Thursday 10 March 2016

சில நிமிட வீடியோ க்கள் பல நிமிட வலிகள்

பல பக்க செய்திகள் தரும் தாக்கத்தை விடவும் சில நிமிட வீடியோக்கள் அதிகம் அழுத்தத்தை ஏற்படுத்திவிடுகின்றன.

சமீபத்திய செய்திகளில் அதிகம் காணப்படுவது, சிறுமிகளுக்கு திருமணம் குறிப்பாக, மத்தியக்கிழக்கு நாடுகளிலேயே மிகவும் வறுமையான நாடென குறிப்பிடப்படும் ஏமன் மற்றும் லெபனான் நாடுகளில் நடப்பதாகவும் அதனால் , திருமணம் முடிந்த அந்த இரவு , அந்த சிறுமிகள் ..இல்லையெல்லை பிஞ்சுக்குழந்தைகள் , உள்புறம் ஏற்படும் ரத்தக்கசிவினால் இறப்பதாகவும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

இதனைப்பற்றிய அலசலாக , உலகைக்கலக்கிய ஒருக்குட்டிப்பெண் Nada Al Ahadel ஏமனைச்சேர்ந்தவள் , கட்டாயத்திருமணம் 10 வயதில் , தேவதைப்போல அவள் கேட்கும் கேள்விகள் பார்க்கும் நம் மனதைப்பிசைய , திருமணத்திற்கு உடன்படாமல் வீட்டைவிட்டு ஓடி வந்து படிக்க விரும்புகிறாள்.
இதோ அவளின் பேட்டி ...

பின்னர் அவள் ஒரு ஏமனைச்சேர்ந்த அரசாங்கத்தின் காப்பகத்தில் விடப்பட்டு ப் படிக்கவைக்கப்படுவதாக அவளைப்பற்றிய செய்திகள் இணையத்தில் கிடைக்கின்றன.

வெளியேத் தெரியாத எத்தனையோ பெண் குழந்தைகள் தன்னை விட மூன்று மடங்கு வயதில் மூத்த ஆணை திருமணம் செய்துக்கொண்டு சிலர் வாழ , சிலர் இறக்க தொடர்கதையாகும் அவலமும் யூ டியூப் வீடியோக்களின் மூலம் அறிந்துக்கொள்ள முடிந்தது.

இதைப்பற்றிய அலசலுடன் கூடிய வீடியோக்களை ப் பார்த்ததோட இருந்திருக்கலாம்.இந்த recommended for you என்று ஒன்று வைத்து நம் நேரத்தை திருடும் பழக்கம் கூகிளுக்கு, யூ டியூபிற்கு கை வந்தக்கலை.

Heda  என்ற ஈரானியர் , ஈரானின் உட்புற ஒரு கிராமத்தில் வாழ்கிறார். வாழட்டுமே அதனால் என்ன ! இதானே , ப்ளீஸ் வெயிட் !
பாலிகாமி முறைப்படி வாழ்கிறார் , அதாவது 5 மனைவிகளுடன் எண்ணற்றக்குழந்தைகளுடன் வாழ்கிறார்.

இதென்னப்புதுசா நாங்கப்பாக்கததா என்றால்..ஆம். இவர் எப்படி அடுத்தடுத்த மனைவிகளை கரம்பிடிக்கிறார். எப்படி அவர்கள் ஒன்றாக வாழ்கிறார்கள், 
குழந்தைகள் ..4 மனைவிகளைக் காண்பித்துவிட்டு ஐந்தாவது மனைவியின் வரவைக்காட்டி திரையில் கருப்பைப்பூசி முடிக்கிறது அந்த வீடியோ.

ஈரான் மண் என்றாலே அந்த இயல்பும், சொல்லாமல் சொல்லிடும் படமாக்கலும் செய்திதொகுப்பிலும் ஒட்டிக்கொள்ளுமோ என்று எண்ண வைத்தது.

இதோ அந்த வீடியோ ...


நம் கண் முன் அவர்கள் வாழ்கிறார் , கூடவே கேமரா உறங்கி, உண்டு , எழுந்து , ஆசுவாசப்படுகிறது.

ஹீதா குடும்பத்தலைவன் ,தொழில் , ஆடுகள் , மேய்த்தல், விவசாயம் .
தன் தாயுடன் வசிக்கிறார். முதல் மனைவி யை திருமணம் செய்தவுடன் அவருக்கு உடல் நலம் சரியில்லை என்றக்காரணம் காட்டி , தனது கஸினையே மணக்க விரும்புவதாகக்கூற மனைவி மறுக்க (கஸின்னா ந்னு என்னக்கேக்கக்கூடாது..அரபிக் தெரியாது சப் டைட்டிலை நம்பறேன்! ) 

பின்னாளில் அடி உதைக்குக்கட்டுப்பட்டு அவரே முன்னின்று நடத்திவைக்கிறார் திருமணத்தை, கணவர் இந்தத்திருமணத்தில் புதுப்பெண்ணுடன் உறங்கச்செல்லும்போது நான் குழந்தைகளுடன் தனித்து உறங்க ஆரம்பித்தேன் என்ற சோகத்தைப்பதிவு செய்கிறார்.

நடு நடுவே ஆண்பிள்ளை என் பிள்ளை தங்கம் என்ற ரேஞ்சில் வயதான தாய் அவ்வப்போது ஸ்டேட்மெண்ட் விடுகிறார்.

மூன்றாவது மனைவி வந்தவிதம் அவர் குழந்தைகள், நான்காவது Ziba இவர் டைவர்ஸி..ரெண்டாவதாக இந்த ஹீதாவை மணம் முடித்து, இந்தவீட்டில் வந்து அத்தனை வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்கிறார்.

அவருக்கு பொறாமை என மற்ற மனைவிகள் பதிவு செய்கின்றனர்.
எல்லார் வீட்டுக்கதவும் திறந்து வைக்க சொல்வேன் விரும்பிய மனைவி வீட்டிற்கு செல்வேன் என்று பேரரசரின் அந்தப்புரக்கதைகளை நினைவுப்படுத்துகிறார் இந்த ஹீதா..!

ஈரானியர்களின் வாழ்க்கை முறை, சுத்தமாக உள்ள வீடுகள், கார்ப்பெட் பின்னும் லாவகம் அவர்கள் பராமரிக்கும் முறைகள், இடையே இழையோடும் லாவகமான நகைச்சுவை, வேதனை என அனைத்தும் படமாக்கப்பட்டுள்ளது.

ஐந்தாவது மனைவி ஐம்பது வயதில் தேவை என்பதையும் அதற்கானக் காரணத்தை அந்தக்குடும்பத்தலைவன் பதிவு செய்வதும் மனதை வேதனைப்படுத்துகிறது.

என்னது மகளிர் தினமா, பெண்ணியமா ! அடப்போங்கப்பா ! என ஆயாசப்பெருமூச்சே வெளிப்பட்டது...என்னிடம் !

இவை சில ஆண்டுகளுக்கு முந்தைய செய்திதான் , ஆனாலும் மனம் என்னவோ புரண்டு எழு மறுக்கிறது , கூடவே ஐ எஸ் ஐ எஸ் கேம்பில் பலபெண்கள் கருவுற்று , அடுத்த தீவிரவாத தலைமுறை உருவாக்கத்திற்காக அடைக்கப்பட்டிருப்பதாக வரும் செய்திகளும் ஆயாசத்தை அதிகப்படுத்துகின்றன . 

No comments:

Post a Comment