Monday 7 November 2016

அழகிய திருவுரு காட்டும் மாயவன்..அரங்கன் - திருமாலை -20.

தமிழ் இலக்கியத்தில் வைணவர்கள்  பாடிய பாடல்கள்..நாலாயிரத் திவ்யப் பிரபந்தங்கள் எனவும்..பல திருமாலின் திருவுருக்கள் கண்டுப்பாடியவர்கள் ஆழ்வார்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். அவர்களுள் தனிச்சிறப்பு ப் பெற்றவர் தொண்டரடிப்பொடியாழ்வார். இவரைப்பற்றியும்..இவர் எழுதிய திருமாலை..திருப்பள்ளியெழுச்சி பற்றியும் முன்பே எழுதியுள்ளேன்..

அதனைப்பற்றி அறிய..இந்த லிங்கை க்ளிக் செய்யலாம்.

இப்போது சென்ற திருமாலை பாடல்களில் (பாசுரங்களில்) . திருவரங்கத்தின் அழகு.. அதன் மேன்மை, அங்கு பள்ளிக்கொண்டிருக்கும் அரங்கனின் திருப்பெயர்களை சொல்வதன் நன்மை எனக்கூறி வந்தவர் , தான்
அரங்கனைக்கண்டதும் உருகி நின்று விடுவதாகவும் நீங்கள் உருகாமல் தரிசித்துதிரும்பி வருகிறீர்களே..அது எப்படி சாத்தியம் என்று நம்மிடம் கேட்டு...அதற்கான பாசுரத்தையும் தருகிறார்.

இனி பாசுரம் காண்போமா !!

திருமாலை - 20.

பாயு நீ ரரங்கந் தன்னுள் பாம்பணைப்பள்ளி கொண்ட
மாயனார் திரு நன் மார்பும் மரகத வுருவும் தோளும்

தூய தாமரைக் கண்களும் துவரிதழ் பவள வாயும்
ஆயசீர் முடியும் தேசும் அடியரோர்க் ககலாமே !

இனி பாசுர விளக்கம்...அர்த்தத்துடன் :

பாயும் நீர் - பாயக்கூடிய காவிரி நீர்

அரங்கந்தன்னுள் - திருவரங்கம் தன்னுள்..(காவிரி நீர் பாய்ந்து வரும் திருவரங்கத்தில்)

பாம்பு அணை - ஆதி சேஷனாகிய பாம்பின் மேல்

பள்ளிக்கொண்ட மாயனார் -
படுத்துக்கொண்டிருக்கிருக்கும் (உறங்கியப்படி..யோக நித்திரையில் இருக்கும்) ஆச்சர்யப்பட தக்க செயல்களை செய்யும் எம் பெருமான்

திரு நன் மார்பும் - திரு வாகிய மஹாலஷ்மி உறையும் விசாலமான மார்பும்

மரகத உருவும் - பச்சை நிறத்தில் மரகத மணிப்போன்ற நிறத்தில் திரு மேனியும்..உருவும்...

தோளும் - பரந்த தோள்களும்

தூய தாமரைக்கண்களும் - தூய்மையான தாமரைப்போன்ற கண்களும்.

துவரிதழ் - முறுக்கம் பூ போன்ற சிவந்த நிறமுள்ள இதழ்களும்..அதரங்களும்.

பவள வாயும் - பவள போன்ற செந்நிற வாயும்

ஆய சீர் - ஆய- தங்கம் , ஆய - நெடு நாட்களாக உள்ள (ராமரே வழிபட்ட அரங்கனல்லவா !)

தங்கத்தினால் ஆன , சிறந்த திரு முடியும் (க்ரீடமும்)

தேசும் - இவற்றினால் ஆன தேஜஸூடன்..அழகும்

அடியரோர்க்கு - கண்ட அடியவர்கள்...

அகலலாமே - அகலுதல் என்பது இயலுமா - இழக்கத்தகுமோ..!

இனி விளக்கம் :

திருவரங்கம் இரு புறமும் காவிரி நதியால் சூழப்பட்டது. ஆகவே காவிரி நீர் பெருகி சூழ்ந்துக்கொள்ளும் திருவரங்கத்தில் , ஆதி சேஷன் என்கிற பாம்பின் மேல் படுத்துக்கொண்டு கண் மூடி தூங்கிறார் போல யோக நித்திரையில் இருந்தப்படியே அனைத்து இயக்கங்களுக்கும் காரணமாக உள்ள அரங்கனின் ( பல ஆச்சர்யப்படத்தகுந்த செயல்களை செய்வதால் மாயனார் என்கிறார் ஆழ்வார்) ,

மஹாலஷ்மி வசிப்பதால்..சிவந்த நல் மார்பும் (மஹாலஷ்மி அமர்ந்து கால்களை வைத்திருப்பதால் சிவந்த மார்பு , அவள் சூடிக்களைந்த மாலைகள்..மலர்களால் சிவந்த மார்பு, அவளுக்கிட்ட சந்தன குங்குமங்களால் சிவந்த மார்பு , நல் - எப்போதும் எல்லோருக்கும் நன்மையை மட்டுமே செய்ய அருள் புரிய எண்ணும், மார்பு)/

மரகத மணி போன்ற பச்சை நிறத்தினால் ஆன முழு திரு மேனியும் ,

அரங்களின் திருத்தோள்களும்

தாமரை குளிர்ச்சியைத்தரும் , அத்தகைய குளிர்ச்சியான பார்வையை தன்னை தரிசிக்க வரும் அடியவர்களிடம் செலுத்திடும்..அழகிய சிவந்த தாமரையை ஒத்த கண்களும்

முறுக்கம் பூ..சிவப்பாக இருக்கும்..அதனைப்போன்று சிவந்த இதழ்களும்..அதரங்களும்

பவளத்தினை போன்ற செந்நிற வாயும்

தங்கத்தினால் செய்யப்பட்ட , மிக பழைய  திருமுடியும்(கிரீடமும்) கொண்டு

இவற்றால்..வரும் தேஜஸூடன் அழகுடன் தன்னை உணர்ந்து , அறிந்துக்கொண்டு காண வரும் அடியவர்களுக்கு அருள்கிறார் அரங்கன்.

இவரது முழு அழகையும் , ஒவ்வொரு அங்கமாக திகழும் அழகையும் கண்ட கண்கள் எப்படி அவரை விட்டு அகலும்.

என்னால் அகல முடியவில்லையே. நீங்கள் எவ்விதம் தரிசித்தவுடன் நகர்ந்து விடுகிறீர்கள் என்று கேட்கிறார் தொண்டரடிப்பொடியாழ்வார் இப்பாசுரத்தில்.

இதில் , தனக்கு அவரை விட்டு அகலாத முறுக்குவாதம் ஏற்பட்டிருப்பதாகவும்..
ஆழ்வார்களால்  திருமாலின் திருவுருவைக்காணாமல்..பிரிந்திருந்தால் பிரிவை ஏற்க முடியாது என்கிறார்.

அழகான திருவரங்கம்.

பாயும் நீர்..என்பதை..பொன்னி நதி பாய்வதோடு அல்லாமல்..

ஆழ்வார்களும் , பின் வந்த ஆச்சார்யர்களும் புகலிடமாக வந்துப்பாய்ந்த ஊர் திருவரங்கம் என்கிறார்.

ராமர் உறங்கும் அழகே அத்தனை அற்புதம் அவர் பூஜித்த அரங்கன் கண் வளரும் அழகு அதி அற்புதம். அந்த அழகுடன் அவர் உலக சிருஷ்டி முதல் அத்தனை ஆச்சர்யமிக்க செயல்களையும் செய்கிறார்.

அதிலும்..ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளின் பார்வை.. நம்மைப்பார்பது போலவும் இருக்குமாம்..தென்னிலங்கையில் உள்ள விபீடணுக்கு அருள் செய்வதுப்போலவும் இருக்குமாம்.

கண்களை மூடியும்..திறந்துமான அருட்பார்வை.!

தன் அழகை ஆபரணங்களால் சற்றே மறைத்தப்படியே அருள் பாலித்தாலும் அதனையும் மீறி அவர் அழகால்..ஆழ்வார்கள்..அடியவர்கள் மயங்கிக்கிறங்கிப்போய் அவரை விட்டு அகல இயலாமல் ... கலங்கி நிற்கின்றனர்.

தான்..தனது என்ற எண்ணங்களுடன் சராசரி வாழ்க்கையில் வாழும் மனிதர்களே.. உங்களால் எப்படி அரங்கனின் அழகைக்கண்டு பிரிந்து வர முடிகிறது.என்னால் இயல வில்லையே என்றே இப்பாசுரத்தின் மூலம் தொண்டரடிப்பொடியாழ்வார் நமக்கெல்லாம் தெரிவிக்கிறார்.

இனி ..ஆழ்வாரின் பாதம் பணிந்து..அடுத்தப்பாசுரம் காண்போம்...!

No comments:

Post a Comment