Saturday 23 April 2016

எந்த கைங்கர்யமும் செய்ததில்லை ஆனால் அரங்கன் எனக்கு இரங்கினான் - தொண்டரடிபொடியாழ்வார்

தமிழ் இலக்கியங்களில்.. வைணவ பக்தி இலக்கியங்களை வெவ்வேறு கால கட்டங்களில் தந்தவர்கள் ஆழ்வார்கள் என்றழைக்கப்படுகின்றனர்.


அவர்கள் திருமால்.. மஹா விஷ்ணுவை தொழுது பாடிய பாடல்கள் பாசுரங்களின் தொகுப்பு நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்.

அதில் திருமாலை என்பது , தொண்டரடிப்பொடியாழ்வார் இயற்றிய 45 பாசுரங்களைக்கொண்டது. 

விப்ர நாராயணன் என்ற இயற்பெயர் கொண்டவர் , சோழ நாட்டில் திருமண்டகக்குடியில் பிறந்தவர் , திருவரங்கத்தில் கோயில் கொண்டுள்ள அரங்கன்..பெரியபெருமாளைப்போற்றி..பாடியுள்ளார் இதில்.

முதலில்..இறை நாமத்தை சொல்வதன் பெருமையையும் பக்தியையும் கூறிவந்தவர் , பின் ஏன் பக்தி கொள்ள வேண்டும்.எதனால்..தனக்கு அரங்கன் அருள் செய்தார் என தன்னை தாழ்த்திக்கொண்டு பாடியுள்ளார் .



இனி பாசுரம் காண்போம்.

திருமாலை -17.

விரும்பிநின்றேத்த மாட்டேன் விதியிலேன்மதியொன்றுமில்லை
இரும்புபோல்வலியநெஞ்சம் இறையிறையுருகும் வண்ணம்
சுரும்பமர்சோலைசூழ்ந்த அரங்கமாகோயில் கொண்ட
கரும்பினைக்கண்டுகொண்டு என்கண்ணினை களிக்குமாறே !!
---**---
விரும்பி நின்று ஏத்தமாட்டேன் - மிகுந்த அன்புடன் , பக்தியுடன் ஒரு முகப்பட்டு உன்னை ஸ்தோத்திரம் செய்ததில்லை
விதியிலேன் - விதி(கை கூப்பியதில்லை) கை கூப்பி தொழுததில்லை.
மதியொன்றுமில்லை - இறைவன் என்று ஒருவன் உள்ளான் என்ற ஞானம் இருந்ததில்லை.
இரும்பு போல் வலிய நெஞ்சம் - இரும்பினைப்போல வலிய நெஞ்சம்.
இறையிறை - சிறிது சிறிதாக
உருகும்வண்ணம் - உருகிடும் வண்ணம்
சுரும்பமர்சோலை சூழ்ந்த - சுரும்புகள் - வண்டுகள் வந்து அமரும் சோலைகள் சூழ்ந்த
அரங்கமாகோயில்கொண்ட - பெரிய கோயிலைக்கொண்ட அரங்கம்..திருவரங்கம்
கரும்பினைக்கண்ட -கரும்பாகிய பெருமானைக்கண்டு கொண்டு
என் கண்ணினை - எனது இரண்டு கண்களுமே
களிக்குமாறே - ஆனந்தப்படுகின்றன.
பாசுரவிளக்கம் :
இதுவரை பாடல்கள் திருமாலில் மேல் எழுதியிருக்கிறேன் ஆனால் அவற்றை மிக்க பக்தியுடன் , மனம் ஒருமுகப்பட்டு , விரும்பி நின்று பாடியதில்லை.
கைகளைக்கூப்பி தொழுததோ , கைகளால் இறைவனுக்கு சேவகம் செய்ததோ இல்லை.
இறைவன் ஒருவன் தான் அவன் மட்டுமே அனைத்திலும் ஆனவன் , நிரந்தரன் என்ற இந்த ஞானம் இருந்தது இல்லை.
இரும்புப் போல கடுமையான வலிமையான..(இறைவனை நினைக்காமல் இருக்கும் கடுமையான நெஞ்சம்.மனம்) நெஞ்சத்துடன் இருந்துள்ளேன்.
இரும்பைக்கூட நெருப்பிலிட்டு உருக்கிடலாம்.ஆனால் என் மனதை அப்படி உருக்க இயலவில்லை.கடுமையாக இறைவனின் நினைப்பு இன்றி இருந்தேன்.
அப்படி இருந்த என்னை , சிறிது சிறிதாக உருகிடும் விதம் , வண்டுகள் ரீங்காரமிட்டபடி சூழ்ந்துள்ள சோலைகள் கொண்ட திருவரங்கத்தில் , (பெரிய கோயில் கொண்டுள்ள அரங்கன்/கரும்பாகி ) இரும்பான மனதை உருக்கி தன்பால் அன்பினை பெருக வைத்த கரும்பினைப் போல உள்ள அரங்கனை என்னுடைய இரண்டு கண்கள் கண்டு ஆனந்தத்தில் களிக்கின்றன.
எத்தனை தூரம் திருமாலை விட்டு விலகியிருந்தேன்..தனது அழகினைக்காட்டி
என்னை பக்தியால் ஆட்கொண்டது அரங்கன் !
என தொண்டரடிப்பொடியாழ்வார் உருகிப்பாடியுள்ள இன்னொரு பாசுரம் இது !!
ஆழ்வாரின் பாதம் பணிந்து அடுத்தப் பாசுரம் காண்போம்.


smile emoticon

No comments:

Post a Comment