அன்னவயற்புதுவையாண்டாள் அரங்கற்கு
பன்னு திருப்பாவை பல்பதியம் - இன்னிசையால்
பாடிக்கொடுத்தாள் நற்பாமலை பூமாலை
சூடிக்கொடுத்தாளை சொல்லு
சூடிக்கொடுத்த சுடர்கொடியே தொல்பாவை
பாடியருளவல்ல பல்வளையாய் - நாடி நீ
வேங்கடவற்கு என்ன விதியென்றவிம்மாற்றம்
நான்கடவா வண்ணமாநல்கு.
பட்டர்பிரான் கோதை,பெரியாழ்வார் பெற்றெடுத்த பெருஞ்செல்வம்,பைந்தமிழால் திருமால் ஸ்ரீமன் நாராயணனை மானிடர் பெற இயலா பேறாக,பறையாக பாடிப் பெற்றவள்.
ஆண்டாள் என்ற பெயர் கொண்டாள் வடபெருங்கோயிலுடையானால்...!
சூடி கொடுத்த சுடர்கொடியே என்று,கருடனில் அமர்ந்த நாச்சியர்களுடன் கூடிய திருமாலுக்கு கண்ணேறு படுமோ என்றஞ்சி,தாயாகி பல்லாண்டு பாடிய விஷ்ணுசித்தர் என்ற பெரியாழ்வாரால் அழைக்கப்பட்டாள்.
கோதையாகி,அனைவருக்கும் தாயாகி ஸ்ரீவில்லிப்புத்தூரில் ரெங்கமன்னாருடன்,கருடனுக்கு தம்முடன் சம ஆசனம் தந்து அருள்பாலிக்கும் ஆண்டாள் நாச்சியார் தமிழை ஆண்டதோடு,மானிடரும் பக்தியால் பகவானை அடையலாம் என்ற வழியை வெவ்வெறு பிறவிகளில் உழலும் நமக்கு வழிகாட்டியாக அடர் இருளில் பிரகாசிக்கும் முழு நிலவாக,சூரியனது ஒளியை வாங்கிக்கொண்டு ஒளிரும் நட்சத்திரமாக நம்மிடையே தோன்றியவள்.அவள் பெருமையை பாட இவ்வரிகளும் புண்ணியம் செய்தனவோ !!
வேயர் என்ற அந்தணர் குலத்தில் பிறந்த விஷ்ணுசித்தர் கண்ணனின் அவதாரம் முடிந்து 500 ஆண்டுகளில்.. வில்லிப்புத்தூரில் அவதரித்தார்.
கண்ணனின் பிரபாவங்களில்.. ஆழ்ந்திருந்தவர், கண்ணன் மதுராவில் முதன்முதலாக நுழையும் போது தன்னை அலங்கரித்துக்கொள்ள ஒரு மாலைக்கடைக்காரரிடம் சென்று மாலை கேட்க,பல முனிவர்களும் ஞானிகளும் காண தவமிருக்கும் புவனங்களின் நாயகன்..தன்னிடம் மாலை வாங்கி அணிய விரும்புவதை அறிந்த மாலைக்கட்டி விற்பவர்..உருகி..தனக்கு மறுபிறப்பில்லா மோட்சப்பேற்றினைக்கேட்டு பெற்றதை அறிந்தவர்..தானும் அவரை போல பகவானுக்கு உகந்த பூக்களை மாலையாக்கி சூட்டிப்பார்க்கும் கைங்கர்யம் செய்ய ஆசைப்பட்டார் !
அதற்காக தன் முன்னோர்களின் சொத்துக்களை,விற்று நிலம் வாங்கி அதற்கு வேலி அமைத்து அங்கு திருத்துழாய் தாமரை,நீலோற்பலம்,செங்கழுனீர்,ஆம்பல்,முல்லை போன்ற மலர்ச்செடிகளை பயிரிட்டார்.
அவற்றிலிருந்து கிடைக்கும் மலர்களை தினமும் அதிகாலையே நீராடி,மலர்கள் வந்து மலர்களில் அமர்ந்து தேன் எடுக்கும் முன்பே தான் அந்த மலர்களின் மணத்தை முகர்ந்திடக்கூடாதென
முகத்தில் சிறு துணி கட்டிக்கொண்டு பறித்து அவற்றை மாலைகளாக கட்டி அதை வடபெருங்கோயிலுடையானுக்கு சமர்ப்பித்து வந்தார்.
*வடபெருங்கோயிலுடையான்.. வடபத்ரசாயி கிடந்த திருக்கோலத்தில் பச்சைமா மலைப்போன்ற மேனியழகுடன் கிளி கோவைப்பழமோ என்று ஏமாந்துப்போகும் செவ்விதழ்களைக்கொண்ட பெருமாள்.
இவர் அருள்பாலிக்கும் திருக்கோயில் வில்லி என்ற வேடுவ அரசனால் இறைவன் கனவில் வந்து கூறியப்படியே கட்டப்பட்டது.
காட்டை அழித்து புதிதாக அமைந்த ஊர் ஆதலால் புத்தூர்,வில்லி அரசனால் கட்டப்பட்டதால்..வில்லிப்புத்தூர் பின்னாளில் கோதை வாழ்ந்ததால்.. ஸ்ரீவில்லிபுத்தூர் என்ற மக்களால் அழைக்கப்பெற்றது.
இந்த மாலை கட்டித்தரும் திருப்பணியில் தன்னை இழந்திருந்த விஷ்ணுசித்தர் ஒரு முறை தன் நந்தவனத்தில் துளசி செடிகளுக்கு பாத்தி அமைத்துக்கொண்டிருக்கும் வேளையில்... ஒரு அசாதாரணமான ஒலியுடன் துளசி செடிக்கு கீழே பூமி பிளக்க.. உள்ளிருந்து..அழகிய பெண் குழந்தை வெளிவரக்கண்டார்.
அந்தக்குழந்தை..மிக அழகாகவும்,தெய்வீகக் களையுடனும்,விஷ்ணுசித்தரைப்பார்த்து சிரிக்க, அள்ளிக்கொண்ட அவர்,வட பத்ரசாயி திருக்கோயில் சன்னதிக்குக்கொண்டு சென்று, வனங்கிவிட்டு,இறைவன் குழந்தையில்லாத தனக்களித்த வரமாக எண்ணி வீட்டிற்கு கொண்டுச்சென்று..தன் மனைவியான விரஜையிடம் தந்து,கோதை என்று பெயரிட்டு வளர்க்கலானார் !
அழகு கோதை,நிதமும் தந்தையின் அபாரகண்ணன் பக்தியில் திளைத்தவளாக நினைவிலும் நிஜத்திலும் கண்ணனுக்காகவே வாழ ஆரம்பித்தாள்.
வட நாட்டிலிருந்து வில்லிப்புத்தூர் வந்திருந்த ஒரு ஆன்மீக சொற்பொழிவாளர் கண்ணன் கதையை கூறி வர..அதில் கோபிகைகள்(கோபிகைகளாக பிறப்பெடுத்த முனிவர்கள்) கண்ணனை அடைய யமுனை நதிக்கரையில் காத்யாயினி விரதத்தை முப்பது நாள் அனுஷ்டித்துப்பெற்றதை சொல்லக்கேட்ட கோதைப்பெண்.. சிறுமியாக தானும் அந்த விரதம் மூலம் ஏன் கண்ணனை அடையக்கூடாது என்று சிந்தனையில் ஆழ்கிறாள்.
தன்னையே ஆயர்பாடியில் உள்ள இடைச்சிப்பெண்ணாக, கோபிகையாக உருவகம் செய்துக்கொள்கிறாள்.
வில்லிப்பூத்தூரையே மதுராவாகவும்,வடபத்ரசாயி- வட பெருங்கோயிலுடையான் சன்னதியே கண்ணனின் திருமாளிகையாகவு,ம் கற்பனை செய்துக்கொண்டு.. மாதங்களில் நான் மார்கழி என்ற திருமாலுக்கு உகந்த மார்கழி மாதத்தில் முப்பது நாளும்..தன் தோழி சிறுமிகளுடன் நோன்பு மேற்கொள்ள ஆரம்பிக்கிறாள்.
மார்கழித்திங்கள் மதி நிறைந்த நன்னாளாம்..என்று முதல் பாசுரம் பாடி அனைவரையும் பக்தி முக்தி எனும் பறையை எல்லோரும் இன்புறுற்று தானும் இறைவனை அடைய வேண்டுமென பாடிய கோதை நாச்சியாரின் பக்தியை கூடியிருந்து குளிரவேண்டும் என்ற அவளது பொது நல சிந்தனையை,அனைத்து உயிர்களுக்காகவும் இறங்கி தமிழ் அன்பை இந்த வார்த்தைகளால் தான் வெளிப்படுத்திட இயலுமோ..!
கோதை ஆண்டாளதும்,திருமாலின் தர்மபத்னியானதையும் இனி காண்போமா...
No comments:
Post a Comment