Friday 20 May 2016

திருமணம் தடைபடுவதும்..தள்ளிப்போகவும் காரணம் செல்போன் பேச்சுக்களா ..


திரிசங்கு சொர்க்கத்தில்  திருமணங்கள் அதிகமாவது  அலைபேசியாலா !!
இது தற்போது அதிகம் யோசிக்க வைக்கும் விஷயம்.

திருமணமும் அதனால் மனித மனங்களில் ஏற்படும் குதூகலமும் எவர்க்ரீன் ஆன விஷயங்கள்.
கால மாற்றத்தில் அனைவரது வாழ்விலும்
இன்று டெக்னாலஜியின் உபயோகம் ஆடம்பரம் என்பதையெல்லாம் பின்னுக்குத் தள்ளி அவசியமானது என  சம்மணம் போட்டு உட்கார்ந்துவிட்டது.
நம் தாத்தா பாட்டி நாட்களில்  பால்ய விவாகம் வெகு சாதாரணம் . பெண்கள் வளர்க்கப்படுவதே திருமணத்திற்கென்றும்  எத்தனைப்படி அரிசி  போட்டால் எத்தனைப்பேர் சாப்பிடலாம் , வடாம் வத்தல் , ஊறுகாய் போடுவதிலிருந்து  அரிசி முறுக்கு , கைமுறுக்கு அதிரசம் விருந்து சமையல் என அத்தனையும் பிஞ்சு வயதிலேயே பெருமையுடன் அறிமுகப்படுத்தப்பட்டு , இதெல்லாம்தெரியாமல் திருமணம் செய்விப்பதா என்ற நிலை இருந்தது.

பையன் மட்டுமே சற்று விஷயம் தெரிந்தவனாக இருந்தால் போதும் என்றும் 15, 16 வயதுகளிலும்.. பெண் 7,9 வயதுகளிலும்..திருமணம் நடைபெறும்.
இதில் பெண்ணுக்கு 6 வயதிலிருந்தே , கல்யாணம் , மாப்பிள்ளை , மாமியார் இடிப்பார் , மாமனார் வந்தால் எழுந்து நிற்கணும் இன்னபிற இல்லற இலக்கணங்களும் இணைத்தே சொல்லித்தரப்படும்.

கண் கட்டி காட்டில் விட்டாற்போல் நடைபெறும் திருமணங்களில் பெண் பூப்பெய்தியதும் நல்ல நாள் பார்த்து மண வாழ்க்கை ஆரம்பமாகி பல குழந்தைகள் பெற்று, தம் பேரப் பிள்ளைகளிடம்..நாங்கள் அந்தக் காலத்தில் எத்த்னைக்கட்டுப்பாடுடன் இருந்தோம் தெரியுமா .?? 
சமையலறை வாசற்கதவைத் தாண்டி வெளியே வர மாட்டோம்..பெரியவர்களிடம் அத்தனை பக்தி எனஅடுத்த இளைய தலைமுறையினருக்கு சொல்லித்தரப்பார்க்கலாம் .

தாத்தாக்களோ, எப்படியும் மனைவியை சார்ந்தே இருந்தும்..அசைப்போட்டும் இறுதி நாட்களிலும் பாட்டியின் பெயரை உச்சரித்தப்படியே அவளின்றி நானா என்று உன் கண்ணீல் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி என்பதும் இப்போது பார்க்க முடிகிறது.எப்படி அறியாவயதில் இணைக்கப்பட்ட மனங்கள் அன்னியோன்யம் வழிய இறுதி வரை பந்தம் சிறக்க , குடும்பம் தழைத்தோங்கியது என்பது இன்றும் நம்மை வியப்பில் ஆழ்த்தும் விஷயமும் , அன்னியோன்யம் ரசிக்கத்தக்கதும் ஆகும். 

அதற்கு அடுத்த தலைமுறையினர் , அப்பா அம்மா பார்க்கும் பெண்கள்/ மாப்பிள்ளைகளை மணம் முடிப்பர். ஆனால்..அதிலும் ஒரு தலைமுறை வித்தியாசத்தை உணர்ந்திட , அன்றிருந்த டெலிபோன் கால்கள் காரணமாக இருந்தன...அவற்றில் பாதி PP கால் ஆக இருக்கும்..ஆபீஸிற்கோ.. வீட்டிற்கோ கால் செய்து..திருமணத்திற்கு முன்பு கொஞ்சம் பேசலாமா என்றும் கேட்பது வீரமான செயலாக பையனின் அக்கவுண்ட்டில் கொள்ளப்படும். 

 எப்படியும் பெண்பார்க்கும் சமயத்தில் இதற்கெனவே சிக்கும் தூரத்து மாமா..பெரியப்பாவோ..நண்பனோ தூது போக , பெண்ணைப் பெற்றவர்கள் சற்றே பிகு செய்ய. .அதற்குள் பேசுவதா..மாப்பிள்ளை கல்யாணத்திற்கு முன்பே முத்தம் கித்தம் கொடுத்துத் தொலைத்தால் என்ன செய்வது என்றுப் புலம்பினாலும்..பீதியை கைவிடாது , அரை குறை மனதுடன் சரி என்பார்கள்.
சில வீடுகளில் சற்றே சிறப்பு சலுகையாக வெளியே சுற்றவும் அனுமதிப்பார்கள். ஆனால் கோவில் மட்டும் எனில் ஓகே என்பார்கள்..கோவில் என்று பெர்மிஷன் வாங்கி , சினிமா பார்த்து வருவதெல்லாம் அந்தக் காலத்து திருமணத்திற்கு முந்திய ரிஸ்க்.

 ரிஸ்க் எல்லாம் ரஸ்க் சாப்பிடறா மாதிரி..நான் அப்பவே அப்படி தெரியுமா என்று தனது 25 திருமண நாளில் ..திருமண சிடி பார்த்தப்படியே சிலாகிப்பார்கள்.

ஆனால்..இன்றைய தலைமுறையிநருக்கு அவர்கள் பெறும் உயர்கல்வியும் அதனால் கையில் எடுத்ததும் பெறும் ஐந்திலக்கண சம்பளங்களும்  தாராளமான சுதந்திரத்தையும் பெற்றுத்தருகிறது.
ஓரளவு படித்து , வேலைக்குச்சென்றப் பின்னரே திருமணம்  என்ற கண்டிஷனுடனே பெண்கள் இப்போது  வரன் பார்க்கவே சம்மதிக்கின்றனர். ஆனால் பெற்றோர்களுக்கு மட்டுமே வயிற்றில் ஒருவர் அமர்ந்து புளியைக் கரைத்து கரைத்து குழம்பாக்கிட வரன் பார்க்கும் படலங்களில் இறங்குகின்றனர்.

அன்று, மஞ்சள் பையுடன் புரோக்கர்கள் இருந்த நிலை மாறி இன்று
திருமண தகவல் மையங்கள் மழைக்கு முளைக்கும் காளான்கள் போல முளைத்து அவர்களும்..சேவை செய்ய அனைத்தையும் விழுங்கி சாப்பிடும் நிலையில் வந்தன. ஆன்லைனில் திருமண வரன் பார்க்கும் வெப் சைட்கள் ஒன்றிரண்டு வரன்கள் அல்ல , லட்சத்தில் ஒன்றாக தேர்வு செய்யலாம் என்று விளம்பரமாகக் கட்டியம் கூறுகின்றன.

கம்ப்யூட்டரும் கையுமாகிய இளம் தலைமுறையினர் சிக்கியதும் , சிக்கவைக்கப்படுவதும் இந்த சைட்களில் தான் அதை உபயோகித்து அவர்கள் நவீன கொள்ளையர்கள் ஆனதெல்லாம் கிளைக்கதைகள்.

ஆயிரத்தெட்டு கண்டிஷன்களைத் தாண்டி ஒன்பதாவதாக பெண்கள் போடுவதையும் 
டிக் செய்து உள் நுழையும் ஆண்மகன்கள் முதலில் பறிமாறிக்கொள்வது தனது மொபைல் நண்பர்களைத்தான்.
இதில்
சோஷியல் நெட்வொர்க் கிங்கில் தேடிப்பிடித்து துப்பறிவதும் , வாட்ஸப் பில் எல்லையில்லா மெசேஜ் அனுப்பவதும் தலையாய கடமையாகிறது. 

முதலில், என் ஸ்டேட்ஸ் க்கு லைக் செய்தாயா ? உன் போட்டோக்கு ஏன் இத்தனை லைக் என்று ஆரம்பித்து , ட்விட்டர் ட்ரெண்டிங்க்கில் உள்ளதை தெரியுமா என்றும் , வாட்ஸப்பில் சொன்ன குட்மார்னிங்க்கு பதில் இல்லையே என்பதற்கும் கையின் ஆறாவது விரலாக உள்ள அலைபேசி யே அதிராமல் உறவுகளை சிதைக்கிறது.

பெண்ணோ , பையனோ பொருத்தம் சரியா வரும் போலருக்கே என்று பெற்றோர்களின் மைண்ட் வாய்ஸ் உணர்ந்திடும் தலைமுறையினர் நம்மவர்கள் , உடன் போன் காலிலேயே தமது பேச்சினை துவக்குகின்றனர்.

உனக்கு என்னப் பிடிக்கும் என்பதில் ஆரம்பிப்பது , உண்பது உப்புமாவாவா அல்லது பொங்கலா என்றறியா வண்ணமும் , காபியா டீயா என்று தன்னிலை மறந்து , ஒன்ற ஆரம்பிப்பவர்கள் , பேசாத தலைப்புகள் இல்லையென்றாகி , நடிகர் , நடிகை ரசனையும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று கண்டிஷன் போடுவதிலிருந்து , உடை , அலங்காரங்களும் தனக்குப் பிடித்தவாறே அமைத்துக்கொள்வதில் காட்டும் தீவிரம் அவர்களின் கோரமான இன்னொரு முகம் வெளித்தெரிய ஆரம்பிக்கிறது.

முதல் சண்டை  , சிலர் உன் அம்மா சொல்லித்தான் நீ என் ஊருக்கு வேறு வேலை மாற்றல் செய்வாயா என்று ஆரம்பித்து உன் அப்பா யாரு என் சம்பளம் பற்றி விசாரிக்க என்றும் நிச்சயமாகும் நிலையில் திருமண பந்தங்களில் ஓட்டை விழ வைக்கும் பேச்சுக்கள் ஆரம்பமாக அடிபோடுகின்றன எல்லைக்கு அப்பால் சென்றிடும் செல்போன் பேச்சுகள்.

எத்தனை கொஞ்சல்கள் என்ற கணக்கை விட எத்தனை ஊடல்கள் என்ற கணக்கும் உடனே அவன் அப்படித்தான் , இல்லை எனக்கு இவன் செட் ஆகாது என்ற பெண்ணின் வாக்குமூலமும் பெற்றோர்களின் கவலைக்கு அச்சாரமிடுகின்றன.

எதையும் எப்போதும் பேசலாம் என்ற மாடர்ன் நாரதர்களாக மாறிப்போகும்  செல்போன் பேச்சுகள் , பல திருமணங்கள் பாதியில் நிற்கவும் காரணமாகின்றன. பெண்களும் , பையன்களும் மாறினாலும் பேச்சு மட்டும் ஒரே மாதிரியே நீள்கிறது . அதிகப்படியான விழிப்புணர்வையும் , எச்சரிக்கையுணர்வையும் இந்தப்பேச்சுக்கள் தந்து திருமணம் என்ற புனிதமான பந்தத்தின் அஸ்திவாரத்தையே ஆட்டம் காண செய்கின்றன எனலாம்.
திருமணம் ஆகி , நிலவின் ஒளியில் கையோடுக் கைக் கோர்த்தும் , தோளோடு தோள் சேர்த்தும் அலச வேண்டிய பிடித்தவை, பிடிக்காதவை புரிதலுடன் , காதலுடன் அலச வேண்டியவை , உணர்ந்து வாழ்வில் ஸ்டெப் பை ஸ்பெட் ஆக தெரிந்துக்கொள்ள வேண்டிய த்ரில்லுடன் கூட  குணங்கள்அனாவசிய அளவற்ற செல்போன் பேச்சுகளால் நிலைகுலைகின்றன.

முந்தைய இருமனங்களின்தோல்வியை சரிக்கட்டும் , பிரச்சனைகளை முன்கூட்டியே அறியும் வசதிகளை இன்றைய திருமணங்களுக்கு முந்தைய இந்தசெல்போன்பேச்சுக்கள் ஏற்படுத்தித்தந்தாலும்  அவை  சரியான புரிதலுடன் கூடியதாக இருக்கின்றதா என்பதே மில்லியன் டாலர் கேள்வி !!

பலமுறை திரிசங்கு சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் திருமணங்கள் பல தோல்விகளைத் தாண்டியே , சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன எனலாம்.
தப்பித்தவறி மீறி நடக்கும் திருமணங்களில் , ரெஜிஸ்டர் ஆபீஸ்களில் கையெழுத்திட்டக் கையோடு , விவாகரத்து வேண்டி கையெழுத்திட நிற்கின்றனர் தம்பதிகள்.
இருவர் பெற்றால் இன்பமயம் , ஒன்று பெற்றால் ஒளிமயம் என்ற திட்டங்களின் படி வீட்டில் ஒன்றான குழந்தைகளின் சகிப்புத்தன்மை இன்மையும் , எதேச்சையாக முடிவெடுக்கும் மன நிலையும் , பெற்றோர்கள் அறிவுரைகளைக்காட்டியும் மேரேஜ் கவுன்சிலர்களின் பேச்சு எடுபடுவதுமே காரணமாகிறது.

ஆண்பிள்ளைகளுக்கு பெண் குழந்தைகளின் பிரச்சினைகளையும்,மனோ நிலையும் பெற்றோர்கள் வளர்க்கும் போதே உணர வைப்பதும், சகிப்புத்தன்மையை வளர்த்துக்கொள்ளவும் சொல்லித்தந்து வளர்க்க வேண்டிய நிலையில் உள்ள பெற்றோர்களின் பொறுப்பு உள்ளது

நான் வளர்கிறேனே மம்மி என்று வளர்ந்திடும் இன்றைய டெக்னாலஜியில் போன் பேச்சுக்களைக்குறைப்பது போகாத ஊருக்கு வழி தேடுவதுப்போலாகும். காதல் திருமணமோ பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணமோ பூதக்கண்ணாடி வைத்துப் பிரச்சனைகளை அலசாத வரை வெற்றிகரமான திருமணமாக அமைகிறது.

கறையில்லா சந்திரனோ , சுட்டெரிக்காத சூரியனோ இயற்கையில் இல்லாத ஒன்று என்பதைப்போலவே , குறையில்லா மனிதர்களும் இல்லை என்பதை திருமணத்திற்கு தயாராகும் ஆண், பெண்கள் உணரும் போது திருமணம் டாஸ்ஸில் வென்று  இல்லறம் சிறக்கிறது. 

அருகிலிருப்பவரையும் தூரமாக்கிப்பார்க்கும் செல்போன்களும் , தூரத்தில் இருப்பவரையும் அருகில் வைத்துப்பார்க்கும் இணையமும்  வாழ்வில் குறுக்கீடா வண்ணம் 

அவ்வப்போது தொடர்பு எல்லைக்கு அப்பால் நாம்  செல்வதும் ஆரோக்கியமான வாழ்விற்குவழிவகுக்கலாம்.

திருமணங்கள் குறைந்த அலைபேசிப் பேச்சுக்களின் வீரியத்தில் செழிப்பதும் , கண்ணோடுக் கண் பார்த்துப்பேசும் போது வளர்வதும் அத்தியாவசிய சமூக தேவையாகிறது. 

சமூகம் செழித்திட இணைய இணைப்புகளையும், செல்லிடப்பேச்சுகளையும் சற்றே இளைப்பாறச் செய்து இன்பம் காண்போம்.

குங்குமம் தோழியில் வெளியானக்கட்டுரை இது :




No comments:

Post a Comment