Thursday 21 January 2016

கிழிந்துப்போன தாரை தப்பட்டை

கலைவாணர் பேத்தி பாடகி ரம்யா , தனது டிஸ்கவரி தமிழ் சேனல் குழுவினருடன் சாமிப் புலவர்(ஜி.எம்.குமார்) என்ற கலைமாமணி விருதுப்பெற்ற 
வாயைத்திறந்தால்...கெட்டவார்த்தைகளால் கொப்பளிக்கும் நாட்டுப்புறக்கலைஞரை பேட்டி எடுத்து...இன்றைய கரகாட்டம் , முதலான நாட்டுப்புறக் கலைஞர்களின் உண்மை நிலையை எடுத்துச் சொல்ல ஆரம்பிக்கும் காட்சிகள்..
ஒரு சின்ன சுவாரஸ்யத்தையும் , கூடவே இயக்குநர் பாலா என்பதால்...பயமும் சேர்ந்த உணர்வுகளால் கட்டப்பட்டு ஸ்கீரினுடன் பேஸ்டாகிறோம்!
சன்னாசி , தனக்கென ஒரு குழுவினர் , நேர்மையான தவில், தப்பட்டை முதலான இசைக்கருவிகள் வாசிக்கும் கலைஞனாக சசிக்குமார்.
கொடுத்த வேலையை திறமையாக வாசித்து குரு சொல் தட்டாத
..சன்னாசியாகவே வாழ்ந்திருக்கிறார்.
ஆரம்பத்திலேயே , யதார்த்தம் மீறி , அதிர்ச்சித்தரும் ஹீரோயினாக வரும் (வரலஷ்மி) வரு - சூறாவளி' சூரவல்லியாக சரக்குக்கேட்டுப்போடும் ..ஜி.எம் குமார் க்கு ஈடாக மது அருந்தும் , நடனம் ஆடும் பெண்ணாக அறிமுகமாகும் போதே பாலாவின் நடனமும் ஆரம்பமாவதை உணர்கிறோம்.
சற்றே ஜீரணித்து அடுத்தடுத்து காட்சிகளை எதிர் நோக்கிட , அரைகுறை ஆடையுடன்..ஆட்டங்களும் ஆரம்பமாக... என்ன மாதிரியான திரைப்படம்.. என யோசிக்கும் போதே , சன்னாசி மேல்..காதலுடன் , அந்தமான் க்கு கலை நிகழ்ச்சிப்பயணம் , என் மாமா பட்டினி கிடந்தா அம்மணமாக் கூட நா ஆடுவேன்...என்று சூரவல்லி கூறும்போது .. காட்சிகளில் ஒன்றிட..இசைஞானி ப்ளாஷ் ஆகிறார் இசையால்.
வரலட்சுமி யை கட்டாயப்படுத்தி , திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கும் சீனில்...ம்க்கும்..மாமா..மூன்று மாடுலேஷனில்...வரலட்சுமி..விசிலடிக்கவைக்கிறார் , இறங்கி , ஆடி , உருகி , அமைதியாகி... நடிப்பிலும்..இறங்கி ஆடியுள்ளார் வரு..ஆசம்..ஆசம் !!
யதார்த்தமான சீன் களுக்காக..ஆபாச வசனங்களை துணைக்கு சேர்த்து , வன்முறையை அப்பட்டமாக காமித்தப்படியே , இயக்குனர் பயணிக்க..சன்னாசியைக் காதலிக்கும் ஆக்ரோஷமான சூறாவளி..அடங்கிப்போய் , அடக்கமான வில்லன்..வெளித்தெரிவதுடன் இடைவேளை. அடுத்து என்னாகும் , என்ன ஆயிற்று - சூரவல்லிக்கு , அவர் தாயின் அழுகை மூலம்.. எதிர்பார்ப்பை விளைக்கிறார் இயக்குனர்.

வில்லனாக புதுமுகம் கருப்பையா வாக ஆர்.கே. சுரேஷ்.. , அதீத குருரம் கலந்த வில்லத்தனமான சீன்ஸ்.. (இவர் studio 9 media works - producer). அமுதவாணன், ஆனந்தி என சின்னத்திரை முகங்கள் , தந்த வேலை செய்து நடித்திருக்கின்றனர்.

ஏன் பாலா சார் ? உங்க அஸிஸ்டெண்ட்ஸ்ம் நல்ல கருத்துக்களோ..பெண்களின் மீது நல்ல அபிப்பிராயம் தரும் சீன்ஸ் உங்களுக்கு தர மாட்டாங்களா..இல்லை..இது தான் ..உங்களின்...யதார்த்தப்பொங்கலா ?? , இதற்கு மேலே பெண்களை..சீரழித்துக்காமிக்க அடித்தளம் அழகாப்போட்டுத்தந்து உங்களின் சமுதாய அக்கறையை அருமையாகக் காண்பித்துள்ளீர்கள் .

பலரையும்..மறைமுகமாக தாக்கி , இன்றைய கரகாட்டக் கலைஞர்களின் நிலையை.. எடுத்துச்சொல்ல வந்து அதீத யதார்த்தமும் , அளவுக்கு மீறிப்போய் முகம் சுளிக்க வைத்த இயக்குனருக்கும் படக்குழுவினருக்கும்.. வருத்தமான பாராட்டுகள்.

தவில் வித்வான் ஜி
எம்.குமார் , (எந்த தவில் வித்வான் , நாதஸ்வரம் வாசித்து பாடுவார் , எத்தனை அபத்தம் ??!! )
நாதஸ்வரத்துடன் பாடுவது , கரகாட்டக் கலைஞர்கள் ஒரு காட்சியில் கூட அதற்கான அடையாளங்கள் இன்றி..ஆனால் அவர்களுக்கான உடைகளுடன் வருவது, காயத்ரி ரகுராமை ஆபாசமாக ஆடவிட்டு
ஓவர் அலப்பறை தந்து..சாவு வீட்டில் ஆடுவதுப்போன்றக் காட்சிகள்..தேசிய விருதுப்பெற்ற பாலா வா டைரக்டர் என முகம் சுழிக்க வைத்து ஆச்சர்யத்தில் அறைகிறது நம்மை.

இளையராஜா அவர்களது இசையாட்சியால் , பலக் காட்சிகள்.. பின்னணி இசையால்..மிளிர்கிறது..ஒப்பற்ற இசைக் கலைஞன் என மனம் இறுமாப்பில் இருக்க
பாடல்கள்..மனதில் ஒட்டாமல், கேட்ட ஸ்வரங்களாக தோன்றுகிறது.

செழியன் .. கேமிரா யதார்த்தத்தையும் , பிரமாண்டத்தையும் சேர்த்துக் காண்பிக்கிறது.
எடிட்டர் G.சசிக்குமார்

ஆர்ட் டைரக்டர் , காஸ்ட்யூம் டிசைனர்கள்..தத்தம் வேலைகளில் தெரிய , பாலாவுடன் இணைந்து சசிக்குமாரும் தயாரிக்க..ஐங்கரன் இண்டர்நேஷனல் வெளியிட்டு..இளையராஜா 1000 என்ற பிராண்டுடன் வெளிவந்து தாரை தப்பட்டை - பாலா அவர்களின் யதார்த்தங்கள் என்ற பெயரில் மன வக்கிரங்களை..கிழித்துத்தொங்க விட்டுள்ளது.
( A சர்டிபிகேட்டுடன் வெளிவந்துள்ள திரைப்படம் , இளகிய மனமுள்ளவர்கள் குழந்தைகள் பார்ப்பதை தவிர்க்கலாம் )

திருமால் பெருமை - திருவரங்கம் அருமை !!

திருமாலைக் காண்போமா .

தமிழ் பக்தி இலக்கியங்களில் வைணவ இலக்கியங்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவை. இப்பாசுரங்களை எழுதியவர்கள் ஆழ்வார்கள் என்றழைக்கப்பட்டனர். பன்னிருவரில்.. சோழ நாட்டில் பிறந்தவர் ,  அரங்கனை தவிர பிற தெய்வத்தை பாட மாட்டேன் என்று பக்தி பயிர் செய்த தொண்டரடிப்பொடியாழ்வார் எழுதியது திருமாலை - திருப்பள்ளியெழுச்சி.

திருமாலை அறியாதார் "திருமாலை" யையே அறியாதார் என்ற வாக்கிற்கு இணங்க..அந்த திருமாலை அறிய முற்படும் முயற்சியில்..

இதோ அடுத்தப்பாசுரம்.

பாசுரம் - 14.

வண்டினம் முரலும் சோலை
மயிலினம் ஆலும் சோலை
கொண்டல் மீதனவும் சோலை
குயிலினம் கூவும் சோலை
அண்டர்கோன் அமரும் சோலை
அணி திருவரங்கமென்னா
மிண்டர்பாய்ந்து உண்ணும் சோற்றைவிலக்கி
நாய்க்கிடுமினீரே...

வண்டினம் முரலும் சோலை - வண்டுகள் ரீங்காரமிடும் சோலை

மயிலினம் ஆலும் சோலை - மயில் இனங்கள் ஆடிடும் சோலை

கொண்டல் மீதனவும் சோலை - மேகங்கள் கவிழ்ந்து  நிற்கும் சோலை

குயிலினம் கூவும் சோலை - குயில்கள் கூவிடும் சோலை

அண்டர்கோன் அமரும் சோலை - அண்டங்களுக்கும் , வைகுண்டம் வாழ் நித்திய சூரிகளுக்கும் தலைவன் அமர்ந்திடும் சோலை

அணி திருவரங்கமென்னா - ஆபரணமாக விளங்கிடும் திருவரங்கம் என்னும் பெயரை

மிண்டர் - அறிவிலிகள் / செய் நன்றி கொன்றார்கள்

பாய்ந்து உண்ணும் - பாய்ந்து , விரும்பி உண்ணும்

சோற்றை விலக்கி - சோறும் உண்பதும் மட்டுமே வாழ்க்கையென்று உண்பவர்கள் சோற்றை தவிர்த்து

நாய்க்கிடுமினீரே - நீங்கள் நாய்க்கு போடுங்கள்.

இனி பாசுர விளக்கம் :

வண்டினங்கள் ஏகப்பட்ட தேனை உண்ட மயக்கத்தால் ரீங்காரமிட்டும் , மயில்கள் நர்த்தனமாடியபடியும் , மேகக்கூட்டங்கள் சூழ்ந்து கவிழ்ந்தும்  நின்றிட , குயிலினங்கள் கூவியப்படி உள்ளதுமான சோலை , பல அண்டங்களுக்கும் (உலகங்களுக்கும்) வைகுண்ட வாசம் புரிபவர்களுக்கும் அரசனான திருமால் விரும்பி அமர்ந்திட்ட சோலை , ஆபரணமாக விளங்கும் திருவரங்கம் என்று  சொல்லாத அறிவிலிகள்(நன்றி மறந்தவர்கள்) , பாய்ந்து   சோற்றை மட்டும் உண்பவர்களை தவிர்த்து , நீங்கள் நாய்க்கு சோற்றை இடுங்கள் .

--------**---------

முந்தைய பாசுரங்களில் , மஹாவிஷ்ணுவின் பெயர்களை சொல்வதன் பலன்கள் , திருவரங்கத்தின் பெருமை , மகிமை , திருவரங்கம் என்று சொல்வதால் கிடைக்கும் நன்மை என மற்றவர்களுக்கு உபதேசமாக சொல்லி வந்த ஆழ்வார் , இந்தப்பாசுரத்துடன் அதனை முடித்துக்கொள்கிறார்.

நாவில் வறட்சி ஏற்படும் போது , பச்சை கற்பூரத்தை வாயிலிட்டு அதை சரி செய்துக் கொள்வது போல , பக்தி சிந்தனையற்றவர்களை அரங்கனின் பெருமையை சொல்லி , அவன் பால் அவரது சிந்தனைகளை திருப்பிட முயன்றவர் சற்றே தன்னை புதுப்பித்து க்கொள்ள திருவரங்கத்தில் உள்ள சோலைகளின் அழகை தெரிவிக்கிறார்.

ஸ்ரீரங்கம் சுற்றியுள்ள சோலைகளில் , மரங்கள் , பூக்களில் மிதமிந்திய மது-தேனை அருந்திய வண்டுகள் அதில் மதிமயங்கி எழுப்பும் ஒரு வித ரீங்காரம் (முரலும் என்கிறார்.) செய்தபடியே கூட்டமாக கிளம்ப , அதை கருமேகம் என எண்ணிய மயிலனங்கள் தோகை விரித்து ஆட ஆரம்பிக்க , மயிலின் அழகையும் , தான் வரும் முன் ஏன் ஆடுகிறது என தெரிந்துக்கொள்ளவும் மேகங்கள் வந்து தலை கவிழந்திட , குயிலினங்கள் தாங்கள் அமர்ந்த கதகதப்பான இடத்தில் இருந்தப்படியே இந்த அழகை ரசித்தப்படி கூவிட அழகான சோலை.

இந்த சோலையில் , வீபிடணுடன் இலங்கை செல்லாமல் , நம் பொருட்டு ராமரால் தரப்பட்ட தங்க விமானத்துடன் கூடிய பெரியபெருமாள் - அரங்கன் , பல அண்டங்களிலும் வசிக்கும் அனைவருக்கும் அரசன் (தலைவன்-திருமால்) நமக்காக திருவரங்கம் வந்து தங்கிட்ட சோலை . அப்படிப்பட்ட திருவரங்கம் , சம்சாரம் எனும் பிணி போக்கிடும் அணி , ஆபரணம் இந்த திருவரங்கம் (அரங்கன்)
என்ற எண்ணம் இல்லாமல் , நன்றி மறந்து , அரங்கனை நினைக்காமல் , சோறு மட்டுமே முக்கியம் என்றெண்ணி , வாழும் மனிதர்களுக்கு உணவிடுவதை விட ,

ஒரு வேளை உணவிட்டதற்காக வீட்டு வாசலில் பழியாகக் கிடக்கும் நாய்க்கு உணவிடுங்கள் என்கிறார் ஆழ்வார்.

இந்தப்பாசுரத்தில் ஆழ்வார் நம் பால் கொண்ட அன்பு , நம்மையும் அரங்கன் பால் பக்திக்கொள்ள செய்யும் பாங்கு , ஆதங்கம் , திருவரங்கம் பெருமை அழகை சிலாகித்தல் அனைத்தும் புலனாகிறது .

ஆழ்வாரின் பாதம் பணிந்து அடுத்தடுத்த பாசுரங்களுக்கு நகர்வோம்.

Saturday 2 January 2016

Wig பிரச்சனை விக்கலை விட மோசமப்பா !!

நேற்று அந்த குன்று தோறும்  நிற்கும் குமரன் பெயர் கொண்ட டாக்டரை காணும் வரையில் அந்த சம்பவம் நினைவிற்கு வரவில்லை.

அவர் லேசாக தலையை சிலுப்பி சிரித்தவாறே வழியனுப்பும் போது வந்தது..எப்படி மறந்தாய் என.

அன்றைய சாயந்திரப்பொழுதும் கலகலப்பாக வழக்கம் போல குழந்தைகள் விளையாடப்பார்த்திருந்தது. எப்போதும் எதையே தொலைத்தும் அதைத்தேடிக்கொண்டும் இருக்கக்கூடிய பிஸியான நகர வாழ்க்கையிலிருந்து சற்றே நாட்களே ஓய்வுக்கொள்ளும் தூரத்தில் இருந்தக்குடியிருப்புப் பகுதி . அருகிலேயே பல தொழிற்சாலைகள் , அலுவலகங்கள் என்றிருந்ததால் சட்டென்று அவசரகால விஸிட்டுக்காக முக்கியப்பொறுப்பில் இருப்பவர்களுக்ஜான் முக்கி முனகி முன்னேறிக்கொண்டிருந்த குடியிருப்புப்பகுதி.

காலையில் கண் விழித்து வெளியே வந்து குட் மார்னிங் சொல்லும் இலங்கை செக்யூரிட்டி யும் கையில் டீயுடன் காரை ஸ்டார்ட் செய்யும் ஓமான் தம்பதிகளும் , இன்னுமா நீ பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடலை என்றப்படி வரும் பிலிப்பினோ பெண் நட்பும் இணைந்திருந்தக்காலம்.

அந்த மாலையில் வழக்கப்படி சைக்கிள் ஓட்டியும் , பந்துடன் குழந்தைகள் விளையாடியப்படி இருக்க , கூடவே அம்மாக்களும் விளையாட்டுகளில் பங்கேற்றும் , ஆங்காங்கே குழந்தைகளுக்கு துணையாக அமர்ந்துப்பேசியப்படியும் இருந்தோம்.

அன்று அலுவலகத்திலிருந்து சீக்கிரமே திரும்பிருந்தார் சோலங்கி.
குடும்பம் மும்பையில் இருக்க தான் மட்டும் மற்ற மூவருடன் கம்பெனிதந்த ஃப்ளாட்டில் தங்கியுருந்தார்.

எதிலும் காம்ப்ரமைஸ் செய்துக்கொள்ளாதவர் , செகண்ட்ஸ்களில் கிடைத்த கட்டில் சோபா என தனது அறைக்குள்ளே தனிக்குடித்தனம் நடத்தி வந்தவர் ,இளவயதில் மாடலிங் செய்தவர் என்பதும் , பேச்சில் வல்லவர் என்பதால் சேல்ஸ் ல் மேனேஜராக பணிபுரிந்து வந்தார்.

முதல் மாடியில் தங்கியிருந்த டெல்லியைச்சேர்ந்த பெண்ணின் மேல் பலருக்கும் ஒரு -- இருக்க , தானும் அந்தப்போட்டியில் முன்னிலை வகிப்பதாக அவளைப்பார்க்கும் போதெல்லாம் காட்டிக்கொள்வார். 

பேசுவது இருவருக்கும் ஒரே மொழி என்பதால் இவர் விடும் வாய் நீர் எங்களுக்கு தெரியாமலும் , அவர் சென்றப்பிறகு அவள் சொல்லக்கேட்டு சிரித்தப்படியே நகர்வோம்.

அன்று , அலுவலகத்தில் வந்து தனக்கான ஷவரை எடுத்தவர்(அப்படித்தான் சொல்வார்!  ) , ஃப்ரெஷ்ஷாகி தலையில் ஒரு தொப்பியுடன் வந்தார்.  

எப்போதும் குழந்தைகளிடம் வம்பிழுப்பார் அவருக்குப்பிடித்தமான பொழுதுபோக்கும் அதுவே  , ஆனால் டெல்லிப்பெண் அமர்ந்திருப்பதைக்கண்டவர் நேராக அவளிடம் சென்று மிக சுவாரஸ்யமாக தன்னையே மறந்த நிலையில் பேச ஆரம்பித்து விட்டார்.

விளையாட்டு மும்முரத்தில் எப்போதும் அவரைத்துரத்திப்பிடித்து விளையாடும் என் மகன் அன்றும் அவர் பின்னேப்போய் பே என்றிட பேச்சில் லயித்திருந்தவர் கண்டுக்கொள்ளவில்லை.

பொறுமையிழந்தவன் அவரது கவனத்தை ஈர்க்க , தலையில் இருந்த கேப்பைத் தூக்கிக்கொண்டு ஓட , அதிர்ச்சியில் சரேலென்று திரும்பினார்.
அப்போதுதான் நாங்களும் கவனிக்க அவரது தலை வழுவழுவென மின்னியப்படி இருந்தது.இத்தனை நாளாக அவர் தலைக்கு விக் வைத்து தெரியாமல் சமாலித்திருக்கிறார் என்று உணரவே சற்று காலத்தை எங்களது மூளை உள் வாங்க நேரம் பிடித்தது . அதற்குள் என் மகன் அனரது தொப்பியுடன் அகப்படாமல் ஊர்கோலம் போய்க் கொண்டிருந்தான் .

வந்ததே கோபம் அவருக்கு , அதுவரை ஆசையாகக்கொஞ்சிய வேகமாக துரத்திப்பிடித்து அவரது தொப்பியைப்பெற்று மீண்டும் தன் தலையை மறைக்கவும் , சுற்றியிருந்த பெண்கள் சிரித்து அடங்கவும் சரியாக இருந்தது.
என்ன செய்வதென்று அறியாமல் , மகனை துரத்தியப்படியே சிரிப்பை சிரமப்பட்டு அடக்கியவள் , திட்டிக்கொண்டே அவனைப்பிடித்தேன்.

திஸ் இஸ் டூ மச் ..ஐ டிண்டிட் எக்ஸ்பெக்ட் திஸ் என்றப்படியே அவரது ப்ளாட்டிற்கு நகர , மன்னிப்பும் கேட்டுக்கொண்டேன் !
அவர் நகர்ந்ததும் நான்  மகனைக்கண்டித்தாலும் , அவரை எண்ணி   பார்க்க பரிதாபமாக இருந்தது , இத்தனை நாளாகப் பொருத்தமான விக்(wig) குடன் மிகவும் கம்பீரமாக வலம் வந்தவர் , அன்று மிக வருத்தப்பட்டு விட்டாரே என்று !!

15 வருடங்கள் கடந்திருந்தாலும் நினைவில் நிழலாடும் இந்த சம்பவம் , ஏனோ டாக்டரிடம் ஏதும் சொல்லாமலும் வர வைத்தது .....

பயணம் தரும் அனுபவம் ...

பயணங்கள் என்றுமே சுவாரஸ்யத்தை விதைத்து அனுபவக்கனிகளைப் பெற்றுத்தருபவை.

நேற்று , ஒர் அவசர வேலையாக துபாய் செல்ல டாக்ஸிப்பிடித்தேன்.
துபாயைப்போல் அல்லாமல் ஷார்ஜாவில் பல தனியார் டாக்ஸி சர்வீஸ்கள் உண்டு , மிக அரிதாகவே அதில் இந்திய , அதிலும் தமிழ் ஓட்டுனர்கள் பார்க்க இயலும்.

அப்படியே ஏறி அமர்ந்ததும் , செல்லும் இடம் கூறியதுமே , மெல்ல பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தார் டிரைவர் !

ஆப் மலையாளி. ? அதென்னவோ இங்கு கொஞ்சம் டஸ்கி கலரில் இருந்தாலே முதலில் கேட்கப்படும் கேள்விதான் ! இல்ல மதராஸி என்றவளை , ஓ ..சென்னை என்றவர் பதில் என்னை நன்றாக அவரை உற்று நோக்க வைத்தது. நீல சீருடை , ஒழுங்கற்ற சட்டை , முடி , அனாயசமாக ஸ்டியரிங் வீலைக்கையாண்ட விதம் , அந்தக்கைகளுக்கு அது பழக்கமான வேலை என்பதும் , சொன்னதும் , வழியை சட்டென புரிந்துக்கொண்ட விதம் அவரது இங்குள்ள அனுபவத்தையும் , முகத்திலும் எழுந்திருந்த வெள்ளி முடிகள் வயதையும் கூட்டிக்காண்பித்தன.

ஆமா , சென்னை என நான் ஆங்கிலத்தில் தொடர , அவரும் , தான் அதிகம் படிக்கவில்லை எனவும் ஆனால் ஆங்கில அறிவு தம்மால் புரிப்துக்கொள்ளும் அளவு இருப்பதாகவும் கூறி வந்தவர் , தமிழ் மக்கள் சிங்கப்பூர், மலேசியாவில் தான் அதிகமுள்ளனர் என்றும் , இங்கு அதிகம் மலையாளிகளே உள்ளனர் என்றும் ரமணா ரேஞ்சில் புள்ளி விவரப்புலியானார். டாபிக்கை மாற்ற நானும் உங்களுக்கு குடும்பம் மனைவி எல்லோரும் இங்கில்லயா ? என இல்லை என்றும் ...

ஆஃகான் என்றவர் , ஆஃகானிஸ்தானில் கந்தஹாரில் இருப்பதாகவும் 3 குழந்தைகள் எனவும் , தான் இங்கு நீண்டக்காலமாக டிரைவராக இருப்பதாகவும் கூறிய தொனியில் விரக்தி சிதறி விழந்தது.
என்னையும் விசாரித்தவருக்கு இந்தியாவைப்பற்றி அறியத்துடிக்கும் ஆவலும் அடங்காமல் இருந்தது.

கேரளாவும் , தமிழ் நாடும் சேம், சேம் , நெக்ஸ்ட் , நெக்ஸ்ட் என்றவர் அங்கே எல்லோருக்கும் 2 குழந்தைகள் தான் , இங்குப்போலில்லை என்றார். குட் என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டவர் ,

ஆப் , ஹிந்து ?? என்றார் , நான் ஆம் எனவும் , இந்தியாவில் இந்து , கிறிஸ்டியன், முஸ்லீம் ஆல் சேம் , சேம் , ஆல் டு கெதர் , நோ difference ! ஒன்லி ஹியர் ஆல்..

What is in religion , nothing , u cut hand , blood is red , cut my hand only red , not white , by cutting pain for u & me are same, then why difference என்றார் ...

ஆம் , எங்கள் நாட்டில் நாங்கள் அனைவரும் ஒன்றாக வே வாழ்கிறோம் என்றேன். ஐ லைக் இந்தியா , தட்ஸ் குட் என்றவர் பேச்சில் ஒரு சோகம் இழையோடியதையும் , கூடவே தனக்கு BP problem மட்டுமே இருப்பதாகவும் , குறையவில்லை எனவும் 140/150  இருப்பதாகவும் சொல்ல , நானும் உங்கள் வயதுக்கு அது ஒகே என்றிட, எனக்கு 42 மட்டுமே என்றார்.  வாயடைத்து , பையெடுத்து பணம் தந்து நன்றி சொல்லி என் இடம் இறங்கினேன் .

முதுமைக்கோலம் தந்த மனம் , பேசியதில் தெரிந்த அவர் குணம், ஆப்ஃகானின் நிலை ,  அவரைப்பற்றி அதிகம் யோசிக்கவைத்தது.

இன்னொரு ட்ரைவரையும் சந்தித்தேன். .அந்த அனுபவம்.கலவரம் ,அது .அடுத்தப்பதிவில்

சாயி நாதா ..

குருர் பிரம்மா குரூர் விஷ்ணு குரூர் தேவோ மஹேஷ்வர :
குரு சாக்‌ஷாத் பரப்ரும்மா தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ||

நமது மனித வாழ்வில் , மதங்களும் சமயங்களும் மனித வாழ்வை நன்னெறிப்படுத்தவும் , மேன்மேலும்
செம்மைப்படுத்தவும் ஏற்ப்படுத்தப்பட்டவை. 

சிறப்பான வழியில் சீர் தூக்கிய இறை சிந்தனைகளுடன் , தர்மத்தின் வழியில் , குருவின் அருளாசியுடன் மனித வாழ்வை முடித்திட , மானுடப்பிறப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு ,அனாதி கால பாவங்களும் , புண்ணியங்களும் சரிசமமாகிட , முடிவில்லா ஆனந்தமாக பிறவியற்ற பேறு நிலை எய்தப்படுவதாக நம் சனாதன தர்மத்தில் புராணங்களும், இறைவனின் அவதார மகிமைகளின்மூலமும் , பாரதப்புண்ணிய பூமியை தம் அவதாரங்களில் இன்னும் இன்னும் அழகாக்கிய மகான்களின் அறிவுரைகளாலும் அறிகிறோம்.

மாதா- பிதா- குரு-தெய்வம் தமிழ் மொழி அமுதத்தில் சொல்லித்தரப்பட்ட இனிய வாக்கியம் , இதில் மாதா பிதாவும் இணைந்து குருவைக்காட்டிட , அந்த குருவின் மூலமே , பரம்பொருளாகிய இறைவனை அடையலாம் என்பது தெள்ளத்தெளிவாக உணர வைக்கப்படுகிறது.

ஆச்சாரியர்கள் எனும் நமக்கு குருவாக அவதரித்தவர்கள்  நம் பாவங்களிருந்து , விடுவித்து , இறை நாமத்தின் மூலம் , நம்மிடையே பக்தியை விதைத்து , பலனாக மோட்சக்கனியை நமக்கு ஊட்டிட வந்தனர்.

அப்படியே, மகாராட்டிரா மாநிலத்தில் கோதாவரி ஆற்றின் கரையில் அமைந்த ஷீரடி என்ற புண்ணிய பூமியில் அனைவருக்கும் ஏழைப்பங்காளானாகக் காட்சித்தந்து அருளியவர் , இறைனுபவத்தை அனைவருக்கும் அள்ளி வழங்கிடும் சாய் மகான் , பாபா என அனைவராலும் எவ்விடத்திலிருந்து அழைத்தாலும் அருளிக்காக்கிறேன் எனும் சாயி பாபா.

நமது இந்து சம்பிரதாயங்களில் மற்றவர்கள் துயர்க்கண்டு பொறுக்காமல் இயன்ற அளவில்  உதவுதலும் , பக்தர்களுக்கும் அடியவர்களாகி தொண்டு புரிதலும் முக்கியமானதாக சொல்லப்படுகிறது.

அடியார்க்கு அடியார் , எளிமைக்கும் இறங்கிடும் இறைவனால் ஏற்கப்படுகிறார்.
பாபா என்பவர் யார் .. ஏன் இத்தனை மக்கள் கொண்டாடுகிறார்?
புரியாத மொழியில் அவர் மேல் பாடல்களா ? , பஜன் என்கிறார்களே! 

இப்படி சிறுப்பிள்ளைத்தனமான பல கேள்விகள் எழுந்ததும் இறைவனின் ஆணையாகவே , அந்த அனுபவங்களும் நிகழ்ந்தன எங்கள் வாழ்விலும்.
2006 ம் ஆண்டு, முதன்முதலாக, வெள்ளை உள்ளத்துடன், உருவத்துடன், என்னைப்பற்றி நானே சொல்கிறேனே என்றப்படியே சாயிபாபா உள் நுழைந்தார் எங்களுக்குள்.


பிறந்தக்குழந்தை,தீவிர சிகிச்சைப்பிரிவில் , பிழைக்குமா இல்லையா என்றறியாத நிலையில், இன்றும் என்றும் திருமால் ஒருவனே பர தெய்வம் என்றுரைக்கும்  , தீவிர வைணவனது கைகளுக்குள் சாய் சரித்ரா  ஆங்கில வடிவப்புத்தகமும் , சிரித்தவாறே கால் மேல் கால் போட்டமர்ந்த வெள்ளை பாபாவும் வந்தமர்ந்தார் ,  மராட்டியப்பெண் அலுவலகத்தோழி ஹர்ஷலா என்பவள் மூலம்.


ஒரு இரவு , பிரயாணத்தில் அத்தனைப்பக்கங்களும் துக்கம் படிந்த மனம் அழுந்திட படித்து முடித்து , கையில் சூட்கேஸில் பாபா உருவ சிலையுடன், சிகிச்சைப்பெற்று வந்த சிசுவைக்கண்டதும் ஏனோ தனித்தெம்பு அவர் மனதில் ஊறியது .
எப்படி , ஏனென்று உணர இயலாத சோகச்சுமை .. குழந்தைக்கு பூரண சுகமடைந்து , தொட்டிலிட்டு பேர் வைக்கும் தருணம் , சாய் வைதேகி என்று பெயரும் வைத்திடு . இது என் பிரார்த்தனை !

விரைவில் நாம் சீரடி செல்ல இருக்கிறோம் என்ற கணவரது சொல் கேட்டு முதன் முறையாக வியந்து அப்படியே ஏற்றுக்கொண்டாள் அவள்.ஆம் ...நான்!
அந்த ஆசீர்வதிக்கப்பட்ட குழந்தை , 1 மாத தீவிர சிகிச்சைப்பிரிவிலிருந்து வெளிவந்து இன்மொழி பேசி , நான் சாய் வைதேகி என்று சிரிக்கிறது , எப்போதும் உடனிருந்து பார்க்கிறேன் என்று சிரித்தப்படியே வீட்டிருக்கிறார் அந்த வெள்ளை மகான் .. சாயி மகான்..

இப்போதும் இதை நெகிழ்வுடன் பகிர்கிறேன் அடியேன் நான், எனது வாழ்வில்  நடந்த அந்த மஹானின் அற்புதம் இது !


எந்த ஒரு இறை அனுபவமும் , நாம் செய்த முற்பிறவி கர்மப்பலன்களின் விளைவால் நிகழ்பவை, உணர்பவர்களுக்கு அனைத்தையும் உணர்த்துபவனும் இறைவனே !

சொல்லித்தெரியவதில்லை இனிப்பின் சுவை , வீசும் தென்றலின் இதம் , சுமந்து வரும் காற்றில் மலர்களின் மணம்.  உணர்வால் தெரியும் தனியொரு இன்பம்.
இறையனுபவமும் அத்தகைய ஒரு பேரானுபவம் . அதை இறைவனின் ஒப்புதலுடன் அவனது திரு விளையாடல்கள் , அவனது அடியார்கள் அவனது அருளால் நிகழ்த்தும்போது உணரப்படுபவை. அப்படி மற்றுமோர் பேரானுபவம்.

ஷீரடி தலத்தை எவன் மிதிக்கிறானோ , அவனுடைய துன்பம் ஒரு முடிவை அடைந்து சௌகர்யத்தை அடைகிறான் ”.
என்ற பாபாவின் உபதேச மொழிக்கேற்ப ஒருவரது வாழ்வில் அடைந்த மேன்மையை அவர் வார்த்தைகளில் காண்போம் .
ஒவ்வொருவர் மனதிலும்  சாய்பாபா வீற்றிருக்க வேண்டுமென்றால் அவர் இன்னொருவர் மூலம் தான் உணர்த்துவார் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன் .

எங்களின் வாழ்விலும் சாயி பாபா அவ்வண்ணமே உள் நுழைந்தார்.
சுமார் ஆறு வருடங்களுக்கு முன் , நான் சென்னையில் , ஒரு பிரபல மருத்துவமனையில் உணவு ஆலோசகராக வேலை செய்து வந்தப்போது , மழலை பேறு வாய்க்காமல் , திருமணமாகி பலரது வாய் அவலாக என் வாழ்வு போய்க்கொண்டிருக்க , அதனை மறந்து , அந்த சிந்தனைகளும் மறத்துப்போக ஆரம்பித்திருந்தேன்.

திருமணமாகி , இரண்டரை வருடங்கள் ஆகியும் குழந்தை
இல்லாக்குறையை , குறையுடன் வரும் நோயாளிகளுடன் அவர் தம் பிரச்சனைகளுடன்  மணிக்கணிக்கில் பேசியப்படி ,அதில் என் கவலைகளை  மறந்திருப்பேன் .

அப்படியே , ஒரு நாள் , அந்த சிறப்பு பிரிவில் நுழைந்தேன் .
அங்கு ஒரு அறையில் ஏறக்குறைய உயிர்ப்போகும் தருவாயில் இருந்து தப்பித்த ஒரு இளம் மருத்துவ மாணவி சிகிச்சை பெற்று சுய நினைவின்றி இருந்தார் .

நான் அவரின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறி ,அவருக்குத்தர வேண்டிய உணவுப்பற்றிய சந்தேகங்களை யும் விளக்கிவிட்டுப் பார்த்தேன் . அவ்வறையில் ஷீரடி சாய்பாபாவின் படத்திற்கு புஷ்பாஞ்சலி செய்து விட்டு , சாய் சரித்திரம் புத்தகத்தையும் படித்துக்கொண்டிருந்தனர்.

அன்று வியாழக்கிழமை, அந்தப்பெண்ணின் பெற்றோர் உடனே என் பக்கம் திரும்பி , & நீயும் சாய் சரித்திரம் புத்தகத்தைப்படிம்மா ! உன் கவலைகளை யும் , பாபா தீர்த்து வைப்பார் & என்றுக்கூறி , ஆரத்திப்பாடல்கள் அடங்கிய புத்தகங்களை எனக்குக்கொடுத்தனர் .

அந்தப்பெண்ணின் தாய் , என்னை நன்குப்படித்தவர்ப்போல் தோன்றினார்.
அவரதுப்பார்வை என்னை ஊடுருவிட ,&  உன்னைப்பார்த்தால் , எதோ மனக்கவலையில் உள்ளது போல தெரிகிறது !! ஒரு முறை சாய் சரித்திரம் படித்துப்பாரும்மா !! உன் கவலைகளை கண்டிப்பாக தீர்த்து வைப்பார் & என்றார் . அவசியம் பாபாவிடம் நம்பிக்கை வையுங்கள் என்றும் அழுந்தக்கூறினார்.

அப்போது அவர்களிடம் சிரித்தப்படியே விடைப்பெற்றாலும் மனம் ஏனோ ஒன்றிட மறுத்தது , நம்பிக்கை உண்டா உனக்கு என பலமுறை கேள்விகளை எழுப்பிப்பார்த்தது.

புத்தகத்துடன் வீடு வந்து சேர்ந்த நான் , அதுவரையில் பாபாவில் பெரிதாக ஈடுபாடோ ,நம்பிக்கை யோ இல்லாத நான் , அப்படி என்னதான் இந்த புத்தகத்தில் , என்ற ஆர்வம் மேலிட சரிப் படித்துதான் பார்ப்போமே என்று பிரித்துப்படிக்க ஆரம்பித்தேன் !.

பாபா இருப்பது உண்மையெனில் , இந்த புத்தகத்தைப்படித்த சில நாட்களில் , நான் ஷீரடி செல்ல வேண்டும் என மனதிற்குள் எண்ணியப்படியே புத்தகத்தைப்படித்தேன் .

படித்து முடித்து ஒரு வாரம் ஆயிற்று ..கிட்டத்தட்ட மறந்தேப்போயிருந்த நிலையில் , ஒரு நாள் திடீரென என் கணவர் ஷீரடிக்கு விமான டிக்கெட்டுகள் புக் செய்திருப்பதாகவும் , என் பிறந்த நாளன்று , ஷீரடியில் தங்கப்போவதாகவும் சொல்லி என்னிடம் டிக்கெட்டுகளைத் தந்தார் !
எனக்கு ஒரு நிமிடம் என்ன சொல்வதென்றறியாமல் திகைத்துப்போய் ,தெரியாமல்   நின்றிருந்தேன் .

நான் நினைத்தது என் கணவருக்கு எப்படி தெரிந்தது என்று புரியாதப்புதிராக ஆச்சர்யப்பட்டுப்போனேன் !

இது சாயிபாபா எதோ எனக்கு உணர்த்துவதாகவே தோன்றியது.
பின் ஷீரடி சென்று மனதாரப்பிரார்த்தித்துக்கொண்டு வந்தேன். 
வாராவாரம் வியாழக்கிழமை விரதம் ஏற்றுக்கொண்டு , அதன்படியே இருந்தும் , பலப்பிரார்த்தனைகளை நானும் என் கணவரும்  மேற்கொண்டோம் !

இயற்கையான முறையிலும் , வழக்கமான மருத்துவ சிகிச்சை முறையிலும் குழந்தைப்பிறப்பிற்கான வாய்ப்புகள் குறைவென்று மருத்துவர்கள் கூறியப்பின்பும் , மனம் தளராமல் , சிகிச்சையை நம்பிக்கை யுடன் பின்பற்றினோம் .

எங்களது ஆத்மார்த்தப்
பிரார்த்தனையை சாயிபாபா ஏற்றுக்கொண்டார் . இடைவிடாத வேண்டுகோளுக்கு தலையசைத்தார்.

ஆம்.அதன் பலனாக சமீபத்தில் அழகியப்பெண் குழந்தையை நான் பெற்றெடுக்க , மழலைப்பேறு வாய்க்கப்பெற்று , பால் மணமும் கண்டேன் , பெற்றோர்கள் ஆனோம் .
சாய் ரெங்க நாயகி எனப்பெயரிட்டுள்ளோம்.
அன்றும் , இன்றும் சாயிபாபா அவர்களை நம்பிக்கையுடன் பிரார்த்தித்து வருகிறோம் !

நம்பிக்கையுடன் , பிரார்த்தனை செய்யும்போது , எங்களது குறைகளை , குருவாக , குடும்பத்தில் ஒருவராக இருந்து , சாயிபாபா தீர்த்து வைக்கிறார் என உறுதியாக நம்புகிறோம் !

இந்த அனுபவத்தைப்பகிர்ந்துக் கொண்டு சிலிர்க்கிறார் கோவை சேர்ந்த திருமதி. அனுஷா சதீஷ்குமார்.

"நீ என் உபதேசத்திற்காகவும், உதவிக்காவும் என்னை அடைந்தால் அவைகளை உடனே நான் உனக்கு கொடுப்பேன் !! "
இது ஷீரடி நாயகனின் , தம் அடியார்களுக்கு எளியோனாக உதிர்த்த உபதேச மொழிகளுள் ஒன்று ..

இப்படியே எங்களின் வாழ்விலும் சாயிமகான் நுழைந்து ஆட்கொண்டார் என்கிறார் துபாயைச் சேர்ந்த சுந்தரி அனந்த்.

திருமணத்திற்கு முன் பலர் கூறக்கேட்டிருந்தப்போதும் , அத்தனை ஈடுபாடு சாயி பகவானிடம் வந்து விட வில்லை.

திருமணமும் ஆகி , அயல் நாட்டு வாழ்வில் ஈடுபட ஆரம்பித்திருந்தோம் , உடன் வாழ்ந்த நண்பர்களின் சாயிபாபா வின் பக்தியைக்கண்டு வியந்து , பஜனைகளில் ஈடுபட்டிருந்தாலும் , எங்களின் மனம் லயிக்காமலே சுற்றி வந்திருந்தது , சுற்றமும், சொந்தமும் பாபாவே என்று ஆனது ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தினால் .

2003 ம் வருடம், என் மாமியார், மாமனார் அபுதாபியில் நாங்கள் குடியிருந்தப்போது எங்களைக்காண இந்தியாவிலிருந்து வருகைத் தந்திருந்தனர். பஜனை சம்பிரதாயங்களில் மிகுந்தப்பிடிப்புள்ளது என் புகுந்த வீடு.

அப்போது தான் அந்த அதிசய சம்பவம் நிகழ்ந்தது.
ஏர்ப்போர்ட் லிருந்து வீட்டிற்கு அழைத்து வந்தோம் மாமியார், மாமனாரை.
வந்து சற்று இளைப்பாறியதும் , தம் லக்கேஜ்களைப்பிரித்து எங்களுக்காக அவர்கள் வாங்கி வந்திருந்தப்பொருட்களை எங்களுக்குத் தர ஆரம்பித்தனர்.
அனைத்தையும் எடுத்தத்தந்தப்பின்..கொண்டு வந்திருந்தப்பெட்டியில் , இறுதியாக சாயி நாதனின் படம் இருந்தது. அவர் ஆசீர்வதிப்பதாகக்கண்டதும் ஆச்சர்யம் தாங்காமல்..இது எப்படி என்று அவர்களே வியந்துப்போயினர்.
தானாக வீடு தேடி வந்த சாயி பகவானின் அனுகிரஹம் அன்று முதல் என்னை ஆட்கொள்வதை உணர ஆரம்பித்தேன் .

அதுவரை ஏனோ தானோ என்றிருந்த எனக்கு ஆழ்ந்த நம்பிக்கையும் , அழுத்தமான பிடிப்பும் , சாய் பாபாவின் மேல் ஆரம்பிக்க , அந்தப்படத்தையேக்கொண்டு அவரைப்பூஜிக்க ஆரம்பித்தேன் .
வியாழக்கிழமை அவரை எண்ணி , அவருக்கான
அஷ்டோத்திர ங்கள் படித்து , பூஜை செய்வதும் , விரதமும் ஏற்றுக்கொண்டேன். 
படிப்படியாக குடும்பத்தில் ஏற்றமும் ஏற்பட ..ஷீரடி புண்ணியஸ்தலத்திற்கான பிரயாணமும் மேற்கொண்டோம் !
அற்புதமான சேவையுடன் , சாயிபகவானின் தரிசனமும் கிடைக்கப்பெற்றோம்.

என் மூலம் என் தாய் தந்தையருக்கும் சாயி பகவான் அருள்பாலிக்க ஆரம்பித்தார் , உற்ற துணையாக மாறினார்.

பல்வேறு உடல் உபாதைகளுடன் போராட ஆரம்பித்த என் அப்பா , படுக்கையில் வீழ்ந்த போது , துணையின்றி என் அம்மா தனியாக தவிக்க ஆரம்பித்தார் . மருத்துவ செலவுடன் , அப்பாவின் நோயும் தீவிரமடைய ஆரம்பித்திருந்தது .

தன்னந்தனியாக போராடி வந்த அம்மா , தெம்பினை இழக்க ஆரம்பிக்க , அப்பாவும் மருந்துகளுக்கு உடன்படாமல் , அவதிப்பட , போர்க்களமானது எங்கள் வாழ்வு. 
வியாழனன்று விரதத்தில் நான் இருந்திட , அம்மாவும் மிகுந்த வேதனையுடன் மாம்பலம் வாழ் சாயி நாதனிடம் சென்று அழுகையுடன் , ஏன் இப்படி என் கணவர் அவதிப்படுகிறார் , குணமாக்கி நடமாடிட வேண்டும் அல்லது துன்பமின்றி உன் பதம் சேர்ந்திட வேண்டும் ,
 அல்லல்களிருந்து காப்பாற்றிட மாட்டாயா சாயி நாதா என்று மனமுருகி பிரார்த்தித்திருக்கிறார்.
அதே வியாழனன்றே , கோவிலிருந்து வீடு திரும்பி , ஸ்பூனில் பிரசாதத்தை அப்பாக்கு தந்திட , அப்பாவின் உயிர் அமைதியாகப்பிரிந்து , இறைவனடி சேர்ந்திருக்கிறது.
இப்போதும் இரவிலும் பகலிலும் என் அம்மாக்கு துணையாக அருகிலேயே இருக்கிறார் சாயிபகவான் .

சாய்சாய்ராம் என்று எனக்கும் பதட்டமோ , இன்பமோ , எந்த சூழ் நிலையிலும் என் வாய் உச்சரிக்கும் மந்திரமாகிப்போனது..

பல்வேறு இன்பத்துன்பங்களிலும் , சாயி பாபா எங்களுடன் வழி நடத்தி செல்வதாகவும் உணர்கிறோம்.. !!
இந்தியா சென்றதும் முதலில் மயிலைவாழ் சாயிபகவானை தரிசிப்பதும், மாம்பலம் சாயிநாதனை தினமும் காலையில் தரிசிக்காமல் என் நாள் முடிவடைவதில்லை. என்னைப்போலவே என் அக்காவும், அவரது கணவரும் மிகுந்த பக்தியுடன் வியாழனன்று விரதம், பூஜையுடன் பிரார்த்தித்துவருகின்றனர்.

ஆத்மார்த்தமான பக்தியும் , நம்பிக்கையுமே நம்மை சாயி பகவானிடம் சேர்த்து வைக்கிறது என்று ஆழ்ந்த நம்பிக்கையுடன் பகிர்கிறார் திருமதி சுந்தரி. 

வயதானவர்கள் வாழ்வில் பலப்பல சோதனைகளைக்கடந்து வந்திருந்தாலும் , வயோதிகத்தில் சில உடல் பிரச்னைகள் மேன்மேலும் அவர்களது வாழ்வை சிரமத்திற்குள்ளாக்குகிறது .

அப்படி ஒரு கஷ்டத்திலிருந்து மீண்டு வந்ததையும் , சாயிபாபாவின் அருளினால் தாம் கடந்ததையும் பகிர்கிறார் திருச்சியிலிருந்து திருமதி.விமலா சந்தானகோபாலன்.

வயோதிகத்தில் நடப்பதே சவாலாகிட , கால் மூட்டுகளின் தேய்மானம் பெரும் மன உளைச்சலையும் , கால்வலியுடன் சேர்த்தேத்தந்தது எனக்கு.

வலது கால் மூட்டு தேய்மானம் அடைந்த நிலையில் ஆயுர்வேதம் , அலோபதி மருத்துவ முறையில் முயற்சி செய்தும் பலனில்லாமல் போனது .

என்னை நாலு அடி நடக்கவும் இயலாமல் முடக்கியது முடக்குவாதம் !

மிகவும் மனம் நொந்த நிலையில் , இனி அவ்வளவுதான் என்றிருந்த நிலையில் , என் மகளின் மூலம் , ஷீரடி சாயிபகவானின் படம் கிடைக்கப்பெற்று , தினமும் பூச்சாற்றி , பிரார்த்தித்து வந்தேன் .

பல டாக்டர்களும் , இப்படியே விட்டுவிட்டால் மல்டிப்பிள் ப்ராக்சர் ஆகலாம் என்றும் , உடனே மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது அவசியம் என்றிட என்னுள் வேதனை விஸ்வரூபம் எடுத்ததது.
என்னை சந்தித்த சிலரும் , மிகுந்த சிரமமேற்கொண்டே சர்ஜரிமேற்கொள்ளவேண்டும், சர்ஜரி செய்துக்கொண்டவர்கள்
அனைவரும் நடப்பதில்லை என்றும்கூறிட, பயமும் நோயுடன் வளர்ந்தது.

சாயி பகவானே நீ விட்ட வழியென்றும் , குணமடைந்து என்னை நடக்கவைத்தால் முதலில் உன்னை வந்து தரிசிக்கிறேன் என்றும் , அன்னதானம் , அபிஷேகம் செய்கிறேன் என்றும் பிரார்த்தித்துக்கொண்டேன் .
டாக்டர்கள் குறித்தப்படியே சர்ஜரியும் நடந்து அனைத்தும் சுமூகமாகி ,  2 மாதங்களில் நடக்க ஆரம்பித்தேன் ! முதல் நடையாக கோவையில் சாயி நாதனின் திருக்கோயிலுக்கு சென்று என் பிரார்த்தனையை நிறைவேற்றி வந்தேன்.

இப்போது படியேறி இறங்குவதும் , பேருந்துகளில் பிரயாணிப்பதும். , விரும்பிய இடங்களுக்கு சென்று வருவதும் இறைவனின் அருளால், சாயி மகானின் அருளால் நடப்பதாகவே உணர்கிறேன் !

எப்போதும் துணையிருக்கிறார் குருவாக , துயர் துடைக்கிறார் என்கிறார் , விழி நீரை துடைத்தப்படியே !

கருணைக்கடலாக அத்வைதமும் , இஸ்லாமிய மரபையும் மக்களிடம் விளக்கி, அவதரித்த யோகி,சாயி மகான் இந்து முஸ்லீம் மக்களிடையே நட்புணர்வை வளர்க்க வந்த இறைத்தூதராகவே பார்க்கப்படுகிறார்.

மகான்கள் தந்த பொன்மொழிகளை பின்பற்றி , மனித வாழ்வின் முடிச்சினை முடித்திட , பிறப்பினை அறுத்திட கர்மப்பலன்களை அனுபவித்து மோட்சப்பேற்றினை அடைந்திடலாம் .

கலியுகத்தில் வாழும் வரமாக துவாரகாமாயியை சரணடைந்தால் துயர் நீங்குகிறது , துன்பம் அகல்கிறது. 

#சாயி_மார்க்கம் தீபாவளி மலரில் வெளிவந்த எனது கட்டுரை.