Monday 15 February 2016

திருமாலை அறிய வைக்கும் திருமாலை - 15

பக்தி இலக்கியங்களில் அவசியம் படித்து தெரிந்துக்கொள்ள வேண்டியது நாலாயிரத் திவ்யப்பிரபந்தத்தில்(தொகுப்புப்பாடல்கள்)  உள்ள "திருமாலை"

பாடியவர் தொண்டரடிப்பொடியாழ்வார் எனும் விப்ர நாராயணர் , இவர் வைணவம் பாடிய ஆழ்வார்களில் எட்டாவது .

(ஆழ்வார்கள்- வைணவத்தில் திருமால் ஸ்ரீமஹாவிஷ்ணுவைப்பாடியவர்கள், இவர்கள் பன்னிருவர்).

இவரது 45 பாசுரங்கள் திருமாலை என்று அழைக்கப்பட அவரும் அரங்கனை மட்டுமே பாடுவேன் என்று ஸ்ரீரங்கத்தில் பள்ளிக்கொண்டுள்ள ரெங்க நாதரை தமிழெனும் நெய் ஊற்றி தன் பக்தியையே திரியாக்கி , தீபமாக நமக்கு திருமாலை , திருப்பள்ளியெழுச்சி என்ற பாசுரங்களை தந்துள்ளார். இனி பாசுரம் காண்போமா.

திருமாலை - 15.

மெய்யர்க்கேமெய்யனாகும் விதியிலாவென்னைப்போல
பொய்யர்க்கே பொய்யனாகும்புட்கொடியுடையகோமான்
உய்யப்போர்முணர்வினார்கட்கு ஒருவனென்றுணர்ந்தபின்னை
ஐயப்பாடறுத்துத்தோன்றும் அழகனூரரங்கமன்றே

புட்கொடியுடையகோமான் - கருடனைக்கொடியில் கொண்ட அரசன் (திருமால்)
மெய்யற்கேமெய்யனாகும் - மெய் உடன் வெறுப்பில்லாமல் நினைப்பவர்க்கு , உண்மையானவனாக தன்னைக்காட்டிக்கொடுப்பவன்

விதியிலா என்னைப்ப்போல - பாக்கியமில்லாத தாழ்ந்தவனான என்னைப்போல

பொய்யர்க்கே பொய்யனாகும் - ஏற்க மறுக்கும் நாத்திகர்கள் பொய்யர்கள்
பொய்யனாகும் - தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாமல் பொய்யனாக இருக்கிறார் திருமால்.

உய்யப்போம் - உயர் நிலையை அடையவேண்டும்

உணர்வினாற்கட்கு - என்று உணர்வு உள்ளவர்களுக்கு
ஒருவன் என்று உணர்ந்த -
உடலைக்காட்டிலும் உயர்ந்தவர் ஆத்மா , ஆத்மாவைக்காட்டிலும் உயர்ந்தவர் ஒருவர் பரமாத்மா அவரே என்று உணர்ந்தப்பின்

ஐயப்பாடு அறுத்து - நம் அத்தனை சந்தேகங்களை யும் வேறுடன் அறுத்துக் காப்பாற்றிட

தோன்றும் - தோன்றியுள்ள

அழகனூரரங்கனன்றோ - அரங்கன் குடிக்கொண்டுள்ள ஊர் திருவரங்கம் அன்றோ !!

பாசுர விளக்கம் :

முழுமையாக உணர்ந்து வெறுப்பில்லாமல் தன்னை நினைப்பவர்களுக்கு , தன்னை மறைக்காமல் காட்டித்தந்து , அருள்பவன் கருடனைக்கொடியில் கொண்ட அரசனாகிய அரங்கன்.

பல தவறுகளை இழைத்த , பாக்கியமில்லாத என்னைப்போன்றவர்களுக்கும்

வெறுத்து , தெய்வமே இல்லை என்பவருக்கும் தன்னை முழுவதுமாக உணர்த்தாமல் பொய்யனாகவே இருக்கிறான்.

உயர்ந்த,மறுபிறப்பில்லாத முக்தி  நிலையை அடையவேண்டும் என்று உணர்ந்தவர்களுக்கும் , நம்மைவிட உயர்ந்தவன் ஒருவர் அவரே பரமாத்மா என்ற அறிவுடனும் அவரை எண்ணினால்
நமது அனாதிக்காலங்களாக ஏற்பட்ட சந்தேகங்கள் , பாபங்களை அழித்து தன் தரிசனத்தைக்காட்டித்தரும் அழகன் வாழும் ஊர் திருவரங்கம் அல்லவா !!

இங்கு ஆழ்வார் , மெய்யான பக்தி செலுத்தினால் , கருடன் , அனுமன் மற்ற வைகுண்டத்தில் நித்ய வாசம் செயபவர்களுக்கு எங்கனம் தன்னை வெளிப்படுத்தி தரிசனத்தைக் காட்டுவாரோ அங்கனமே தன்னை நம்மிடம் வெளிப்படுத்திக்கொள்கிறார்.

பொய்யாக (நாத்திகராக) இருப்பவர்களையும் வெறுத்து ஒதுக்குவதில்லை..தன்னை மறைத்துக்கொள்கிறார்.

முழுமையாக அவரே உற்ற தெய்வம் என்றுணர்ந்து , பிறவியை வெறுத்து , முக்தி வேண்டுவோர்க்கு அவரது அனாதிக்கால சந்தேகங்கள் , பாபங்களை வேரோடு அறுத்து தரிசனம் தரும் அழகன் வாழும் ஊர் திருவரங்கம். என்று திருவரங்கத்தின் பெருமையை திருமால் வாழும் ஊராக விளக்குகிறார் தன்னை தாழ்த்திக்கொண்டு..
என்னே ஆழ்வாரின் பக்தி !!
நம்பொருட்டு நமக்காக பரிவுடனும் , தமக்கு அரங்கன்  அருள்புரிந்ததையும் வெளிப்படுத்தியுள்ளப் பாசுரம் இது.
ஆழ்வாரின் பாதம் பணிந்து அடுத்தப்பாசுரம் காண்போம்..

#திருமாலை

No comments:

Post a Comment