ன் பெயர் சொல்லி அட்டெண்டர்களை அழைத்து , அவர்களும் உள் சென்று , பார்த்துவர , மணி 2 தாண்டியது . 

 அடுத்த மாடிக்கு செல்லும் படியில் அமர்ந்திருந்தவர்கள் சாப்பிடப்போக , ரெண்டு தரம் என் கேள்வியை சந்தித்த அந்த செக்யூரிட்டியும் , சாப்பிடப்போனார் . 

அங்கு நான் மட்டுமே ! , பதட்டம் மட்டுமே அதிகரித்தப்படி இருந்தது , யாரும் வந்து எந்த தகவலோ , என்னாச்சு அம்மாக்கு என்றோ சொல்ல வில்லை . 

3 மணிக்கு மேல் மெதுவாக அந்த செக்யூரிட்டி என் முகம் , கண்டு ,  என் அம்மாவின் பெயர் கூற பாய்ந்து ஓடினேன் .. (சாப்பிடவும் இல்லை..கேண்டீன் மூடப்பட்டிருந்தது ) ! , 

முதலில் அம்மாக்கு என்னாச்சு ந்னு ஆர்வம் மேலிட , மன அழுத்ததில் கண்ணீரும் போட்டிப்போட்டது என்னுடன் . போஸ்ட் ஆப்ரேட்டிவ் பிரிவில் உள் நுழைய டாக்டர் ,  "அதோ உங்க அம்மா பாருங்க ,  நான் பார்த்தவரைக்கும் கேன்சர் மாதிரி தெரியலை , பயாப்ஸிக்கும் அனுப்பறேன் . நீங்க பயப்படவேண்டாம் " .. 

" டாக்டர் , அப்ப , கம்ப்ளீட்டா கேன்ஸர் பயமில்லையே ?"  என்று ரெண்டாவது முறையும் கேட்டு வாங்கிக்கொண்டேன் பதிலை .

அம்மாவிடம் நெருங்க , அம்மாவை அனஸ்தீஷியா எபெக்டிலிருந்து மீட்க நர்ஸ் முயற்சி செய்துக்கொண்டிருந்தார் , அம்மா முடியாமல் என் குரல் புரிந்தும் , ஏதேதோ உளறினார் . 

"பயப்பட வேண்டாம் , இன்னும் கொஞ்ச நேரத்தில் , வார்டுக்கு ஷிப்ட் செய்வாங்க , நீங்க கவலைப்படாமல் போங்க " ! என்று மனதைப்படித்த நர்ஸ் அனுப்பிவைக்க , ஒரு புறம் அப்பாடா! என்றிருக்க , என்னாச்சு ..ந்னு 2 தரம் போன் பண்ணிருந்த  கணவருக்கு மெசேஜ் தட்டிவிட்டு , அப்பாக்கும் போன் செய்து வைத்தேன் .

" 30 நிமிஷம் ப்ரொஸிஜர்ன்னு சொன்னயே , ஏன் பின்ன 5 மணி நேரத்துக்கு மேல ஆச்சு ? " என்றார் .

" ஆமாங்க !, ரொம்ப பயந்துப்போயிட்டேன் , எதாவது சீரியஸ் ப்ராப்ளமோ என்னவோ ந்னு (ஏற்கனவே நிறைய அனுபவம் , பெரிய ஹாஸ்பிடல்ல , தன் தவறோ எதாவதோ நிகழ்ந்திருந்தால் , நமக்கு செய்தி லேட்டாகவே வரும் ..என் குழந்தை பிறப்பின் போது நன்கறிந்தவள் ) பயந்துப்போயிட்டேன் , எதாவதுன்னா ..இப்ப என்ன செய்யறதுன்னு நடுங்கிட்டேன் "  என்றேன் . 


மிகவும் டென்ஷனா , பதட்டமான சூழலில் என்னால் சண்டைப்போடவோ போராடவோ முடியாது என்றறிந்த நாள் அன்று .

கொஞ்ச நேரம் சென்றதும் ஒரு காபி சாப்பிட்டு வர , பதட்டம் தணிந்து , கோபம் பீறிட்டது , அந்த செக்யூரிட்டியிடன் முதல் கோபத்தைக்காண்பித்தேன் . 

 "ஏன் இவ்வளவு நேரமாச்சு ?, ஏன் இங்க உக்கார கூட வசதியில்ல , எத்தனை மணி நேரம் வெயிட் செஞ்சேன் தெரியுமா ,  ...இங்க யார் உங்க ஹெட் ? கம்ப்ளைண்ட் தரணும் " . என்றேன் , கொஞ்சம் கோபத்தில் கைகளும் நடுங்கியது .

பாவம் அவரும் , என் நிலை உணர்ந்தவராக , உடனே கீழ எங்க பி.ஆர்.ஓ பாருங்கம்மா ...அவங்க கிட்டதான் தரணும் என்றார் . 

விசாரித்து ..இங்க பெரிய பெரிய ஹாஸ்பிடல் , மதித்துப்பேசும் பல நாட்டு டாக்டர்ஸ் பார்த்தாச்சு ..இதென்ன பிரமாதம் என்று மனசு கொக்கரித்து , விடாதப்போ !! என்று கூவியது !!

நாலு கால் பாய்ச்சலில் ஓடினேன் ... ஜெயஸ்ரீ என்ற பெயர் பலகை , தாங்கியிருந்த, அந்த பீ.ஆர்.ஓ பெண்ணின் அறை கண்ணில் பட .

வந்த ஆத்திரத்தை வார்த்தைகளாகக்கோர்க்க ,

 " என்ன நடந்ததுன்னு தெரியணும் , எத்தனை மணி நேரம் என் அம்மா , அதுவும் டயபடிக் பேஷண்ட்,  உள்ள இருப்பார் ? , நா நின்னப்படியே 5 மணி நேரம் வெயிட் செஞ்சுருக்கேன் , என்ன நடக்குது உங்க ஆஸ்பிட்டல்ல.. பணத்தை மொத்தமா பே பண்ணி உங்க சர்வீஸ் நல்லாருக்கும்ன்னு நம்பித்தானே  வர்றோம் ..ஏன் இப்படிப்பண்றீங்கன்னு " கொட்டி தீர்த்தேன் .

 " சாரி மேடம் , கொஞ்சம் அமைதியா இருங்க , இதோ விசாரிக்கிறேன் " என்றவர் , முதலில் நர்ஸிங் ஸ்டேடஷ்ன் போன் செய்ய , பின் , தியேட்டர் , என விசாரணையை துவக்கினார் . 

அப்போது தான் தெரிந்தது , எனது , கிரெடிட் கார்ட் பேமண்ட் இவர்களுக்கு வந்து சேர , மணி 2 க்கு மேல் ஆனதாம் , அதுவரை பேஷண்டை ட்ரிப் போட்டு தியேட்டரில் படுக்க வைத்திருக்கின்றனர் . 

நான் பணத்தைக்கட்டும்போது காலை மணி 6.30 , உடனே சிறிது நேரத்திற்குள் , பணம் எடுக்கப்பட்டதும் , அது ஹாட்பிட்டல் அக்கவுண்ட்டுக்கு ட்ரான்ஸ்பர் ஆனதற்கும் ஆன ரெசிப்ட் , ஈமெயிலாக வந்திருந்தது எங்கள் அக்கவுண்ட்டுக்கு . அந்த ஈமெயிலை எடுத்துக்காட்ட அந்த பெண்மனிக்கு முகத்தில் ஈயாடவில்லை ..

" எனக்கு பதில் கிடைக்கணும் , இது யாரோட மிஸ்டேக் , ஏன் நாங்க கஷ்டப்படணும் ? "என்று சீறிவிட்டு வெளியே வந்தேன் ..

நீயா சுமி என்று எனக்கே ஆச்சர்யம் தாங்கவில்லை .. பொதுவாக நடந்தது நடந்துப்போச்சுப்போ ..ந்னு தூக்கிப்போட்டு போகும் நான் இன்று சண்டைப்போடும் அளவிற்கு வந்துட்டேனா ந்னு கொஞ்சம் கிள்ளிப்பார்த்துக்கொண்டேன் . 

கணவரிடன் அப்டேட் செய்தப்படியே ,மருத்துவமனை நிர்வாகிகளின்  மேலதிகாரிகளுக்கும் , மெயில் அனுப்பினேன் . 

மாலை , டிஸ்சார்ஜ் , அதற்குள் அந்தப்பெண்மணி சமரசத்திற்கு வந்தார் . 

 " இது எங்க staff mistake  தான் , தயவு செய்து மன்னிச்சுக்கோங்க , இனி உங்களுக்கு எது தேவைன்னாலும் , எந்தப்பிரச்சனை , அப்பாயிண்மெண்ட் வேனும்னாலும் வாங்க , தயவு செய்து இந்தப்பிரச்சனைய இதோட விட்டுடுங்க..ப்ளீஸ் ! " என்று கெஞ்சவும் , அம்மா , நிதானத்திற்கு வரவும் சரியாக இருந்தது .

முன்பே யாராவது சொல்லிருந்தா , சரி செய்திருக்கலாம் , சொல்லலையே . 

சர்வீஸ் , நோபல் ப்ரொபஷன் எல்லாம் அடுத்தபட்சம் தான் என வெறுப்பே மிஞ்சியது .

இனி என்ன ஆகப்போகுது,

எப்படியோ போகுட்டும் போ ! என்று மனதில்  நினைத்தப்படி , டாக்சி புக் செய்து , ஆதவனும்  ரெஸ்ட்க்கு போக , நானும் அம்மாவுடன் வீடு வந்து சேர்ந்தேன் ...

அன்று தவித்த தவிப்பு .. அப்பப்பா !! ..ஹாரிபிள் ..

No comments:

Post a Comment