Tuesday 7 June 2016

என் கதை..பாக்யாவில்..முதன் முதலில் அச்சில்..

நம்முடைய எழுத்துக்கள் அச்சில் பார்ப்பது தனி மகிழ்ச்சியைத்தருவது !

கதைகள் மிக விரும்பிப்படைப்பது..அது வெளியாகும் போது அதுவும் முதன்முதலில் எனும் போது ..தனி சந்தோஷமே !!

பாக்யா இதழில் என் கதை வெளியாகியது முதல் கதை ..இதோ அது ...

--------------------+++-----------+++-------------------

யாரோ இவள் . 

மாலை நடைப்பயிற்சி முடித்து , வீட்டிற்கு திரும்ப லிப்டில் அவசர அவசரமாக நான் ஏறவும் , உள்ளே சிலர் நிற்பதும் கண்ணில் பட்டது!

அப்பாடா , பிடிச்சிட்டோம் என்றிருந்தது .

அந்த இருபத்தைந்து மாடி அப்பார்ட்மெண்ட் பில்டிங்ல் எப்போதும் , இருக்கும் 
ரெண்டு லிப்ட்ம் நிரம்பி வழியும் . 
அதிலும் காலை , மாலை வேளைகளில் நம்மையும் ஒருவராக அதனுள் 
திணிப்பது ஒரு கலை.

அந்த பெங்களூர் க்ளைமேட்டிலும் வேகமாக வந்து நுழைந்தது வியர்த்துப்போனது.

லிப்ட் தானாகவே , மூடிடும் நேரத்துக்குள் உள் நுழைவதும், ஒரு த்ரில்லுடன்  பிடித்தது எனக்கு.

சட்டென்று மூடும் வேளையில் தான் அவள் நுழைந்தாள். 
அட ! என்ன அழகு !

தேவதைப்போல இருக்காளே !  என்று அந்த அவசரத்திலும் கண்கள் அளவெடுக்க , அவள் கையில் ஒரு வயது மதிக்கத்தக்க குழந்தையுடன் நுழைந்தாள்.

குழந்தை அவளுடையதா இருக்குமே என்ற சிந்தனையை தவிர்க்க நினைத்தேன். அவளுடையதுதான் என்று குழந்தையின் முகச்சாயல் கட்டியம் கூறியது.

இதே பில்டிங்லயா இருக்கிறாள் , பார்த்ததே இல்லையே என மனம்  தாறுமாறாக யோசித்தது.

"15 வது ப்ளோர் .." என்றாள் என்னைப்பார்த்து ! நான் தான் எந்தமாடிக்கு செல்லவேண்டுமென அழுத்தும் பட்டன் அருகில் நின்றேன் என்பதையும்

ஜில்லென்று குளிர் காற்று வீசியதுப்போல  உணர்ந்தேன் .

தலையில் இருந்த மல்லிகைப்பூ , அவளை மேலும் அழகாக்கிக்காட்டி , என் கிராமத்து நியாபகத்தையும் கிளறிப்போட்டது .

மற்றவர்களும் லிப்டில் நிற்க , ஏனோ கண்ணும் மனமும் அவளிடமே சென்றது , அவளும் அதை உணர்ந்தவள் போல கொஞ்சம் நெளிந்தாலும் , சுதாரித்து , "ஹாய் சொல்லும்மா ! " என்றாள் தன் குழந்தையிடம்  , காதில் தேன் பாய்ந்தது .

குழந்தையும் ,ஹாய் என்று மழலையில் அவள் கூறியதை மொழிப்பெயர்த்தது.

லிப்ட் ஒவ்வொரு ப்ளோராக நின்று நின்று செல்ல , பயணமாக தொடரக்கூடாதா என்றே ஏங்க ஆரம்பித்தேன் !

அட கடவுளே 15 ம் வந்துடுச்சே ..இறங்கிடுவாளே !!

மனம் தவிக்க , தானாகவே என் கால்களும் அவள் பின்னே பதினைந்தாம் மாடியிலேயே வெளிவந்தேன் ..

" என்ன நீங்க ! இந்த ப்ளோர்லயா இருக்கீங்க ! " என்றாள் என்னைப்பார்த்து .

" ஆமா ..இல்ல , இதோ 1508 தான் எங்க வீடு , வாங்களேன் !" என்றேன் தன்னிச்சையாக.

பூ மலர்வதுப்போல் சிரித்தவள் " ஓ..சாரி , இப்ப கஷ்டம், நா இங்க தான் 1502 ல இருக்கேன் . நானும் வரேன் ! நீங்களும் , வாங்க, வீட்டுக்கு கண்டிப்பா ! " .

கண் சிமிட்டி தலை சாய்த்து சிரித்தாள் , உள்ளுக்குள் ஜிலிர்த்துக்கொண்டிருந்தேன்.

மகிழ்ந்தவளாய் நெகிழ்ந்துப்போய் நான் செய்வதறியாது நிற்க , அவளே தொடர்ந்தாள் , " குட்டிம்மா , பாட்டிக்கு பை சொல்லு !! "

ஆம் , என் பையன் வீட்டுக்கு வந்தவள் , கிராமத்தில் வசித்த போது இழந்த என் பெண்ணின் சாயலில் இவள் இருப்பதை பார்த்து ,  "அவசியம் வருகிறேன்..பை " என்றப்படியே என் வீட்டின் சுவரில் உய்யாரமாக  சாய்ந்திருந்த காலிங் பெல்லை அழுத்தினேன் .

எதோ ஒரு சந்தோஷம் தனித்துள்ளலாய் ஒரு தெம்பை தந்தது.உள் நுழைந்த என் துள்ளலை அதிசயமாகப்பார்த்த மருமகளை பார்த்துப் புன்னகையுடன் கடந்தேன் . 
----------------()--------------


No comments:

Post a Comment