Friday 19 February 2016

உங்களுடன் சில நொடிகள் !

என் நட்பிலேயே சிலர் , திருமாலை..நான் எழுதுவது தெரியாமலும் , யார் இயற்றியது எனவும் தெரியாமல் இருப்பதுபோல இருக்கிறது.  

திருமாலைக்காண்போமா என்ற தலைப்பைப்பார்த்ததுமே ஒரு லைக் போட்டும் போடாமலும் நகர்ந்துவிடுவர் என புரிந்தது. அவர்களுக்காகவும் , (பேஸ்புக்கில் ) 
ஒரு சிறிய அறிமுகத்துடன் அடுத்தப் பாசுரம் எழுதலாம் என எண்ணினேன்.
அதென்ன திருமாலைக் காண்போமா! ,  

இதானே !

அந்த காலத்தில் நம் பண்பாட்டையும் , அப்போதைய நிகழ்வுகளை யும் கோவில்களில் சிற்பமாக செதுக்கி வைத்தனர். பக்தியை சார்ந்த இலக்கியங்களும் எழுதப்பட்டன.

சிவனை வணங்குபவர்கள் எழுதியவை சைவக் கோட்பாடுகளை வெளிப்படுத்தியும் , திருமால் , மஹா விஷ்ணுவை வழிபட்டவர்கள் வைணவ இலக்கியங்களையும் தமிழில் தந்தனர்.






இதில் , நான் சமீபத்தில் ஒரு ஸ்கைப் வகுப்பின் மூலமாக நாலாயிர திவ்யப் பிரபந்தங்கள் கற்க ஆசைப்பட்டேன். அதற்காக என்னையும் அவர்களுடன் இணைத்துக்கொண்டேன். அதில் அப்போது , அவர்கள் எடுத்துக்கொண்டது , திருமாலை.

அதற்கான பாசுரங்களை மட்டும் சொல்லி வந்த நான் அதன் அர்த்தமும் தெரிந்துக்கொண்டால் பலாச்சுளையை தேனில் அமிழ்த்தி உண்ணும் சுவைக் கிடைக்குமே எண்றெண்ணினேன். அப்படியே அதற்கான தேடலில் இறங்கி..அதை இங்கும் பகிர ஆரம்பித்தேன்.


அடுத்தடுத்து எழுத முடியாமல் சிறிது இடைவெளி விட்டே எழுதி வந்தேன்.
சரி இப்போ என்ன வந்தது அதற்கு..அதானே..இதோ வந்து விட்டேன் !
திருமாலையைப்பற்றி சில வரிகள்.


தமிழ் இலக்கியங்களில் , வைணவத்திற்கென தனி இடம் பெற்றவை நாலாயிர திவ்வியப் பிரபந்தங்கள்.

அந்தந்தக்காலக்கட்டங்களில் வந்தவர்கள் மிகவும் பக்திப்பெருக்கோடு பல திருக்கோயில்களில் உறையும் மஹாவிஷ்ணுவைப்பற்றி , புகழ்ந்தும் , தனது நிலையையும் , பக்தியின் அவசியத்தையும் வலியுறுத்தி பாடல்களை இயற்றியுள்ளனர்.

பிற்காலத்தில் நாத முனிகள் என்பவரது பெரும் முயற்சியினால் இந்த நாலாயிரம் பாடல்கள் மீட்கப்பட்டன.

இதனை எழுதியவர்கள் ஆழ்வார்கள் என பிற்காலத்தில் அடையாளம் காணப்பட்டு அழைக்கப்பட்டனர்.





முதலாழ்வர்கள் நடுவில் வந்தவர்கள் , பிற்பாடு தோன்றியவர்கள் என வகைப்படுத்தப்பட்டனர்.

இதில் , திருமாலை என்பது நாலாயிர திவ்வியப் பிரபந்தங்கங்களில் ஒரு பகுதி.
யார் இதை இயற்றியது..ஏன் . எந்தக்காலத்தில் இயற்றினார் ? இதன் பொருள் என்ன இதுதான் என் மனதிலும் தோன்றின.
இதோ அதுவும். 


திருமாலை என்ற 45 பாடல்கள் இயற்றியவர் தொண்டரடிப்பொடியாழ்வார் என மற்றவர்களால் அழைக்கப்பட்ட விப்ர நாராயணன் என்ற சொந்தப்பெயர் கொண்டவர் . இவர் வாழ்க்கைக்குறிப்புகள் தந்திருக்கேன் . நினைவிருக்கலாம் , திருமால் பெருமை என்கிற திரைப்படத்திலும் பார்த்த நியாபகம் இருக்கலாம் . 
கும்பகோணத்தை அடுத்த திருமண்டகக்குடியில் பிறந்து , இயல்பிலேயே மஹாவிஷ்ணுவின் மீது பக்திக்கொண்டு அவருக்காக தினமும் பூப்பறித்து அதனை மாலையாக்கி அவருக்கு செலுத்தி வழிப்பட்டு வந்தவர் ,

அவரது வழியில் ஒரு தாசி(நடனமணி) குறுக்கிட , அவளை இவர் ஏறிட்டும் பார்க்காமல் இருக்க , அவளும் , இவரை பார்க்கவைக்க , இவரிடம் பழகி , தன் மேல் பைத்தியமாக்கிட முயற்சித்து வெற்றிப்பெறுகிறாள்.

விளைவு, பக்தியை விட்டு விப்ர நாராயணன் , அவள் மேல் மோகம் கொண்டு , அவள் நினைவாக அவளுடனே காமத்துடன் வாழ்கிறார்.

அரங்கனின் பொன் வட்டில்(பூஜைக்கு உபயோகிக்கும் பொருள்) காணாமல் போக , அதை இவர் தான் திருடியதாக சோழ மன்னரிடம் புகார் போக ,

இவர் அதை செய்ததாக இவரது சிஷ்யன் சாட்சி கூற , செய்யாதக்குற்றம் சாட்டப்பட்டு விடுதலை ஆகிறார்.

அரங்கன் தான் செய்த திருவிளையாடல் இது  என்று மன்னரது கனவில் வந்து உணர்த்தி , ஆழ்வாரை விடுவிக்க சொல்கிறார்.

பிறகு ஆழ்வார் தனது பக்தியை வெளிப்படுத்தி பாடல்கள் எழுதுகிறார் .
அதுவே இந்த திருமாலை .


இதில் முதல் (பாசுரங்கள் )14  பாடல்கள் , திருமாலின் பெயரை சொல்வதால் கிடைக்கும் பலன் , ஏன் சொல்ல வேண்டும் , ஏன் வேண்டும் பக்தி என்பவர் , அரங்கனிடம் , ஸ்ரீரங்கத்தில் உள்ள பெருமாளிடம் தமக்கு எப்படி பக்தி ஏற்பட்டது , அவர் தமக்கு எப்படி இறங்கினார் என்பதை , 

தன்னை விதியில்லா என்னைப்போல , மிகத் தாழ்ந்தவன் என்றுக் குறிப்பிட்டு , மற்ற எந்தத் தெய்வத்தையும் ஏறிடாமல் , பாடாமல் ஒரு பதி விரதைப்போல,  

அரங்கனைப் பாடிய வாயால் குரங்கனை(குரங்குகள் வாழும் மலையில் உள்ள திருவேங்கடமுடையான்) பாட மாட்டேன் என திருப்பதி பெருமாளையும் பாடாமல் , அச்சுவை பெரினும் வேண்டேன் என்று மோட்சத்தை யே வேண்டாம் என்கிறார் .

மற்ற ஆழ்வார்கள் பரமபத வாசம் கேட்கும் போது தனித்துப் பாடியவர் தொண்டரடிப்பொடியாழ்வார் , ஆம் இவர்  தொண்டருக்கும் தொண்டராக , அவரதுப்பாததுளிகளை கண்களில் ஒற்றிக்கொண்டு , அவர்களுக்கும் சேவை புரிந்தவர் .. !!

இனி அடுத்தடுத்தப் பாசுரம் படிக்கலாமா !!

ஆசை நூறுவிதம் , ஹ்ம்ம்ம் ! யாரை விட்டுருக்கு !!

சின்னவயதில் எங்கள் காலனி குடியிருப்பில் வாசலில் அந்தப்பகுதியில் இருந்த சிறு தெய்வத்திற்கான திருவிழாவின் போது , அதேதான் வீடு வீடாக பணம் கலெக்ட் செஞ்சு ,

முதலில் சாமி ஊர்வலம் என ஆரம்பிச்சு , கரகாட்டம் , ஆர்க்கெஸ்ட்ரா ந்னு விடிய விடிய நடக்கும் ! ஜஸ்ட் நின்னுப் பார்த்துட்டு வந்துடணும் ! சேர் போட்டு உக்காந்துப்பாக்கல்லாம் ஆசைப்படக்கூடாது ..

அப்பா ஸ்ரிக்ட் ஆபீசர். மனதுக்குள் அப்பாவை திட்டினாலும் வேறு வழியில்லாமல் வீட்டுக்கு வந்துடுவோம் !

நள்ளிரைவைத்தாண்டியும் ஸ்பீக்கரில் எல்லாம் கலந்துக்கட்டிப் பாட்டுகள் கேட்கும் , குத்து மதிப்பா இந்தப்பாட்டுதான் நினைச்சுக்கிட்டே தூங்காமல் ..சத்தம் போடாமல் எழுந்துப்போய் பாத்துட்டு வரலாமான்னு தோனிருக்கு ம் சரி அதுக்கென்ன இப்பங்கறீங்களா ! இருக்கே !


போன வகேஷனில் , திருச்சிப்போயிருந்தப்போது அப்பா அம்மாவுடன் ஷாப்பிங் போயிட்டு சத்திரம் பஸ்ஸ்டாண்டில் அப்பா பெஸ்ட் ஹோட்டல்ன்னு சர்பிகேட் செய்ததில் சாப்பிட்டுவிட்டு
(சமைக்கும் இடத்தையும் , டேபிள் க்ளீனிங் முறையையும் பார்த்து கண்கள் வேறப்பக்கம் பாக்க ஆரம்பிச்சுடும் ஆட்டோமேடிக் ஆ  ! :) )

வெளியே வந்தவளை பளீச்சுன்னு எதிரில் இருந்தப் பெண்மணி அட்ராக்ட் செய்தார் கையில் மைக்குடன் !

எதோ கட்சி மீட்டிங் போலருக்கு ! எங்க நல்ல நேரம் பேச்சு முடிஞ்சு ஆர்க்கெஸ்ட்ரா ந்னு பின்னாடி பேனர் ஆட ஒரு மொபைல் மேடை , பக்கத்தில் நாலு ஸ்பீக்கர் , முன்னாடி ஒரு 60, 70 சேர்கள் ந்னு களைக்கட்டியிருந்தது.
அங்கொன்றும் இங்கொன்றுமாக சில தலைகள் முளைத்திருந்தது !

அப்பவே உஷாரகிருக்கணும் ! இல்லையே ஆசை யாரை விட்டது !
அப்பா அம்மாவைப்பார்த்து , ஆர்க்கெஸ்ட்ரா இப்பதான் ஆரம்பிக்கிறாங்க போலருக்கு , கொஞ்சம் பார்த்துட்டுப்போகலாமே என்றேன் !
பொண்ணு " என்னம்மா ! அப்படின்னா "
ந்னு விளக்கம் கேட்க ஆரம்பிக்க அம்மா டபுள் ஓகே ந்னு தலையசைத்தார்..

ஆஹா !! அம்மாவும் நம்மைப்போல  ! பாவம் அப்பா , எத்தனை ஆர்க்கெஸ்ட்ரா பாக்க விடாமல் கூட்டிட்டு வந்துருப்பார்ன்னு மனசுல நினைத்தப்படியே ! நீ கவலைப்படாதம்மா ! நான் இன்னிக்கு உன்னப்பாக்க வைக்கறேன் ந்னு ஒரு பெருமை லுக் விட்டு ! நல்ல இடம் பார்த்து உட்கார்ந்தோம் !

அப்பா ஸ்ட்ரிக்ட் ஆபீசர் லருந்து... கைண்ட் ஆப்பீசர் மோட் க்கு மாறிருந்த நேரம் அது !

நேர்மையா எச்சரித்தார் ! சொன்னாக்கேளு வேண்டாம் ! இப்பவே மணியாச்சுப்போய் தூங்கலாம் ! ந்னு !
கேட்கலையே ! ம்ஹூம் ! எல்லாம் போகலாம் ப்பா ந்னு !
ஊன்றிப்பார்க்க ஆரம்பித்தேன் !

முதலில் எதோ ஒரு சுசீலா பாட்டு ஆரம்பித்தார் . சரி ஒரிஜனல் பாட்டை கூடிய சீக்கிரம் பாடிடுவார்ன்னு ஒரு நப்பாசை !

இல்லையே ! சரி , அடுத்தப்பாட்டு ..அடுத்தப்பாட்டு ! பாட்டுடன் நேரமும்  நகர்ந்தது .ஆனால்.அந்த மேடம் அவர் பாட்டுக்குப் பாடிக்கொண்டிருந்தார் கண்களை மூடிக்கேட்டாலும் கொஞ்சங்கூட மேட்ச் ஆக மறுத்தது அதே பாடல்கள் அதே ஸ்ருதியில்! அட ! கஷ்டகாலம் குரலாவதுன்னா ! அனந்த் வைத்தியனாதன் தேவையில்லாமல் நினைவுக்கு போனார், ஜிகுஜிகு சூரிதாரில் , கழுத்தில் நீளமான மாலைகளும்  !

திரும்பி அப்பாவைப்பார்த்தேன் ! உனக்கு இது தேவைதான் என்பதுப்போல் இருந்தது அவர் பார்த்தப்பார்வை !டொய்ங்க் !

அம்மாவும் "இல்ல..வேற சிங்கர் பாடறார் ! அதாவது ! ...ப்ளீஸ் வெயிட்! "  என்பதுப்போல் பார்த்தார் . சரீ...ஆறு மனமே ஆறு !! ந்னு மனச ஆத்திட்டுப்பார்த்தால் ..அடுத்தடுத்து வந்தவர்களும். ..மேற்சொன்ன ஸ்ருதி , ராகம் பற்றியே பிரக்யையையே இல்லாமல் வந்த வேலையை செவ்வனே செய்தப்படி இருக்க ! இனி தாங்காது , விட்டால் ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் சித்ரா தேவி(காஜல்) கிட்ட சண்டைக்குப்போன கார்த்தி ஆகிடுவேனோன்னு ஒரு பயம் எழ நானும் எழுந்தேன் ! (சும்மாவா படம் எடுக்கறாங்க ! நடக்காமலா எடுக்கறாங்க  ?? :) ) !

அம்மாவைப்பார்க்க பாவமாக , "ஆமா! இப்படித்தான் இருக்கும் போலருக்கு ! " சன்னமானக் குரலில் எனப்பார்த்தப்படிக்கூற அப்பா இப்பப்போதுமான்னு பார்க்க..நான் ஆட்டோவைத்தேடினேன் , வழிக்கூறி...ஆட்டோவிலும் ஸ்பீக்கரில் கேட்டப்படி இருந்தது அவர்கள் பாடல்கள்...நான் மட்டும் கப்சிப் !

(பின்குறிப்பு : படமாவது நல்லாருக்கட்டுமேன்னு கடன் வாங்கிருக்கிருக்கேன் கூகிள் மஹராசாட்டருந்து :P )

Thursday 18 February 2016

அழகே உன்னை ஆராதிக்கிறேன்

அழகே உன்னை ஆராதிக்கிறேன் .

கவிதைப்போல உள்ள இந்த டைட்டிலே பல முறை இந்தப்படத்தைப்பார்க்கும் ஆவலைத்தூண்டியுள்ளன. என் ஸ்கூல் பருவங்களில் மாலை 3.30 , 4.30 மணியளவில் வீடு வரும்போது அம்மா கேட்கும் ரேடியோ நிகழ்ச்சிகளில் இந்தப்பாடல்கள் இடம்பெறும். இளையராஜாவின் இசையமைப்பில் உருவான மேஜிக்

 என்பதெல்லாம் அப்போது அறியாதப்பருவம். ஆனால் பாடல்கள் இப்போது கேட்டாலும் , அன்றைய மாலைப்பொழுதுகளை விழுங்கிய நினைவுகள் அலையடிக்கும் மனதில்.

சரி..சரீ...விஷயத்திற்கு வந்துவிடுகிறேன்.

நீண்ட நாள் ஆசையாக சமீபத்தில் நிறைவேறியது இந்தப்படம் பார்க்கும் ஆவல்.

காதலிக்க நேரமில்லை போலீஸ்காரன் மகள் தந்த ஸ்ரீதர் படம் என்பதும் ஆவலை அதிகப்படுத்த காரணம் ஆனது !

ஆரம்பமே அழகான இளைஞி நம் லதா , வாணி என்றக் கதாப்பாத்திரத்தில் ! வாணியின் காதலனாக வேணு(ஜெய் கணேஷ்) . இவர்கள் பைக்கில் உல்லாசப் பறவைகளாக பறக்கப்பர்சை நழுவவிடுகிறார் ஹீரோயின் அது செகண்ட் (??!) (இல்ல அவர்தான் முதலா என்று டைரக்டர்(ஆத்மா) டம் கேட்கணும்.)
ஹீரோ வாசு என்கிற விஜயக்குமார் கையில் கிடைக்க , அதிலிருக்கும் வாணி போட்டோவைப் பார்த்து உருகுகிறார். 

ஒரு பொக்கே ஷாப்பில் அவரைப்பார்த்ததும் காதல் கொண்டு அழகே உன்னை ஆராதிக்கிறேன். என்று தன் பெயர் இல்லாமல் எழுதி எழுதி லதாவிற்கு அனுப்பி வைக்கிறார். 

ஆமாங்க , நாம் அந்த நிலையில் இருந்தாலும் அதையே செய்திருப்போம் அத்தனை அழகு லதா , இதை விடக்கூடாதே! 

 கட்டியிருக்கும் சேலைகளும் செம அழகு.

இப்போதேக் கதை புரிந்திருக்குமே , ஹ்ம்ம்ம் அதே முக்கோணக் காதல் கதை !
வாணியின் அண்ணா வி.எஸ்.கோபாலகிருஷ்ணன் ,அண்ணி(கன்னட ஆர்டிஸ்ட் போலைருக்கறார்) ஒரேப் பெண்(சுட்டியாம் , இயக்குநரின் அதிப்புத்திசாலித்தனத்தை சுமந்துசெல்கிறார் இவர்) சுபாஷினி அறிமுகம்.. இவர் எடுத்து விடும் ஏ ஜோக்குகள் பாப்பா என்றுக்கூறியதற்காக மெக்கானிக் ஆக வரும் நாகேஷ் மூலம் நமக்கும் வந்து சேர்கின்றன.

தங்கையின் மேல் பாசமும் கூடவே நம்பிக்கையும் சேர்த்து க்கொண்ட அடிக்கடி ரிப்பேர் ஆகும் காருக்கு சொந்தக்கார அண்ணன் , லதா ஜெய் கணேஷை அறிமுகம் செய்து வைக்க டிசெண்டாக நகர்ந்துப்போகிறார்.

அண்ணனிடம் இதைப்பற்றி ப்பேச வரும்போது , அண்ணன் உன் வாழ்க்கை உன் மேல் நம்பிக்கை உள்ளது , வேணுவைப்பார்க்கலாம் எனவும் , அவர்கள் வீட்டின் மாடிப்போர்ஷனுக்கே ஹோட்டல் சாணக்யாவில் வேலைப்பார்க்கும் விஜயக்குமாரும் வந்து சேர அவரின் ஒருதலைக்காதலும் செழித்து வளர்கிறது.

வேணுவின் காமக்கண்ணும் பேச்சும் அறியாத (அப்பாவி!?) புத்திசாலிப் பெண்ணுமான லதா அவர் தரும் மதுக்கலந்த கூல்டிரிங்க் குடிக்க நானே நானா (வாணிஜெயராமின் குரலில் நாம் மயங்கும் இந்தப்பாடலே படம் பார்க்கவைத்தக்காரணி !) என்றுப்பாடி மயங்க , காத்திருந்த வேணு , அனுபவித்துக் கம்பி நீட்டுகிறார். அதே இரவில் வெளியூர் சென்றிருந்த அண்ணா அண்ணி சாலைவிபத்தில் இறக்க , காதலனும் காணாமல் போக , அண்ணன் பெண் சுபாஷிணிக்காக வாழவேண்டியக்கட்டாயத்தில் தள்ளப்படும் வாணி(லதா)க்கு ஆதரவுக்கரம் நீட்டுகிறார் அதான் ஆல்ரெடி லவ்விக்கொண்டிருக்கும் வாசு.

மன நிலை உடல்நிலை யைப் பாதிக்கிறதாம் வாணிக்கு , மாற்றுதலுக்காக வேற ஊர்ப்போய் தங்கசொல்றார் டாக்டர். 

அதெப்படிங்க நமக்கு மட்டும் ஒரு டாக்டரும் இப்படி ஒரு அட்வைஸ் பீஸ் கொடுத்தாலும் சொல்ல மாட்டேங்கறாங்க? !! 

. என்னவோ போங்க. !! மீதிக்கதைக்கு வரேன்.

இடம் மாறுதல் வேண்டும் என்பதற்காக கோவாவில் புதிதாக திறக்கப்பட்ட தங்களது ஹோட்டலுக்கு மாற்றலாகும் வாசுவோடு வாணி , சுபாஷினி யும் ட்ராவல் செய்கின்றனர்.

இதற்கிடையில் இன்னொரு லவ் ட்ராக் ..சுபாஷினி & பிரசாத்(விமல்) புதுமுகம் . பணக்கார பையன் சொத்தை உதறி சுபாஷினி மேல் லவ்வாகி , செருப்புக்கடை பையன் , பெட்ரோல் போடும் பையன் என வேலை ப் பார்த்து சிம்பதி சேர்த்து , அத்தை லதாவின் பெர்மிஷனையும் சேர்த்துப்பெற்றுக்காதலிக்கிறார்.

கோவாவில் மீண்டும் தென்படும் ஜெய்கணேஷ் பார்வை சுபாஷினி மேல் பட , லதாவின் முன் நடித்து , அவரைத்தன்னுடன் அழைத்துசெல்கிறார்
இந்தக்கேப்பில் மீண்டும் பொக்கே தந்து தன் காதலை வெளிப்படுத்துகிறார் விஜயக்குமார்(வாசு) இதைப்புரிந்துக்கொள்ளாதவர் மாதிரியும் ஆனால் அவர் செய்யும் எல்லா உதவிகளையும் ஏற்ற ப்படி அவர் நிழலில் ஹீரோயின். லேசா இடிக்குதுல்ல..!

வேணு எப்படியாவது சுபாஷினியை அடைய விரும்ப அதை தெரிந்துக்கொண்ட வாணி என்ன செய்தார் ? காத்திருக்கும் வாசுவுடன் இணைந்தாரா , சுபாஷினி பிரசாத் திருமணம் நடந்ததா இதான் மீதிக்கதை.

கதை திரைக்கதை, வசனங்கள் எழுதிய ஸ்ரீதர் சார் புதுமையாக எடுக்க முயற்சித்திருக்கிறார். அப்ப்பா வசனங்கள் அப்பவே அப்படியா என வியக்க வைக்கின்றன. முடிந்த அளவு இங்கிலீஷில் பேச வைத்திருக்கிறார் படத்தின் முன் பாதியில் இருந்த இந்த கிரிஸ்ப் வசனங்கள் பிற்பாதியில் நமத்துவழிகின்றன்.கதைகளம் பெங்களூர் என்பதாலோ என்னவோ கன்னடவாடை வீச , லேசாக கமல்ஹாசன் ஜாடையில் இருக்கும் இந்த பிரசாத் , பாடி லேங்குவாஜ் அதிலும் குறிப்பாக ரெண்டுப் பாடல்களில் பார்க்க முடியவில்லை , எப்படி சகித்துக் கொண்டனர் யூனிட் என நினைக்காமலிருக்க முடியவில்லை.
1979 ல் ஆரம்ப இளையராஜா இளமை வழிந்தோட இசை விருந்துப் பரிமாற , வாணி முன்பு பின் புறமாக அணைக்க வரும் காதலனைக் கோபித்துக்கொள்பவர் , தன்னை மதுதந்து சீரழிக்க எப்படி உடன்படுகிறார் ஏன் உடனேயே ரியாக்ட் செய்யவில்லை ? 

பின் வேலை ராஜினாமா, மீண்டும் சேர்தல் என க்ளாரிட்டி இல்லாத பாத்திரப்படைப்பு , நாவல் படித்த உணர்வை படம் நம் மீது அள்ளித்தெளித்தாலும் கண்கள் மட்டும் அழகியான லதாவின் மீதே லயிக்கின்றன.

முடிந்தும் அழகே உன்னை ஆராதிக்கிறேன் என்று முணுமுணுக்கிறது தந்னிச்சையாய் வாய். .

பார்த்தாலும் பார்க்கலந்னாலும் திரும்ப ஒருமுறை பார்க்கலாம் ..

Monday 15 February 2016

திருமாலை அறிய வைக்கும் திருமாலை - 15

பக்தி இலக்கியங்களில் அவசியம் படித்து தெரிந்துக்கொள்ள வேண்டியது நாலாயிரத் திவ்யப்பிரபந்தத்தில்(தொகுப்புப்பாடல்கள்)  உள்ள "திருமாலை"

பாடியவர் தொண்டரடிப்பொடியாழ்வார் எனும் விப்ர நாராயணர் , இவர் வைணவம் பாடிய ஆழ்வார்களில் எட்டாவது .

(ஆழ்வார்கள்- வைணவத்தில் திருமால் ஸ்ரீமஹாவிஷ்ணுவைப்பாடியவர்கள், இவர்கள் பன்னிருவர்).

இவரது 45 பாசுரங்கள் திருமாலை என்று அழைக்கப்பட அவரும் அரங்கனை மட்டுமே பாடுவேன் என்று ஸ்ரீரங்கத்தில் பள்ளிக்கொண்டுள்ள ரெங்க நாதரை தமிழெனும் நெய் ஊற்றி தன் பக்தியையே திரியாக்கி , தீபமாக நமக்கு திருமாலை , திருப்பள்ளியெழுச்சி என்ற பாசுரங்களை தந்துள்ளார். இனி பாசுரம் காண்போமா.

திருமாலை - 15.

மெய்யர்க்கேமெய்யனாகும் விதியிலாவென்னைப்போல
பொய்யர்க்கே பொய்யனாகும்புட்கொடியுடையகோமான்
உய்யப்போர்முணர்வினார்கட்கு ஒருவனென்றுணர்ந்தபின்னை
ஐயப்பாடறுத்துத்தோன்றும் அழகனூரரங்கமன்றே

புட்கொடியுடையகோமான் - கருடனைக்கொடியில் கொண்ட அரசன் (திருமால்)
மெய்யற்கேமெய்யனாகும் - மெய் உடன் வெறுப்பில்லாமல் நினைப்பவர்க்கு , உண்மையானவனாக தன்னைக்காட்டிக்கொடுப்பவன்

விதியிலா என்னைப்ப்போல - பாக்கியமில்லாத தாழ்ந்தவனான என்னைப்போல

பொய்யர்க்கே பொய்யனாகும் - ஏற்க மறுக்கும் நாத்திகர்கள் பொய்யர்கள்
பொய்யனாகும் - தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாமல் பொய்யனாக இருக்கிறார் திருமால்.

உய்யப்போம் - உயர் நிலையை அடையவேண்டும்

உணர்வினாற்கட்கு - என்று உணர்வு உள்ளவர்களுக்கு
ஒருவன் என்று உணர்ந்த -
உடலைக்காட்டிலும் உயர்ந்தவர் ஆத்மா , ஆத்மாவைக்காட்டிலும் உயர்ந்தவர் ஒருவர் பரமாத்மா அவரே என்று உணர்ந்தப்பின்

ஐயப்பாடு அறுத்து - நம் அத்தனை சந்தேகங்களை யும் வேறுடன் அறுத்துக் காப்பாற்றிட

தோன்றும் - தோன்றியுள்ள

அழகனூரரங்கனன்றோ - அரங்கன் குடிக்கொண்டுள்ள ஊர் திருவரங்கம் அன்றோ !!

பாசுர விளக்கம் :

முழுமையாக உணர்ந்து வெறுப்பில்லாமல் தன்னை நினைப்பவர்களுக்கு , தன்னை மறைக்காமல் காட்டித்தந்து , அருள்பவன் கருடனைக்கொடியில் கொண்ட அரசனாகிய அரங்கன்.

பல தவறுகளை இழைத்த , பாக்கியமில்லாத என்னைப்போன்றவர்களுக்கும்

வெறுத்து , தெய்வமே இல்லை என்பவருக்கும் தன்னை முழுவதுமாக உணர்த்தாமல் பொய்யனாகவே இருக்கிறான்.

உயர்ந்த,மறுபிறப்பில்லாத முக்தி  நிலையை அடையவேண்டும் என்று உணர்ந்தவர்களுக்கும் , நம்மைவிட உயர்ந்தவன் ஒருவர் அவரே பரமாத்மா என்ற அறிவுடனும் அவரை எண்ணினால்
நமது அனாதிக்காலங்களாக ஏற்பட்ட சந்தேகங்கள் , பாபங்களை அழித்து தன் தரிசனத்தைக்காட்டித்தரும் அழகன் வாழும் ஊர் திருவரங்கம் அல்லவா !!

இங்கு ஆழ்வார் , மெய்யான பக்தி செலுத்தினால் , கருடன் , அனுமன் மற்ற வைகுண்டத்தில் நித்ய வாசம் செயபவர்களுக்கு எங்கனம் தன்னை வெளிப்படுத்தி தரிசனத்தைக் காட்டுவாரோ அங்கனமே தன்னை நம்மிடம் வெளிப்படுத்திக்கொள்கிறார்.

பொய்யாக (நாத்திகராக) இருப்பவர்களையும் வெறுத்து ஒதுக்குவதில்லை..தன்னை மறைத்துக்கொள்கிறார்.

முழுமையாக அவரே உற்ற தெய்வம் என்றுணர்ந்து , பிறவியை வெறுத்து , முக்தி வேண்டுவோர்க்கு அவரது அனாதிக்கால சந்தேகங்கள் , பாபங்களை வேரோடு அறுத்து தரிசனம் தரும் அழகன் வாழும் ஊர் திருவரங்கம். என்று திருவரங்கத்தின் பெருமையை திருமால் வாழும் ஊராக விளக்குகிறார் தன்னை தாழ்த்திக்கொண்டு..
என்னே ஆழ்வாரின் பக்தி !!
நம்பொருட்டு நமக்காக பரிவுடனும் , தமக்கு அரங்கன்  அருள்புரிந்ததையும் வெளிப்படுத்தியுள்ளப் பாசுரம் இது.
ஆழ்வாரின் பாதம் பணிந்து அடுத்தப்பாசுரம் காண்போம்..

#திருமாலை

Tuesday 2 February 2016

மயக்குகிறாள் மன்னன் மகள்

சரித்திரக் கதைகளின் சிறப்பம்சமே நாம் அந்தக்காலக் கட்ட வாழ்க்கைமுறையை தெரிந்துக்கொள்ளவும் , அந்தப்பாத்திரங்களில் நம்மைப்பொருத்திப்பார்க்கவும் , அன்றைய க் காலக்கட்டத்தில் எப்படி இருந்திருக்கும் என்ற நம் கற்பனைக்கும் வடிகாலாக  இருக்கும்.

சிறிய வயதில் , தஞ்சைப்பெரியக்கோயிலும் , சுற்றியுள்ள கோயில்களும் சோழ தேசத்தின் மிச்சமாக அறிமுகமானாலும் வரலாற்றில் படிக்கும் போது , வருடங்களை நினைவில் கொள்வது சவாலாக தான் இருந்திருக்கிறது. எப்படி இருந்திருக்கும் இதே சாலை அப்போது..ராஜபாட்டை என்கிறார்களே இப்படித்தான் போயிருப்பார்களா , மாட மாளிகைகள் எப்படி இருந்திருக்கும் என உறையூர், கும்பகோணம், தஞ்சை வீதிகள் அதிகம் யோசிக்க வைக்கிறது இப்போதும்.

கங்கைக்கொண்டான் , கடாங்கரங்கொண்டான் (மயிலாடுதுறை அருகில் அதன்பின்பே ஊருக்குப் பெயர் வந்திருக்க வேண்டும்) எனப்பெயர்களுடன் படித்த இராஜேந்திர சோழனின் வரலாற்றில் ..முக்கிய மைல்கல் கங்கையில் புலிக்கொடி நாட்டியதும்.கடாரத்தில் சோழர்களின் ஆட்சி விரிவடைந்ததும்.

இதனை அடிப்படையாகக்கொண்ட ஒரு நாவல் , மன்னன் மகள் !

நாகையின் கடற்கரையோரம் ஆரம்பிக்கும் கதை , அதே கடற்கரையில் முடிவடைகிறது. நடுவில் கதாநாயகனாக கரிகாலனும் , அவனைச்சுற்றி பின்னப்பட்ட மர்மமுடிச்சுகளும் ,

ஆட்சியைப்பிடிக்க அப்பாவையேக் கொன்ன அரசியல் வரலாறுகளுக்கிடையில் ,
நம் தமிழன் சே எப்படி வாழ்ந்திருக்கிறான் என இறுமாப்புடன் மார்தட்டிக்கொள்ளலாம். மூன்று தலைமுறை யாக சிம்மாசனத்தை விட்டுக்கொடுத்து , வெளிக்காட்டாத வாழ்வு என்பதை ஆசிரியர் கதை நகர்த்துதலில்
..நம்மையும் கற்பனையில் நீந்தவைத்து , சோகத்தில் மூழ்க வைத்து , காதலில் திளைக்க வைக்கிறார்.

புத்தத்துறவிகளிடையே வளர்க்கப்படும் கரிகாலன் , தன் பிறவி ரகசியத்தை தெரிந்துக்கொள்ள வாலிபப்பருவத்தில் மடாலயத்தை விட்டு , தஞ்சை த்துறவியை சந்திக்க முக்கிய சாட்சியாகியாகிறது பச்சைக்கல் மோதிரம் , சைவத்துறவியாக சேர ஒற்றனின் சேர்க்கையால் தவறுதலாக வேங்கி நாட்டில் மாட்டிக்கொள்கிறான்.

வேங்கி நாடு , இராஜ இராஜ சோழனின் மகள்  குந்தவி விமலாதித்தனை மணந்துக்கொண்ட நாடு.(இராஜ ராஜ சோழன் படத்தில் , நம் லஷ்மி பின்னி பெடலெடுத்த கதாப்பாத்திரம் ஆச்சே ..மறக்க முடியுமா! )
அந்த வேங்கி நாட்டில்குந்தவி- விமலாதித்தனின் வாரிசாக இராசேந்திர நரேந்திரன் , நிரஞ்சனா தேவி (ஹீரோயின்) , நம் கரிகாலனுக்கு அறிமுகம் .அவர் நாட்டை சாளுக்கிய மன்னன் ஜெயவர்மனிருடமிருந்துக் கைப்பற்ற சதி செய்கிறார் சோழ நாட்டின் தளபதியுடன்.

ஏன்..என சில சுவாரசியமான முடிச்சுகள்

அங்கு தடாகத்தில் , பௌர்ணமி நிலவில் தேவதையாக நிரஞ்சனா தேவியை சந்திக்கும் கரிகாலன் மனதைப் பறிக்கொடுக்க , அவள் ஈடுப்பட்டுள்ள சதியை உணர்ந்து...என் வாள் உனக்கு அடிமை எனப் புறப்படுகிறான்.

அப்பப்பா..எத்தனை எத்தனை வர்ணனைகள் , தேவியின்  எழில் பிரதேசங்களையும் அதில் ஏறி இறங்கும் கரிகாலனின் மனதையும் காதல் ரசம் சொட்ட சொட்ட வடித்திருக்கிறார் ஆசிரியர்.

ராஜதந்திரங்கள் , தர்க்க சாஸ்திரம் , கண்களால் உணர்வுகளை படிக்கும் சாமர்த்தியம் , விவேகத்துடன் கூடிய வேகமான வீரம் , போர்த்திறன் இப்படி கலந்துக்கட்டி தருகிறார்.

வேங்கி நாட்டு மன்னனின் நம்பிக்கைக்குப்  பாத்திரமாவது , பின் அவன் ஒற்றனையும் சோழ நாட்டு படைகளின் பாசறைக்கு சேர்ப்பது , படைத் தளபதியாக உயர்வது என செல்லும் கதை ஏறி இறங்கிப்போகிறது.

இராஜேந்திர சோழனின் படைத்தலைவன் அரையன் ராஜராஜன் சோழியவரையன் வீரம் விவேகம் , பொன்னியின் செல்வனின் துடிப்பான வந்தியதேவன் இங்கு தேவர் ஆக பொறுப்புடம் கண்ணியமாக(வயது ஆகுதுல்லயா! :)) , அந்தணராக இருந்து படைகளை வழி நடத்திய பிரும்மராயர் ..விழி விரிய வைக்கும் கதாபாத்திரங்கள் , படைப்பில் அத்தனை நேர்த்தி !

சோழ பாசறைக்கு வந்து சேரும் வரை மெதுவாக நகரும் கதை..பின் கங்கையின் படையெடுப்பு எனும்போது ஜெட் வேகத்தில் கிளம்புகிறது படிக்கும்  நமக்கும் உற்சாக பானத்தைத் தந்தப்படி !

கங்கைபடையெடுப்பில் , படையின் உப தளபதியாக போர் சூத்திரங்கள் சொல்லும் விதமும் , நாகர்களின் மாசுணி தேசத்தில் போரிடும் முறையை ஆசிரியர் நம்மை கோட்டைக்கு வெளியே நிறுத்தி வேடிக்கைப் பார்க்க வைக்கிறார்.

யாரோ புத்தத்துறவிகளுடன் வளர்ந்த அனாதை பையனின் பிறப்பின் ரகசியத்தை வெளிப்படுத்தும் விதம் மிக அருமை.

நடுவில் அரையன் ராஜராஜன் மகள் செங்கமல செல்வியுடன் ஆன ரொமான்ஸ் என கலந்துக்கட்டிப் பயணிக்கிறோம் கரிகாலனுடன்.

இறுதியில் கங்கையை வெல்ல கரிகாலன் செய்த உதவி பயனடைந்ததா , மன்னன் மகளின்.மேல் தீராக்காதல் கொண்டு அவள் தம்பிக்கு வேங்கி நாட்டைத் திருப்பித் தந்தானா ?

தான் ஒரு யார் என்ற உண்மையை அறிந்தானா கரிகாலன் என முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்க்கிறார் ஆசிரியர்..

யாரிவர் ,

குமுதம் இதழில் 1958, 1959 ல் தொடர்கதையாக வெளிவந்துப் பின் நாவலாக்கியவர் , சரித்திர நாவலாசியர்களுக்கு பிதாமகர் திரு. சாண்டியல்யன் அவர்கள்.

நல்ல சரித்திர அனுபவத்தை சோழனின் தீரத்தை சகலமும் கலந்து சுவைப்பட சொல்லிப்போகிறாள் இந்த மன்னன் மகள்.
முடித்து வைக்கும் போது..அடடா ! முடிஞ்சுப்போச்சா என எண்ண வைத்து வெற்றிப்பெறுகிறார் நாவலாசிரியர்.

கவிதை நடையுடன் உவமைகளையும் , தத்துவங்களையும் வாரியிறைத்து புதினம் படைத்திருக்கிறார்ஆசான் திரு
சாண்டில்யன். ம.செ அவர்களின் ஓவியம் கண்முன் நிறுத்தி காவியமாக்குகிறது கதையை.

படித்திருந்தால்...திரும்பப்படிங்களேன். இல்லையா..அப்பறமென்ன..உடனே படிக்க ஆரம்பீங்க..

மீண்டும் இன்னொரு புத்தகத்துடன் சந்திக்கிறேன்.