Saturday 19 September 2015

ராமானுஜன் ..சுமி சினிமாஸ்

ராமானுஜன் ..

அறியாமையும், அதீத பாசமும் உலகிற்சிறந்த கணித மேதையை நாம் இளவயதிலேயே இழந்திருக்கிறோம் என்பதன் பதிவாக திரைப்படம் தந்த ,இயக்குனர் ராஜசேகரன் அவர்களுக்கு வணக்கத்துடன் பாராட்டுக்களும் !!

ஸ்கூலில் ஜீரோவிற்கு தரும் விளக்கத்தில் இள ராமானுஜனின் மேதாவித்தனம், பாட்டுச்சொல்லிதரும் தாய் கோமளவல்லியாக சுஹாசினி ,சாதாரண குமாஸ்தாவாக தந்தை நிழல்கள் ரவி என தேர்ந்த கதாபாத்திரங்களும், இளமையிலேயே வறுமையில் ராமானுஜனின் கணித அறிவை விளக்கும் காட்சிகள் அட! போட வைத்து சுவாரஸ்யமாக்குகிறது! அடடே , எப்படிப்பட்ட ஜீனியஸ் என வாய் விட்டு புலம்ப வைக்கிறது ...

எதற்கும் பொசுக்கென்று அழுது ,தன்னம்பிக்கையற்று வளரும் கணித மேதை அம்மா பிள்ளையாகவே போராடுகிறார் வாழ்க்கையுடன் !

அவரது தனிப்பட்ட கணித ஜீனியஸ் அறிவை புரிந்துக்கொள்ளாத கல்லூரிகள் அவர் அனைத்துப்பாடத்திலும் தேர்ச்சிப்பெறவில்லையென உதாசீனம் செய்வதும், சராசரி தகப்பனாராக அவரின் தந்தையும் ஒரு டிகிரி வாங்கி குடும்ப சுமையை மகன் ஏற்கவில்லை என அவரை சாடுவதும் நமக்கு சாட்டையடியாக இருக்கிறது !!

பொறுப்பு வருவதற்காய் மகனுக்கு திருமணம் முடிக்கும் தாயின் முடிவால் மனைவியின் மேலுள்ள ஈடுபாட்டைவிட புதுப்புது தியரங்களைக் கண்டுபிடிப்பதிலும் , இரு வேளை உணவிற்காக ராமானுஜன் வேலைக்கு அலையும்போது அவருடன் நம் கண்களிலும் கண்ணீர் திரையிடுவதை தவிர்க்க முடியவில்லை !

தன் கணித ப்ரொபஸரின் உதவியுடன் "Madras Mathematical society "மெம்பர்ஸ் சந்தித்து, வேலை தேடி, இறுதியில் நெல்லூர் கலெக்டர் (சரத்பாபு) மூலம் சென்னையில் ஒரு பிரிட்டிஷ் கம்பெனியில் வேலைக்கு அமர,அவருடன் நாமும் சற்றே இளைப்பாற அவரின் ஆராய்ச்சியும், அதற்கான பேப்பர்களுக்க்காக அவர் கஷ்டப்படுவதும் அவசியம் நம் குழந்தைகள் காண வேண்டிய காட்சிகள் !

நாமக்கல் ,நாமகிரி தாயார் கனவில் தோன்றியே அனுகிரஹத்தே அவர் சூத்திரங்களையும் , உடனுக்குடன் கடுமையான கணக்குகளையும் தீர்வு காண்கிறார், அவை உலகளாவிய அளவில் மற்றவர்கள் ஆராய்ச்சி செய்யமுடியாமல் திணறும்போது , எப்படிப்பட்ட ஒரு மேதை நம் மண்ணில் என பெருமிதம் எட்டிப்பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை ..

பல நல்ல மனிதர்களின் பகீரத முயற்சியால் லண்டன் சென்று FRS பெற்று ,உலக அளவில் அங்கீகாரம் பெறுகிறார், அருமையான காட்சிகள் அழகாக செதுக்குகிறார் இயக்குனர் பாராட்டுக்கள் பலப்பல !!

ஆங்கிலேயர் புரிந்த அவரின் அறிவுத்திறமை ,நம் நாட்டில் உதாசீனப்படுத்தப்படுவதை நாம் உணரும்போது " நீ இங்க பொறந்துருக்க வேண்டியவனே இல்லை " பல கதாபாத்திரங்களும்கூறும்போது வலிக்கிறது...

ஸ்ரீனிவாஸ ராமானுஜன் வாழ்க்கையில் போராடி கேம்பிரிட்ஜ் ப்ரொபஸ்ர் மூலம் உலக அங்கீகாரம் பெற்றும் சந்ததியற்று, தனது தியரங்களையே வாரிசுகளாகத்தந்து விட்டு ,தாயால் மனைவியைப்பிரிந்து மன உளைச்சலுடன் நோய்வாய்ப்பட்டு 32 வயதில் உயிரழக்கும்போது ஒரு மாபெரும் கணித மேதையின் வாழ்வை அருகிலிருந்து பார்த்த உணர்வு ஏற்படுகிறது ..

தேர்ந்த நடிகர்,நடிகைகள், திருமழிசை ஆழ்வார் பாசுரங்களுடன் ரமேஷ் வி நாயகம் அவர்களின் இசை இணைந்து பயணிக்க, தேவையான கலை அம்சங்கள் , உறுத்தாத கேமிரா பதிவுகளுடன் முழுமையான திரைப்படம் ...

இன்னமும் நாம் எப்படி? ! மாறியிருக்கிறோமா, எத்தனை ,எத்தனை அறிவு ஜீவிகளை நம் தேசம் இழந்துக்கொண்டிருக்கிறோம் என்ற பயத்துடன் வெளி வர, 'சே ! என்ன மாதிரியான மனுஷன், எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார் ! வெட்கமாயிருக்கே !! " என உடன் படம் பார்த்தவர்கள் கூற வெளிவந்தும் பிரமிப்பும் ,பாதிப்பும் குறையாமல் இந்த பதிவு ..உங்களுடன்...

அவசியம் அனைவரும் நம் குழந்தைகளுடன் பாக்க வேண்டிய படம் ...



No comments:

Post a Comment